நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 26 செப்டம்பர், 2012

ANANTHA VIRATHAM , PART 1......(28/9/2012), அனந்த விரதம், பகுதி 1


அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்கதொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயகசதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. நம் கர்மவினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்பப் பெற உதவும் நல்லதொரு விரதம் இது. இதன் மகிமைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, பாண்டவர்களுக்கு கூறி அருளியிருக்கிறார். 

'அனந்தன்' என்பது ஸ்ரீ ஆதிசேஷனின் திருநாமமென்றாலும்,. அனந்தன் மேல் அறிதுயில் கொண்டருளும் அனந்த பத்மநாப ஸ்வாமியைக் குறித்தே இந்த விரதம் செய்யப்படுகிறது. வாழ்வில் கர்ம வினைகளின் காரணமாக நாம் இழந்தவற்றைப் பெற உதவும் அற்புத விரதம் இது.

முதலில் இந்த விரத மகிமையைப் பார்க்கலாம்.

விரத மகிமை:

பாண்டவர்கள், சூதால், தம் நாடு நகரங்கள் யாவையும் தோற்று, மிகத் துன்புற்று, வனவாசத்தில் அலைந்துழலும் வேளையில், பாண்டவர்களில் மூத்தவரான , யுதிஷ்டிரர், தம் மனவேதனைகளை ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவிடம் முறையிட்டு, தம் துன்பங்களில் இருந்து விடுதலையடையும் மார்க்கத்தைக் கூறி அருள வேண்டினார். அப்போது ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா, 'அனந்த விரதம்' அனுஷ்டித்தால் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்று கூற, யுதிஷ்டிரரும், 'அனந்தன் என்பவர் யார்?' என்று வினவினார்.

அதற்கு கண்ணபிரான்,' நானே இவ்வுலகனைத்துமாயிருக்கிறேன். நானே, அனந்தன். வேறு எவருமில்லை. நானே, அனந்தனாயிருந்து, இப்பூவுலகத் தாங்குகிறேன். குந்தி மைந்தனே!!, தேவர்கள், ரிஷிகள், மலைகள், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்ரர்கள் அனைத்தும் என் வடிவமே!!' என்றார்.

பின், யுதிஷ்டிரர், இவ்விரதத்தைக் கடைபிடித்து துயர் நீங்கப் பெற்றவர்களைப் பற்றிக் கூறுமாறு கண்ணனைக் கேட்க, கண்ணபிரான் பின்வருமாறு கூறலானார்.
"அனந்த விரதம், ஆனந்தமாக வாழ வழிவகுக்கும். அனந்தமான, (முடிவில்லாத) செல்வம், சந்ததி முதலிய அனைத்துப் பலனையும் கொடுக்கும்.

கிருதயுகத்தில், வசிஷ்ட மஹரிஷியின் பரம்பரையில் தோன்றிய சுமந்தர் என்பவர், பிருகு முனிவரின் மகளான, தீட்சாதேவி என்னும் உயர்குணவதியை மணந்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் 'சீலா' என்ற பெயருடைய மகள் பிறந்தாள். அவள் பிறந்த சில நாட்களில், தீட்சா தேவி  இறந்துவிடவே, சுமந்தர், தம் மகளை வளர்க்கும் பொருட்டும், இல்லறதர்மங்களை நிறைவேற்றும் பொருட்டும், கர்க்கசை என்பவளைத்   மறுமணம் செய்து கொண்டார்.  தன் மூத்தாள் மகளிடம் சிறிதும் அன்பு செலுத்தாமல் வெறுத்தாள் கர்க்கசை.

ஆனால் சீலா இதையெல்லாம் பொருட்படுத்தாது, தன் பெயருக்கேற்றபடி, சீலமாக, நல்லொழுக்கமும் நற்பண்புகளும் நிரம்பியவளாக இருந்தாள். தகுந்த வயது வந்ததும், சீலாவுக்கு, கௌண்டின்யர் என்பவரைத் திருமணம் செய்து வைத்தார் சுமந்தர். திருமணம் முடிந்ததும், கணவன் வீட்டுக்குக் கிளம்பிய சீலாவுக்கு சீதனமாக, எதுவும் கொடுக்க மறுத்துவிட்டாள் கர்க்கசை. மனம் வருந்திய சுமந்தர், சிறிது கோதுமை மாவை எடுத்து, மகளிடம் கொடுத்து, 'வழியில் இது உபயோகப்படும், வைத்துக் கொள்' என்று கூறி கொடுத்தார். சீலாவும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றாள்.
கௌண்டின்யரின் ஆசிரமத்துக்குச் செல்லும் வழியில் ஒரு குளம் இருந்தது. அங்கு, கௌண்டின்யர், சந்தியாவந்தனம் செய்வதற்காக போனார். அப்போது, சீலா, அந்தக் குளக்கரையில், பல பெண்கள், சிவப்பு நிற ஆடை அணிந்து பூஜை   செய்வதைப் பார்த்து, விவரம் கேட்க, அவர்களும், தாங்கள், அனந்த விரதம் செய்வதாகக் கூறி,விரதம் அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களையும் கூறினார்கள். 'மொத்தம் 14 வருடங்கள் பூஜை செய்ய வேண்டும். நிவேதனங்கள், பூஜைத் திரவியங்கள் எல்லாம்  14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும், கோதுமை மாவில்    14 அதிரசங்கள் செய்து,  14 வேத வித்துக்களுக்கு, தாம்பூலம் தட்சணையுடன் அளித்து, போஜனமளிக்க வேண்டும்' என்று அவர்கள் கூறக் கேட்ட சீலா, தன் கையில் இருந்த கோதுமை மாவை வைத்து நிவேதனங்களைச் செய்து, அவர்களுடன் சேர்ந்து, விரதத்தை அனுஷ்டித்தாள். நோன்புக் கயிறையும் அணிந்து கொண்டாள்.

சத்ரு பயம், மனக்கவலை முதலியவை நீக்க வல்ல, ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமைகளைப் போற்றும், ஸ்ரீ ஆர்த்தி ஹர நாராயணாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்.

இங்கு ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நோன்புக் கயிறு என்பது வெறும் கயிறல்ல. பூஜை செய்த தேவதையின் அம்சம். அதை அணிந்து கொள்வது, அந்த தெய்வமே, நம்முடன் இருப்பதைப் போல. அதை அலட்சியப்படுத்தக் கூடாது. பொதுவாக, அடுத்த முறை விரதம் அனுஷ்டிக்கும் போதே, பழைய கயிறை எடுப்பது வழக்கம்.  கயிறைப் பார்க்கும் மற்றவர்களும், இவர்கள், விரதம் அனுஷ்டித்தவர்கள் என்று உணர்ந்து கொள்வர்.

சீலா பக்தியுடன் தொடர்ந்து விரதம் இருந்து வந்தாள் . இறையருளால், 14 வருடங்கள் முடிவதற்குள்ளாகவே, ஏராளமான செல்வத்தை அடைந்தாள். ஆனாலும், கர்வமடையாமல், தொடர்ந்து செய்து வந்தாள். ஆனால், சோதனையில்லாவிட்டால் சுகம் ஏது?!!. செல்வச் செழிப்பு, கௌண்டின்யரின் கண்களை மறைத்தது. ஒரு நாள், சீலாவின் கையில் இருந்த நோன்புக் கயிறைப் பார்த்து, 'இதை எதற்காகக் கட்டிக் கொண்டு இருக்கிறாய்?, என்னை வசப்படுத்தப் பார்க்கிறாயா?!! என்று கேட்டு அவமானப்படுத்தினார்.

சீலா, பொறுமையாக, 'ஸ்வாமி, இது வெறும் கயிறல்ல. சாக்ஷாத் அந்த   அனந்த பத்மநாப ஸ்வாமியையே நான் தரித்து இருக்கிறேன். அனந்த விரதம் இருந்து அவரைப் பூஜித்த பலனே, நமக்கு இவ்வளவு செல்வம் அருளப்பட்டிருக்கிறது' என்று விளக்கினாள். ஆனால், கௌண்டின்யரோ, கோபம் கொண்டு, 'அனந்தன் ஒரு தெய்வமா?' என்று இழித்தும் பழித்தும் பேசி, நோன்புக் கயிற்றை அறுத்து நெருப்பில் போட்டார்.

சீலா, பதறித் துடித்தாள். 'இது அனந்தனே அல்லவா!!, இந்தக் கயிறு அழிந்தால், நம் வம்சமே நாசத்தை அனுபவிக்குமே' என்று அந்தக் கயிற்றை நெருப்பிலிருந்து எடுத்து பாலில் போட்டாள்.

இறை நிந்தனை மிகக் கொடிய பாவம். அதன் பலனாக, கௌண்டின்யரின் செல்வம் குறைந்தது. பசுக்கள் திருடு போயின. வீடு தீயில் எரிந்தது. உறவினர்கள், பகைமை பாராட்டினர். மனம் மிகவும் வருந்தினார் கௌண்டின்யர். துன்பம் வரும் போது, தானே இறைவனை நினைக்கத் தோன்றுகிறது. அவருக்குத் தான் செய்த தவறு புரிந்தது. 'அனந்தா, அனந்தா, என்னை மன்னித்துவிடு, என்னைக் கைவிட்டு விடாதே' என்று கத்திக் கொண்டு காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பார்த்தவர்களிடமெல்லாம், 'அனந்தனைக் கண்டீர்களா?' என்று விசாரித்த வண்ணம் ஓடினார்.

அவர் வழியில் ஒரு மாமரத்தைக் கண்டார். பழுத்த பழங்கள் நிறைய இருந்தும் அதில் ஒரு பறவை கூட இல்லை. அந்த மரத்திடம், 'அனந்தனைக் கண்டாயா?' என்று கேட்க, மரமும் 'இல்லையே' என்று பதிலளித்தது.சிறிது தூரம் சென்றதும், ஒரு புல்வெளியில், அதை மேயாமல், அலைந்து கொண்டிருக்கும் பசுவைக் கண்டார். அதனிடமும், 'அனந்தனைக் கண்டாயா?' என்று கேட்க, அது, 'இல்லையே' என்றது. இது போல், ஒரு காளை,  இரு குளங்கள், ஒரு யானை முதலியவற்றை கேட்க, அவை இல்லை என்றன. அவர், மனம் நொந்தவராக, மிக வருந்தியபோது, அனந்தன், ஒரு வயதான அந்தணர் வடிவில் அவர் முன் தோன்றினார். 'உனக்கு அனந்தனை நான் காட்டுகிறேன்!!' என்று கூறி அழைத்துச் சென்றார்.
ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமி
அவர் அழைத்துச் சென்ற இடம், திருவனந்தபுரம், அனந்த பத்மநாபசுவாமி சன்னதியாக இருந்தது. அங்கு ஆதிசேஷனாகக் காட்சி தந்தார். பின், கருடாரூடனாய், தம் திருவுருவைக் காட்டி அருள் புரிந்தார்.


இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.

வெற்றி பெறுவோம்!!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. 334:
    ''வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
    உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
    வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று
    கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.'' 7.

    அனந்தனைப் பற்றிய அவனின் மகிமையைப் பற்றிய அவனருள் பெற அனந்த விரதமே சிறந்தது என்று அத்தனையும் விளக்கும் அருமையான பதிவு!
    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்று வந்தேன். திருமுகம் தனித் தரிசனமாகவும், அவனின் திருப்பாதம் ஒரு தரிஷனமாகவும் பேரானந்தம் அளித்தது. கோவிலின் பிரகாரம் பிரமாண்டம் அங்கே இருக்கும் போது மனமெல்லாம் ஆனந்தத்தில் திளைத்திருந்தது அது ஒரு அற்புத உணர்வு...

    அடுத்தப் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!

    பதிலளிநீக்கு
  2. //ஜி ஆலாசியம் said...
    பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!//

    தங்கள் வருகைக்கும், மேலான பாராட்டுரைக்கும் மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. What a very informative site, I have found alot of very useful information here and still have a lot more to read. Thank you very much for the time and effort you have put in....

    பதிலளிநீக்கு
  4. மிக மிக நன்றி. சென்ற வருட அனந்த விரதத்திற்குச் சென்னை அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு கிடைத்தது.
    இன்று உங்கள் தயவால் பாக்கியம் பெற்றவளானேன்.விரத மஹிமை அறிய மிக சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்றோரது ஆசியும் நல்லாதரவுமே என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது. மனம் கனிந்த உங்கள் பாராட்டுக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..