நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 21 நவம்பர், 2014

KANNANAI NINAI MANAME!! PART 1......'கண்ணனை நினை மனமே!' (ஸ்ரீமந்நாராயணீயம்) பகுதி : 1.


அன்பர்களுக்கு வணக்கம்!..

கொஞ்ச காலமாக, ஸ்ரீமந்நாராயணீயம் வகுப்புகளுக்கு சென்று வருகிறேன்.. நிறையும் தருவாயிலிருக்கிறது..

மின் தமிழ் குழுமத்தில், அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீமந்நாராயணீய சாரம் எழுத இறையருள் கூட்டுவித்திருக்கிறது..

அங்கு தருவதை, சற்று, சுருக்கியோ, விரித்தோ, இங்கும் தர வேண்டுமென தோன்றியதைச் செயலாக்கியிருக்கிறேன்!..

அன்பர்கள் படித்து, தவறிருப்பின் சுட்ட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!..

இது ஒரு தொடர் பதிவு!.. இருப்பினும் இடையில் மற்ற பதிவுகளும் வெளியிட எண்ணம்!..

ஸ்ரீமத் பாகவதத்தின் எளிய வடிவமென பாகவதோத்தமர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீமந்நாராயணீயம், 1036 வடமொழி ஸ்லோகங்களை உள்ளடக்கியது!..குறைந்தது பத்து ஸ்லோகங்களை உள்ளடக்கிய பகுப்பு, 'தசகம்' எனப்படும். இம்மாதிரி, மொத்தம் நூறு தசகங்கள். 

இதை இயற்றியவர், மேல்புத்தூர், ஸ்ரீநாராயண பட்டத்திரி. வாதநோயால் பீடிக்கப்பட்ட அவர், குருவாயூரில், ஸ்ரீகிருஷ்ணன் திருமுன் பாடியருளியதே ஸ்ரீமந்நாராயணீயம். இதை அவர் நூறு நாட்களில் பாடினார்.  பாடி முடிக்கும் போது குருவாயூரப்பன் கருணையினால் நோயிலிருந்து விடுபட்டார்.

இந்நூலின் பெயர்க்காரணத்தை, ஸ்ரீநாராயண பட்டத்திரியின் திருவாக்கினாலேயே கேட்கலாம். 'வேதங்களில் பிறந்து, இதிஹாஸ புராணங்களில் உரைக்கப்பட்டிருக்கும் (உமது) லீலாவதாரங்களின் துதிகளால் நன்கு வளர்ந்த இந்த ஸ்தோத்திரம், நாராயணனைப் பற்றியதாகையாலும், நாராயணன்(பட்டத்திரி) எழுதியதாலும், நாராயணீயம் என்னும் பெயருடையதாகி, இவ்வ்வுலகத்திலுள்ள பக்தர்களுக்கு ஆயுளையும் ஆரோக்கியத்தையும் சௌக்கியத்தையும் அருளட்டும்!!!" (நூறாவது தசகம்..கேசாதிபாதாந்த வர்ணனை)!.

இந்நூலின் முதல் தசகமே 'பகவத் மகிமை' எனத் துவங்குகிறது.. பகவத் ரூப வர்ணனை, பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்று தொடர்ந்து, சிருஷ்டி குறித்த விவரணைகள், பரமாத்மாவின் வெவ்வேறு அவதார வைபவங்கள் என‌ விரிகிறது நூல்..பெரும்பாலும், . நாம் அனைவரும் அறிந்த தசாவதாரங்களோடு, அதிகம் அறிந்தறியாத அவதாரங்களின் மகிமைகளையும் பரக்கப் பேசுகிறது இந்நூல்..

பூர்ணாவதாரமான 'ஸ்ரீக்ருஷ்ணாவதார வைபவ'மே இந்நூலின் மணிமகுடம் எனலாம்.. பக்தியின் ஆழத்தில் மூழ்கித் திளைத்த பட்டத்திரி, நாமும் உய்ய அளித்த நல்முத்துக்கள் அவை!.. எண்பத்து எட்டாவது தசகத்தில், பரமாத்மாவின் லீலைகள் சிலவற்றை மட்டும் உரைத்து ஸ்ரீக்ருஷ்ண கதாம்ருதத்தை நிறைவித்து விட்டு, பரமாத்மாவின் பரத்வத்தை நிலைநாட்டும் ஸ்லோகங்களை அருளுகிறார் நாராயண பட்டத்திரி. குருவின் மகிமை, தியான யோகம், பரப்பிரம்ம தத்வம் என்று தொடர்ந்து, கேசாதிபாதாந்த வர்ணனையில் நூலை நிறைவு செய்கிறார்.

இது இந்நூலின் சிறிய அறிமுக உரை மட்டுமே!..பட்டத்திரியின் சரிதம், ஸ்ரீமத் பாகவதத்தின் பெருமை முதலானவைகளை, அநேகமாக அனைவரும் அறிந்திருக்கும் சாத்தியக் கூறுகள் நிரம்ப உண்டு என்பதால், ஸ்லோகங்கள், பொருள் என மட்டும் போகாது, குருமார்களின் கருணையினால், ஸ்லோகங்களிடையே நாங்கள்  அனுபவிக்கக் கிடைத்த, பட்டத்திரியின் உயர் பக்திநிலை அனுபவங்களையும்   பகிர்ந்து கொள்ள எண்ணம்..கூடுமானவரை தினமுமே செய்ய முயற்சி செய்கிறேன்!..

இதை எனக்குப் பயிற்றுவித்த குருமார்களுக்கு என் மனப்பூர்வமான நமஸ்காரங்கள்.. அவர்களது கருணை மிகப் பெரியது!..

இதிலிருக்கும் பிழைகளை, அவ்வப்போது பெரியோர்கள் சுட்டி, ஆற்றுப் படுத்த வேண்டுகிறேன்..

நாரணனின் கருணை மழையெனப் பொழிய வேண்டுகிறேன்!..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. ஆரம்பமே களை கட்டுகிறது.. நாராயணீயம். கேட்கக் கொடுத்து வைக்க வேண்டும். படிப்பதற்கு நான் தயார். தொடர்ந்து இறையருளைப் படிக்கத் தருவது பற்றி. நல்ல காரியம். வெற்றியுடன் தொடர கடவுளின் ஆசியை வேண்டுகிறேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா, தங்கள் ஆசியே இறையருளைப் பெற்றுத் தருவது போல் இருக்கிறது.. மனமார்ந்த நன்றியும் நமஸ்காரங்களும்!..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..