தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாஞ்ச ஸமயாம்
யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர முபசாரம் ரசயதி...
"தாயே, உன் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில், அக்னித் தத்துவத்தை ஏற்று, எப்பொழுதும் ஒளிமயமாகத் திகழுகின்ற, பிரளய காலத்து அக்னிமயனான, சிவனையும், 'மஹத்' என்று கூறப்படுபவளான, பராசக்தியையும் துதி செய்கிறேன். அந்த மகாதேவனின் பார்வையாகிய அக்னி உலகங்களை எரிக்கும் போது, உன் கருணை பொழியும் குளிர்ந்த பார்வையல்லவா உலகங்களை எல்லாம் குளிர்வித்துக் காக்கின்றது!!!" (சௌந்தர்ய லஹரி).
ஆறு ஆதாரச் சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம்.
(இதன் முதற்பகுதியைப் படிக்க இங்குசொடுக்கவும்).
ஆறு ஆதாரச் சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம்.
(இதன் முதற்பகுதியைப் படிக்க இங்குசொடுக்கவும்).
சுவாதிஷ்டானம் என்றால், 'தன் சொந்த ஸ்தானம் (இடம்)' என்று பொருள். மனம், அடங்கி தன் சொந்த (சலனமற்ற) நிலைக்குத் திரும்புதல், குண்டலினி சக்தி, ஸ்வாதிஷ்டானத்தை அடையும் போது நிகழும். மனமானது, காமம், குரோதம் முதலிய உணர்ச்சிகளிலிருந்து விலகி, செய்கைகளற்ற அமைதியான நிலையை அடையும் இடம் ஸ்வாதிஷ்டானம்.
சுவாதிஷ்டானச் சக்கரம் இருக்கும் இடம்:
மூலாதாரத்திற்கு மேல், சரியாக இரண்டு விரற்கடை தூரத்தில் இருப்பது தான் சுவாதிஷ்டானச் சக்கரம்.
இது ,நாற்சதுரத்தின் நடுவே ஆறு இதழ் கொண்ட ஆரஞ்சு நிறத் தாமரை மலர் வடிவமானது. மத்தியில், சாம்பல் நிறமுடைய பிறைச்சந்திரனை உள்ளடக்கியது.இந்த ஆறு இதழ்களும், ஆறு யோக நாடிகளைக் குறிக்கும். அந்த நாடிகளின் சப்த பரிமாணம், ஸ, ஹ, ம், ய, ர, ல எனும் ஆறு எழுத்துக்களால் குறிக்கப்படுகிறது.
இதன் பீஜ மந்திரம் 'வங்' ஆகும்.ஒரு குருவின் மூலம், முறையான பயிற்சி பெற்று, பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது, குண்டலினி சக்தி, இந்தச் சக்கரத்தை வந்தடையும்.
இதன் நடுவில் உள்ள லிங்க பீடத்தில், பஞ்சாட்சர மந்திரமான, 'நமசிவாய' என்பதில் உள்ள 'ந' எனும் எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களும் சிவன் அம்சம். சக்தி ரூபமாகிய குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தையும் வந்து அடையும் போது, அந்தச் சக்கரம் மலருகிறது.
சுவாதிஷ்டானச் சக்கரம் மலரும்போது, சுயகட்டுப்பாடு, நுண்ணுணர்வு,முதலியவை அதிகரிக்கும். உணர்ச்சிகளுக்கு ஆதாரம் இந்தச் சக்கரம். அம்பிகை, கிரியாசக்தி ரூபிணியாக இதில் வாசம் செய்கிறாள்.
இதன் அதிதேவதை: ஸ்ரீவிஷ்ணுபகவானும், காகினி தேவியும் ஆவார்கள்.
இந்தச் சக்கரத்துடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் கர்ப்பப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல், என்டொக்ரான் சுரப்பி முதலியன.
சுவாதிஷ்டானச் சக்கரத்திற்கு 'நிராகுலம்' என்றொரு பெயரும் உண்டு. ஆகுலம் என்றால் 'கவலை' . நிராகுலம் என்றால் கவலையின்றி இருத்தல். இந்தச் சக்கரத்தை குண்டலினி அடையும்போது, நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும்,கவலைகளிலிருந்தும் (நோய்களும் துன்பங்களும் இல்லாவிட்டால் கவலை ஏது?) ,விடுபடுதல் கிட்டும்.
சிவயோக நெறியில்,சுவாதிஷ்டானச் சக்கரத்திற்குரிய திருத்தலம், திருவானைக்காவல்.
சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருந்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் ஆனைக்காவே.
என்று திருஞானசம்பந்தரால் சிறப்பித்துப் பாடப் பெற்ற தலம். இது பஞ்சபூத ஸ்தலங்களுள் 'நீர்' ஸ்தலமாக விளங்குகிறது.
அன்னை அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மகிமை பிரசித்தி பெற்றது.
"தாடங்க யுகளீபூத தபநோடுப மண்டலா" (ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்).
ஆதிகாலத்தில் உக்ர ஸ்வரூபிணியாக இருந்த அன்னை, ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ சக்ரம், சிவசக்ரம் இரண்டையும் தாடங்கங்களில் (தோடுகளில்) பொறித்துப் பிரதிஷ்டை செய்த பிறகு, சாந்த ஸ்வரூபிணியாக அருளாட்சி புரிகின்றாள்.
மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் மகாமந்திரியாகிய (மந்திரிணி தேவி) ஸ்ரீ மாதங்கியின் அம்சமாக கருதப்படுவதுபோல், அகிலாண்டேஸ்வரி லலிதா தேவியின், சேனைத் தலைவியாகிய (தண்டினி தேவி) வாராஹியின் அம்சமாக வழிபடப்படுகிறாள். வாக்குவன்மை தருபவள் வாராஹி. தினந்தோறும், குறித்த காலத்தில், தவறாமல், அம்பிகையை வழிபாடு செய்பவர்களது வாழ்வில் வளம் பெருகுவது கண்கூடு.
ஸ்ரீ வாராஹி துதிகளுக்கு இங்குசொடுக்கவும்.
லலிதா சஹஸ்ரநாமத்தில், சுவாதிஷ்டானச் சக்கரத்தில் அம்பிகையின் அருட்தோற்றம் பற்றி, பின்வரும் ஸ்லோகங்களால் அறியலாம்.
ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர- மனோஹரா
சூலாத்யாயுத -ஸம்பந்நா பீதவர்ணாs திகர்விதா.(104).
மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி - ஸமன்விதா
தத்யன்நாசக்த- ஹ்ருதயா காகினி ரூபதாரிணீ. (105)
இந்த ஸ்லோகங்களின் பொருள்: அம்பிகை, ஸ்வாதிஷ்டானமாகிய தாமரையில், நான்கு முகங்களுடன் கூடிய தோற்றத்துடன் அருள்மழை பொழிபவளாக, சூலம் முதலிய ஆயுதங்களைத் தாங்கியவளாக, பொன்நிறம் கொண்டவளாக, பெருமித உணர்வால் நிரம்பியவளாக இருக்கிறாள்.
இந்தச் சக்கரத்தில், பந்தினி முதலான ஐந்து சக்திகளைப் பரிவாரமாக கொண்டு, காகினி என்னும் பெயரில் நிலைபெறும் தேவி, தேன், தயிரன்னம் முதலியவற்றை விரும்பி ஏற்பவளாக, உயிரினங்களின் கொழுப்புச்சத்தில் உறைபவளாக இருக்கிறாள்.
எச்செயலிலும் இறைவனையே கண்ட நம் முன்னோர்கள், ஆண்டவனது அருளாற்றலால் நிரம்பி வழியும் ஆலயங்களின் கட்டுமானத்திலும் மறைமுகமாகப் பல அரிய ஆன்மீக ரகசியங்களைப் பொதித்து வைத்திருக்கிறார்கள்.
நம் உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களையும், ஆலயத்தின் உள், வெளிப்புறப் பகுதிகள் சூட்சுமமாக விளக்குகின்றன.
அர்த்த மண்டபம் |
இறைவன் உறையும் கர்ப்பக்கிரகம், மூலாதாரச் சக்கரத்தையும், அதனை அடுத்துள்ள அர்த்த மண்டபம், சுவாதிஷ்டானத்தையும், மகா மண்டபம் மணிபூரகத்தினையும், ஸ்னான மண்டபம் அனாகதத்தினையும், அலங்கார மண்டபம் விசுத்தியையும், சபா மண்டபம் ஆக்ஞா சக்கரத்தையும் குறிக்கிறது.
சைவ சித்தாந்தத்தில், குண்டலினி உறையும் மூலாதாரமாக, பிரதான கோபுரவாயில் சொல்லப்படுகிறது. பலிபீடம் சுவாதிஷ்டானமாகவும், துவஜஸ்தம்பம் மணிபூரகமாகவும், நந்தி பீடம் அநாகதமாகவும், உட்கோபுரவாயில் விசுத்தியாகவும், அந்த்ராளக் கோபுர வாயில் ஆக்ஞா சக்கரமாகவும் உருவகப்படுத்தப்படுகிறது.
முருகனைப் பிரதான தெய்வமாக வழிபடும் கௌமார மார்க்கத்தில், அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடாகிய திருச்செந்தூர், சுவாதிஷ்டானத் தலமாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
சுவாதிஷ்டானத்தின் சிறப்பு, துன்பங்களிலிருந்து விடுதலை பெறுதல். தன்னை எதிர்த்த சூரனையும் அழிக்காது, அவனை இரு பாகமாகப் பிரித்து, ஒரு பாதியைச் சேவலின் உருவில் தன் கொடியில் ஏற்றி, மறு பாதியை மயிலின் உருவில் தன் வாகனமாக்கி, சூரனின் துன்பத்தைப் போக்கி, அவனுக்கும் பெருவாழ்வளித்த வள்ளல்பிரான் முருகன். ஆகவே, திருச்செந்தூர் சுவாதிஷ்டானத் தலமாக இருக்கிறது.
முருகனின் அருள் பெற்ற போகர், 'பூணாமற் பூணுகிற சுவாதிஷ்டானம்' என்று இந்தச் சக்கரத்தின் மகிமையைப் போற்றுகிறார்.
காணாமற் போகாது ஏங்கிடாதே
காலும் எதோ தலையும் எதோ என்றுஎண்ணாதே
தோணாமற் தோணவைக்கும் கணேசன் மூலம்
துண்டத்தின் கீழ் நுனியல் ஒளியைக்கண்டால்
பூணாமற் பூணுகிற சுவாதிஷ்டானம்
புகழான அசபைஇலே ஒளியைப்பாரு. (ஸ்ரீ போகர் , சிவயோக ஞானம்).
ஸ்ரீ அருணகிரிநாதர் |
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி ...... வடிவான,
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச்,
என்று திருப்புகழில் அருணகிரிநாதர், நீர், நிலம் சம்பந்தப்படாத தாமரைக்கொடியாகக் குண்டலினியை உருவகப்படுத்துகிறார். அவரே,
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே,
நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற்,
என்று, மூலாதாரக் கமலத்திலுள்ள அக்னியை, பீஜ மந்திர உச்சாடனத்தினால், சுழுமுனை நாடி மார்க்கத்தில், நாற்சதுரத்துள் அடங்கிய சுவாதிஷ்டானத்தில் செலுத்தி, பின், மணிபூரகமாகிய சந்த்ராகாரமாகிய பீடத்தில் செலுத்த வேண்டும் என்று குண்டலினி சக்தியை சுவாதிஷ்டானத்தில் ஏற்றும் முறையைப் பற்றிக் கூறுகிறார்.
அடுத்த பதிவில் மணிபூரகச் சக்கரம் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.
வெற்றி பெறுவோம்!!!!!!
HI,
பதிலளிநீக்குI ts like a professional writing that too by someone who's in this field for many years.nobody'l believe if u tell them ur age....really Paru i read it many times.it's v informative particularly abt the new year.continue this-Banu
Thank you so much Banu.
பதிலளிநீக்குமன்னிக்கவும்...தங்கள் பதிவை நான் பின்தொடர்ந்தாலும் ஏனோ என்னுடைய '' தங்கள் பதிவுக்கான சுட்டி வரவேயில்லை...நான் பதிவுகள் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...இத்தனை பதிவுகளை தவறவிட்டுவிட்டேன்...
பதிலளிநீக்குஅருமையான பதிவு...நான் அறிய விரும்பிய அறிந்திடாத விஷயங்களை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி...
நன்றி ஷோபனா!!!
பதிலளிநீக்கு