நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 2 ஜூலை, 2012

VYASA PUJA... GURU POORNIMA....வியாச பூஜை (குரு பூர்ணிமா)





தேஹிமே குரு ஸ்மரணம்
தேஹிமே குரு கீர்த்தனம்
தேஹிமே குரு தர்ஷணம்
தேஹிமே குரு ஸாமீப்யம்
தேஹிமே குரு பதஸேவனம்
தேஹிமே குரூபதேசம்
தேஹிமே குரு ஸாயுஜ்யம்
குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

இந்த வருடம் (3.7.2012) அன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

வேதவியாசரை குரு பூர்ணிமா தினத்தில், துறவிகள் பூஜித்து, 'சாதுர்மாஸ்ய விரதம்' துவங்குகின்றனர். ஆகவே, இது 'வியாச பூஜை' தினமாக சிறப்பு பெறுகிறது. 

'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர் என்பதாகும். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்க‌ப்பட்டார்.

வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.

ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி





வியாச மஹரிஷி, ஸ்ரீமத் பாகவதம், உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மனிதசமுதாய மேம்பாட்டுக்காக இயற்றியருளியிருக்கிறார்.

'முனிவர்களில் நான் வியாசர்' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் அருளியிருக்கிறார்.

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: ||

(கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்)

வியாச பூஜையை முதன் முதலில், செய்தவர் வேத வியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.

அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீ சுகப்பிரம்மரிஷிக்கு 'வியாச பூஜை' யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ வேதவியாசரும், ஸ்ரீ மத்வாச்சாரியாரும்
அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாகச் செய்யப்பட்டு வருகிறது.
ஒன்பது மத்வமத குருமார்களின் பிருந்தாவனம் அமைந்துள்ள 'நவபிருந்தாவனம்'
ஆஷாட பௌர்ணமி, ஆஷாட சுத்த பௌர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமி தினத்தன்றே, ஸ்ரீவியாச மஹரிஷியின் திருஅவதாரம் நிகழ்ந்ததால், குரு பூர்ணிமை தினத்தன்று, சன்யாசிகள் வியாச பூஜை செய்து சாதுர் மாஸ்ய விரதம் தொடங்குகின்றனர்.
ஸ்ரீ ராகவேந்திரர்
(ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்)
சன்யாசிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், மழைக்காலத்தில், புழு, பூச்சிகள் இவற்றின் நடமாட்டம் அதிகரிப்பதால், சன்யாசிகள், இக்காலத்தில் சஞ்சாரம் செய்யும் போது, அவர்களின் கால்களில் பட்டு அவை மடிய நேரிடும். எனவே, அதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் ஒரே இடத்தில் தங்குவார்கள். இதையே, 'சாதுர்மாஸ்ய விரதமாக' அனுஷ்டிப்பது சன்யாசிகளின் வழக்கம்.
ஸ்ரீ காஞ்சி மாமுனிவர்
(ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்)


வியாச பூஜை தினத்தன்று, ஆதிகுருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே,இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.
சிருங்கேரி பீடாதிபதி
ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்
சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப்படுவது வழக்கம்.

சன்யாசிகள் மட்டுமல்லது, சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
இந்த நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, 'தான்' எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.

மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும். மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் ஆகியவை மிகச் சிறந்தது.

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.


ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெற்று,

வெற்றி பெறுவோம்!!!!!

12 கருத்துகள்:

  1. வியாச பூஜையினைப் பற்றி அருமையான விளக்கங்களுடன் வந்தப் பதிவு.
    வியாசர் தனது கால்களில் போட்டிருக்கும் (கட்டிருக்கும்) பட்டையைக் காண்கையில் எம்பெருமான் ஸ்ரீ ஐயப்பனே கண் முன்பாக தெரிகிறான். இருந்தும் அவனின் பொன்னிரமல்லாமல், மகாவிஷ்ணுவின் நிறமாகவே காண்பது மாத்திரமே வியாசரைக் காண்பதாகிறது. முனிவர்களிலே வியாசராய் அவதரித்த மகாவிஷ்ணுவும் அவர் தானே என்பதையும் பதிவில் தாங்கள் கூறியுள்ளதை தெளிவிக்கிறது. குருமார்கள் தங்கள் கால்களில் காணும் கட்டிற்கு எதாவது ஆச்சார விளக்கம் இருக்கிறதா சகோதரி.

    அருமையானத் தகவல்கள் தாங்கியப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு, சகோதரி.
    Thanks :)

    பதிலளிநீக்கு
  3. குரு பூர்ணிமாவைப் பற்றி எழுத கூகிள் பண்ணிக் கொண்டிருந்தேன். உங்கள் தளம் வந்தால் , இதை விட அருமையாக எழுத இயலுமா எனத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  4. ஜி ஆலாசியம் said...
    //குருமார்கள் தங்கள் கால்களில் காணும் கட்டிற்கு எதாவது ஆச்சார விளக்கம் இருக்கிறதா சகோதரி.//

    தங்கள் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி அண்ணா.

    ஸ்ரீ ஐயப்பன், சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரது காலில் இருக்கும் வஸ்திரத்துக்கு யோகப்பட்டம் என்று பெயர். ஐயனை தரிசிக்கும் போது இந்த வஸ்திரத்தை கட்டாயம் தரிசிக்க வேண்டும். மனிதனை தெய்வமாக்க வல்லது யோகம் மட்டுமே. ஆதலால், பிரம்ம ஞான உபதேசம் செய்யும் குருமார்கள், இந்த நிலையில் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஸ்ரீ ஐயப்பன், அவதாரம், தோற்றம் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு (http://www.tamilhindu.net/t1585-topic)

    பதிலளிநீக்கு
  5. //Bhuvaneshwar said...
    நல்ல பதிவு, சகோதரி.
    Thanks //

    மிக்க நன்றி சகோதரரே!!!

    பதிலளிநீக்கு
  6. திரு. எல். கே அவர்களுக்கு,

    தங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //chezhianrathinavel said...
    miga arumaisagothari thangal thagaval- thiruchetrambalam//

    Thank you so much for your comment sir.

    பதிலளிநீக்கு
  8. மழைக்காலத்தில் புழுபூச்சிகளுக்குத் துன்பம் கொடுக்கக்கூடியதாகப் பயணம் இருக்கும் என்பதால் ஓரிடத்தில் தங்குவார்கள் என்பதும் சரிதான்.சமண மத்த்தில் கூறப்படும் அஹிம்சைக் கொள்கையின் சாயலால் இப்படிப்பட்ட கருத்து இங்கே நிலவுகிறது.

    நாமே சிறிது சிந்தித்தால் வேறு எண்ணங்கள் தோன்றுகின்றன.சரியோ தவறோ பகிர்ந்து கொள்கிறேன்.

    மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு, அதனால் நதியைக் கடக்க முடியாமை(அப்போது பாலங்கள் குறைவு)
    ஆகியவையும் பயணத்தடைகள்.(மழை நிற்கும் வரை) உத்தராயணம் வரும் வரை மக்களுக்கு விவசாய வேலைகள் குறைவு. அப்போது அவர்களுக்கு உபதேசம் கேட்க நேரம் கிடைக்கும். ஆகவே ஓரிடத்தில் தங்கி உபதேசம் செய்தல் என்பது வழக்கமாகியிருக்கலாம்.எப்போதும் பயணத்திலேயே இருப்பதால் தங்களுடைய வேத சாஸ்திர புராண பாடங்களை புதிப்பித்துக் கொள்ள முடியாமல் இருப்பதால் வருடத்தில் 4 மாதங்கள் வேத வேதாந்தங்களை ஆராய நேரம் ஒதுக்கித் தங்குகிறார்கள்.

    எல்லாம் யூகமே. தவறாக இருந்தால் கற்றவர்கள் மன்னிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. @திரு.கே.எம்.ஆர் அவர்கள்.

    தங்களின் கூற்றும் சரிதான் எனத் தோன்றுகிறது. ப்ராக்டிகலாகக் காரணம் கூறியிருக்கிறீர்கள்.

    // வருடத்தில் 4 மாதங்கள் வேத வேதாந்தங்களை ஆராய நேரம் ஒதுக்கித் தங்குகிறார்கள்.//

    அம்மாதிரி நேரம் ஒதுக்கியதன் பலனாக, நமது வேத வேதாந்தங்கள் மங்காத புகழோடு இன்னமும் இருக்கின்றன என்பது என் தாழ்மையான கருத்து. தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வ்யாஸ பூர்ணிமாவைப்பற்றி உரை நிகழ்த்துவற்கு கூகுளை அலசியபோது தங்களின் அருமையான தகவல்கள் கிடைத்தன. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..