அடுத்ததாக, வாமனாவதாரத்தைச் சொல்லத் துவங்கும் பட்டத்திரி, முதலில், பலியின் சரிதத்தைச் சொல்கிறார். எவ்வாறு அவன் பலம் மிகுந்தவனாக, அனைத்துலகத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டான் என்றும் சொல்கிறார்.
இந்திரனுடன் நிகழ்ந்த யுத்தத்தில், அசுர வேந்தனாகிய பலி கொல்லப்பட்டாலும், பின்னர், சுக்கிராச்சாரியாரின் சஞ்சீவினி வித்தையால் உயிர்ப்பிக்கப்பட்டான். விச்வஜித் என்னும் யாகத்தைச் செய்து, அதனால் சக்தி மேலும் வளரப் பெற்ற அவன், மிகுந்த பராக்கிரமம் பொருந்தியவனான். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சக்ராயுதத்துக்கும் அஞ்சாமல், மூவுலகையும் தன் வசப்படுத்திக் கொண்டான்.
தேவர்கள் ஓடி ஒளிந்தனர்.
தேவர்களின் தாயான அதிதி தேவி, தன் புதல்வர்களின் நிலை கண்டு, துன்பம் மிகக் கொண்டாள். தன் கணவரான, காச்யபரைச் சரணடைந்து, இந்த நிலை மாறுவதற்கான உபாயத்தைக் கூற வேண்டினாள். அவரும் பெருமை மிகுந்த 'பயோ விரதத்தை' உபதேசித்தார். அதிதி, பன்னிரண்டு நாட்கள்,பக்தியுடன் அந்த விரதத்தை அனுஷ்டித்தாள்..
இங்கு, 'பயோ விரதம்' பற்றி, சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம். இது, எந்த மாதத்திலும், வளர்பிறை பிரதமை முதல், திரயோதசி வரை அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும்.. ஒவ்வொரு நாளும் பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து, பாயச நிவேதனம் செய்ய வேண்டும். நிவேதன பாயசத்தை மட்டுமே உணவாக அருந்த வேண்டும்.
பன்னிரண்டு நாட்களும், பூஜைகள், ஹோமம், அதிதி (விருந்தினர்) போஜனம் முதலியவற்றை கிரமமாகச் செய்ய வேண்டும்.
இவ்விதமாக, பூஜித்து, பகவானிடமே மனம் லயித்திருந்த அதிதி தேவியின் முன்பாக, பகவான் சியாமள வண்ணனாக, சங்கு சக்கரங்களுடன் கூடிய சதுர்புஜங்களுடன் தோன்றினார். 'நானே உனக்கு புத்திரனாகப் பிறக்கிறேன்!..என்னை நீ தரிசித்தது ரகசியமாக இருக்கட்டும்!' என்று திருவாய் மலர்ந்தருளினார். பின் மறைந்து விட்டார்.
தஸ்யாவதௌ த்வயி நிலீனமதேரமுஷ்யா:
ச்யாமச் சதுர்புஜ வபு: ஸ்வயமாவிராஸீ: |
நம்ராம்ʼ ச தாமிஹ பவத்தனயோ பவேயம்ʼ
கோ³ப்யம்ʼ மதீ³க்ஷணமிதி ப்ரலபன்னயாஸீ: (ஸ்ரீமந் நாராயணீயம்).
பிறகு, அதிதி தேவியின் கர்ப்பத்தில் பிரவேசித்த பகவானை, பிரம்ம தேவர் துதி செய்தார். அதிதி தேவி, சிராவண மாதம் துவாதசியுடன் கூடிய புண்ணிய தினத்தில், பகவானைத் தன் குழந்தையாகப் பெறும் பேறடைந்தாள்!.
கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே! (நம்மாழ்வார்).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது, தொடராக, அதீதம் மின்னிதழில் வெளிவருகிறது.
பயோ விரதம் பற்றி இன்றுதான் புதிதாக அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி தங்களுக்கு!..
பதிலளிநீக்கு