நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 11 ஏப்ரல், 2012

நலம் தரும் நந்தன ஆண்டு.


நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தலிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தன் தோளிலும் - உடல்
வெயர்ந்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்
                                                   ----மஹாகவி பாரதி

சித்திரை மாதம் முதல் நாள்,வெள்ளி (13.04.2012).

நண்பர்களுக்கு இனிய‌ தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நந்தன வருடம் நலம் பல தந்து நம்மையெல்லாம் மகிழ்விக்க இறைவனை வேண்டுவோம்.


புத்தாண்டின் அதிகாலையில்


புத்தாண்டின் அதிகாலையில் கண்விழித்தவுடன் 'நிறைத்தட்டு' பார்ப்பது பெரும்பாலான குடும்பங்களில் வழக்கத்தில் உள்ளது. நிறைத்தட்டு பின்வரும் பொருள்களை உள்ளடக்கியது.
 • கடவுள் படம். (குலதெய்வம் படமாக இருப்பது சிறப்பு)
 • பஞ்சாங்கம்.
 • பெரிய படி நிறைய அரிசி,
 • சிறு கிண்ணங்களில் பருப்பு, வெல்லம், உப்பு, மஞ்சள், குங்குமம்.
 • காய்கறிகள். முக்கியமாக, பூசணி, மாங்காய், வாழைக்காய்.
 • பழ வகைகள்.
 • வெற்றிலை, பாக்கு, தேங்காய்.
 • ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, அதில் தங்கச் செயின் அல்லது நெக்லஸ் மாட்ட வேண்டும்.
 • ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்.
 • மலர்கள்.
 • புது உடைகள்.
 • வெள்ளிக் குங்குமச் சிமிழ், பாத்திரங்கள் (இருந்தால்).
 • ஏற்றப்பட்ட தீபம்.
இவை அனைத்தையும் முதல் நாள் இரவே, பூஜை அறையைச் சுத்தம் செய்து தாம்பாளங்களில் அடுக்கி வைப்பது வழக்கம்.


மறுநாள் விடிகாலையில், குடும்பத்தில் மூத்தவர் எழுந்து சென்று, விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி வைத்து, அடுக்கி வைத்துள்ள பொருட்களைப் பார்த்து விட்டு, இறைவனை வழிபடுவார்.

பிறகு, அவர் ஒவ்வொருவரையும் எழுப்பி, நிறைத்தட்டில் விழிக்க வைப்பார்.மேற்கண்ட பொருட்களில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே அவற்றைப் பார்த்தால், வருடம் முழுவதும் எந்தக் குறையும் இல்லாமல் கழியும் என்பது நம்பிக்கை.

நிறைத்தட்டு வைக்கும் வழக்கம் இல்லாவிட்டாலும், தீபம் ஏற்றி, இறைவனை வணங்கி, புத்தாண்டைத் துவக்குவது நல்லது.

கேரளாவில் இவ்வழக்கம் விஷூக்கனி காணுதல் என்று அழைக்கப்படுகிறது.

சித்திரை முதல் நாள் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்தல்,பெரியோர்களிடம் ஆசி பெறுதல் ஆகியவை வாழ்வில் வளம் சேர்க்கும்.

புத்தாண்டன்று பரிமாறப்படும் உணவு வகைகள்

அன்று பண்டிகையாதலால், வடை பாயசத்துடன் விருந்து இருந்தாலும், முக்கியமாக, மாங்காய்ப் பச்சடி, வேப்பம்பூ ரசம், புளிக்கூட்டு, உப்புவற்றல் முதலியவை கட்டாயம். வாழ்க்கை என்பது, அறுசுவையும் சேர்ந்தது என்பதை விளக்கவே இவற்றைச் சேர்க்கிறோம்.


பொன்னேர் பூட்டுதல்:'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று வள்ளுவரால் சிறப்பிக்கப்பட்ட, உழவர்கள் சித்திரை முதல் நாள் பொன்னேர் பூட்டுவார்கள்.

பொன்னேர் பூட்டிய பின்னரே அந்த வருடத்திற்கான உழவு வேலைகள் துவங்க வேண்டும். சிலர் அக்ஷய திருதியை அன்றும் பூட்டுவது உண்டு.

அன்று காலை, மாடு, கன்றுகளைக் குளிப்பாட்டி, கலப்பை முதலியவைகளை சுத்தம் செய்து பொட்டுவைத்து, தயார்செய்வர். பின் வீட்டு உறுப்பினர்கள் எல்லோரும், பூஜைப்பொருட்கள், கஞ்சி முதலியவற்றோடு வயலுக்குச் செல்வர்.

அங்கே சிறிய மண் மேடை அமைத்து, பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் சொருகி, வழிபட்டு விட்டுப் பின், மாடுகளை ஏரில் பூட்டி, உழுவார்கள். இது சடங்காகச் செய்யப்படுவதால் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் உழுவார்கள். சிறிது தூரம் உழுத பின், உழுத பகுதியில் எருவிட்டு, நவதானியம் தூவி வைப்பார்கள்.

பின் கொண்டுவந்த பூஜைப் பொருட்களால் வழிபாடு நிகழ்த்தி, கஞ்சியைப் பருகிவிட்டு வீடு செல்வர்.

வீட்டு வாசலில் கால்களைக் கழுவி விட்டு, வேப்பங்குழைகளை வீட்டு வாசலில் சொருகிவிட்டு வீட்டுக்குள் செல்வர்.

இராமாயணத்தில், ஜனக மகாராஜர் பொன்னேர் பூட்டி உழவு செய்யும் போதே,
பூமியில் இருந்து ஒரு பேழை கிடைத்தது. அதனுள், மஹாலக்ஷ்மி அவதாரமான‌ சீதாதேவி இருந்தாள். குழந்தையில்லாத ஜனகர், அவளைத் தன் மகளாகக் கருதி வளர்த்தார் என்பது புராணம்.


ஞாயிறு போற்றுதும்...... ஞாயிறு போற்றுதும்.:

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்

(மங்கல வாழ்த்துப் பாடல், சிலப்பதிகாரம்.)

சித்திரை மாதம், சூரிய பகவான் மேஷ இராசியில் உச்சம் பெறுவதால், அன்று செய்யும் சூரிய நமஸ்காரமும், சூரியனின் துதிகளைப் பாராயணம் செய்வதும் சிறந்த பலனைத் தரும்.

பஞ்சாங்கம் படித்தல்:


பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்கள்) பற்றிய விபரங்களைச் சொல்வது பஞ்சாங்கம். அவை,

1. திதி, 2.வாரம், 3.நட்ச‌த்திரம், 4.யோகம், 5.கரணம் என்பன.


சித்திரை முதல் நாள் பெரும்பாலான கோவில்களில் பஞ்சாங்கம் படித்தல் நடைபெறும். அவ்வாறு படிப்பவருக்கு மரியாதைகள் செய்து இறைவன் திருமுன் அமர்த்தி, பஞ்சாங்கத்தைப் படிக்கச் செய்வர்,

அவ்வருடப் பலன், மழை, கந்தாய விபரங்கள் போன்றவற்றை அறிவதற்காக, பலர் கூடி நின்று, பஞ்சாங்கம் படிப்பதைக் கேட்பர்.

நந்தன வருஷத்திய ஆதிபத்திய ராஜா முதலானவர்கள்:

யுகாதி பண்டிகை எந்தக் கிழமை வருகிறதோ அந்தக் கிழமைகுரிய கிரகமே அந்த வருஷத்துக்கு ராஜா அதாவது அதிபதி. தமிழ்ப் புத்தாண்டு எந்தக் கிழமை வருகிறதோ அந்தக் கிழமைக்குரிய கிரகமே மந்திரி என்பது ஐதீகம். இந்த வருடம் இரண்டு பண்டிகையும் வெள்ளிக்கிழமை வருவதால், இந்த வருடத்திற்கு ஸ்ரீ சுக்கிர பகவானே ராஜா. அவரே மந்திரியும் ஆவார்..

ஸ்ரீ சுக்கிர பகவான்
மேலும், சேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி அனைத்தும் ஸ்ரீ சுக்கிரபகவானே.

இவ்வருடம் சுக்ர பகவான் அதிக ஆதிக்கங்கள் பெறுவதால், புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படும். ஆபரண பொருட்களின் விலை ஏறும். புதிய நோய்கள் உண்டாகும்.

இவ்வருடத்தின் தேவதை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆவார். அதனால், புதுவருட தினத்தன்று, சத்ய நாராயண பூஜை, ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை, ஸ்ரீ வைபவ லக்ஷ்மி பூஜை, மஹாலக்ஷ்மி துதிகள் குறிப்பாக, ஸ்ரீ சூக்தம், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹ்ருதயம் முதலியவற்றைப் பாராயணம் செய்வது சிறந்தது.

"சம்பூதித ஸ்ரீ ஸூக்த"த்திற்கு இங்கு சொடுக்கவும்.


ஸ்ரீ சுக்கிர பகவானின் அதிதேவதை ஸ்ரீமஹாலக்ஷ்மியே. அதனால், மஹாலக்ஷ்மியை துதிப்பது, வருடம் முழுவதும் நன்மைகள் விளைய வழிவகுக்கும்.

தேவி மஹாலக்ஷ்மி, சுவர்க்கத்தில் எல்லா ஐஸ்வர்யங்களுடன் கூடிய சுவர்க்க லக்ஷ்மியாகவும், பாதாள உலகத்தில் நாக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள்.

அரசர்களிடத்தில் இராஜ்யலக்ஷ்மியாகவும், யாகத்தில் தக்ஷிணாரூபையாகவும் கிரகஸ்தர்களிடத்தில் கிருஹலக்ஷ்மியாகவும் திருமகள் வாசம் செய்கிறாள்.

தாமரையில் ஒளிபொருந்திய தோற்றத்துடனும், சந்திரனில் சந்திரிகையாகவும், சூரியனில் காந்தியாகவும் தேவி நிலைபெறுகிறாள்.

அஷ்டலக்ஷ்மியாகத் திகழ்ந்து அஷ்ட ஐஸ்வர்யங்கள் வழங்குபவள் அவளே.


ல‌க்ஷ்மியானவள், நல்ல ஆடை, ஆபரணம், பழம், தண்ணீர், இல்லம், நல்ல குணமுள்ள பெண்மணி, தான்யம், சுத்தம் செய்யப்பட்ட இடம், தெய்வச்சிலை, தேவி பதுமை, அழகு நிறைந்த பொருட்கள், பால், சந்தனம், தங்கம், வெள்ளி, உப்பு முதலியவற்றில் நிறைந்திருக்கிறாள்.

துணிச்சல் உள்ளவர், ஊக்கத்துடன் நன்கு செயல் புரிகிறவர், புலனடக்கம் உடையவர், பக்தி, நன்றி உள்ளவர், இனிமையான வார்த்தைகள் பேசுகிறவர், நல்லியல்பு உடையவர் ஆகியோருக்கு ஸ்ரீமஹாலக்ஷ்மி அருள் புரிவாள்.

தேவிக்குப் பிடிக்காத செயல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காமல் இருப்பது, காது, மூக்கு, கைகளில் ஆபரணங்கள் அணியாமல் இருப்பது, தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு வாசற்படி தாண்டுவது, புடவையைப் போர்த்தி, தலைப்பை இடப்பக்கம் சொருகுவது, தலைப்பைச் சொருகாமல் விடுவது ,போன்றவை தேவிக்குப் பிடிக்காத செயல்களாகும்.

பூமி அதிர நடப்பது, உரக்கப் பேசிச் சிரிப்பது, எரியும் தீபத்தைக் கையால்
தூண்டி விடுவது, தீபத்தை வாயால் ஊதி அணைப்பது போன்றவற்றை ஸ்ரீ மஹாலக்ஷ்மி விரும்புவதில்லை.

நல்லன சிந்தித்து நல்லன பேசி, நல்லன செய்வோரைத் தேவி என்றும் நீங்காது அருள்புரிகிறாள்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி துதிகளுக்கு இங்கு சொடுக்கவும்.


மஹாலக்ஷ்மியை வழிபடுவதற்கு உகந்த காலம், அதிகாலையும், 'கோ தூளிகா சமயம்' (பசுக்கள் மேய்ச்சலில் இருந்து தூசி எழ வீடு திரும்பும் சமயம் )என்று சொல்லப்படும் மாலை நேரமும் ஆகும். காலை நேரம் மத்திமம். உச்சிக்காலம் உகந்ததல்ல. ஆனால் வெள்ளியன்று மட்டும் எந்நேரமும் உகந்ததே. புத்தாண்டு வெள்ளியன்று வருவதால், அன்று முழுவதும் அன்னையைப் பூஜித்து அருள் பெற உகந்த நாளாகும்.

மஹாலக்ஷ்மியை வழிபடும் போது பின்வருவனவற்றையும் சேர்த்து வழிபடுதல் சிறப்பு.

காமதேனு
தேவலோகத்தைச் சேர்ந்த, நினைத்தவை அருளும் தெய்வீகப் பசு.

கற்பக விருட்சம்
கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம்.

ஐராவதம்
இந்திரனின் வெள்ளை யானை, பலத்தைக் குறிக்கிறது.

உச்சைஸ்ரவஸ்
தேவேந்திரனின் வெள்ளை நிறமுள்ள‌ குதிரை, வேகமான செயல்பாட்டைக் குறிக்கும்.

சந்திர பகவான்
குளிர்ச்சி பொருந்திய கிரகம். மனோகாரகன்.

இவர்கள் யாவரும் திருப்பாற்கடலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதரித்தபோது  பிறந்தவர்கள். இவர்களையும் சேர்த்து வழிபடும்போது திருமகளின் அருள் விரைவில், நமக்குக் கிட்டும்.

ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகள்
இந்தத் தமிழ்ப்புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளையும் வாரி வழங்க வேண்டுமென்று, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனை வேண்டுவோம்.

வெற்றி பெறுவோம்!!!!!!!!!

6 கருத்துகள்:

 1. வணக்கம்.அவ்வப்போது உன் ஆலோசனைகளைப் பார்க்கிறேன்.சிறப்பாக உள்ளன.வாய்ப்புள்ளபோது நானும் எழுத விழைவேன்.பாலாஜி மாமா

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.அவ்வப்போது உன் ஆலோசனைகளைப்பார்க்கிறேன்.நன்றாகவே உள்ளன.பாராட்டுகள்.வாய்ப்புள்ளபோது நானும் எழுத விழைவேன்.பாலாஜி

  பதிலளிநீக்கு
 3. பார்வதிக்கும், பார்வதியின் பதிவின் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. காமதேனு
  தேவலோகத்தைச் சேர்ந்த, நினைத்தவை அருளும் தெய்வீகப் பசு.


  கற்பக விருட்சம்
  கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம்.

  I think the above points are interchanged. please check if required correct it. could be a typo

  பதிலளிநீக்கு
 6. //காமதேனு
  தேவலோகத்தைச் சேர்ந்த, நினைத்தவை அருளும் தெய்வீகப் பசு.


  கற்பக விருட்சம்
  கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம்.

  I think the above points are interchanged. please check if required correct it.//

  தங்கள் மேலான கருத்துரைக்கு நன்றி. இரண்டுமே, நம் விருப்பங்களை, மனதால் நினைத்து வேண்டினாலும், கேட்டாலும் கொடுக்கும் தன்மை வாய்ந்தவை. நம் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி இவை இரண்டுக்குமே உண்டு. நன்றி.

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..