நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 21 நவம்பர், 2014

KANNANAI NINAI MANAME!!!..(PART 3)....கண்ணனை நினை மனமே!!!!..பகுதி 3..பகவத் மகிமை!!!!!!!....


பட்டத்திரி, பகவானை நினைத்துப் பாடத் துவங்கினார்!!.. 

வார்த்தைகள் பிரவாகமாகப் பெருக்கெடுத்தன!..ஆயினும்.....

எங்கு துவங்குவது?!.. எப்படித் துவங்குவது?!!..ஆதி அந்தமில்லா பரம்பொருளை எவ்விதம் போற்றுவது?!... நிறைவு செய்தல் என்பது எப்படி முடியும்?!. முடிவில்லாததற்கு முடிவென்று உண்டா?!..கண்களில் நீர் பெருகியது!... 

கண்களைத் திறந்தார்!... கவினழகு சிந்தும் குட்டிக் குழந்தையொன்று சன்னதியினுள் நின்று அவரைப் பார்த்து, முகமலர,புன்சிரித்தது!.. தன்னுள் இருப்பவன் சன்னதியினுள்ளும் நிற்பதைக் கண்டார்!!.. விளக்கொளியில் ஒளிரும் நித்யப் பிரகாசமது!..ஆ!.. இவனல்லவோ பரம்பொருள்!.. நிர்க்குண நிராகார பரப்பிரம்மம், சின்ன உருவில் சன்னதியில் நின்றருள்கிறது!!.. இதல்லவோ பெறற்கரிய பேறு!!.. இதை விடவும் அடைய வேண்டிய பாக்கியம் வேறு என்ன?!.

முழுமையான ஆனந்தம்!.. முடிவில்லாத ஆனந்தம்!.. அதுவே இது!!.

இப்படித் துவங்கினார்!..

ஸாந்த்ராநந்தாவ போதாத்மகம்
அனுபமிதம் காலதேசாவதிப்ப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசத 
ஸஹஸ்ரேண நிர்பாஸ்யமாநம்
அஸ்பஷ்டம் த்ருஷ்ட மாத்ரே புநருரு
புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்ம தத்வம்
தத்தாவத்பாதி ஸாக்ஷாத் குருபவனபுரே
ஹந்த பாக்யம் ஜநாநாம்!!!!!

(முழுமையான ஆனந்தமும் ஞானமும் தன் வடிவாகக் கொண்டது!..எதனுடனும் ஒப்பிட முடியாதது!. கால தேச எல்லைகளற்றது!. பந்தமற்றது!. ஆயிரக்கணக்கான வேத நூல்களால் விவரித்துக் கூறப்பட்டாலும் நன்கு அறிந்து கொள்ள இயலாதது!.  (இத்தனை குணங்கள் பொருந்தியதும்) தரிசித்த மாத்திரத்திலேயே பரம புருஷார்த்தத்தை அளிப்பதாக உள்ளதுமான‌ பிரம்ம தத்வமே, குருவாயூரில், நேரில் காணும்படி, ஜனங்களின் பாக்கியமாகப் பிரகாசிப்பது ஆச்சரியம்!!!).

பெறற்கரிய பேறல்லவோ குருவாயூரப்பன்!...அத்தனை அரியது, இத்தனை எளியதாக கண்முன் நிற்கும் போது வேறென்ன வேண்டும்!.. 

மனமுருகி, பகவானை ஒவ்வொரு அணுவிலும் மனப்பூர்வமாக நிறைத்துக் கொண்டு தொடருகிறார்!.

"இப்படி, அடைய முடியாத பொருளாயிருக்கப்பட்டது, நமக்கு எளிதாகக் கிடைக்கும்படியாக குருவாயூரில் கொலுவிருந்தும், அதை வாக்காலும் உடலாலும், மனதாலும் ஆராதிக்காமல்,  மனிதர்கள் வேறொன்றை நாடுவது அவர்கள் அறியாமையே!!...நாம் உறுதியான மனதுடன், உலகின் துன்பங்கள் அனைத்தும் தீர, அனைத்திலும் ஆத்மஸ்வரூபமாக உறையும் குருவாயூரப்பனை வணங்குவோம்!..."

"ஹே குருவாயூரப்பா!..ரஜோ குணமும் தமோ குணமும் கலவாமல், சுத்த ஸத்வம் எதுவோ அதனால் உண்டான பஞ்சபூதங்களாலும் இந்திரியங்களாலும் உமது திருமேனி ஆக்கப்பட்டது என்று வேத வியாசர் கூறுகிறார். அதன் காரணமாக, உமது திருமேனியில், பரமானந்தமும், ஞானமும் மறையாமல் பிரகாசிக்கின்றது!!!..அந்த எளிய உருவை, பாக்கியவான்கள் தரிசித்தும், அதைப் பற்றிக் கேட்டும், அதைத் தியானித்தும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்."

( ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே
ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே.....(திருமழிசை ஆழ்வார்).


"பரம்பொருளாகிய சமுத்திரம், பரமானந்த அம்ருத ஸ்வரூபமானது. தன்னுள் முத்துக் குவியல் போல் முக்தர்களை அடக்கியுள்ளது.. இதில் விளையாடும் அலையை ஒத்தது, சுத்த ஸத்வ வடிவினனான பகவானுடைய அர்ச்சாமூர்த்தி. ஆகவே பரிபூர்ண ஸ்வரூபியே!. ஸகுணம் என்பது நீர் எடுத்த அம்சாவதாரங்களுக்கே பொருந்தும்."

"பிறப்பற்றவரே!.. நீங்கள் செய்ய வேண்டியதென்ற செயல் என்பதில்லை. ஆயினும், உமது சங்கல்பத்தால், உம்மிடம் லயமாகியிருந்த ப்ரகிருதி (மாயை), (சிருஷ்டி) கல்பத்தின் தொடக்கத்தில் வெளிப்படுகின்றது..அதன் சுத்த ஸ்த்வமான அம்சத்தை கைக்கொண்டு, யோகமாயையின் மகிமையால் லீலா விக்ரஹத்தைத் தரிக்கிறீர்!.."

இவ்வாறு, நிர்க்குண ஸ்வரூபமான, உருவொன்றில்லாத‌ பகவான், நாம் தியானித்து உய்யும் பொருட்டு,  ஒரு திருவுருவைத்  தரிப்பதைச் சொல்கிறார் பட்டத்திரி.

( முதல் தசகத்தின் முதல் ஐந்து ஸ்லோகங்களின் சாரம் மேலே கொடுக்கப்பட்டிருப்பது..உருவற்ற பரம்பொருள், நாம் தியானிக்க வேண்டி, ஒரு திருவுருவை எடுத்துக் கொள்வதால், அதனுள் மறைந்திருக்கும் ஆனந்தமும் ஞானமும் மறைவுபடுவதில்லை.. ஸத்வ குண ரூபமாகவே அந்தத் திருவுரு இருப்பதால், அதைத் தியானிப்பவர் மனதிலும், பிரம்மானந்தமும் ஞானமும் மறைவுபடாமல் விளங்குகிறது.. பகவான், தமது சங்கல்பத்தாலேயே இத்தகைய லீலா விக்ரஹத்தைத் தரிக்கிறார் என்பது புலனாகிறது.

ஆரம்ப நிலையில், நிர்க்குண பரம்பொருளை தியானிப்பது கடினம்.. ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், ஸகுண பிரம்மமாக, உருவு கொண்ட நிலையில் பகவானைத் தியானிப்பது அவசியம்.. அதுவே நம்மை நிர்க்குண உபாசனைக்கு இட்டுச் செல்லும்..).

( இன்னும் தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

 1. Very Speed in Publishing Part-1, 2 & 3 one-by-one so quickly :)

  However Thanks for sharing this Good Useful article.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு எவ்விதம் நன்றி சொல்ல!..மிக்க நன்றி தங்களுக்கு!.

   நீக்கு
 2. அஹோ பாக்யம் என்று வியக்கும் அருமையான குருவாயூரப்பனின் மகிமைகளை
  விளக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்களுக்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி அம்மா!..

   நீக்கு
 3. குருவாயூரப்பனை வர்ணிக்கும்போதே ஸாக்ஷாத் கிருஷ்ணபகவான் மனம் நிறைந்து விடுகிரார்.. படிக்க ஆனந்தமாக இருக்கிறது. அன்புடன் தொடருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர்ந்த ஆசிகள் மேலும் எழுத உற்சாகம் ஊட்டுகின்றன.. மிக்க நன்றி அம்மா!.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..