நான் எழுதி, உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் 'வகுப்பறை, மாணவர் மலரில் வெளிவந்த, க்ஷண்மதங்களில் ஒன்றான 'காணபத்யம்' பற்றிய கட்டுரையை விரிவுபடுத்தி, மூன்று பகுதிகளாக உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
அல்லல் போம் வல்வினைபோம்-அன்னை
வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் நல்ல மாமதுரை
கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக்கால்.
"பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்ற சொல்வழக்குப் பிரபலமானது. விக்கிரகம், யந்திரங்கள் பிம்பங்களில் மட்டுமல்லாது மஞ்சள் கூம்பு, சாணி உருண்டை, களிமண் பிம்பம் என எந்த வடிவில் வேண்டுமானாலும் விநாயகரை வழிபடலாம். பிரத்யேகமான ஆவாஹன மந்திரங்கள் இருந்தாலும், ஒரு மஞ்சள் உருண்டையைக் கூம்பாகப் பிடித்து, "இது பிள்ளையார்" என்றால் அங்கே உடனே ஆவாஹனமாகி விடுகிறார். எந்த எளிய பூஜையையும் நிவேதனத்தையும் மனமார ஏற்று அருள் செய்பவர். கோவிலிலும் கொலுவிருப்பார். ஆற்றங்கரை அரசமரத்தடியிலும் அருள்புரிவார்.
தனக்கு மேல் நாயகன் இல்லாததால் "விநாயகர்" என்று பெயர் பெற்ற ஸ்ரீ மஹாகணபதியின் பெருமை பேசும் "காணபத்யம்" பற்றிய சில விவரங்களை நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஸ்ரீ மஹாகணபதியை நிர்க்குண நிராகார பரப்பிரம்மமாகக் கருதும் காணபத்யம், அவரே முழுமுதற்கடவுள் என்று உபதேசிக்கிறது. உலகத்தின் தோற்றமும், நிலைபெறுதலும் விநாயகராலேயே நிகழ்கிறது. முடிவில் பிரளய காலத்தில் ஒடுங்குதலும் விநாயகரிடமே. மும்மூர்த்திகளுக்கும் மேலான நாயகராய் விநாயகரே இருந்து இவ்வுலக இயக்கத்தைச் செயல்படுத்துகிறார். காணபத்யம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிரபலமாக இருக்கிறது. காணபத்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் 'காணபதர்கள்" என அழைக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் விநாயகர் வடநாட்டில், சித்தி, புத்தி எனும் இரு மனைவியரோடு கூடியவராக வழிபடப்படுகிறார்.
ஸ்ரீ வேதவியாச மஹரிஷி அருளிச் செய்த ஸ்ரீ விநாயக புராணம், விநாயகரின் தோற்றம், அவதாரங்கள், விநாயகரின் மகிமைகள் முதலிய பல செய்திகளை விரிவாக எடுத்துரைக்கிறது.
“கணபதி" என்னும் திருநாமத்தில், 'க' என்பது ஞானத்தையும் 'ண' என்பது மோட்சத்தையும் குறிக்கும். 'பதி' என்பது ஜீவாத்மாக்களின் தலைவனாக, பரப்பிரும்ம சொரூபமாக இருப்பதைக் குறிக்கும்.
"கணாநாம் த்வா" என்று துவங்கும் கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ள மந்திரமே, வேதங்கள் ஓதத் துவங்குமுன் உச்சரிக்கப்படுகிறது.
ஸ்ரீ கணபதி அதர்வஸீர்ஷம் என்னும் உபநிஷதம், "கணபதியே முழுமுதற்கடவுள்" என்று பற்பல ஸ்லோகங்களால் நிறுவுகிறது.
ஒவ்வொரு யுகத்திலும் விநாயகரின் தோற்றம் பற்றி ஒவ்வொரு விதமாகக் கூறப்படுகிறது. பார்க்கவ புராணமாகிய விநாயக புராணத்தின் படி, வக்ரதுண்ட விநாயகர், பிரளயம் முடிந்ததும் மும்மூர்த்திகளையும் படைத்து, முத்தொழில்களையும் செய்யுமாறு ஆணையிட்டு மறைந்தருளுகிறார். பின் உலக நன்மைக்காக, மீண்டும் தோற்றமாகிறார்.
பார்வதிதேவி நீராடும் போது, மஞ்சள் பொடியைப் பிசைந்து ஒரு உருவம் செய்து ,அதற்கு உயிரூட்ட, விநாயகர் தோற்றமானார் என்பதே பொதுவாக விநாயகரின் தோற்றம் குறித்து வழங்கப் பெறும் புராணக் கதை.
கயிலாய மலையில், மந்திர ரூபமான ஒரு மணிமண்டபத்தில், மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த "சமஷ்டிப் பிரணவம்", "வியஷ்டிப் பிரணவம்" என்ற இரு பிரணவங்களை இறைவனும் இறைவியும் கருணையுடன் நோக்க, அவை ஒன்றிணைந்து பிரணவ ஸ்வரூபமான விநாயகர் தோற்றமானார் என்கிறது ஸ்ரீ விநாயக புராணம்.
வேதாந்தகன், நராந்தகன் என்னும் இரு அசுரர்களின் பிடியிலிருந்து உலகத்தைக் காக்க, தேவர்களின் தாயான அதிதி, தன் கணவர் காஷ்யப மஹரிஷியின் ஆணைப்படி, விநாயகரை குழந்தையாகப் பெற வேண்டித் தவமிருந்தாள். விநாயகரும், "மகோற்கடர்" என்ற பெயரில் அதிதிக்குக் குழந்தையாக அவதரித்தார்.
ஆஹா, ஊஹூ, தும்புரு ஆகிய மூவரும் கயிலையில் சிவபெருமானை இசையால் மகிழ்விப்பவர்கள். மகோற்கடர் சிறு வயதாயிருக்கும் போது, அவர்கள் மூவரும் கயிலைக்குச் செல்லும் வழியில் காஷ்யப முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தனர். நீராடிவிட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த,விநாயகர்,சிவன், பார்வதி, விஷ்ணு, ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குப் பூஜை செய்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தனர். தியானம் முடிந்து பார்க்கும் போது, விக்கிரகங்களைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில், மகோற்கடரைக் கேட்ட போது, அவர் புன்சிரிப்புடன், தன் வாயைத் திறந்து காண்பிக்க, அவர் வயிற்றுக்குள் ஈரேழு உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன பஞ்சமூர்த்திகளும்அவர் வயிற்றுக்குள் இருப்பதைப் பார்த்து அதிசயித்து, விநாயகரே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்தனர்.
விநாயகர் யானை முகத்தவர். ஒற்றைத் தந்தம், இரு பெரும் செவிகள், மூன்று கண்கள் (விரூபாக்ஷர்), நான்கு புஜங்கள் கொண்ட ஐங்கரன் அவர்."கணேசாய நம:" என்ற ஆறு அக்ஷரங்களுக்கு உரியவர். விநாயகரின் ரூப பேதங்களில், வலம்புரி விநாயகரே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறார்.
இதன் காரணம், விநாயகரின் முகம் ஓங்கார பிரணவ ஸ்வரூபமானது. வலப்புறம் துதிக்கை சுழித்திருக்கும் விநாயகர் உருவத்திலேயே ஓங்கார ரூபம் கிடைக்கும்.
விநாயகரின் செவிகளும் தலையும் பெரிதாக இருக்கும் காரணம், நாம் மற்றவர்கள் சொல்வதைச் செவிமடுத்துக் கேட்கும் திறனும், நமது சிந்திக்கும் திறனும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்கே.
விநாயகரின் செவிகளும் தலையும் பெரிதாக இருக்கும் காரணம், நாம் மற்றவர்கள் சொல்வதைச் செவிமடுத்துக் கேட்கும் திறனும், நமது சிந்திக்கும் திறனும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்கே.
அவருடைய ஐந்து திருக்கரங்களும் ஐந்தொழில்களைக் குறிக்கும். எழுத்தாணி ஏந்திய வலக்கரம் படைத்தலையும், வரத முத்திரை தாங்கிய இடக்கரம் காத்தலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், அமுதகலசம் ஏந்திய துதிக்கை பிறவாப் பெருநிலை அருளலையும் குறிக்கும். அவரது பெரிய வயிறு, உலகங்களனைத்தும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. இச்சாசக்தி மற்றும் க்ரியாசக்திகளைத் தன் திருவடிகளாகக் கொண்ட ஞானசக்தியே விநாயகப் பெருமான்.
தணிகைப்புராணத்தில், 'கவிராட்சசர்' என்று அழைக்கப்படும் கச்சியப்பமுனிவர், விநாயகரின் ஐந்து கரங்களை, ‘ஒரு கை தனக்கு, ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு, இரு கைகள் நம் போன்ற அடியார்களைக் காக்க' என்று அழகுற வர்ணிக்கிறார்.
பன்னிரண்டு ராசிகளுக்குரிய விநாயகர் வழிபாட்டு விவரங்களை அறிய கீழ் இருக்கும் சுட்டிகளைச் சொடுக்கவும்.
1. 12 ராசிகளும் விநாயகர் வழிபாடும் , முதல் பகுதி.
2. 12 ராசிகளும் விநாயகர் வழிபாடும், நிறைவுப் பகுதி.
விநாயகர், நவக்கிரகங்களில் முறையே, நெற்றியில் சூரியனையும், நாபியில் சந்திரனையும், வலது தொடையில் அங்காரகனையும், வலது முழங்கைப்பகுதியில் புதனையும், வலது கையின் மேல்பகுதியில் சனீஸ்வரனையும், தலையில் குருபகவானையும், இடது முழங்கைப்பகுதியில் சுக்கிரனையும், இடது கையின் மேல் பகுதியில் ராகுவையும், இடது தொடையில் கேதுவையும் தரித்திருக்கிறார். ஆகவே விநாயகர் வழிபாடு நவக்கிரக தோஷங்களை அகற்றும் சக்தி வாய்ந்தது என்கிறது விநாயக புராணம்.
மேலும், அங்காரக பகவான, கணபதியைத் தொழுதே, கிரக பதவி பெற்று,"மங்களன்" என்ற பெயரும் பெற்றார். ஆகவே, செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி, 'அங்காரக சதுர்த்தி' என்றே பெயர் பெறுகிறது. அன்று விநாயகரை விரதமிருந்து வழிபாடு செய்வோரது திருமணத்தடை அகலும். எதிலும் தடங்கல் என்ற நிலை மாறி வெற்றி கிட்டும்.முருகனைப்போல், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை,
- திருவண்ணாமலை (செந்தூர விநாயகர்),
- திருக்கடவூர் (கள்ள வாரணப் பிள்ளையார்),
- மதுரை (முக்குறுணி விநாயகர்),
- திருநாரையூர் (பொல்லாப்பிள்ளையார்),
- விருத்தாசலம் (ஆழத்து விநாயகர்),
- காசி (துண்டி விநாயகர்) ஆகியவை ஆகும்.
இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றி பெறுவோம்!!!!
நன்று தோழி.. நன்று...
பதிலளிநீக்கு// அய்யர் said...
பதிலளிநீக்குநன்று தோழி.. நன்று.//
தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
ganapadhiyai patriya miga nalla katturai ! Vankkangal Kodi !
பதிலளிநீக்குஅருமையான பதிவு அனைவருக்கும் நம் அய்யன் கணபதியின் கருணையால் நாளும் நலமாக இருப்போம்
பதிலளிநீக்கு