சென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சியாக, ஸாங்கிய யோகத்தின் மூன்றாவது பகுதியை நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கபிலர் தொடர்ந்து கீழ்வருமாறு கூறினார்:
- பக்தி யோகம், ஸாங்கிய யோகம் இவற்றுள் ஒன்றைப் பின்பற்றுவதாலேயே, பகவானை அடைய இயலும்.
- நரகத்தில் வதைபடுவதான நிலையை அடைந்தாலும், ஆன்மாவானது சரீர அபிமானத்தை விடுவதில்லை. (நரகத்தில் கிடந்துழலும் உயிர்களுக்கு, அவற்றுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு ஏதுவான சரீரம் உண்டு. அவை, மாயையின் காரணமாக, அவ்வித தண்டனைகளையும், அவற்றுக்கு தரப்படும் மிகக் கீழ்மைப்பட்ட உணவையும் சுகம் எனக் கருதுவதால் அந்த அபிமானம் அவற்றுக்கு ஏற்படுகிறது).
- நரகமும் ஸ்வர்க்கமும் இங்கும்(பூலோகம்) இருக்கின்றன. நரகில் எத்தனை வேதனைகள் உண்டோ, அவ்வளவும் இங்கும் காணப்படுகின்றன.
- துரோகங்களால் உடலை வளர்த்த மனிதன், இவ்வுடலை விடும்போது, அந்தப் பாவத்தை கட்டுச் சோறு போல் வழிக்கு உணவாகக் கட்டிக் கொண்டு தன்னந்தனியனாக நரகத்தை அடைகிறான்.
- மானிடப்பிறவிக்கு கீழ்ப்பட்ட பிறவிகளில், எத்தனை நரக வேதனைகள் உண்டோ, அத்தனையையும் அனுபவித்து அதனால், கர்ம வினைகள் தேய்ந்து மறைவதன் காரணமாக மீண்டும் மனிதப்பிறவி எடுக்கிறான்.
- கர்மவினைகளால் தூண்டப்பட்டு, மானிட உடலை எடுக்கும் பொருட்டு, வீரியத்துளியில் ஒட்டிக் கொண்டு, ஸ்திரீயின் கருப்பையுட் புகுகிறான்.
கபிலரின் தன் உபதேச மொழிகளில் கருவின் வளர்ச்சி நிலைகளைப் பின்வருமாறு கூறுகிறார்.
ஐந்து இரவுகளில் நுரை போன்ற வடிவமும், பத்து நாட்களில் இலந்தைப் பழ வடிவமும்,பின் முட்டை போன்ற வடிவமும், அடைகிறான்.(ஒரு குழந்தை கருவான நாள் முதல் படிப்படியாக அடையும் வடிவங்கள் இங்கு விளக்கப்படுகின்றன. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இப்போது கருவின் வளர்ச்சி நிலைகளை 'ஸ்கேன்' செய்து நாம் காண முடிகிறது. மிகப் பழங்காலத்தில், மெய்ஞ்ஞானம் இவற்றை தெளிவாக விளக்குவதைக் காணலாம்).
ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதங்களில் கை, கால் முதலிய அங்கங்களும், மூன்றாவது மாதத்தில் நகம், எலும்பு, தோல் முதலியவையும், ஆண், பெண் குறிகளும், நான்காவது மாதத்தில், இரத்தம், தசை, மூளை,முதலியவையும், ஐந்தாவது மாதம் முதல் பசி, தாகம் ஆகியவற்றின் தோற்றங்களும் ஏற்படுகின்றன. ஆறாவது மாதத்தில், உடலசைவு ஏற்பட்டு, கருப்பையினுள், குழந்தை வலதுபுறமாக சுழலத் தொடங்குகிறது.
ஏழாவது மாதத்தில், அறிவு தோன்றி, யாரால் தாயின் கருப்பையினுள் புகுத்தப்பட்டானோ, அந்த இறைவனை, மனம் உருகித் துதிக்கத் துவங்குகிறான்.
யாரால் தனக்கு படிப்படியான வளர்ச்சி கிடைத்து, இந்த நிலை கிடைத்ததோ அந்தப் பகவானை, நினைத்து,' உனக்கு என் நமஸ்காரத்தைத் தவிர பிரதியாக எதைச் செலுத்த இயலும்!' என்று எண்ணி வணங்குகிறான். மேலும், கவலையை விட்டு, மனதில் எந்நேரமும் விஷ்ணுவின் திருவடிகளை நினைத்து வெகு சீக்கிரத்தில் இந்த ஸம்ஸார சாகரத்திலிருந்து தன்னைக் கரையேற்றிக் கொள்ளப் போவதாகவும், எந்த முறையில் இந்தப் பிறவியைக் கழித்தால், மீண்டும் பிறவா நிலையை அடையலாமோ, அவ்விதம் செய்யப் போவதாகவும் கர்ப்பவாசத்திலிருக்கும் போதே சங்கல்பம் செய்து கொள்கிறான்.
(இதனாலேயே, கர்ப்ப காலத்தில் இறைச் சிந்தனையுடனும், நல்ல எண்ணங்களுடனும் இருக்க வேண்டும் என்று தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த எண்ணங்கள், கருவின் மீது பிரதிபலித்து, அதன் நற்சிந்தனைகளுக்கு மேலும் வலிவூட்டும். மேலும் ஏழாம், எட்டாம் மாதங்களின் போது நடத்தப்படும் சீமந்தம் போன்ற சடங்குகளில் சொல்லப்படும் மந்திர ஒலிகளும், நல் வாழ்த்துக்களும், குழந்தையின் செவிகளில் விழுந்து அக்குழந்தை தன் வாழ்நாளில் தெளிந்த ஞானம் பெற உதவும்).
யுவதி ஜடரகின்னோ ஜாதபோதோப்ய காண்டே
ப்ரஸவ களித போத: பீடயோல்லங்க்ய பால்யம்
புநரபி பத முஹ்யதி ஏவ தாருண்யகாலே
கபிலதநுரிதி த்வம், தேவஹூத்யை ந்யகாதீ: (ஸ்ரீமந் நாராயணீயம்)
இதன் பொருள்:
ஹே! குருவாயூரப்பா!!, "ஒருவன் தனது தாயின் வயிற்றில் கர்ப்பவாசம் செய்யும் போது, மிகுந்த தொல்லைகளைக்கு ஆட்படுகிறான். ஆகாரங்களாலும், அசுத்தமான மல மூத்ரங்களாலும் கிருமிகளாலும், சிரமங்களை அனுபவிக்கிறான். ஏழு மாதம் கழிந்த பின்னர், கர்ப்பத்தில் அவனுக்கு ஞானம் தோன்றுகிறது. இருந்தாலும், தனது துயரங்களை நீக்கும் சக்தி இல்லை. அவ்வாறு கிடைத்த ஞானத்தையும், பிறந்தவுடன் இழந்து விடுகிறான்.இதனால், தன் பால்யத்தில் பல வித துன்பங்களை அனுபவிக்கிறான். தன் இளமைக் காலத்தில், பல வித மோகங்களால் அலைக்கழிக்கப்படுகிறான்.கஷ்டம்!!" இவ்வாறு நீ உன் தாயான தேவஹூதிக்கு உபதேசித்தாய் அல்லவா!!.
இவ்வாறு தெளிந்த சிந்தனையுடையவனாய் இறைவனைத் துதித்துக் கொண்டு இருக்கும் போதே, பத்து மாதம் நிறைந்த குழந்தையாக இருக்கும் அவனை, ஸூதிகா எனப்படும் வாயு, தலைகீழாகத் தள்ளி விட, முன்பிருந்த அறிவு மறைந்து, அஞ்ஞான நிலையை அடைந்து, பூமியில் பிறந்து அழத் தொடங்குகிறான்.
இப்பூவுலகில் வாழும் போது தீயவர் சேர்க்கையால், நிலை தவற நேர்ந்தால், பாவ மூட்டையைச் சுமந்து, முன் போல், நரக வாசத்தை அடைகிறான்.
ஆகவே, மனிதனாகப்பட்டவன், எந்த சந்தர்ப்பத்திலும், தன் நிலை தவறாது, உலகப் பற்றுதலை அழித்து, ஜீவனுடைய கதியை நன்றாக உணர்ந்து வாழவேண்டும்.
இவ்வாறு கபிலர் கூறிய உபதேச மொழிகளைக் கேட்ட தேவஹூதி, அகமகிழ்ந்து, தன் மைந்தனாக அவதாரம் செய்தருளிய கபிலரை நோக்கி, 'தாங்கள் என் வயிற்றில் அவதாரம் செய்ததும், எனக்கு நல்லுபதேசங்கள் செய்ததும் ஆலிலையில் மாயக் குழந்தையாக, பிரளய காலத்தில் உலகனைத்தையும் ஒடுக்கும் தங்களுடைய லீலையே', என்று கூறி வணங்கினாள்.
கபிலரும், 'தாயே, இந்த மார்க்கத்தை நீ நன்றாக அனுஷ்டித்து, விரைவில், முக்தியடையப் போகிறாய்' என்று கூறினார். இவ்வாறு கூறி விட்டு, தன் தாயான தேவஹூதியிடம் விடைபெற்றுக் கொண்டு, கபிலர் அந்த ஆசிரமத்தை விட்டுச் சென்றார்.
தேவஹூதியும், பகவான் கூறிய யோக லக்ஷணங்களைக் கைக்கொண்டு, தியானத்திலாழ்ந்து, ஸமாதி நிலையை அடைந்து, இறுதியில் முக்தியை அடைந்தாள்.
இந்த ஆத்மயோக ரகசியமான, கபில மதத்தை, யாரொருவர் பக்தியுடன் படிக்கிறாரோ, சிரத்தையுடன் கேட்கிறாரோ, பிறருக்கு அன்புடன் உபதேசிக்கிறாரோ, அவர், கருடத்வஜனான பகவானிடம், நிலைத்த சித்தமுடையவனாய், அவரது பாதாரவிந்தத்தை எளிதில் அடைகிறார் என்று,ஸ்ரீமத் பாகவதம், இந்த சரிதத்தைப் படிப்பதன் பலனைக் கூறுகிறது. ஆகவே, இந்த சரிதத்தை படிக்கும் அன்பர்கள், வேண்டுவனவெல்லாம் அடைந்து, இறுதியில், மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமான முக்தியையும் இறையருளால் அடைய வேண்டி பிரார்த்திக்கிறேன்.
ஸகலபய விநேத்ரீம் ஸர்வகாமோப நேத்ரீம்
வதஸிகலு த்ருடம் த்வம் தத்விதூயாமயாந் மே
குருபவநபுரேச த்வயி உபாதத்ஸ்வ பக்திம் (ஸ்ரீமந் நாராயணீயம்)
ஹே குருவாயூரப்பா!!!, குருவாயூரில் திருவருள் புரிபவனே!!!, பரம்பொருளே!!, மேலும் மேலும் கூறிக் கொண்டே செல்வதால் என்ன பயன்?.உனது தாமரை மலரை ஒத்த திருவடிகளைப் பற்றுவதே, உன் திருவடிமலர்களில் பக்தி செய்வதே, அனைத்து பயங்களையும் போக்கும் என்றும், விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றும், நீ உறுதியளிக்கிறாய் அல்லவா?. ஆகையால், என்னுடைய அனைத்து வியாதிகளையும், நீக்கி உன்னிடம் பக்தி உடையவனாக நீயே என்னை மாற்ற வேண்டும் (உன்னையே சரணடைகிறேன்). அதற்கான அன்பை நீயே என்னிடம் உருவாக்க வேண்டும்.
Beautiful Pictures; apt selection.
பதிலளிநீக்குGood article, very informative.