மஹாராஷ்டிராவில், புனே நகரைச்சுற்றி எழுநூறு கி.மீ. தூரத்துக்குள் விநாயகருக்கு, "அஷ்டவிநாயக க்ஷேத்திரங்கள்" இருக்கின்றன. அவை,
- ஸ்ரீமயூரேஷ்வரர் = மோர்காம்
- ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் = தேவூர்
- ஸ்ரீசித்தி விநாயகர் = சித்த டேக்
- ஸ்ரீ மஹா கணபதி = ராஞ்சன் காவ்
- ஸ்ரீகிரிஜாத்மஜர் = லேன்யாத்ரி மலை
- ஸ்ரீவிக்னேஸ்வரர் = ஓஜர்
- ஸ்ரீபல்லாலேஸ்வரர் = பாலி
- ஸ்ரீ வரத விநாயகர் =மஹத், ஆகியவை. "அஷ்டவிநாயக க்ஷேத்திரங்களை"ப் பற்றி, ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள், 'தெய்வத்தின் குரலில்' அருளியிருப்பதை கீழே தந்திருக்கிறேன்.
"காணபத்யம் அதிகம் அநுஷ்டானத்திலிருந்த மஹாராஷ்டிராவில் 'அஷ்ட விநாயகர்'கள் என்ற எட்டுப் பிள்ளையார்களுக்கான எட்டு க்ஷேத்ரங்கள் இருக்கின்றன. அவர்களில் 'மயூரேசர்'என்ற பிள்ளையாருக்கும் அவர் இருக்கிற 'மோர்காம்'க்ஷேத்ரத்துக்கும் பிரஸித்தி ஜாஸ்தி. 'மோர்காம்'என்பது 'மயூரக்ராமம்'என்பதன் திரிபு. பிள்ளையாரைச் சுற்றி அவருடைய பரிவார தேவதைகள் இருக்க வேண்டிய க்ரமத்திலேயே மோர்காமைச் சுற்றிப் பரிவார தெய்வங்களின் கோயில்கள் இருக்கின்றன.
மயூரம் என்பது தமிழில் மயில் என்றும், வடக்கத்தி பாஷைகளில் மோர் என்றும் இருக்கிறது. ஸுப்ரம்மண்யர் தான் மயில் வாஹனர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். புராணங்களின்படியும் தந்த்ர சாஸ்திரங்களின்படியும், நாம் மூஷிகவாஹனராகவே நினைக்கிற பிள்ளையாருக்கும் மயில் வாஹனத்தோடு ஒரு அவஸரம் (ரூப பேதம்) உண்டு. அவர்தான் மயூரேசர்.
மயூரேச க்ஷேத்ரமான மஹாராஷ்டிர மோர்காமின் க்ஷேத்ர புராணத்தில் நம் தமிழ்நாட்டுத் திருவலஞ்சுழியை உசத்திச் சொல்லியிருக்கிறது! 'தசஷிணாவர்த்தம்'என்று இதற்கு அங்கே பெயர் கொடுத்திருக்கிறது. 'தக்ஷிண'-வல;'ஆவர்த்தம்'-சுழி. இந்த 'தக்ஷிணாவர்த்தம்'தான் பிள்ளையாருடைய ராஜதானி, அதாவது Capital என்று சொல்லியிருக்கிறது".
விநாயகருக்கு விருப்பமான நிவேதனம் மோதகம். இதை முதன்முதலில் செய்து நிவேதனம் செய்தவர் வசிஷ்டரின் பத்தினி அருந்ததிதேவி. மோதகத்தில், வெளியே வெண்ணிற மேல்மாவின் உள்ளே இனிப்பான பூரணம் நிறைந்திருப்பது போல், இவ்வுலகமனைத்திலும் பூரணனான விநாயகர் நிறைந்திருக்கிறார் என்பது தத்துவம்.
ஒரு சமயம் விநாயகர் அனலாசுரன் என்ற அசுரனை, அவனை அழிப்பதற்காக, விழுங்கிவிட்டார். அந்த வெப்பத்தைத் தணிக்க, தேவர்கள், விநாயகரின் ஆணைப்படி, அருகம்புல்லால் அவரை அர்ச்சிக்க, அவருள் இருந்த அனலாசுரன் அழிந்து போனான். ஆகவே, அருகம்புல் அவருக்குப் பிடித்தமானதாயிற்று. மனிதர்கள் எதற்கும் பயன்படுத்தாத எருக்கம்பூவையே அவர், மாலையாக விரும்பி ஏற்கிறார்.
ஸ்ரீ விநாயகரின் அருளால் காரியங்கள் சித்தி பெற உதவும் காரிய சித்தி மாலைக்கு இங்கு சொடுக்கவும்.
ஒரு சமயம் விநாயகர் லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, 'பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். ஆனாலும்,'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை உலகுக்கு உணர்த்த, விநாயக சதுர்த்தியன்று, சந்திரனைப் பார்த்தால் தீராத அபவாதம் ஏற்படும் என்று அருளினார். அது நீங்க, சங்கடஹரசதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க வேண்டும்.
விநாயகருக்குப் பிடித்தமான இலை வன்னி இலை. இதன் பெருமையை விநாயக புராணத்தில் விநாயகரே கூறுகிறார். "வீமன் என்ற கொள்ளையனும் ஒரு ராட்சதனும் சண்டையிட்டுக் கொண்டு வரும் வேளையில், வீமன் ஒரு வன்னிமரத்தின் மேல் ஏறிவிட்டான். அவனை இறக்க, ராட்சதன் அந்த மரத்தை பலம் கொண்ட மட்டும் உலுக்க, வீமன் கிளையை இறுகப் பிடித்துக் கொண்டான். அந்தப் போராட்டத்தில், மரத்தின் கீழிருந்த என் மேல் சில வன்னி இலைகள் உதிர்ந்தன. அது வன்னி இலைகளால் என்னை அர்ச்சித்த பலனைக் கொடுக்கவே, அவர்கள் எமலோகத்தில் அவர்கள் செய்த பாவச்செயல்களுக்கான தண்டனைக்காலம் முடிந்ததும் கருப்பஞ்சாற்றுக்கடலில் இருக்கும் என் வசிப்பிடமான ஆனந்தலோகம் வந்தடைந்தனர்" என்று கூறுகிறார்.
விநாயகப் பெருமானுக்கு சூரிய பகவானே குரு. ஆகவே கணபதிக்குரிய பூஜைகளை காலை நேரத்தில் செய்கிறோம்.
ஸூமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷோ! பாலசந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
என்னும் விநாயகரின் பதினாறு நாமாவளிகளை தினந்தோறும் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் தீர்க்க முடியாத துன்பமோ வருத்தமோ வாராது.
மானிடர், தம் பிறவிப் பயன் எய்துவதற்கான உன்னத மார்க்கமாக விளங்குவது யோக மார்க்கமேயாகும். நம் உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களில், முதலாவதான, மூலாதாரத்தில் குடி கொண்டு விளங்குபவர் கணபதி. 'மூலாதார மூர்த்தி' என்று போற்றப்படுபவர்.
தமிழ் மூதாட்டியாம் ஔவை, தனது ஒப்புயர்வற்ற யோக நூலாம் விநாயகர் அகவலில் முழு முதல் கடவுளும், ஞான ஸ்வரூபமுமான விநாயகரின் புகழை அற்புதமாக விவரித்திருக்கிறார்.
ஔவை, மிகச் சிறந்த விநாயக உபாசகியாக விளங்கியவர். அவரின் திருவருளாலேயே, கவிபாடும் திறன் பெற்று, இளமை நீங்கி முதுமைக் கோலமடைந்து, நாடெங்கும் தனது தமிழ்த் திறத்தால் நல்லறிவு புகட்டியவர்.
ஒரு முறை, சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், திருக்கைலாயத்துக்குப் புறப்பட்ட போது, ஔவையையும் அழைத்தனர். தான் பூஜை செய்து முடித்த பிறகே வர இயலும் என்றும், பூஜையை வேகப்படுத்த இயலாதென்றும் ஔவை கூறிவிட்டார். ஆகவே இருவரும் திருக்கயிலைக்கு புறப்பட்டனர். ஔவை நிதானமாகப் பூஜித்து முடித்தார்.
பூஜை முடிந்ததும், விநாயகர் அவர் முன் பிரசன்னமாகி, தனது துதிக்கையால், அநாயாசமாக ஔவையைத் தூக்கி, நாயன்மார்கள் இருவருக்கும் முன்னதாக திருக்கைலாயத்தில் சேர்த்தார். அப்போது ஔவை பாடித் துதித்ததே 'விநாயகர் அகவல்'.
அளப்பரிய மகிமை வாய்ந்த 'விநாயகர் அகவலில்',
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!!!
என்ற வரிகளில், "சொற்களால் விவரிக்க முடியாத, உச்சந்தலையில் அமைந்துள்ள சஹஸ்ராரம் என்றும் துரியம் என்றும் போற்றப்படும் ஆயிரம் இதழ் கமலத்தில், அற்புதமான மெய்ஞ்ஞானமாய் விளங்கும் கற்பக மூர்த்தியே!!" என்று விநாயகரைப் போற்றுகிறார் ஔவை. மேலும்,
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
"ஒன்பது துவாரங்களை உடைய இந்த உடலில், ஐம்புலன்களையும் அடக்க வல்ல ஒரு மந்திரத்தை உபதேசித்து, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் குண்டலினி சக்தியை நிறுத்தி (அதாவது மேலேறுமாறு செய்து), ஞானிகளால் மட்டுமே அடைய வல்ல மௌன நிலையை அருள வேண்டும்".
இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
"இடைகலை, பிங்கலை எனப்படும் இருபக்க நாடிகளின் வழியாக உள்ளிழுத்து வெளிவிடப்படும் மூச்சுக் காற்றானது, சுழுமுனை எனப்படும் நடு நாடியின் வழியாக, கபாலத்தை அடையும் மார்க்கத்தைக் காட்டி, அக்னிக் கண்டம், சூரியக்கண்டம், சோம கண்டம் (மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் அக்னி கண்டமாகவும், மணிபூரகம், அநாஹதம் ஆகியவை சேர்ந்தது சூர்ய கண்டமாகவும், விசுக்தி மற்றும் ஆஜ்ஞை சேர்ந்தது சோமக் கண்டமாகவும் அறியப்படுகிறது) எனப்படும் மூன்று மண்டலத்தில் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் பாம்பு வடிவமான குண்டலினி சக்தியை எழுப்பி",
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
"மூலாதாரச் சக்கரத்தில் மூண்டு எழும் கனலாகிய குண்டலினி சக்தியை மூச்சுக் காற்றை முறைப்படுத்தி எழுப்பும் (கால் =காற்று)முறையை அறிவித்து",
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி.
"குண்டலினி, உச்சந்தலையிலுள்ள சஹஸ்ராரச் சக்கரத்தை அடையும் போது அமிர்தம் பொழிவது போல் ஏற்படும் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயங்கும் விதத்தையும், குணத்தையும் கூறி, ஆறு ஆதாரச் சக்கரங்களில்(சஹஸ்ராரம் சேர்த்து ஏழு எனவும் கொள்ளலாம்)இடையில் உள்ள சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ் கமலத்தின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி",
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
சத், சித் அதாவது, உள்ளும் புறமும் சிவமேயென தெளிவாக உணர்த்தி அருள வேண்டும் என விநாயகப் பெருமானை வேண்டுகிறார் ஔவை.
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே .
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.
வெற்றி பெறுவோம்!!!!
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே .
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.
வெற்றி பெறுவோம்!!!!
விக்னராஜரைப்பற்றிய அற்புதமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
பதிலளிநீக்கு////இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குவிக்னராஜரைப்பற்றிய அற்புதமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.../////
தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக மிக நன்றி.