திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே
திருவைகுந்த
வாசன், ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருத்தேவியருள் ஒருவரான, ஸ்ரீ
பூதேவி நாச்சியாரே ஸ்ரீ
ஆண்டாளாக திருஅவதாரம் செய்தருளினார். அவர்
அருளிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும், வேத, வேதாந்த, உபநிஷத
சாரமாகவே கருதப்படுகிறது.
திருவில்லிப்புத்தூரில்
'பெரியாழ்வார்' எனப் பின்னாளில் போற்றப்பட்ட,
ஸ்ரீ விஷ்ணு சித்தரின் நந்தவனத்தில்,
திருத்துழாய்ச் செடியருகில், திருவாடிப்பூரத்தன்று, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதியும் கூடிய சுபதினத்தில், மண்ணுலகத்தோரை
வாழ்விக்க, அழகே உருவாகி, ஸ்ரீ
ஆண்டாள் நாச்சியார் அவதரித்து அருளினார். அவருக்குக் 'கோதை' என்னும் திருநாமம்
சூட்டி வளர்த்தார் ஸ்ரீ விஷ்ணு சித்தர்.பரம ஞானத்தை, தந்தையே
குருவாக இருந்து போதிக்க, அல்லும்
பகலும் கண்ணன் திருவடிகளையே எண்ணி
வளர்ந்தார்.
கண்ணனையே
தம் மணாளனாக வரித்து, 'மணந்தால்
கண்ணனையே மணப்பது'என்று உறுதி
பூண்டார்.
ஸ்ரீ வடபத்ரசாயிப் பெருமாளுக்குச் சூட்டுதற்காக தந்தை வைத்திருந்த பூமாலையை,
தம் திருக்கழுத்தில் சூடி, கிணற்று நீரில்
தம் திருமுகம் நோக்கி அழகு பார்ப்பார்
(அந்தக் கிணறு 'கண்ணாடிக் கிணறு'
என்ற பெயருடன் திருவில்லிப்புத்தூரில் இருக்கிறது). ஒரு நாள் இதைக்
கண்ணுற்று, விஷ்ணுசித்தர் தம் திருமகளாரைக் கடிந்து
கொண்டார். பின் வேறொரு மாலை
கட்டிச் சென்று திருமாலுக்குச் சாற்ற,
அவரோ, 'கோதை சூடிக் கொடுத்த
மாலையே எமக்கு உகப்பு' என்று
திருவாய்மொழிந்தருளினார். அதன் பின், நாடோறும்,
கோதை சூடிக் கொடுத்த மாலையே
திருமாலுக்குச் சாற்றலாயினர்.
பூமாலையோடு
அனுதினமும் அருந்தமிழ்ப் பாசுரங்களால் பாமாலையும் சூட்டிப் பரமனை வழிபட்டார் கோதை
நாச்சியார். ஆண்டாள் என்ற திருநாமத்திற்கு,
அளவிலா பக்தியால் எம்பிரானை ஆண்டாள், அற்புதப் பாசுரங்களால் தமிழை ஆண்டாள், அன்பால்
பக்தர் நெஞ்சமெல்லாம் ஆண்டாள் என்று பலவாறு
பொருளுரைக்கலாம்.
பெருமானையே
மணாளனாக அடைதற் பொருட்டு, மார்கழி
மாதம் 30 நாளும் பாவை நோன்பு
நோற்றார். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று நியமங்களுடன்,
பரமன் திருவருளை தான் மட்டுமில்லாமல், அனைவரும்
பெறுதற் பொருட்டு திருவில்லிப்புத்தூரிலிருக்கும் தம் தோழிப் பெண்களுடன்
இணைந்து, இந்நோன்பைச் செய்த்ருளினார்.
தாம் வசித்த திருவில்லிப்புத்தூரையே கோகுலமாக, வடபத்ரசாயியின்
திருக்கோவிலையே நந்தகோபன் திருமாளிகையாக, தாமும் தம் தோழியரும்
கோபிகைகளாக மனதினுள் வரித்துக் கொண்டு கோதை நாச்சியார்
பாடியருளிய முப்பது திருப்பாடல்கள் ஒவ்வொன்றும்,
மங்கலமான சொற்கள், பொருளுடன் அமைந்த தமிழ்ச்சுரங்கம். 'அகழ்வாரைத்
தாங்கும் நிலம் போல' பொறுமையால்
நம் அனைவரையும் தாங்கும் பூமாதா, அளவுக்கு மீறி
அகழ்ந்தாலும் பொன்னும் மணியும் தம் மடியிலிருந்து
மானுடர்க்கு வழங்கி மகிழும் நிலமகள்,
படிக்கப்படிக்கத் திகட்டாமல், அள்ள, அள்ளக் குறையாத
ஆழ்ந்த தமிழ்ச்சுவையுடன் பாசுரங்களை வழங்கியதில் வியப்பென்ன?!!
தம் திருமணக் கோலத்தை கனவில் கண்டருளி,
அந்தக் காட்சியை, 'வாரணமாயிரம்' எனத் தொடங்கும் திருப்பாசுரங்களாக
இயற்றியருளினார். (பாசுரங்களுக்கு இங்கு சொடுக்கவும்).
'மானிடர்க்கென்று
பேச்சுப்படில் வாழகில்லேன்' என்ற தம் இறையருட்
செல்வியின் திருவுள்ளம் அறிந்த விஷ்ணுசித்தர், திருமாலிடம்
முறையிட்டார். திருமால் திருவாய் மலர்ந்தருளியபடி, திருவரங்கத்துக்குத் தம் திருமகளாரை அழைத்துச்
சென்றார். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில்
எம்பெருமான், கோதை எனும் திருப்பெயர்
சூடி வளர்ந்த பூமாதேவி நாச்சியாரைத்
தம்முடன் இணைத்துக் கொண்டார். திருவரங்கமே திவ்ய தேசங்களுள் முதலாவதாக
அமைந்துள்ளது. நிறைவாக (ஸ்தூல சரீரத்துடன் தரிசிக்கும்
வண்ணம்) அமைந்துள்ளது திருவில்லிப்புத்தூர். ஆகவே, பூமாலையும், பாமாலையும்
சூட்டி வழிபட்ட கோதை நாச்சியார்,
திவ்ய தேசங்களை மாலையாகச் சூடியவராக வழிபடப்படுகிறார்.
திருமகள்
போல் வளர்ந்த தம் செல்வி,
திருமாலை அடைந்ததில் அகமகிழ்ந்தாலும், வளர்த்த
பாசத்தால்,
ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்'
செங்கண்மால்தான் கொண்டு போனான்.
என மனம் கசிந்தார் விஷ்ணுசித்தர்.
ஆண்டாள் நாச்சியார்,
பெருமான் மீது கொண்ட பக்தி மீதுற,
அவர் திருவாய் எவ்வித மணமுடையது என்று
அவர் திருக்கரங்களிலிருக்கும் 'பாஞ்சசன்யம்' என்ற திருப்பெயரையுடைய சங்கைக்
கேட்பது போல் அமைந்த பாசுரங்கள்
சிறப்புடையவை.
கருப்பூரம்
நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச்
செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த
மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக்
கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
உன்னோடு
டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி
னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி
நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய்
பாஞ்சசன் னியமே (ஏழாம் திருமொழி)
மேலும்,
“மாலிருஞ்சோலை
நம்பிக்கு நான் நூறு தடா
நிறைந்த வெண்ணை வாய் நேர்ந்து
பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த
அக்காரவடிசல் சொன்னேன்.”
என்ற ஸ்ரீ ஆண்டாளின் வேண்டுதலை,
பின்னாளில்
உடையவரான ஸ்ரீ ராமானுஜர் நிறைவேற்றி
வைக்க, அதன் காரணமாக, அவர்
திருவில்லிப்புத்தூர் திருக்கோவிலுள் திருமாலைச் சேவிக்கச் செல்லும் போது, ஸ்ரீ ஆண்டாள்
சந்நிதியில் இருந்து, 'வாரும் எம் அண்ணலே'
என்ற முகமன் சொல் கேட்டது.
ஸ்ரீ ஆண்டாள் விக்கிரகம், இரண்டடி
முன் வைத்து, தம் வேண்டுதலை
நிறைவேற்றிய, ஸ்ரீ ராமானுஜரை, தம்
தமையனார் ஸ்தானத்தில் வைத்து இவ்வாறு திருவாய்
மலர்ந்தருளியதன் காரணமாகவே, 'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' என்ற வாழி
திருநாமம் ஏற்பட்டது.
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியே, ஸ்ரீ ஆண்டாளின்
திருக்கரங்களிலிருக்கும் கிளியாக அமர்ந்திருக்கும் பாக்கியம்
பெற்றவர். திருவரங்க நாதனிடம் ஆண்டாளுக்காகத் தூது சென்ற காரணத்தால்
இந்தப் பேறு அவருக்குக் கிட்டியது.
ஸ்ரீ ஆண்டாளின் இடத்தோளை அலங்கரிக்கும் இந்தக் கிளி, தினமும்
புதிதாகச் செய்யப்பட்டு, சாயரட்சை பூஜையின் போது நாச்சியாரின் திருக்கரங்களில்
சமர்ப்பிக்கப்படுகிறது. மறு நாள் காலையில்
இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பெறுவோரின் பாக்கியம்
அளவிடற்கரியது. குறிப்பாக, இந்தக் கிளியை வாங்கி
வந்து தம் இல்லத்தில் வைப்பதால்
திருமணத்
தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
இதைப்போல,
தம் திருமண சமயத்தில் திருவரங்கநாதர்
எழுந்தருளத் தாமதமானதால் திருவரங்கநாதரை
அழைத்து வரும்படி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,
கருட பகவானை வேண்டினார். அவ்வாறு
செய்தால் தம் அருகிலேயே இருக்கும்
வரமருளுவதாக வாக்களித்தார். அவ்வண்ணமே கருடபகவான் செய்ததால், இன்றும், திருவில்லிப்புத்தூரில் மட்டும், பெருமாளுடன், கருடாழ்வார், ஆண்டாளின் அருகில் திருக்காட்சி அருளுகிறார்.
திருவில்லிப்புத்தூரில்,
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான
ஸ்ரீ ஆண்டாளின் அவதார தினமான திருவாடிப்பூரம்
மிகப் பெரும் விழாவாக எட்டு
நாட்கள் கொண்டாடப்பட்டு ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. திருவில்லிப்புத்தூர் தேர் மிகப் பெரியதும்
சிறப்புடையதுமாகும்.
திருவாடிப்பூரம் அனைத்து வைணவக் கோவில்களிலும் பெரும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. திருவாடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவாடிப்பூரத்தன்று, அம்பிகைக்கு வளைகாப்பு நடந்ததாக ஐதீகம். ஆகவே, பெரும்பாலான கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சிறப்பு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு, அம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள் மழை பொழிகிறாள். அம்பிகைக்கு அணிவித்த வளையல்கள், முளைகட்டிய பாசிப்பயறுடன் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்பிரசாதத்தைப் பெறுபவர்களுக்கு மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
சில திருக்கோவில்களில், அம்பிகை தான்ய வளம் பெருக்கும் 'சாகம்பரி தேவியாக' காய்,கனி அலங்காரத்தில் அருள் பாலிக்கிறாள்.
எல்லாத்
தலங்களிலும் பக்தர்கள் கொண்டாடி மகிழும் திருவாடிப்பூரத்தன்று ஸ்ரீ ஆண்டாள்
திருவடிகளைச் சரணடைந்து.
வெற்றி
பெறுவோம்!!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
அற்புதமான பதிவு, எத்துனை தடவை கேட்டாலும் தெவிட்டாத சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் சரிதம்.
பதிலளிநீக்குநன்றி அக்கா.
//Bhuvaneshwar said...
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு//
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரரே!!
வணக்கம்
பதிலளிநீக்குஆடி பூரம்,
நல்ல ஒரு விளக்கங்கள்
அமுதன் பாடல்
நன்றி