நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 14 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME!.. PART 13...கண்ணனை நினை மனமே!..பகுதி 13..விராட்புருஷ உற்பத்தி!..(தொடர்ச்சி).


விராட்புருஷ உற்பத்தி குறித்து, பட்டத்திரி மேலும் சொல்கிறார்!..

​"குருவாயூரப்பா!..நீர்  மாயைக்கு அருகில் இருந்தாலும், அதனுடன் கலவாத ரூபத்துடன் இருப்பதால், ஸாக்ஷீ (பார்க்கக் கூடியவன்) என்று கூறப்படுகின்றீர்!..அந்த மாயையில் பிரதிபிம்பமாக, ஆனால் வேறுபட்டதாகத் தோன்றும் ஜீவனும் நீரே!..உம்மால் ஏவப்பட்ட அந்த மாயையே, காலம், கர்மம், சுபாவம் என்று பலவாக விளங்குகின்றது.. அதுவே, புத்தி தத்வம் எனப்படும் 'மஹத்' தத்வத்தை உண்டாக்கியது..".



"மஹத் தத்வம் முக்குணங்களின் வடிவானது.. அவ்வாறிருந்தாலும், ஸத்வ குணத்தை பிரதானமாகக் கொண்ட நிலையில், ஜீவனிடம், 'நான்' என்ற உணர்வை உண்டாக்குகின்றது.. இந்த உணர்வு நிர்விகல்பமானது...மேலும், இந்த மஹத் தத்வம், தமோ குணத்தைப் பிரதானமாகக் கொண்ட நிலையில், ஜீவனிடம், சவிகல்பமான (வேறுபாடான) அஹங்காரத்தைத் தோற்றுவிக்கிறது.. (நான் மனிதன்.. நான் மிருகம் என்பது போன்ற அஹங்காரம் இது..நான் உயர்ந்தவன் என்பது போன்ற அஹங்காரமும் இதுவே). இவை அனைத்துமே, உமது ஏவுதலால் நடைபெறுகின்றது.."​.

ஸோ(அ)ஹஞ்ச த்ரிகு³ணக்ரமாத் த்ரிவித⁴தாமாஸாத்³ய வைகாரிகோ
பூ⁴யஸ்தைஜஸ-தாமஸாவிதி ப⁴வன்னாத்³யேன ஸத்வாத்மனா| 
தே³வானிந்த்³ரியமானினோ(அ)க்ருʼத தி³ஸா²வாதார்கபாஸ்²யஸ்²வினோ
வஹ்னீந்த்³ராச்யுத‍‍-மித்ரகான் விது⁴விதி⁴ஸ்ரீருத்³ரஸா²ரீரகான் ||  

("அந்த அஹங்காரம் தோன்றிய பின்னர், மூன்று குண க்ரமத்தில், மூன்று விதமாகியது (வைகாரிகம், தைஜஸம், தாமஸம். இதில் வைகாரிகம் என்பது ஸாத்விக அம்சம். தைஜஸம் என்பது ராஜஸ அம்சம்).

வைகாரிக அம்சத்தால், திசைகள், வாயு, சூரியன், வருணன், அச்வினிகள், அக்னி, இந்திரன், விஷ்ணுமித்ரன், பிரஜாபதி, சந்திரன், பிரம்மா, ஸ்ரீருத்ரன், க்ஷேத்ரக்ஞன் ஆகிய தேவதைகள் தோன்றினர்.. ".)

" எங்கும் நிறைந்தவரே!.. வைகாரிகமாகிய ஸாத்விக அஹங்காரமே, மனம், புத்தி, அஹங்காரத்துடன் கூடிய, சித்தம் என்ற விருத்தியுடன் அந்தக்கரணத்தையும் சிருஷ்டித்தது.  ராஜஸ அஹங்காரம், பத்து இந்திரியங்களை உண்டாக்கியது (ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள்).  தாமஸ அஹங்காரம், ஆகாயத்தின் தன்மாத்திரையாகிய சூட்சும சப்தத்தை உண்டாக்கியது".
(நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை, (திருமழிசை ஆழ்வார்)).

ஸ²ப்³தா³த்³வ்யோம தத​: ஸஸர்ஜித² விபோ⁴ ஸ்பர்ஸ²ம்ʼ ததோ மாருதம்ʼ
தஸ்மாத்³ரூபமதோ மஹோ(அ)த² ச‌ ரஸம்ʼ தோயஞ்ச‌ க³ந்த⁴ம்ʼ மஹீம்| 
ஏவம் மாத⁴வ பூர்வபூர்வகலனாதா³த்³யாத்³யத⁴ர்மான்விதம்ʼ
பூ⁴தக்³ராமமிமம்ʼ த்வமேவ ப⁴க³வன் ப்ராகாஸ²யஸ்தாமஸாத் ||   

("ஹே மாதவா!.. சப்த தன்மாத்திரையிலிருந்து ஆகாசம், அதிலிருந்து வாயு தன்மாத்ரையான ஸ்பர்சம் (தொடு உணர்ச்சி), அதிலிருந்து வாயு, வாயுவிலிருந்து ரூபம், ரூபத்திலிருந்து அக்னி, அக்னியிலிருந்து ரஸம் (சுவை), ரஸத்திலிருந்து நீர்,  நீரில் இருந்து கந்தம் (மணம்),  கந்தத்திலிருந்து பூமி இப்படியாக, முந்தையதாக உண்டானவற்றின் தொடர்பால், அவற்றின் குணங்களுடன் கூடியதாக, பஞ்சபூதங்களை, தாமஸ அஹங்காரத்திலிருந்து நீர் தோற்றுவித்தீர் அல்லவா?!").

"குருவாயூரப்பா!.. இப்படியாக, தனித்தனியாக உண்டாகிய‌ பஞ்ச பூதங்களும், இந்திரியக் கூட்டமும், அவற்றின் அபிமானி தேவதைகளும், தாமே பிரம்மாண்டத்தை நிர்மாணிக்க இயலவில்லை.. ஆகவே, அந்த தேவதைகள், உம்மையும், உமது  கல்யாண குணங்களையும் பலவிதமாக,   ஸ்தோத்திரங்களால் துதித்தன. உடனே நீர், மஹத் முதலான தத்துவங்களில் பிரவேசித்து, கிரியா சக்தியை அருளினீர்!..அவைகளை ஒன்றிணைத்து, பொன்மயமான பிரம்மாண்டத்தைத் தோற்றுவித்தீர்!..".

ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்
சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே. (திருமழிசை ஆழ்வார்).

ஆணினோடு பெண்ணுமாகி யல்லவோடு நல்லவாய்
ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணிபேணும் மாணியாய்க்க ரந்துசென்ற கள்வனே. (திருமழிசை ஆழ்வார்).

"இவ்விதம் உண்டாகிய பிரம்மாண்டம், முன்பாகவே சிருஷ்டிக்கப்பட்ட நீரில் ஆயிரம் வருட காலம் இருந்தது. நீர் அதனைப் பிளந்தீர்!.. பதினான்கு உலகங்களின் வடிவான விராட் ஸ்வரூபத்தைத் தோற்றுவித்தீர்!.. பல ஆயிரக்கணக்கான கைகள், கால்கள், தலைகள் ஆகியவற்றுடன், அனைத்துயிர்களின் ஸ்வரூபியாக, விராட்ரூபத்தில், நீரே பிரகாசித்தீர்!.. இப்படிப்பட்ட நீர், என் எல்லா நோய்களிலிருந்தும் என்னைக் காத்தருள வேண்டும்!.."​

​இவ்வாறு இந்த தசகத்தை நிறைவு செய்கிறார் பட்டத்திரி!..

​இவ்வுலகம் தோன்றிய முறை, உலகப் பொருட்களின் உற்பத்திக் கிரமம் முதலியவை இந்த தசகத்தில் வரிசையாகச் சொல்லப்பட்டது. இந்த தசகத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியதொன்றும் உள்ளது.. உலகில் எல்லா உயிர்களாகவும், பொருட்களாகவும் தோற்றமளிப்பவன் பகவானே!.. அனைத்துள்ளும் சக்தியாய் புகுந்து ஆட்டுவிப்பவனும் அவனே!.. காணுமனைத்தும் கண்ணனின் பிரதிபிம்பங்களே என்பதை, இந்த தசகம் குறிப்பால் உணர்த்துகின்றது..​

​பகவானின் விராட்ரூபத்தின் பெருமை எழுத்தில் வடிக்கத் தக்கதன்று.. தொடர்ந்து வரும் தசகத்தில், விராட்புருஷனின் தோற்றம் குறித்த விவரணைகள் வருகின்றன.. இதை, மரணத்தறுவாயில் ஒருவன் நினைக்கும் பாக்கியம் பெற்றானாகில், அவன் நிச்சயம் மோட்சமெய்துகிறான் என்கின்றார் நாராயண பட்டத்திரி!..


அதை அடுத்து தியானிக்கலாம்!..

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..