நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 25 பிப்ரவரி, 2015

KANNANAI NINAI MANAME!...PART 19... கண்ணனை நினை மனமே!.. பகுதி 19. பிரம்ம தேவரின் தவம்!..

Image result for BANKE BIHARI

இந்த தசகம், பிரம்ம தேவரின் தவம் குறித்தும், அதன் பின்னர், பகவானின் அருளால், அவர், சிருஷ்டியைத் துவக்கிய  விதம் குறித்தும் விவரிக்கிறது.. சென்ற தசகத்தின் நிறைவில், பகவானின் நாபிக் கமலத்திலிருந்து மேலெழும்பிய தாமரை மலரில், பிரம்ம தேவர் தோற்றமானது பற்றிப் பார்த்தோம்.. அதைத் தொடர்ந்த நிகழ்வுகளை, இந்த தசகத்தில் பட்டத்திரி கூறுகின்றார்...
"பிரம்மாவானவர், உம்முடைய நாபியில் தோன்றிய தாமரை மலரின் மீதிருந்து கொண்டு, 'இந்தத் தாமரை,  எங்கிருந்து தோன்றியது?' என்று சிந்திக்கத் துவங்கி, அதைக் கண்டறியும் ஆவல் மேலிட, தம் திருமுகத்தை நாற்புறமும் திருப்பி, நாற்றிசைகளையும் நோக்கினார். 

(தேவுமெப் பொருளும்படைக்க,
பூவில்நான் முகனைப்படைத்த,
தேவனெம் பெருமானுக்கல்லால்,
பூவும்பூசனையும் தகுமே. (நம்மாழ்வார்)).

அப்போது பிரம்மா, தாமரை மலர் போன்ற எட்டு விழிகளை உடைய, நான்கு முகங்களைக் கொண்ட வடிவினரானார்".

"பிரம்மாவால், உம் திருமேனியைக் காண இயலவில்லை.. 'இந்தப் பெரிய தாமரையின் நடுவில் தனித்திருக்கும் தாம் யார்?, இந்தப் பூவானது எங்கிருந்து தோன்றியது?' என்று சிந்திக்கலானார்".

'இந்தத் தாமரை மலருக்கு, ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தே தீர வேண்டும்' என்று நிச்சயித்துக் கொண்ட பிரம்ம தேவர், அதைத் தீவிரமாகத் தேடத் துவங்கினார். தம் யோக பலத்தாலும், ஞானத்தாலும், தாமரைத் தண்டின் வழியாகக் கீழிறங்கித் தேடினார். ஆனாலும் அவரால் உமது அழகான திருமேனியைக் காண இயலவில்லை".

(பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,
உள்ளுளா ரறிவார் அவன்றன்,
கள்ளமாய மனக்கருத்தே.. (நம்மாழ்வார்)).

"பின்னர், தாமரைத் தண்டின், எல்லா துவாரங்களிலும் புகுந்து,  நூறு வருஷ காலம் உம்மைத் தேடினார்.  உம்மைக் காணாமல், திரும்பவும் மேலேறி வந்து, தாமரை மலரின் மீதமர்ந்து,  உமது அனுக்ரஹத்தைப் பெற விரும்பியவராக,  ஒருமித்த மனத்துடன், சமாதி நிலையைக் கைக்கொண்டார்".

ஸ²தேன பரிவத்ஸரைர்த்³ருʼட⁴ஸமாதி⁴ப³ந்தோ⁴ல்லஸத்
ப்ரபோ³த⁴விஸ²தீ³க்ருʼத​: ஸ க²லு பத்³மினீஸம்ப⁴வ​: | 
அத்³ருʼஷ்டசரமத்³பு⁴தம்ʼ தவ ஹி ரூபமந்தர்த்³ருʼஸா²
வ்யசஷ்ட பரிதுஷ்டதீ⁴ர்பு⁴ஜக³போ⁴க³பா⁴கா³ஸ்²ரயம் ||

("நூறு வருஷ காலம், அந்நிலையிலிருந்த பிரம்ம தேவர், அதன் காரணமாக உதித்த தெளிவான ஞானத்தால், முன்பு காணப்படாத, வியப்பை அளிப்பதும், ஆதிசேஷன் மீது வீற்றிருப்பதுமான உம் திவ்ய திருமேனியை, தமது உள்நோக்கிய ஞானப் பார்வையின் மூலம் கண்டார். அதனால் பெருமகிழ்வு எய்தியவரானார்").

மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து. (பேயாழ்வார்).

ஒவ்வொருவரின் மனத்திலுள்ளும் அந்தர்யாமியாய் பகவான் வீற்றிருந்தருளுகையில், அவரை புறத்தே மட்டும் தேடுவது பயனற்றதாகிறது.. திடமான பக்தியுடன் கூடிய தியானம், பகவானை மனக்கண்முன் காட்டுகின்றது.. அப்போது, உள்ளும் புறமும் எங்கும்  இறைவன் நீக்கமற நிறைந்தருளுவதைக் காணலாம்.. இதையே இந்த ஸ்லோகத்தின் மூலம் பட்டத்திரி நமக்கு குறிப்பாக உணர்த்துகின்றார்.

(தொடர்ந்து தியானிக்கலாம்).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..