பாலனாய் ஏழு உலகு உண்டு பரிவின்றி
ஆல் இலை அன்ன வசம் செய்யும் அண்ணலார்
தாள் இணை மேல் அணி தன் அம் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மடவல்லியே (ஸ்ரீ நம்மாழ்வார், திருவாய்மொழி).
ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்ததாகவும், மருத்துவ குணம் மிகுந்ததாகவும், தான் இருக்கும் இல்லங்களுக்கு எல்லா நலன்களும் தருவதாகவும் வணங்கப்படும் துளசிச் செடியின் பெருமைகளை இந்தப் பதிவில் நாம் காணலாம்.
திருத்துழாய், பிருந்தா, துளவம், மாலலங்கல் எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் துளசி மிகப் புனிதமான இலையாகக் கருதப்படுகிறது. கோவில், இல்லங்களில் நடைபெறும் பூஜைகளில், அர்ச்சிப்பதற்கும், மாலையாகக் கட்டி இறைமூர்த்தங்களுக்கு சமர்ப்பித்து வழிபடுவதற்கு துளசி உகந்தது.
அபிஷேகங்கள் செய்யும் போது, துளசி இலை சேர்த்த நீரே உபயோகிக்கப்படுவதிலிருந்து துளசியின் புனிதத்துவத்தையும் மருத்துவ குணங்களையும் உணரலாம். துளசி தீர்த்தமே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வீட்டு முற்றத்தில் துளசி வளர்ப்பதால், மருத்துவரீதியாகவும், ஆன்மீக ரீதியில் வரும் பலன்கள் கணக்கில் அடங்காது.
முதலில் மருத்துவப் பலன்களைப் பார்க்கலாம்.
துளசி தன்னைச் சுற்றியுள்ள காற்றிலிருக்கும் விஷ வாயுக்களை உள்ளிழுத்துக் கொள்ளும் சக்தி படைத்தது.துளசிச் செடி அதிகமாக ஆக்ஸிஜனை மட்டுமல்ல, ஓசோன் வாயுவையும் வெளியிடும் தன்மை உடையது. ஆகவே, துளசிச் செடிகளை அதிக அளவில் வளர்ப்பது சுற்றுச் சூழலுக்கு மிக அதிக அளவில் நன்மை பயக்கும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும், இதை தினம் குளிக்கும் நீரில் சேர்த்துக் குளித்து வர, சரும நோய்கள் நீங்கும். துளசி நீரை தினம் பருகுவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
காட்டுத் துளசி என்னும் ஒருவகை துளசி விஷத்தை முறிக்கும் தன்மையுள்ளது. குஷ்டநோய், ஜன்னி முதலிய பலவித நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
துளசிச் செடி, வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண்,
பகுதிகளில் வளரும் தன்மையுடையது.
நல்துளசி, கருந்துளசி (கிருஷ்ணதுளசி), செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டு துளசி என துளசி பலவகைப்படும்.
துளசியின்.இலை, தண்டு, மஞ்சரி, வேர் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைச் சீராக்கி, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை படைத்தது துளசி.
சிறு குழந்தைகளுக்கு, துளசியை சாறு பிழிந்து, தேன் கலந்து கொடுக்க, சளி இருமல் தொந்தரவுகள் நீங்கும். துளசிக் கஷாயம் இருமலுக்கும் தொண்டை புண்ணுக்கும் மிக நல்ல மருந்து. கர்ப்பிணிகள் நீரை துளசி இலை சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்க, பிரசவம் சுலபமாகும். அதிக வலி இருக்காது.
மழைக்காலத்தில் தேநீருடன் துளசி சேர்த்துக் குடித்து வர, தொற்று நோய்கள் அண்டாது. துளசி, மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றைப் போக்கும் அற்புத மருந்தாகும்.
துளசி இலையை அரைத்துத் தலையில் தடவிக் குளிப்பதால் பொடுகுத் தொல்லை நீங்கும். துளசி மணம் சேர்ந்த காற்றை சுவாசிப்பதால், புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
துளசியின் மகத்துவம்:
இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது. துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. மேலும் நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.
துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையிலிருந்து விடுவிக்கிறார். துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷமும் நிவர்த்தியாகிறது.
துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.
துளசியைப் பூஜிக்க, ஸ்ரீ துளசி ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.
பூஜையின் போது துளசியை சமர்ப்பித்தால் பக்தி மிகும். துளசிச்செடியின் அடியில் ஸ்ரீ கிருஷ்ணரை வைத்துப் பூஜித்தால் மோக்ஷ சாம்ராஜ்யம் கிட்டும்.
துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும். கொடும் பாவங்கள் செய்தவனாயினும், அந்திமக் காலத்தில் துளசித் தீர்த்தம் அருந்தி, துளசித் தளத்தை தலையில் தரித்துப் பின் உயிர் நீக்க நேர்ந்தால், கட்டாயம் முக்தி அடைகிறான்.
துளசித்தளம், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மட்டுமின்றி சிவபெருமானையும் பூஜிக்க ஏற்றது. விநாயகரை துளசியால் பூஜிக்கலாகாது.
விரதத்தில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தன்று உபவாசம் இருப்பவர்கள், ஏழு முறை துளசி இலையைச் சாப்பிடலாம். மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை முடிக்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி பறிக்கக்கூடாது.
திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும், எண்ணை தேய்த்துக் கொண்டும் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும். துளசியைப் பறித்து மூன்று நாள் வரை உபயோகிக்கலாம்.
துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.
மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது.
தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித் தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மஹா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும்.
கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை 'பிருந்தாவன துவாதசி' என, கர்நாடக, மஹாராஷ்டிர மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் விவாஹம் நடந்ததாக ஐதீகம். நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள். நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம்.
எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து,
வெற்றி பெறுவோம்!!!!
துளசி=கிருஷ்ணர் திருமணம்(பிருந்தாவின் புராணத்தினை) முழுமையாகச் சொல்லியிருக்கலாம் தானே? இன்னொரு கட்டுரையில் சொல்லிவிடுங்கள்.மற்றபடி கட்டுரை நன்கு அமைந்திருக்கிறது.
பதிலளிநீக்குவியட்நாம் யுத்தத்தின் போது மக்கள் எப்போதும் அழுகிய பிணங்களுடன் வாழ வேண்டி வந்ததாம்.அவர்களுக்குத் தொற்று நோய்கள் வராமல் இருந்ததைப் பற்றி ஆராய்ச்சி நடந்தது.மக்கள் தங்களுடைய ஓர் உணவுப் பழக்கத்தால் தங்களைத் தொற்று நோய் தாக்கவில்லை என்று கூறினார்கள்.என்ன அந்தப் பழக்கம்?ஒரு கீரைத் துவையல் தினமும் உண்பது. எது அந்தக் கீரை?
கருந்துளசி!
// kmr.krishnan said...
பதிலளிநீக்குதுளசி=கிருஷ்ணர் திருமணம்(பிருந்தாவின் புராணத்தினை) முழுமையாகச் சொல்லியிருக்கலாம் தானே//
தங்களுடைய வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி திரு.கே.எம்.ஆர் அவர்களே. கைசிகத் துவாதசி சமயத்தில் சொல்லலாம் என்று இருக்கிறேன்.
தாங்கள் தந்த மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி. இது எனக்குப் புதிய தகவல்.
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய: ||
பதிலளிநீக்குதுளசி தேவி பற்றிய கட்டுரை அருமை. துளசி தேவி வழிபாடு ஸ்லோகங்கள் ஏராளமாக உள்ளன. தேடலை ஆரம்பிக்க வேண்டியது தான். துளசி வழிபாடு புதனால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும். புதனை மகிழ்விக்கும்.
// sriganeshh said...
பதிலளிநீக்கு|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய: ||//
//துளசி தேவி பற்றிய கட்டுரை அருமை. துளசி தேவி வழிபாடு ஸ்லோகங்கள் ஏராளமாக உள்ளன.//
தங்கள் வருகைக்கும் தங்கள் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி. துளசி ஸ்லோகங்களோடு, துளசியைப் பூஜை செய்யும் வழிமுறைகளையும் தங்கள் ப்ளாக்கில்(www.kshetrayaatra.blogspot.in) பதிவிட வேண்டுமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
வணக்கம்,
பதிலளிநீக்குஸ்ரீ துளசி ஜெய துளசி
அருமையன கட்டுரை
மருத்துவம்,ஆன்மிகம் துளசியைப் பற்றி
விளக்கியுள்ளிர்கள்
ஸ்லோகங்களோடு, துளசியைப் பூஜைக்கும் வழி முறைகளையும் தங்கள்
கொடுத்தயுளளிர்க்ள்
நன்றி
// Udhaya Kumar said...
பதிலளிநீக்குவணக்கம்,
ஸ்ரீ துளசி ஜெய துளசி
அருமையன கட்டுரை
மருத்துவம்,ஆன்மிகம் துளசியைப் பற்றி
விளக்கியுள்ளிர்கள்//
தங்கள் வருகைக்கும் தங்களது பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
ஆஹா! அருமை
பதிலளிநீக்குஅருமருந்தாம் துளசியின் அற்புதத் தன்மைகள்யாவும்
திருவாய்மொழி கொண்டுத் துவங்கி அழகாய்
உருவாய் அருவாய் விளங்கும் பரந்தாமனை
தருவாயருளென பாதாதிகேசம் பணிய -அவன்
வருவான் வந்தருள்வான் ஞானகுருவென என்ற
கருவை உயர்வாய்த்தாங்கிய அற்புதப்பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள் சகோதரியாரே!
//ஜி ஆலாசியம் said...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள் சகோதரியாரே!//
தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி அண்ணா!
துளசியின் அருமை நம்மவர்களைப்போல் இத்தாலியர்களும் அதை சுற்றியுள்ள குரோஷியா போன்ற நாடுகளிலும் உனர்ந்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவியட்னாமியரின் கருந்துளசியின் மேலாதிக்க தகவலை தந்த கிருஷ்னன் சார் அவர்களின் பின்னூட்டம் பார்த்த போது எனக்கு ஒன்று புரிந்தது. நான் மூன்று முறை வியட்னாம் பனி நிமித்தம் சென்றுள்ளேன். சாப்பட்டுக்கு முன்பாக அவர்கள் பருகும் சூப்பில் முக்கிய பங்கு துளசியிலை பங்கு வகிக்கிறது.
// thanusu said...
பதிலளிநீக்குதுளசியின் அருமை நம்மவர்களைப்போல் இத்தாலியர்களும் அதை சுற்றியுள்ள குரோஷியா போன்ற நாடுகளிலும் உனர்ந்திருக்கிறார்கள்//
தங்கள் மேலான கருத்துரைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே!!!