நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

PART 3, VINAYAGA CHATHURTHI POOJA (19/9/2012)....விநாயக சதுர்த்தி பூஜை....

சென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி........

விநாயகருக்குரிய வழிபாடுகளில் முதன்மையானது 'விநாயகசதுர்த்தி' ஆகும். பாத்ரபத (ஆவணி) மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியில் கொண்டாடப்படும் இது "ஆத்ம வைபவம்" ன்று புகழப்படுகிறது. இது நம் ஆத்மாவுக்கு நாமே செய்து கொள்ளும் ஆராதனை  அதாவது நம் அனைவருள்ளும் ஆத்மஸ்வரூபமாகிய விநாயகரே உறைகிறார். ஆகவே அவரைப் பூஜிப்பது, நம்முடைய ஆத்மாவுக்கு நாமே நிகழ்த்திக் கொள்ளும் பூஜையாகும்.


விநாயக சதுர்த்தி விநாயகப் பெருமானின் திரு அவதார தினமாகக் கருதப்படுகிறது. முதலும் முடிவும் இல்லா முழு முதல் கடவுளுக்கு அவதார தினமென்று நாம் கொண்டாடுவது நமது நன்மையையும், உலக நன்மையையும் வேண்டியே. குறிப்பாக, கண்ணன், விநாயகர் போன்ற தெய்வங்களை, குழந்தை வடிவினராகப் பாவித்துப் பூஜிக்கும் போது, நம் மனதுள் பொங்கும் பரவசம் வார்த்தைகளால் விவரித்தற்கரியது. தொடர்ந்த ஒரே  மாதிரியான வேலைகளின் நடுவில் வரும் இம்மாதிரிப் பண்டிகைகள், உறவுகளையும் மனதையும் ஒரு சேர புதுப்பிக்கும் அற்புத மருந்துகள்.

விநாயக சதுர்த்தி விரதம் மிக மகத்துவம் வாய்ந்தது. அன்னை பார்வதி தேவியே, விநாயகரை சதுர்த்தி தினத்தில் உபாசித்து நாம் பிறவிப் பயன் எய்தும் வழியைக் காட்டியிருக்கிறார். த‌க்ஷனின் மகளாக, சதிதேவியென்ற திருநாமத்துடன், பிறந்து வளர்ந்த உமாதேவி, சிவநிந்தனையைப் பொறுக்க மாட்டாது ,தக்ஷனின் யாகக் குண்டத்தில், தம் தேகத்தை தியாகம் செய்தார். மறு பிறவியில் இமவானின் புத்திரியாகப் பிறந்து வளரும் போது, கங்கையை மணக்கும் முன்பாக, சிவனார் தன்னை மணக்க வேண்டுமென்ற விருப்பத்துடன், தம் கருத்தை தம் தந்தையான இமவானுக்கு உரைத்தார். அவரும், சதுர்த்தி விரதத்தைக் கைக்கொண்டால் விருப்பம் நிறைவேறும் எனக் கூற, உமாதேவியாரும், இவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து, தம் எண்ணம் ஈடேறப் பெற்றார்.

எண்ணற்றோர் இந்தச் சதுர்த்தி விரதத்தைக் கைக்கொண்டு, பிறவாப் பெருநிலை அடைந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரது சரிதத்தை சுருக்கமாகக் காணலாம்.

நள மஹாராஜா:
நள மஹாராஜா, தமயந்தியை மணந்து, பத்மாஸ்தன் என்ற நல்லதொரு அமைச்சன் துணையுடன், நிடத நாட்டை சிறப்புற ஆண்டு வந்தார். அப்போது அந்நாட்டுக்கு எழுந்தருளிய கௌதம முனிவரைக் கண்டு பணிந்து, இம்மைப்பயன் எய்துவதற்கு வழி செய்யும் நல்லதொரு விரதத்தை எடுத்துரைக்கப் பிரார்த்தித்தார். கௌதம முனிவர்,"முற்பிறவியில் நீ கௌட தேசத்திற்கு அரசனாக இருந்தாய். நீ சத்ருக்களை ஜெயிக்கச் சென்றபோது, ஒரு கானகத்தில் தவம் புரிந்து வந்த கௌசிக முனிவரைக் கண்டு வணங்கி, இவ்விதமாகவே நல்ல தொரு விரதத்தைக் கூற பிரார்த்தித்தாய். அவர் உனக்கு உபதேசித்ததே 'விநாயக சதுர்த்தி விரதம்'. நீ அதைப் பக்தியுடன் அனுசரித்ததன் பலனாக, இப்பிறவியிலும் அரசனாகப் பிறந்து இருக்கிறாய்.ஆகவே, அந்த விரதத்தை இப்போதும் அனுசரித்து வர, பிறவாநிலையை அடையலாம்" என்று கூறி விரதத்தை அனுசரிக்கும் முறையை உபதேசித்தார். வருடந்தோறும் சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து நள மஹாராஜாவும் இறுதியில் விநாயகப் பெருமான் திருவடியடைந்தார்.
மன்மதன்:
மன்மதன், சிவனாரின் நெற்றிக் கண்ணினால் எரிக்கப்பட்டு சாம்பலானபின், இரதிதேவியின் வேண்டுதலுக்கிணங்கி, சிவனார், அவனை உயிர்ப்பித்து, "இரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவாய்" என்று வரமருள, அவனோ, தான் முன் போல் அனைவரின் கண்களுக்கும் தெரியும் மார்க்கத்தைக் கூறியருள வேண்டிப் பிரார்த்தித்தான். சிவனார், அவனை, விநாயகப் பெருமானைச் சரணடையும்படி கூறி, ஏகாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். மன்மதனும் உடனே, மயூரத் தலத்தை அடைந்து ஆயிரம் வருடம் அந்த மந்திரத்தை ஜபித்து வர, விநாயகரும் அவன் முன் பிரசன்னமாகி, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கும் பொழுது உன் எண்ணம் நிறைவேறும் என(மன்மதனே,பிரத்யும்னன் என்ற பெயரில் ஸ்ரீ கிருஷ்ணரின்  மைந்தனாக அவதரித்தார்) வரமருள, மன்மதனும், அகமகிழ்ந்து, அத்தலத்தில் பளிங்கினாலான விநாயக விக்கிரகத்தை 'மகோற்கட விநாயாகர்' என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
த‌க்ஷப்பிரஜாபதி:
த‌க்ஷன், சிவனாரை மதியாது யாகம் தொடங்கி, அந்த யாகம், சிவனாரின் நெற்றிக் கண்ணில் உதித்த வீரபத்திர மூர்த்தியால் அழிந்தது முதல் பல துன்பங்களை சிவநிந்தனையின் பலனாக, தொடர்ச்சியாக அனுபவித்து வந்தார். அவர், இந்த துன்பம் நீங்க வேண்டி, முத்கல முனிவரைச் சரணடைந்து, அவர் கூறிய விநாயக மகத்துவத்தை சிரத்தையுடன் கேட்டுப் பணிந்து, சதுர்த்தி விரதத்தை கைக்கொண்டதன் பலனாக, சிவனாரின் சினம் நீங்கப் பெற்று, இறுதியில் சாரூப பதத்தை அடைந்தார்.

ஆகவே, விநாயகரை, விநாயகசதுர்த்தி தினத்தில் முறையுடன் பூஜிக்க நாம் வேண்டும் வரங்களைப் பெறலாம்.

பூஜைக்குத் தேவையானவை:
விநாயகர் பிரதிமை. களிமண்ணால் செய்த பிரதிமை பூஜைக்கு மிக உகந்தது. வசிஷ்டரின் பேரரான பராசரர், தம் சிறுவயதில், களிமண்ணால் செய்த பிரதிமையில் விநாயகரைப் பூஜிக்க, அதனால் அகமகிழ்ந்த விநாயகப்பெருமான், களிமண்ணால் செய்த பிரதிமையில் தன்னைப் பூஜிப்பவருக்கு வேண்டும் வரங்களைத் தருவதாக வரமளித்தார். மேலும், விநாயகரைப் பூஜித்த பின், அந்தப் பிரதிமையை நீர் நிலைகளில் விடுவது வழக்கம். களிமண் பிரதிமை, நீர் நிலைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நீர் வளம் அதிகரிக்க விநாயகரை வணங்குவது மிக முக்கியம். ஆற்றங்கரையோரம், அரசமர நிழலில் விநாயகரை வணங்குவது இதனால் தான். கிணற்றில், நீர் இறைக்கும் அளவுகளை, 'இரண்டு பிள்ளையார் இறைக்கும், மூன்று பிள்ளையார் இறைக்கும்' என்று சொல்வது வழக்கம்.

பொதுவாக, பூஜை செய்பவரது கட்டை விரல் அளவைப் போல், விக்கிரகம் பன்னிரண்டு மடங்கு அளவு இருக்க வேண்டுமென்பது சாஸ்திரம். 

மற்ற பூஜைகளைப் போலவே, மஞ்சள், குங்குமம், சந்தனம் என எல்லாமும் தேவை. அருகம்புல், எருக்க மாலை, 21 வகை புஷ்பங்கள், பத்ரங்கள்(இலைகள்) ஆகியவையும் தேவை.

மழை, வெயில், என மாறி மாறி வரும் கால கட்டத்தில் அமையும் இந்தப் பண்டிகையின் போது, மற்ற பூஜைகளிலிருந்து வேறுபட்ட வகையில், ஏக த்விம்சதி பத்ர (மூலிகைக்குணம் கொண்ட இலைகள்) பூஜை, ஏக த்விம்சதி புஷ்ப (மலர்) பூஜை, ஏக த்விம்சதி தூர்வாயுக்ம (இரண்டிரண்டு அருகம்புல்) பூஜை முதலிய பூஜைகள் கட்டாயம்.

 "ஏக த்விம்சதி" என்றால் '21' என்று பொருள். மருத்துவகுணம் கொண்ட 21 வகையான மூலிகை இலைகள், மற்றும் அருகம்புல்லால் பூஜை செய்யும் போது அவற்றின் மணம் நம் நாசியில் படுவதால் இயற்கையாகவே, அந்தத் தட்பவெப்ப நிலையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் காக்கப்படுகிறோம்.
பிள்ளையாருக்குச் சாற்ற சிறு துண்டு, பூணூல், கஜவஸ்திரம் ஆகியவற்றையும் தயார் செய்து கொள்ளவும். பிள்ளையார் குடை கிடைக்கும் இடத்தில் அதையும் பயன்படுத்தலாம். 
நிவேதனங்கள்:
தேங்காய், உளுந்து, எள், மோதகம், உருண்டை ஆகிய ஐந்து விதக் கொழுக்கட்டைகளும், பச்சரிசி இட்லி, உளுந்து வடை, பாயஸம், மஹா நைவேத்யம்,(பச்சரிசி சாதத்தில், சிறிது பருப்பு, நெய் சேர்த்தது)ஆகியவை முக்கியமான நிவேதனங்கள். சில வீடுகளில், அப்பம், எள்ளுருண்டை ஆகியவையும் செய்வார்கள். சுண்டல் செய்வதும் வழக்கம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், விளாம்பழம், நாவல்பழம், பேரிக்காய்,கொய்யாப்பழம் முதலியவையும் வைக்க வேண்டும். கிடைத்தவற்றை வைக்கலாம்.
மோதக அச்சில் மோதகம் செய்யும் முறை.





பூஜை அறையில், கோலம், வாழைமரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறு மேடையில் வாழை இலையை வைத்து அரிசியைப் பரப்பிக் கொள்ளவும். அதில் விநாயகரின் பிரதிமையை வைத்து,எருக்கம் மாலை, வஸ்திரம் முதலியவை சார்த்தி, அலங்கரித்துக் கொள்ளவும். கிழக்குப் பார்த்து பிரதிமை இருப்பது நல்லது. பூஜை செய்பவர் வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜை செய்யலாம்.

பொதுவாக, விநாயக சதுர்த்தி பூஜையை மத்தியானம் செய்வது உகந்தது. பூஜை முடியும் வரை உபவாசமிருப்பது சிறந்தது.

பூஜைக்குத் தேவையானவை, நிவேதனங்கள் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். நடுவில் எழுந்திருப்பது உசிதமல்ல.

விநாயக சதுர்த்தி பூஜை ஆரம்பிக்கும் முன்பாக, விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்கு விக்னமில்லாமல் பூஜை நிறைவேற, அவரையே வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.

விநாயகருக்கு ஷோடசோபசார பூஜை செய்து,  அங்க பூஜை, ஏக த்விம்சதி புஷ்ப பூஜை, ஏக த்விம்சதி பத்ர பூஜை , ஏக த்விம்சதி தூர்வாயுக்ம‌ (அருகம்புல்லால் ) பூஜை ஆகியவை செய்யவும். ஸ்ரீவிநாயகர் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சிக்கவும்.

ஸ்ரீ விநாயக அஷ்டோத்திர சத நாமாவளிக்கு இங்கு சொடுக்கவும்.

பின்,தூப தீபம் காட்டி நிவேதனங்களைப் பக்தியுடன் சமர்ப்பிக்கவும். கற்பூரம் காட்டி, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து வணங்கவும். பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குற்றங்களுக்காக, மன்னிப்பு வேண்டி,(க்ஷமா பிரார்த்தனை) பூஜையின் பலனை ஸ்ரீ விநாயக மூர்த்திக்கே அர்ப்பணம் செய்யவும்.
பூஜை பிரசாதங்களை விநியோகிப்பது நல்லது. ஆலயங்களுக்குச் சென்று விநாயகரைத் தரிசித்து வரலாம்.

சாஸ்திரப்படி, விநாயகர் பிரதிமை, அடுத்த புரட்டாசி மாத சதுர்த்தி வரை பூஜையிலிருக்க வேண்டும். தினமும் ஆவாஹனம் ஒன்றைத் தவிர்த்து மூன்று காலமும் பூஜித்து நிவேதனங்களைச் செய்ய வேண்டும். பிறகே நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும். தற்போது பல்வேறு காரணங்களால் அதைச் செய்ய இயலாததால், மறு நாள் புனர் பூஜை செய்து பின் விஸர்ஜனம் செய்து விடுகிறோம்.

புனர் பூஜை:
மறுநாள், விநாயகரை ஏற்கெனவே ஆவாஹனம் செய்து வைத்திருப்பதால், அதைத் தவிர்த்து, மற்ற உபசார மந்திரங்களைக் கூறி, அர்ச்சித்து,  தூப தீபம் காட்டி, மஹா நைவேத்தியம், வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். பிறகு, விநாயகரை, யதாஸ்தானம் எழுந்தருளப் பிரார்த்தித்து பிரதிமையை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். பிறகு நீர் நிலைகளில் சேர்த்து விடலாம்.

விநாயகரை முறைப்படி பூஜித்து, வேண்டுவன யாவும் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!!!

7 கருத்துகள்:

  1. எக்குறை வருமினும் அக்குறை தீர்த்திட
    சிக்கெனப்பிடித் தேனுன் பொற்பாதமலரை

    திக்கெட்டும் திகழும் இப்புவனம் புகழும்
    மற்றற்ற மாசிலா மணியே!

    பற்றற்று நின்று கற்பக மலரனை
    போற்றிப் பணியும் பக்தரை

    நற்கதி புகுத்தும் நால்வேத நாயகன்
    நின்தாள் பணிந்து உய்வோமே!

    ஆனை முகனைப் பற்றிய அற்புதப் பதிவு!
    வேழமுகத்தான் வேண்டும் வரம் தர
    வேண்டிநிர்ப்போம் அவன் பாதார விந்தம் தனையே!

    பதிவு , பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  2. //ஜி ஆலாசியம் said...
    வேழமுகத்தான் வேண்டும் வரம் தர
    வேண்டிநிர்ப்போம் அவன் பாதார விந்தம் தனையே!//

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும், மிக அருமையானதொரு கவிதைப் பகிர்வுக்கும் நன்றிகள் அண்ணா!!.

    பதிலளிநீக்கு
  3. fter study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.

    பதிலளிநீக்கு
  4. //Pls check out my web site as well and let me know what you think.//

    Thanks for your comment. Please let me know your name and blog address.

    பதிலளிநீக்கு
  5. Thanks for that awesome posting. Useful, and it saved MUCH time! :-)
    Welcome to my site [url=http://www.about-dogs.zoomshare.com/]www.about-dogs.zoomshare.com[/url].

    பதிலளிநீக்கு
  6. Somebody necessarily lend a hand to make severely posts I would state. That is the first time I frequented your web page and to this point? I amazed with the analysis you made to make this actual publish extraordinary. Excellent task!

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..