நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 5 நவம்பர், 2014

VAIKUNTHA CHATHURDASI, VISWESVARA VIRATHAM (5/11/2014).....வைகுந்த சதுர்த்தசி, விஸ்வேஸ்வர விரதம். (5/11/2014)


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

இன்றைய தினம் (5/11/2014) 'முகுந்த சதுர்த்தசி'. இது 'விஸ்வேஸ்வர விரதம்' எனவும் அழைக்கப்படுகின்றது.. சிவன், திருமால் இருவரையும் ஒரு சேர பூஜித்துப் பயன் பெற உகந்த தினம் இது!!!!!..  

விரத தினம்:


தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதி!.. ஐப்பசி பௌர்ணமிக்கு முந்தைய தினம். வட மாநிலங்களில் இது கார்த்திகை மாதம். ஆகவே 'கார்த்திகை மாத சுக்ல பக்ஷ சதுர்த்தசி' என்று வைத்துக் கொண்டு  பூஜிக்கின்றார்கள்.

இதை அனுசரிக்கும் முக்கியமான இடங்கள்:

வாரணாசியில் இது மிகப் பெரிய விழா!.. தேவ் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் வருவதால், இது மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

சத்ரபதி சிவாஜியாலும் அவர் தாய் ஜீஜாபாயாலும் இது கடைப்பிடிக்கப்பட்டதால், மஹாராஷ்டிராவில், மராட்டியர்கள் இந்த தினத்தில் பூஜைகள் செய்கின்றார்கள்.

முக்கியத்துவம்:

இந்த தினத்தின் முக்கியத்துவம்  பற்றிய‌ புராணக் கதை குறித்து, நாம் திருவெம்பாவை பதிவுகளில் முன்பே பார்த்திருக்கிறோம்.   'சிவ புராண'த்தில்  வருகின்ற இந்தப் புராணக் கதையை  மீண்டுமொரு முறை பார்க்கலாம்..

ஒரு முறை, திருமால், வாரணாசியில் சிவனை ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சிக்க திருவுளம் கொண்டார். அவ்வாறே அங்கு பூஜைகள் செய்யும் போது, ஒரு தாமரை மலர்,  சிவபிரானின் திருவுளத்தால் மறைந்தது!!..எண்ணிக்கையில் ஒன்று குறையவே, 'புண்டரீகாக்ஷன்' (தாமரைக் கண்ணன்) என்று பெயர் பெற்ற திருமால், தம் விழிமலரையே ஆயிரமாவது மலராக சிவனுக்கு அர்ப்பணம் செய்ய, எம்பிரான் மகிழ்ந்து அவர் முன் தோன்றி, அவருக்கு அவரது விழிமலரையும், சக்தி வாய்ந்த 'சுதர்சன சக்கரத்தை'யும் அளித்தருளினார். இந்த நிகழ்வு, தேவாரப் பதிகங்களில் வெகுவாக சிறப்பித்துச் சொல்லபட்டிருக்கின்றது.

ஆனால், இந்த நிகழ்வு நடந்த இடம் 'திருவீழிமிழலை' என்று சொல்லப்பட்டு, அந்த திருத்தல இறைவனைச் சிறப்பித்து, நாயன்மார்கள் போற்றியிருக்கிறார்கள்.. 'திருவீழிமிழலை' தலத்தின் வேறு பெயர்களில் ஒன்று 'நேத்திரார்ப்பணபுரம்' (நேத்திரம்= விழி). இறைவனின் திருநாமங்களில் ஒன்று 'நேத்திரார்ப்பணேசுவரர்!'.  சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம்!!!...திருமாலும், சிவனும் ஒருவரில் ஒருவர் ஆன்ம மூர்த்தியாய் விளங்குகின்றனர் என்பது ஐதீகம். திருமால், தம் ஆன்ம மூர்த்தியையே இங்கு பிரதிஷ்டித்து பூஜித்தார் என்பது புராணம்.

இப்போது பதிகங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்!..

நீற்றினை நிறையப் பூசி நித்தலா யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. (அப்பர் ஸ்வாமிகள்).

அலரா யிரந்தந்து வந்தித்து
மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே. (திருவாசகம், திருக்கோவையார்).

மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்---
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழி(ம்)மிழலையே.  (சம்பந்தர் பெருமான்).

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி
மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி் (போற்றித் தாண்டகம், அப்பர் சுவாமிகள்).

திருமாலும் சிவனும் ஒரு பரம்பொருளின் வெவ்வேறு ஸ்வரூபங்களே என்பதை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டே இவ்விதமான லீலைகளை அவ்விருவரும் நடத்தியருளினர். 'சங்கர நாராயண'ராக உருக்கொண்டதும் இவ்வுண்மையை நாம் அறியும் பொருட்டே!!.. 

 பூஜிக்கப்படும் முறைகள்:

வைகுந்த சதுர்த்தசி தினத்தில், பகவான் ஸ்ரீவிஷ்ணு இரவு நேரத்தில் பூஜிக்கப்படுகின்றார். திருமால் பக்தர்கள், அவருக்கு ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடுகின்றனர். புண்ணிய க்ஷேத்திரமான 'கயா'வின் முக்கிய வழிபாட்டு தினங்களுள் இதுவும் ஒன்று. அங்கிருக்கும் 'ஸ்ரீ விஷ்ணு பாத' திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில், எம்பிரானுக்கு அருணோதய காலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, இன்றைய தினம் அருணோதய காலத்தில், கங்கையின் நீராடும் துறைகளில் ஒன்றான 'மணிகர்ணிகா காட்' டில், எம்பிரானை ஸ்மரித்தபடி நீராடுவது மிகச் சிறப்பான பலன் தரும். இது 'மணிகர்ணிகா ஸ்நானம்' என்றே சிறப்பிக்கப்படுகின்றது.

இன்றைய தினம், காசி விஸ்வநாதர் திருக்கோயிலில், ஸ்ரீவிஷ்ணுவுக்கு, சிறப்பான உபசார பூஜைகள் செய்யப்படுகின்றன. கோயிலின் கருவறையில், ஸ்ரீவிஷ்ணுவும் எழுந்தருளச் செய்யப்படுகின்றார். ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கோயில், இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டத்திற்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. சிவபிரானும், மஹாவிஷ்ணுவும் ஒருவரை ஒருவர் பூஜிப்பதான சம்பிரதாயத்தில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீவிஷ்ணு, சிவபிரானுக்கு துளசி இலைகளும், சிவபிரான், ஸ்ரீவிஷ்ணுவுக்கு வில்வ இலைகளும் சமர்ப்பித்து வழிபடுவதாக ஐதீகம். அந்த முறையை ஒட்டியே வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன.

பக்தர்கள், அக்ஷதை, சந்தனம், புனித கங்கை நீர், மலர்கள், கற்பூரம், முதலியவற்றால், ஸ்ரீவிஷ்ணுவையும், ஸ்ரீவிஸ்வநாதரையும் வழிபடுகின்றனர்.  இன்றைய தினம் உபவாசமிருந்து வழிபாடுகள் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.  இன்றைய தினம், அதிக எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

குறிப்பாக, வயது முதிர்ந்த பெண்மணிகள், அதிக அளவில் வழிபாடுகள் செய்கின்றனர். பஞ்சுத் திரிகள் தயாரிப்பதில் மிகுந்த திறனுள்ளவர்கள், இன்றைய தினம், 1,25.000 திரிகள் தயாரித்து, தீபமேற்றி, எம்பிரானயும், ஸ்ரீவிஷ்ணுவையும் வழிபாடு செய்கின்றனர்.

காசியில் மட்டுமல்லாது, நாசிக் உள்ளிட்ட பல்வேறு தலங்களில் இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஹரிஹர ஸ்வரூபத்தின் தத்துவத்தை நாம் உணரவே இம்மாதிரியான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.  இன்றைய தினம், நாமும் இறைவழிபாடுகள் செய்து,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. ஹரிஹர ஸ்வரூபத்தின் தத்துவத்தை உணர்த்தும்
    அருமையான வழிபாடுகளைப்பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்களுக்கும் தொடர்ந்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அம்மா!!!..

      நீக்கு
  2. கடந்த 15 ஆண்டுகளாக தொடரும் காசி பயணம் இவ்வாண்டு.. அண்ணாபிஷேகத்தை ஒட்டி நலமாக அமைந்தது ஆதலினால் பதிவை படிக்க இயலவில்லை,,, திரும்பியதும் இன்று இந்த பின்ஊட்டம் வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் யாத்திரை இறையருளால் நலமாக அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!.. தங்களை வணங்குகிறேன்!..மிக்க நன்றி!.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..