நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 16 நவம்பர், 2013

DEV DIWALI!!!!... (17/11/2013)...தேவ தீபாவளி!!!!. ..


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!!..

தென்னிந்தியாவில், திருக்கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபமாகச் சிறப்பிக்கப்படுவது போல், வட இந்தியாவில், 'தேவ தீபாவளி' என்று சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி திதியன்று, சிவனார் திருமுடி சேர்ந்து, அவரது பெருங்கருணையினால் பூவுலகம் வந்து நம் பாவங்கள் தீர்க்கும் கங்கைக் கரையோரங்களில் 'தேவ்தீபாவளி' சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

வட இந்தியாவில் தீபாவளி அமாவாசைக்கு மறு தினமே கார்த்திகை மாதம் பிறந்து விடுகிறது.. அவர்கள் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக வைத்து, மாதப் பிறப்பைக் கணக்கிடுவதால் இப்படி!..தீபாவளியை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தை, கார்த்திகை பௌர்ணமி என்று கொண்டு, பல்வேறு பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தேவ தீபாவளி துவங்கி, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்...

1.தேவ் தீபாவளி (அ) தேவ தீபாவளி:

மானிடர்களாகிய நாம் நரகசதுர்த்தசி தினத்தன்று 'தீபாவளி' கொண்டாடுவதைப் போல், தேவர்களும் தீபாவளி கொண்டாடுகின்றனர்!!!!. தேவர்கள்,  தீபாவளியை அடுத்து வரும்  பௌர்ணமி தினத்தன்று, பூவுலகின் நீர்நிலைகளில் குடியிருந்தருளி நம்மை ஆசீர்வதிக்கும் நன்னாளே தேவ் தீபாவளி.

அன்றைய தினமே, தேவர்கள், அசுரர்களை வென்றதாக ஐதீகம்.

 தீபாவளியை அடுத்து வரும்  பௌர்ணமி தினத்தன்று, அனைத்து தேவர்களும், பூமியில் உள்ள நீர்நிலைகளில் வாசம் செய்ய வருகிறார்கள். ஆகவே, அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, 'கார்த்திகை ஸ்நானம்' என்று சிறப்பிக்கப்படுகின்றது.

அதிலும் கங்கையில், காசியில் நீராடுவது மிகப் புண்ணியம் தரும் செயலாகப் போற்றப்படுகின்றது. அவ்விதம் நீராடுவது, ஒருவரைப் பாதிக்கும் எதிர்மறை சக்திகளிடமிருந்து அவருக்கு விடுதலை அளித்து, நிம்மதி அளிக்கும் என்பது ஐதீகம்.

கங்கா மாதாவுக்கு தேவ தீபாவளி தினத்தன்று செய்யப்படும் ஆரத்தியைக் காண, கண் கோடி வேண்டும். பக்தர்களும் எண்ணற்ற தீபங்களை கங்கை நீரில் மிதக்க விட்டு, கங்கைக்கு தீப ஆரத்தி செய்கின்றனர்.

வாரணாசியில், தேவ தீபாவளியை ஒட்டி, 'கங்கா மஹோத்சவ்' நடத்தப்படுகின்றது. கார்த்திகை ஸ்நானமும் தீப தானமும் தேவ தீபாவளியின் முக்கிய அங்கங்களாகும். லட்சக்கணக்கான பக்தர்கள், தேவ தீபாவளியன்று அதிகாலை கார்த்திகை ஸ்நானமும், மாலையில் தீபோத்சவமும் செய்கின்றனர். மண் அகல்களில் தீபங்கள் ஏற்றி கங்கைக் கரையோரங்களை அலங்கரிப்பதே தீபோத்சவம் (தீப + உற்சவம்).

2. ஆந்திரப் பிரதேசத்திலும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும், சிவபெருமான் திருக்கோயில்களில் 'சிவலிங்க மஹாஜல அபிஷேகம்' நடத்தப்படுகின்றது. அனைத்து வித அபிஷேக திரவியங்களாலும் சிவனாருக்கு அபிஷேகம் செய்து, நிறைவாக, கும்ப நீராலும் அபிஷேகம் செய்யப்படுகின்றது. சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், சிவபெருமானைக் குறித்து, 'பக்தேஸ்வர விரதம்' கடைபிடிக்கப்படுகின்றது.

இந்த விரதத்தை திருமணமான பெண்கள், தம் கணவரின் நலனுக்காகச் செய்கிறார்கள். இந்த விரதம் குறித்த புராணக் கதை சுருக்கமாகப் பின்வருமாறு..

ஒரு பெண், தன் கணவனுக்கு, 'அஹால ம்ருத்யு தோஷம்' இருப்பதைத் தெரிந்து கொண்டாள். தன் கணவனின் உயிரைக் காக்க, கார்த்திகை மாதம், பௌர்ணமியன்று, கடுமையான உபவாசம் இருந்து, தாமரை மலர்களால் சிவனாரை அர்ச்சனை செய்து வழிபட்டாள். அவளது வழிபாட்டால் மனமகிழ்ந்த சிவபிரான், அவளது கணவனின் உயிரைக் காத்தார். அன்று தொட்டு, கார்த்திகை பௌர்ணமி தினத்தில், பக்தேஸ்வர விரதம் கடைபிடிப்பது வழக்கத்தில் வந்தது..

பக்தேஸ்வர விரதம் இருப்பவர்கள், மார்க்கண்டேய புராணத்தைப் பாராயணம் செய்வது கட்டாயமாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

3.ஆந்திராவிலும், கர்நாடகாவின் சிலபகுதிகளிலும்  தீபாவளியை அடுத்து வரும்  பௌர்ணமியன்று கொண்டாடப்படும் மற்றொரு பண்டிகை, ஜ்வாலாதோரணம்'. இது சிவாலயங்களில் கொண்டாடப்படுகின்றது.

இரண்டு, தடிமனான மரக் கழிகள்  நடப்பட்டு, இரண்டுக்கும் குறுக்காக, இரண்டையும் இணைக்கும் விதத்தில், மற்றொரு மரக் கழி கட்டப்படுகின்றது. இதுவே தோரணம் ஆகும். நடுவில் இருக்கும் கழியில், காய்ந்த புல்லை நன்றாகச் சுற்றிக் கட்டுகின்றனர். மாலையில் திருக்கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு, இந்தப் புல்லை ஏற்றுகின்றனர். இது பெரும் தீபம் போல் பிரகாசமுடன் எரிகிறது. இதுவே 'ஜ்வாலா தோரணோத்சவம்' என்றும் வழங்கப்படுகின்றது. தமிழகத்தின் சொக்கப்பனை கொளுத்துதலை இதனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது.

4. தீபாவளியை அடுத்து வரும் பௌர்ணமியை ஒட்டிய மற்றுமொரு பிரம்மாண்ட நிகழ்வு, 'புஷ்கர் மேளா'. ராஜஸ்தானில் இருக்கும் ஒரு சிறிய நகரமே 'புஷ்கர்' (தமிழில் புஷ்கரம்). கார்த்திகை பௌர்ணமி தினத்தை ஒட்டி,  ஆசியாவிலேயே பிரம்மாண்ட கால்நடை சந்தை பத்து தினங்கள் நடைபெறுகிறது. உலகிலேயே பெரிய ஒட்டகச் சந்தை புஷ்கர் மேளாவில் இடம் பெறுகிறது. இதை ராஜஸ்தான் அரசாங்கமே நடத்துகிறது.

புஷ்கரின் மற்றொரு சிறப்பம்சம், புஷ்கர் ஏரி. இந்த ஏரியின் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

PUSHKAR LAKE
இந்த ஏரி 'தீர்த்தராஜ்' என்றே சிறப்பிக்கப்படுகின்றது.  ஒருமுறை வஜ்ர நாபன் எனும் அரக்கனை தாமரை மலரினால் பிரம்மா வதம் செய்தபோது, அந்தத் தாமரை மலரிலிருந்து மூன்று இதழ்கள் கீழே விழுந்தன. அதில் ஒரு  இதழ் புஷ்கர் நகரில் விழுந்து, புஷ்கர் ஏரியாக உருமாறியது என்பது புராணம்.

5.இந்த ஏரியில் ஸ்நானம் செய்ய, நோய் நொடிகள் அகலும். அத்தகையதொரு சிறப்பம்சம் பொருந்தியது இந்த ஏரி!!!. தீபாவளியை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தன்று இங்கு செய்யப்படும் 'கார்த்திகை ஸ்நானம்' மிகுந்த மகத்துவம் பொருந்தியது. அதிகாலையில் கார்த்திகை ஸ்நானம் செய்கிறார்கள் பக்தர்கள்.அதன் பின்,  பிரம்மாவின் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றார்கள்.

மாலையில், தீபங்களை ஏற்றி, இலையில் வைத்து, இந்த ஏரி முழுவதும் மிதக்க விட்டு வழிபடுகின்றார்கள்.

6.சிவனாரைப் போற்றும் தினமான இது, 'திரிபுராரி பௌர்ணமி' என்றும் சிறப்பிக்கப்படுகின்றது. சிவபெருமான், திரிபுரத்தை எரித்து, திரிபுராசுரர்களை வதம் செய்த தினமாக இது கொண்டாடப்படுகின்றது. ஒரே அம்பினால், திரிபுரர்களை வதம் செய்த சிவனார், இந்த வெற்றியைச் சிறப்பிக்கும் விதமாக, இந்த தினத்தில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

7.பகவான் ஸ்ரீவிஷ்ணு, மச்சாவதாரம் எடுத்ததும் இந்த தினத்தில் தான். மச்சாவதாரம் குறித்த புராணக் கதைக்கு இங்கு சொடுக்கவும்..

நாமும் 'திருக்கார்த்திகை தீபம்' கொண்டாட இருக்கிறோம்!. திருக்கார்த்திகை தீபம்  பற்றிய செய்திகளையும் தீபம் ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சென்ற வருடப் பதிவில் விளக்கமாகச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன். பதிவைப் பார்க்க விருப்பமெனில்.   கீழே சொடுக்கவும்.....


அன்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் திருக்கார்த்திகை தீபத் திருநாள் ந‌ல்வாழ்த்துக்களை முன்கூட்டியே  தெரிவித்துக் கொள்கிறேன்...

சிறப்புகள் பல பொருந்திய  இந்த‌ தினத்தில், தீபங்கள் ஏற்றி, திருவிளக்கு பூஜை முதலான வழிபாடுகள் செய்து,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

 1. நன்கு தொகுத்து அளிக்கிறீர்கள். எதிர்காலத்தில் நம் வழிமுறைகளைச் சொல்ல ஆட்கள் இல்லாத குறையை உங்கள் பதிவுகள் போக்கும்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!!. தங்கள் வார்த்தைகள் மேன்மேலும் எழுத ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கின்றன. தங்களுக்கு நேரமிருக்கும் போது 'தொகுப்பு' வலைப்பூவுக்கும் வருகை தர வேண்டுகிறேன்.

   நீக்கு
 2. நலமுடன் வாழ்க
  நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் பணிவான நன்றிகள்!!!.

   நீக்கு
 3. படங்களும் அனைத்து விபரங்களும் அருமையோ அருமை. முதல் படம் மிக மிக அருமை.

  பகிர்வுக்கு மிக்க நன்றிகள். பாராட்டுக்கள்.

  இந்தப்பதிவு என் டேஷ் போர்டில் ஏனோ தெரியாமல் விட்டுப்போய் உள்ளது. தகவலுக்கும் என் நன்றிகள்.

  அன்பான இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!!!.. தங்களது வார்த்தைகள் மேன்மேலும் எழுத ஊக்கம் தருபவையாக உள்ளன. மிக்க நன்றி ஐயா!!!

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..