நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

PART 2, ANANTHA VIRATHAM...(28/9/2002), அனந்த விரதம், பகுதி 2.வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் 
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் 
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று 
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.
(பெரியாழ்வார் திருமொழி, முதல் திருமொழி, கதிராயிரம்)

சென்ற பதிவின் தொடர்ச்சி...........

கௌண்டின்யர், தம் தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டி விழுந்து வணங்க, பகவானும், மகிழ்ந்து அவருக்கு அளப்பரிய செல்வம், தர்ம புத்தி, வைகுண்ட ப்ராப்தி ஆகிய மூன்று வரங்களையும் அருளினார். 


அப்போது, கௌண்டின்யர், தாம் வழியில் கண்டவற்றைப் பற்றிக் கூறி விளக்கம்  கேட்க, இறைவனும், பின் வருமாறு கூறலாயினார். (புராணக் கதைகள் பொருள் பொதிந்தவை என்பதற்கு கீழ் வரும் விளக்கமே சாட்சி)

'கௌண்டின்யா!!, நீ பார்த்த மாமரம், போன பிறவியில், ஒரு சிறந்த அந்தண வித்வான். ஆனால் தான் கற்ற கல்வியை ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் இப்போது பழங்கள் இருந்தும் பறவைகள் தொடாத மரமாக நிற்கிறார். பசு, போன பிறவியில், செல்வம் நிறைந்த நற்குடியில் பிறந்த பெண். அவள் யாருக்கும் அன்னதானம் செய்யாததால், புல் நிறைந்திருந்தும் அதை மேய முடியாத பசுவாகப் பிறந்தாள். காளை மாடோ, சென்ற பிறவியில், அகந்தையுள்ள அரசன். விளையாத தரிசு நிலத்தைத் தானமாகக் கொடுத்ததால், காளையாகப் பிறந்தான். தர்மம், அதர்மம் என்பதே இரண்டு குளங்களாக உன் கண்முன் காட்சி தந்தன. தான் தர்மமாகச் செய்ய வேண்டியதை, விலை பேசிய அந்தணனே யானை' என்று விளக்கமளித்தார்.

இதன் உட்பொருள்:

ஒருவர், தாம் கற்ற கல்வி, தாம் இறையருளால் அடைந்த செல்வம் ஆகியவற்றை, பலருக்கும் பயன்படுமாறு செய்தல் வேண்டும். கற்றதை பிறருக்கு சொல்லித் தராதவர், பழுத்திருந்தும் பயன்படாத மரத்துக்கு ஒப்பாவர்.  

தானத்தில் சிறந்தது அன்னதானம். இல்லத்தில் அன்னத்தை அன்போடு சமைத்து உணவளிக்கும் பொறுப்பு பெண்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. வேண்டுவோர்க்கு, தன் சக்திக்கு இயன்ற அளவில் அன்னதானம் செய்வது நல்லது. அன்னமளிக்காத பெண்கள், மேயாத பசுவிற்கு ஒப்பாவர். ஆகவே அவர்களுக்கு அத்தகைய பிறவிகளே கிடைத்தது. தானம் கொடுக்கும் போது, நம்மிடம் உள்ளதில் சிறந்ததையே தானம் செய்ய வேண்டும். தகுதியற்றதை தானம் செய்வது, அகந்தை,தான் தர்மமாகச் செய்ய வேண்டுவதை விலை பேசுவது  ஆகியவை   கீழான பிறவிகளையே பெற்றுத் தரும்.

தாகம் தீர்க்க வேண்டுமென்றாலும், நல்ல நீர் உள்ள குளத்திலேயே  நீர் பருகுதல் வேண்டும். தாகம் தீர வேண்டுமென்பதற்காக, அசுத்த நீர் அருந்தினால், பின்னால் அவதிப்பட நேரும். அதை போல், தர்மமும், அதர்மமும் இரண்டு குளங்கள். நம்மை வாழ்விக்கும் தர்மம் என்ற குளத்து நீரே சிறந்தது. அதாவது எத்தனை சோதனைகள் வந்தாலும், தர்மத்தின் வழி நிற்க வேண்டும்.

கௌண்டின்யரும், தன் மனைவியை அடைந்து, விவரங்களைச் சொல்ல, இருவரும் விரதத்தைக் கடைப்பிடித்து, பல காலம் வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

இந்த விரத சரித்திரம், பவிஷ்ய புராணத்தில் உள்ளது. அனந்த விரதம் அனந்தமான பலன்களைத் தர வல்லது என்று விவரிக்கும் பவிஷ்ய புராணம், விசேஷமாக, அனந்த விரதத்தன்று, நெய்யபிஷேகம் செய்து வழிபட்டால்,  உயர்ந்த குணங்களுடைய சத்புத்திரப் ப்ராப்தி கிடைக்கும் என்று கூறுகிறது.

மேற்கண்ட விரதம் பற்றி, ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கூறியதைக் கேட்ட பாண்டவர்கள், 14 ஆண்டுகள் அனந்த விரதத்தைக் கடைப்பிடித்து, இழந்த நாடு, செல்வம் அனைத்தையும் மீண்டும் பெற்றார்கள்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:
பொதுவாக, இந்த விரதத்தை, அவரவர்கள் குடும்பத்தில் செய்யும் ப‌ழக்கம் இருந்தால் மட்டுமே அனுஷ்டிக்கும் வழக்கம் இருக்கிறது. 14 வருடங்கள் செய்து விட்டு பின் நிறைவு செய்யும் வருடத்தில், உத்யாபனம் செய்து விடுகிறார்கள். அதற்குப்  பின்னும், தொடர்ந்து செய்வதும்  வழக்கத்தில் இருக்கிறது.  குடும்பத்தில், வயதில் மூத்தவர்களான தாய்,தந்தையர் மாத்திரம் அனுசரித்து, பின் தமக்கு வயதான காரணத்தினால், மகன், மருமகளிடம் கொடுத்துத் தொடரச் சொல்வதும் சில குடும்பங்களில்  செய்கிறார்கள்.

புதிதாக விரதம் எடுப்பவர்கள், தகுந்த பண்டிதர்களைக் கொண்டு, முறையாக சங்கல்பம் செய்து விரதம் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து 14 ஆண்டுகள், விடாமல் பூஜித்து நிறைவு செய்ய வேண்டும்.

விரத தினத்தன்று, அதிகாலையில் நீராடி, தூய்மையான இடத்தில் அழகான மண்டபம் அமைத்து, வாழை மரம்,  தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.

பூஜைக்குரிய இடத்தில் எட்டு இதழ் தாமரையைக் கோலமாக வரைந்து, அதன் மேல் வாழை இலையை வைத்து, அரிசியைப் பரப்பி, அதில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கலசத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும். ஸ்வாமிக்கு ஒன்றும், ஸ்ரீ லக்ஷ்மிக்கு ஒன்றுமாய், இரண்டு கலசங்கள் வைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. அவரவர் குடும்ப வழக்கத்தை அனுசரித்துச் செய்துகொள்ளலாம்.
கலசத்தில், நீர் நிரப்பி, வாசனைக் கலசத் திரவியங்கள், ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றைப் போட வேண்டும். மாவிலை, இல்லாவிட்டால் வெற்றிலையை நாற்புறமும் சுற்றி வைத்து, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்த தேங்காயை வைக்க வேண்டும். கலசத்திற்கு வஸ்திரம், நகைகள், மலர் மாலைகள் முதலியவை சாற்றி  அலங்கரிக்க வேண்டும்.

அனந்த பத்மநாப ஸ்வாமியின் படம் இருந்தால் அதையும் அலங்கரித்து வைக்கவும்.

பூஜைக்குரிய திரவியங்கள் 14 எண்ணிக்கையிலிருப்பது அவசியம். பழங்களிலிருந்து  நிவேதனங்கள் வரை ஒவ்வொன்றும் 14 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சில குடும்பங்களில், முக்கிய நிவேதனங்கள், அதிரசம் அல்லது போளி, தோசை ஆகியவை மட்டும் 14 எண்ணிக்கையில் வைத்துவிட்டு, சித்ரான்னங்கள், பாயசம் முதலியவற்றை நிவேதனமாக வைக்கிறார்கள். கர்நாடகாவில், போளி,மற்றும் தோசை ஆகியவை முக்கிய நிவேதனங்களாக இருக்கிறது. உளுந்து அதிகமாகச் சேர்த்து, சற்று உப்பி, ஊத்தப்பம் போல் தோசைகள் தயாரிக்கிறார்கள்.

பழங்களில் வாழைப்பழங்கள் மட்டும் வைக்க இயன்றாலும், 14 எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

நோன்புச் சரடு இந்த விரதத்தின் சிறப்பு. 14 இழைகள் கொண்டதாக, 14 முடிச்சுக்களிட்டு நோன்புச் சரடு தயார் செய்யப்படுகிறது. பூஜை முடிவில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்கிறார்கள்.
பூஜைக்குரிய மலர்களில், நாக தேவதைகளுக்கு உகந்த  தாழம்பூ முக்கிய இடம் வகிக்கிறது. மலர்களோடு, பத்ரங்கள்,(மரங்களின் இலைகள்) சேர்த்துப் பூஜிப்பது வழக்கம்.

பூஜைக்குரிய பொருட்களை, தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு, பூஜை செய்ய வேண்டும்.

இந்த பூஜையை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செய்வது சிறப்பு. இயலாவிட்டால், பெண்கள் செய்யலாம். பொதுவாக, இது பெண்களுக்கான விரதமாகவே  கூற‌ப்பட்டிருக்கிறது.

மிகுந்த ஆசாரத்துடன், நியமங்களை வழுவாது கடைப்பிடித்துச் செய்ய வேண்டிய பூஜையாகும் இது.  பூஜை முடியும் வரை உபவாசம் இருப்பது கட்டாயம்.

முதலில், கலசத்தின் மீது, ஒரு பிடி தர்ப்பத்தால் செய்த கூர்ச்சத்தை வைத்து,  அதன் மேல் ஆதிசேஷனின் பிரதிமையை வைத்து, கலசத்துக்கு பூஜை செய்ய வேண்டும். கலசத்தில் யமுனா தேவியை  (துங்கா, பத்ரா, பாகீரதி(கங்கை), முதலிய எல்லா நதிகளின் ரூபமாக, யமுனா தேவியைப் பாவிப்பது ஐதீகம்)  ஆவாஹனம் செய்து  பூஜிக்க வேண்டும்.

அதன் பின், பதினான்கு தர்ப்பங்களை, இரண்டிரண்டாக எடுத்து, நுனியில் முடிச்சிட்டு, அவ்வாறு முடிச்சிட்டவைகளை மூன்று காலாகப் பிரித்து, ஜடை போல் பின்னி, அதை, யமுனையை பிரதிஷ்டை செய்த கலசத்தின் மேல், தெற்குப் பக்கம் பார்க்கும் தலையாக வைத்து, அந்தத் தர்ப்பங்களில் அனந்த பத்மநாப சுவாமிக்கு பிராணப் பிரதிஷ்டை(ஸ்வாமியை நேர்ப்பட, உயிரூட்டிப் பிரதிஷ்டை செய்தல். ஸ்வாமியே நேராக, நம் இல்லத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம்) செய்து பூஜிக்க வேண்டும்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பெருமைகளைப் போற்றும், "லகு விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தவத்திற்கு' இங்கு சொடுக்கவும். ஆதி நாராயணனின் ஆயிரம் திருநாமங்களின் மகிமையை ஒரு சேரக் கொண்டுள்ள எளிய, துதியான இது, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் வாமன அவதாரம் போல் அளவில் சிறியதாயினும், மகிமையில் திருவிக்ரம மூர்த்தியாக,  அளவிடற்கரியதாக உள்ளது. இதைப் பாராயணம் செய்வோர்க்கு, வித்தை, செல்வம், முதலிய வேண்டுவன எல்லாம் கிடைக்கும். அக்னியாலோ, ஆள்பவர்களாலோ, கள்வர்களாலோ எவ்விதத் துன்பமும் ஏற்படாது. நோய் நொடிகள் அண்டாது ஆரோக்கியமான வாழ்வு வாழ்வர் என்று இதன் பலஸ்ருதி கூறுகிறது.

ஷோடசோபசார பூஜைகளும், அங்க பூஜையும் செய்து துதிக்க வேண்டும். அதன் பின், நோன்புச் சரடை ஸ்வாமியின் பாதத்தில் வைத்துப் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் நிவேதனங்கள், பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றைச்  சமர்ப்பிக்க வேண்டும். மந்திர புஷ்பாஞ்சலி முடிந்த பிறகு,

அனந்தாய நமஸ்துப்யம் ஸஹஸ்ர சிரஸே நம:|
நமோஸ்து பத்மநாபாய நாகாநாம் பதயே நம:||

என்ற மந்திரத்தைக் கூறி, சரட்டை நமஸ்கரிக்கவும்.

பிறகு, மந்திரங்களைக் கூறி, நோன்புச்சரட்டை பக்தியுடன் அணிந்து, பிரார்த்தனை செய்யவும்.

நமஸ் ஸர்வஹிதானந்த ஜகதானந்தகாரக |
ஜீர்ணதோரம் வாஸூதேவ விஸ்ருஜாமி த்வதாஜ்ஞயா ||

என்று கூறி, பழைய சரட்டை எடுத்துவிடவும்.

பிறகு, அனந்த விரத மகிமையைப் பாராயணம் செய்து ஆரத்தி எடுக்கவும்.

பூஜை முடிந்த பிறகு, வைதீகர்களுக்கு, நிவேதனங்களுடன தாம்பூலம், தட்சணை, ஆகியவற்றை வழங்கி, பழைய சரட்டையும் அவருக்குக் கொடுக்க வேண்டும். பிறகு அவர்களுக்கும்,  விரதபூஜையில் பங்குபெற்றோருக்கும், உணவளிக்க வேண்டும்.

புனர்பூஜை:

பூஜை அன்று சாயங்காலமோ, அல்லது மறுநாளோ, தூப தீபம் காட்டி, இயன்றதை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி செய்து புஷ்பாஞ்சலி (இரண்டு கைகள் நிறைய புஷ்பங்கள் எடுத்துச் சமர்ப்பித்தல்) செய்து நமஸ்கரிக்கவும். பின்,

"அனந்த பத்மநாப ஸ்வாமினே நம: யதாஸ்த்தானம் பிரதிஷ்டாபயாமி || க்ஷேமாய புனராகமனாய ச | 

என்று கூறி, வடக்கு முகமாக, கலசத்தை/படத்தை நகர்த்தி வைக்க வேண்டும்.

வீட்டில் இவ்வாறு பூஜிக்க இயலாதவர்கள், அனந்த சயனத் திருக்கோலத்தில் பெருமாள் அருட்காட்சி அருளும் திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து அருள் பெறலாம். வைணவத் திருத்தலங்களில் இவ்விரத தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வாழ்வில் கர்ம வினையால் இழந்தவற்றைத் திரும்ப அடைந்து, எல்லா நலன்களும் பெற்று, வாழ்வாங்கு வாழ உதவும், அனந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து,

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

 1. அனந்தனின் ஆனந்தமளிக்கும் திருவுருவப் படங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன...

  அனந்த விரதம் பற்றிய தொடர் விளக்கங்கள் அருமை. வைகுந்தப் பதவியைப் பெற ஆற்றுவிக்கும் தங்களின் பணிக்கு பகவானே நேரில் வந்தருள்வான் சகோதரி.

  கற்றகல்வியை மறைப்பதும், பெற்ற செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்க நினைப்பதும் எத்தனைக் கொடும் பாவம் என்பதை அழகாக அறியத் தந்துள்ளீர்கள்.

  அருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 2. // ஜி ஆலாசியம் said...
  அனந்தனின் ஆனந்தமளிக்கும் திருவுருவப் படங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன.//

  தங்கள் மனமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..