எங்கள் ஊர் திருவிழாவில்
கூட்டமோ கூட்டம்.
எல்லோர் முகத்திலும் ஒருவகை
கொண்டாட்டம்.
ஆனால்
என்னிடம் மட்டும் ஒரு மாற்றமுமில்லை.
"வை ராஜா வை
ஒண்ணுக்கு நாலு
ரெண்டுக்கு எட்டு
வை ராஜா! வை ராஜா! வை! வை!!'
கணீர் குரலுக்கு மயங்கி
அதிர்ஷ்ட ஆசையில்
ஒரு கூட்டம் இங்கு.
"வந்திருப்பது முருகன் வள்ளி
வீட்டுக்கு
வர இருப்பது
கல்யாண சுள்ளி"
மங்களமான வார்த்தையில்
"கிளி ஜோசியக் கடையிலும் கூட்டம்'
சந்தோஷமும் சிரிப்புமாக இருக்கிறது.
"கருப்பு சொக்கா
செவப்பு சட்டை
தல பரட்ட
பேரு சுருட்ட
பெத்தவங்க வாங்க சிறுவனை கூட்டிட்டுப்போங்க'
காவல்துறை அறிவிப்பு-ஆனால்
யார் செவியிலும் ஏற வில்லை அந்த அழைப்பு.
"பக்கா வெண்மைக்கு
கொக்கு சோப்பு
பளிச்சிடும் தூய்மைக்கு பத்துரூபா சோப்பு"
விளம்பர அறிவிப்பு!-அதுவும்
ஒய்யாரமாய் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
"மச்சான்
கத்திரி கலர்
நல்லா இருக்குடா
முந்திரி கலரும் நல்லாயிருக்குடா"
குறுஞ்செய்தி பரிமாற்றம்
ஓரடி முன் செல்லும் நன்பனுக்கு
அலைபேசியிலும் ஆனந்தம் ஒலித்தது.
"இருபது ருபாய்க்கு
இருபது சுத்து!
இம்மாம்பெரிய ராட்டினம்
வந்ததில்லை பார்த்ததில்லை!
வாங்க! வாங்க!"
ராட்சஸ ராட்டினக்காரன்
வாய்ப்பாட்டுக்கும் ஒரு கூட்டம்
மயங்கி ஏறியது.
"காடை ஒன்னு
கோழி ரெண்டு
முட்டை மூனு
கொத்து பரோட்டா நாலு
பிரியாணி அஞ்சி"
கூப்பாடோடு
சாப்பாட்டுக்கடையும்
கூட்டமோ கூட்டம்.
வாணவெடி!
வண்ணவிளக்கு!
புலியாட்டம்!
கரகாட்டம்!
கம்புசண்டை!
பாட்டு கச்சேரி! -இவையெங்கும்
கைதட்டலும் கும்மாளமும்!
இது எதுவும்
என் கவனம் இழுக்கவில்லை!
இந்த திருவிழா
எனக்கு
இனிக்கவுமில்லை
ஏன் என்று தெரியுமா?
என் காதலி என்னுடன் இல்லை!
அவள்
இருட்டான பின்பே வருவாள்.
எனக்கு
திருவிழா சந்தோஷம் தருவாள்.
நான் வானத்தை பார்ப்பேன்
அவள்
தென்படுவாள்!
தவழ்ந்து வருவாள்!
யார் தெரியுமா?
அதோ அவளே வருகிறாள்!
வந்துவிட்டாள்!
அவள்
வானத்து நிலா!!
-தனுசு-
காணாமல் போன பிள்ளையைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் திருவிழாவில் ஈடுபடும் மக்களின் மனதை நன்கு வெளிப்படுத்துகிறது கவிதை.தனுசுவுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ,
பதிலளிநீக்குஇருட்டின்பின்றேவருவாள்
திருவிழா சந்தோஷ்ம் தருவாள்
அருமை தனுசு.
நன்றி
திருவிழா திவ்விய வருணனை
பதிலளிநீக்குதிகட்டாத தேன்சுனை...
கருத்திலே குறிகொண்டு அழகு
கவிதையை புனையக்கண்டு
புருவத்தை உயர்த்தி கொண்டு
பொழிந்த கவியை வாசித்துக் கொண்டு
விறுவிறுவென்று போகும் பொது
சிலிர்த்துப் போனேன் சிங்கார நிலவையே
காதலியாக்கி கவிதை முடிந்ததைக் கண்டு!
அருமை கவிஞரே!
பகிர்வுக்கு நன்றிகள்!