நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME!.. PART 18....கண்ணனை நினை மனமே!..பகுதி 18....பிரளயமும் சிருஷ்டியும்.....(தொடர்ச்சி..)

(சென்ற பதிவின் தொடர்ச்சி!)..

"பிரம்ம தேவர், அவருடைய பகல் பொழுது நிறைவடைந்ததும், உறக்கத்தை விரும்பியவராக, உம்மிடம்(பகவானிடம்) இணைந்தார்...மூன்று உலகங்களும், உம் திருவயிற்றில் ஒடுங்கின. அப்போது, இந்த பிரபஞ்சம் முழுவதும், சமுத்திர மயமாகவே ஆகிவிட்டது".
(மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்? (பொய்கையாழ்வார்)).

(பிரம்ம தேவரது இரவுப் பொழுது முடிந்ததும், அவர் மீண்டும், பரம்பொருளின்றும் பிரிந்தவராகி உதிப்பார்... அவரது உறக்கமாவது, நாராயணனிடம் லயமடைவதே..சென்ற தசகத்தில் (ஹிரண்யகர்ப்ப உற்பத்தி) பிரம்ம தேவரின் தோற்றம் குறித்துச்  சொன்னதிலிருந்து இது வேறுபட்டது..).

'அச்சமயம், நீர் ஆதிசேஷன் மீது, ஆனந்தமாக யோக நித்திரையில் ஆழ்ந்து சயனித்திருந்தீர்!.. காலம் என்ற சக்தியிடம், 'பிரளய முடிவில் என்னை எழுப்புக' என்று கட்டளையிட்டு விட்டு, உம்மிடம் லயித்த சக்தி, ஜீவ சமூகங்களுடன், பிரளய ஆரம்பத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்தீர்' (இவ்விதம், பட்டத்திரி கூறிவிட்டு, 'இப்படியாக நீ ஆதிசேஷன் மீது நித்திரை கொண்டிருந்தாயாமே?!' என்று குருவாயூரப்பனிடம் வினவ, அவர் 'ஆமாம்' என்று தலையசைத்தாராம்!!...).

"உலக நாயகா!..இவ்விதம்,  ஆயிரம் சதுர்யுகங்கள் நித்திரை செய்த பின், காலமெனும் உம் சக்தியானது, முதலில் எழுந்து, உம்மை எழுப்பியதல்லவா?!...".

"நீர் எழுந்ததும், உலகங்களனைத்தும், உம்மிடம் ஒடுங்கியிருந்ததைக் கண்டு, அவற்றின் மேல், உம் அருட்பார்வையைச் செலுத்தினீர்!...அப்போது, உம் தொப்புட் குழியிலிருந்து அழகிய ஒரு தாமரை மொட்டு தோன்றியது. அதிலேயே, மூவுலகங்களும், அவற்றிலுள்ளவையும் சூட்சும உருவில் மறைந்திருந்தன. அது, ஜலப்பரப்பை விட்டு மேலேழுந்து  வெளிவந்தவுடன், தன்னுடைய பிரகாசத்தால், நாற்புரமும் சூழ்ந்திருந்த பிரளய இருள் முழுவதையும் போக்கி விட்டது".

'"நன்றாக மலர்ந்த இதழ்களையுடையதும், உம் யோகசக்தியைத் தாங்குவதுமான, அந்தத் தாமரை மலரில், அனைத்து வேதங்களும் தாமாகவே  நினைவுக்கு வந்தவராக‌, பத்ம ஜன்மா என்ற‌ அந்த‌ பிரம்மா உதித்தார்".

அஸ்மின் பராத்மன் நனு பாத்³மகல்பே
த்வமித்த²முத்தா²பித பத்³மயோனி​: | 
அனந்த பூ⁴மா மம ரோக³ராஸி²ம்ʼ
நிருந்தி⁴ வாதாலயவாஸ விஷ்ணோ || 

("பரமாத்மாவாக, எங்கும் நிறைந்த ஸ்ரீஅப்பனே!...பாத்ம கல்பத்தில், இப்படியாக, நீர் பிரம்மாவைத் தோற்றுவித்தீர்!.. அளவில்லாத மகிமைகளை உடைய நீர், எம் வியாதிக் கூட்டத்தை நீக்கியருள வேண்டும்...".).

இந்த தசகத்தின் நிறைவு ஸ்லோகம், (மேலே குறித்திருப்பது) தீராத வியாதிகளையும் தீர்க்கும் சக்தியுடையதென்று கூறப்படுகின்றது.. காஞ்சி ஸ்ரீமஹாபெரியவர், தமது நோய் தீர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் வந்த ஒருவரிடம்,  இந்த ஸ்லோகத்தைக் குறிப்பிட்டு பாராயணம் செய்யச் சொன்னாராம்.. அதிசயிக்கத் தக்க முறையில், மருத்துவர்களாலும் குணப்படுத்த இயலாதென்று கைவிடப்பட்ட அவரது நோய் குணமானது!..

பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம்(பூதத்தாழ்வார்).

(தொடர்ந்து தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

 1. பொருத்தமான ஆழ்வார்களின் பாசுரங்களுடன் விளக்கம் வெகு சிறப்பாக இருக்கிறது, பார்வதி. நாராயணீயம் படிப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி ரஞ்சனிம்மா!..

   நீக்கு
 2. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
  http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப ரொம்ப நன்றி ரஞ்சனிம்மா.. மிகச் சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்!.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..