சஹஸ்ராரத்தை குண்டலினி அடைந்ததும், சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபத்தை உணர்தலாகிய பரமானந்த நிலை கிட்டும். அந்நிலையில், பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையை உணர்ந்து, 'அஹம் ப்ரம்மாஸ்மி' என்பதை உணர முடியும்.
இவ்வாறு உணர்ந்தவர்களே, ஞானிகள், யோகிகள் என்று போற்றப்படுகின்றனர். இது இறையருளாலேயே கிட்டும்.
பரிபூரண ஞானஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் சகலகலாவல்லி மாலைக்கு இங்கு சொடுக்கவும்.
மந்திராலாய மூல பிருந்தாவனம். |
இவ்வாறு பரம்பொருளுடன் ஒன்றும் நிலையையே, சமாதி நிலை என்கிறோம். இந்தப் பதிவில் நாம் சமாதி நிலை மற்றும் அதன் வகைகள் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
சமாதி நிலை.:
யோகத்தின் மூலம் இறைவனும் நாமும் ஒன்றே என உணரும் நிலை 'சமாதி நிலை எனப்படுகிறது.சமாதி என்ற சொல்லை சம்+ஆ+தி (பரம்பொருளுடன் ஒருங்கிணைவது) என்று பிரித்துப் பொருள் கொள்ள முடியும். ஞானிகள், உலகவாழ்வினை நீத்து இறைவனுடன் இரண்டறக் கலப்பது, 'மஹாசமாதி' அல்லது 'விதேக முக்தி' எனப்படுகிறது.ஞானிகள், தாம் உலகவாழ்வைத் துறக்கப் போகும் நேரத்தை முன்கூட்டியே அறிந்து, தெரிவித்து, மஹாசமாதி நிலையை அடைந்த இடங்கள், ஜீவ சமாதிகள் எனப்படுகின்றன.
மகாசித்தரான கொங்கணவர், சமாதி நிலைகளை ஆறு வகைப்படுத்துகிறார்.
1.தத்துவல்ய சமாதி:
நமது மனித உடல் 36 தத்துவங்களால் ஆனது. இப்பௌதிக உடலை சூட்சும சரீரத்தில் அடக்கி, அந்த சூட்சும சரீரத்தை அழித்து, அதை எல்லாவற்றிற்கும் காரணமான மாயையில் அடக்கி, பின் அந்தக் காரணத்தை பரப்பிரம்மத்தோடு இணைத்து, அந்த நிர்க்குண நிராகாரப் பரப்பிரம்மம் எங்கெங்கும் வியாபித்திருப்பதை முழுமையாக உணர்ந்து ஒன்றுதலே தத்துவல்ய சமாதி எனப்படும்.
2. சவிகல்ப சமாதி:
ஜீவாத்மா, தானென்ற நினைவை முழுதும் மறக்காது, பரமானந்த நிலையை உணர்தல் சவிகல்ப சமாதி எனப்படுகிறது. கல்ப=கற்பனை அல்லது மயக்கம். விகல்ப= மயக்கமற்றநிலை. எவ்வித மயக்கமுமின்றி பரமானந்தத்தை உணர்தல். அப்படி உணரும் போதும், ஜீவன் தன் நினைவு முற்றும் மறக்காது பரமானந்தத்தில் ஈடுபடும். சஹஸ்ராரத்தை ஒட்டிய சக்கரங்களில், குண்டலினி நிர்வாணச் சக்கரத்தை அடையும் போது இந்நிலை கிட்டும்.
இது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, சத்தானு சமாதி, திரைய சமாதி ஆகியவை ஆகும்.
3. நிர்விகல்ப சமாதி:
ஜீவனானது சுத்த சைதன்ய நிலையை அடைந்துவிடும் நிலைக்கு நிர்விகல்ப சமாதி என்று பெயர். தன் நினைவழிந்து பரப்பிரம்மத்துடன் முழுமையாக ஒன்றுவதே இந்நிலை. சமாதியை விட்டு எழுந்த பிறகும், இவ்வுலக மாயை எதற்கும் ஜீவன் ஆட்படாதிருக்கும். இந்த சமாதி நிலையை அடைவதற்கு குருவருளுடன் கூடிய கடும் முயற்சி தேவை. நீண்ட நேரம் அதில் தங்கியிருக்க மிகக்கடுமையான முயற்சியும் பயிற்சியும் தேவைப்படும். யோகிகளின் துணை கொண்டே இந்நிலை அடைய முடியும்.
4.அகண்டவிர்த்தி சமாதி:
இந்நிலையில், மனமானது காற்றிலாடாத சுடர் போலவும், கடலில் கரைக்கப்பட்ட உப்பைப் போலவும், யோகத்தில் முதிர்ந்து நிற்கும். இதைத் தொடர்ந்து பழகினால், அனைத்தும் சித்தத்தில் அடங்கி, பின் சித்தம் பிரம்மத்தில் அடங்கும். அப்போது நாமே பிரம்மம் என்பதை அறிவதே இந்நிலை.
5. சஞ்சார சமாதி:
அகண்டவிர்த்தி சமாதியிலிருந்து எழுந்த பின், உலகத்தில் சஞ்சாரம் செய்யும் போதும், கடமைகளைச் செய்யும் போதும், அனைத்தும் மாயை என்பதை உணர்ந்து சலனமற்றிருக்கும் மனநிலையே, சஞ்சார சமாதி.
6.ஆருட சமாதி:
தானே பரம்பொருள் என்பதை உணர்ந்து, தன் முன் தேவதைகள் தோன்றினாலும், அவை அனைத்தும் தன்னிலிருந்து தோன்றியவை என்பதை உணர்ந்து, அசைந்து கொடுக்காது இருக்கும் உறுதியான நிலையே ஆருட சமாதி. இதையே நிறைவான நிலை என்கிறார் கொங்கணவர்.
பகவான் ஸ்ரீ ரமணர் தம் திருவாக்கினால் கூறிய சமாதி நிலையின் வகைகள்:
1. மாயையினால் இவ்வுலகத்தை மறந்து நாம் இருக்கும் நிலையே தூக்கம்.
2. பரம்பொருளைப் பற்றியிருக்கும் நிலையே சமாதி.
3. பெருமுயற்சியின் காரணமாக, பரம்பொருளைப் பற்றியிருக்கும் நிலை, சவிகல்ப சமாதி.
4.பரம்பொருளுடன் ஒன்றாகக் கலந்து, இவ்வுலக மாயையிலிருந்து முற்றும் விடுபட்ட நிலை, நிர்விகல்ப சமாதி.
5. பரம்பொருளுடன் ஒன்றாகக் கலந்து, அந்நிலையிலேயே, எவ்வித முயற்சியுமின்றி நிலைபெறுதல், சஹஜ நிர்விகல்ப சமாதி.
பகவான் ஸ்ரீ ரமணர், 4 மற்றும் 5ம் நிலைக்குரிய வித்தியாசத்தை இவ்வாறு தெரிவிக்கிறார்.
"கேவல நிர்விகல்பசமாதி (4ம் நிலை), இதில், பரம்பொருளுடன் கலந்த நிலையிலும் மனம் என்பது மரிக்காதிருக்கும். எப்படி கயிற்றின் மூலம் கிணற்றின் உள்ளே விடப்பட்ட வாளியை மீண்டும் எடுக்க இயலுமோ, அதைப் போல், நிர்விகல்ப சமாதியை அடைந்த ஒருவர், அதிலிருந்து வெளிப்பட்டால், மீண்டும் இவ்வுலக மாயை அவரைச் சூழும்.
ஆனால், ஒரு கடலில் கலந்த ஒரு ஆறு கடலுடனேயே ஒன்றி விடுதல் போல், தான் எனும் நினைவு முழுவதுமாக அகன்று, பரப்பிரம்மத்துடன் ஒன்றறக் கலக்கும் நிலையே சஹஜ நிர்விகல்ப சமாதி. பரிபூரண ஞானம் அடைந்த நிலை இதுவே."
மனிதப் பிறவியின் நோக்கம் முழுமையாக பரம்பொருளை உணர்தலும், அதனோடு ஒன்றியிருக்கும் நிலை அடைதலுமே. யோக சாதனைகள் அந்நிலையை நோக்கி இட்டுச் செல்லும். ஆனால், இவை அனைத்திற்கும், குருவின் துணையும் முறையான பயிற்சியும் மிக அவசியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறையருள் மிக மிக முக்கியம்.
"ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ¡ந்தேஹி சபார்வதீ " என்று ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், அன்னபூரணி தேவியிடம் வேண்டுகிறார்.
அந்த பரம ஞான நிலையை அருள வேண்டி, எல்லாம் வல்ல இறைவனின் திருவடி பணிவோம்.
வெற்றி பெறுவோம்.!!!!!!