ஸ்ரீமந்நாராயணீயம் பாடியருளிய நாராயண பட்டத்திரியின் வாத நோய், அவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டது!..அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி, வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்திய போது, பட்டத்திரி அவருக்கு உளப்பூர்வமாக சேவை புரிந்தார். ஆயினும் தன் குருவின் நோய் கண்டு வருந்திய அவர், அதை, யோக பலத்தால், தாமே ஏற்றுக் கொண்டார்!!....
விரும்பி ஏற்றுக் கொண்டாலும், நோய் தீர வேண்டுமல்லவா?! நோய் தீரும் வழி, புகழ்பெற்ற சம்ஸ்கிருத பண்டிதரும், மலையாளக் கவிஞருமான எழுத்தச்சன் மூலமாக, அவருக்குக் கிடைத்தது. அவர் ஜோதிட வல்லுநரும் கூட என்பதால், பட்டத்திரியின் ஜாதகத்தை ஆராய்ந்து, பலன் கூறினார் என்று கூறப்படுகின்றது. எழுத்தச்சன், 'மத்ஸ்யம் தொட்டு' பாடினால் நோய் தீரும் என்றார். சைவ உணவுப் பழக்கம் உள்ள பட்டத்திரி, இதைக் கேட்டு, முதலில் திடுக்கிட்டாலும், பின்னர், அவர் சொன்னது 'மத்ஸ்யாவதார வைபவம் தொடங்கி' என்று புரிந்து, மகிழ்ந்தார். பாட வேண்டிய இடம், குருவாயூரப்பன் சன்னதி என்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
உறவினர்கள் உதவியுடன், குருபகவானும் வாயுபகவானும் வழிபட்ட குருவாயூரை அடைந்தார். ருத்ரதீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீகோவிலில், ஒரு திண்ணையில் அமர்த்தப்பட்டார்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தசகமாகப் பாடத் துவங்கினார். ஒவ்வொரு தசகத்தின் நிறைவிலும், தம் வாத நோய் குணமாக வேண்டி, பிரார்த்தித்து நிறைவு செய்தார். நூறாவது நாளில், நூறு தசகங்களும் பாடி,' ஆயுராரோக்கிய சௌக்கியம்' என்று முடிக்கும் போது, அவர் நோய் முற்றிலும் குணமானது..
இதில் வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், நமக்கு ஒரு சிறு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், சரியாகச் சிந்தித்து செயல்படுவது கடினமாக இருக்கிறது.. ஆனால் அங்கங்கள் முடங்கிய நிலையில், இத்தனை அற்புதமாக, கவிநயத்துடன், இதிஹாஸ புராணக் கருத்துக்கள் ஒன்றையும் விடாது, க்ருஷ்ண பக்தி சொட்டும் ஸ்லோகங்கள் படைப்பது எத்தனை கடினமான காரியம்?!!..கண்ணனின் பேரருளும், பட்டத்திரியின் ஆழ்ந்த பக்தியுமே அதை சாத்தியமாக்கியிருக்கிறது..
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பட்டத்திரி, கண்ணனை நினைந்துருகி கவிபாடியதோடு நிற்கவில்லை!!.. அந்த மாயனை, கண்முன் நிறுத்தினார் தன் பக்தியால்!.. ஒவ்வொரு தசகத்தையும், பரமாத்மாவோடு உரையாடியே நிறைவித்தார்..முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொன்றையும், சர்வலோக சாட்சியான சாக்ஷாத் பரந்தாமனை வினவி, 'இதெல்லாம் சரியா?!..இப்படியெல்லாம் நடந்ததா?!..நீ இவ்வாறு செய்தாயா?!' என்றெல்லாம் கேட்டுக் கேட்டு ஸ்லோகமாகச் செய்தார்.
அதன் காரணமாக, பாகவதத்தில் கூறப்படாத நிகழ்வுகள் சிலவும் நாராயணீயத்தில் உண்டு. அவற்றை, கண்ணனே பட்டத்திரிக்குக் கூறினானாம். ஸ்லோகங்களின் அமைப்பு, அங்கெல்லாம் சற்று மாறுபாடோடு காணக் கிடைக்கிறது..
ஒரு குழந்தையைக் கொஞ்சும் போது ஆசையுடன் கொஞ்சுகிறோம். ஆனால் அது நம்முடைய குழந்தை என்னும் போது, ஆசையுடன் உரிமையும் சேர்ந்து விடுகிறதல்லவா?!..அதைப் போல், இறைவனை, 'நம்முடையவன்' என்று மனதால், வாக்கால், காயத்தால் முழுமையாக நம்பி சரணாகதி செய்யும் போது, உள்ளிருக்கும் ஆத்மஸ்வரூபியின் குரலை நாம் நிச்சயம் கேட்கலாம்!.. பட்டத்திரியின் பக்தி அப்பேர்ப்பட்டது..
பூர்வத்தில், சுகப்பிரம்மரிஷியாக அவதரித்து, ஸ்ரீமத்பாகவதத்தை செய்தவரே, இப்பிறவியில் நாராயண பட்டத்திரியாக அவதரித்தார் என்று ஒரு கூற்று உண்டு. பாகவத ஸ்லோகங்கள் கடினமானதாகையால், அவற்றை சுருக்கி, சரளமான நடையில் நாராயணீயமாக விஸ்தரித்து, நாம் அவற்றைப் பாடி உய்ய வழிவகுத்தார் என்று கூறுகிறார்கள்..
பட்டத்திரி, ஒவ்வொரு தசகத்தின் நிறைவிலும், தம் நோய் தீரப் பிரார்த்திக்கிறார் என்றாலும், அது வாத நோய் மட்டுமோ?!..திரும்பத் திரும்ப பிறப்பிறப்புச் சுழலில் அகப்பட்டுத் தவிக்கும் இந்த தீராப்பிணி தீரவல்லவோ பிரார்த்தனை செய்கிறார்?!..'எதை நினைக்கிறோமோ அதுவாகவே அல்லவோ ஆகிறோம்?!' கண்ணன் கழலிணையை நினைக்க நினைக்க, உன்னத நிலையை அடைந்து, அவனாகவே ஆகிவிடும் பேறல்லவோ கிடைக்கிறது?!..இந்த கிடைத்தற்கரிய ஜன்ம பாக்கியத்தை அருளும் ஸ்ரீமந்நாராயணீயம், 'மோட்ச மந்திரம்' என்று போற்றிக் கொண்டாடப்படுவதில் வியப்பென்ன?!!.
வெற்றி பெறுவோம்!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்!!..
Very Interesting ... Thanks for sharing ! :)
பதிலளிநீக்குTons of thanks sir!..
நீக்கு