நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 2 பிப்ரவரி, 2013

NAVA DURGA DEVIYAR....நவ துர்கா தேவியர்



துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி |
தாரித்ர்ய-து: க பய-ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார-கரணாய ஸதார்த்ர-சித்தா ||
துர்கா தேவி!!!, உன்னை ஸ்மரிக்கும் அனைத்து ஜீவர்களுடைய பயத்தை எல்லாம் போக்குகின்றாய். நிம்மதியாய் இருப்பவர் உன்னை ஸ்மரணம் செய்தால், நல்ல எண்ணைத்தை நல்குகிறாய். வறுமை, துக்கம், பயம், ஆகியவற்றைப் போக்குபவளே!!, அனைவருக்கும் அனைத்து விதமான உபகாரங்களையும் செய்ய, தயை நிறைந்த சித்தத்துடன் இருப்பவர்கள் உன்னைத் தவிர உலகில் யார் இருக்கிறார்கள்?

மேற்கண்ட ஸ்லோகம், ஸ்ரீ துர்கா ஸப்தசதீயில் உள்ளது. இது அளவில் சிறியதாய் இருந்தாலும், துர்கா தேவியின் பிரபாவங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. இது ஸப்தசதீயில் உள்ள ஸ்லோகங்கள் அனைத்துக்கும் சிகரமாய் விளங்குவதாகும். துர்காதேவியை வழிபடுவோருக்குக் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் சுருங்கக் கூறும் இந்த துதி, அனைத்துத் தியான ஸ்லோகங்களின் மூலம் எனவும் கூறப்படுகிறது.

ருத்ரயாமளம் என்ற தந்த்ரத்தில், 'துர்கா' என்ற சொல்லை, 'த,உ,ர,க,ஆ' என்ற ஐந்து வர்ணங்களின் கூட்டாகச் சொல்லியிருக்கிறது.

இதில் த என்பதற்கு அசுரர்களை அழித்தல், 
என்பதற்கு தடைகளை முறியடித்தல்,
ர் என்பதற்கு, நோய்களை நீக்குதல்,
என்பதற்கு பாவங்களை நீக்குதல்,
என்பதற்கு பயம், எதிரிகள் ஆகியவற்றை அழித்தல் எனப் பொருள் கூறுகிறது ருத்ரயாமளம்.

இந்த ஐந்து அக்ஷரங்களும், ஸ்ரீ துர்கா பஞ்சாக்ஷரீ என்றே போற்றப்படுகின்றன.

துர்கை வழிபாடு, மிகத் தொன்மையானது. சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக  துர்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். துர்கை என்பது பரப்பிரஹ்மத்தின் சகுண சக்தியின் ரூபம். துர்கையின் திருக்கரங்களில் இருக்கும் சூலம் ஞானத்தையும், சிம்மம் தர்மத்தையும், திருப்பாதங்களின் அடியில் இருக்கும் மஹிஷன், காம, குரோதங்களையும், அம்பிகையின் முக்கண்கள் மூன்று காலங்களையும் குறிக்கின்றன.

கணபதியின் ஒரு திருவடிவம், துர்கா கணபதி என்பதாகும். 'ஸ்கந்தமாதா' என்பது துர்கையின் திருநாமங்களில் ஒன்று.  ஜ்வாலா துர்கா மந்திரத்தில் ஸ்ரீதுர்கை, 'ஆதி விஷ்ணு ஸோதரி' என்று அழைக்கப்படுகிறாள். ஸப்தசதீ ஸ்லோகத்தின் மூலமாக, சிவ, சக்தி ஐக்கிய பாவம் நன்கு விளங்கும். ஆகவே, துர்கையின் உபாசனையால் அனைத்துத் தெய்வங்களும் மகிழ்ச்சியடைகின்றன என்பது நன்கு புலனாகும்.

இந்தப் பதிவில் நாம் நவதுர்கா தேவியரைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக, சைலபுத்ரி, பிரம்மசாரினீ, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்பனவே நவதுர்கை வடிவங்களாகக் குறிக்கப்படுகின்றன.

குமாரி பூஜா முறையின்படி, குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்ரா என்பவையே நவதுர்கை வடிவங்களாகக் குறிக்கப்படுகின்றன.

இந்தத் திருவடிவங்கள் குறித்து, நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, அதிகம் பேசப்படாத, வேறு வகையான நவதுர்கை வடிவங்களைப் பார்க்கலாம்.

 அதன்படி, கீழ்க்கண்ட மூர்த்திகளே நவதுர்கை வடிவங்கள்.
  1. வனதுர்கை,
  2. சூலினி துர்கை,
  3. ஜாதவேதோ துர்கை,
  4. சாந்தி துர்கை,
  5. சபரி துர்கை,
  6. ஜ்வாலா துர்கை,
  7. லவண துர்கை,
  8. தீப துர்கை,
  9. ஆசுரி துர்கை.
இவற்றிற்கெல்லாம் ஆதாரமான மூல துர்கா வடிவம் தனியாக உபாசிக்கப்படுகிறது. நவதுர்கைகளும் இணைந்த திருவடிவமாக, அன்னை ஸ்ரீ மூகாம்பிகை கருதப்படுகிறாள்.
வனதுர்கை:
அகத்திய மாமுனி, விந்திய மலையில் கர்வத்தை வனதுர்கா தேவியின் துணை கொண்டே அடக்கினார். அகத்தியர், சிவபெருமான் ஆணையை ஏற்று, தென் திசை நோக்கி வந்தபோது, விந்திய பர்வதம், அவரது பயணத்திற்கு இடையூறாய் நின்றது. அகத்தியர் வழி விடுமாறு  கேட்ட போதும் அது வழி விடவில்லை. ஆகவே, வனதுர்கா தேவியை தியானித்து, தனக்கு சக்தி வழங்குமாறு பிரார்த்தித்தார். வனதுர்கா தேவியும் அருள் செய்தாள். அகத்தியர், தன் கரத்தை, விந்தியத்தின் கொடுமுடி வரை நீட்டி, அதை கீழே அமுங்குமாறு செய்தார். இவ்வாறு, விந்திய வனத்தில், அகத்தியருக்கு அருள் செய்ததால், வனதுர்கா எனப் பெயர் பெற்றாள் துர்கை. தன்னைச் சரணடைந்தவர்களை, சம்சாரமாகிய காட்டில் இருந்து காப்பவள் என்பதாலும் வனதுர்கை என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் கருதலாம்.

மேலே கண்ட ஒன்பது துர்கையரின் வடிவமாக, நவதுர்காத்மிகாவாகத் திகழ்கிறாள்  வனதுர்கை. வன என்பதைத் திருப்பிப் போட்டால் 'நவ' என்றே வரும். வனதுர்கை மிகவும் அழகு படைத்த சாந்த தேவதையாகவே அறியப்படுகிறாள். 'கொற்றவை' எனப் பழந்தமிழர்கள் வழிபாடு செய்த தேவதை வனதுர்கையே.   ஸ்ரீ  பாஸ்கரராயர் அருளிய 'ஸௌபாக்கிய பாஸ்கரம்' என்னும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்தில், மஹா ஸ்ரீ வித்யா, வனதுர்கையின் உபாசனையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில், கதிராமங்கலம் என்னும் திருத்தலத்தில் வனதுர்கா தேவி கோவில் கொண்டு திருவருள் புரிகிறாள்.
சூலினி துர்கை
சிவனாரின் திரிபுர ஸம்ஹாரத்தின் பொழுது, சூலம் ஏந்திய கரத்தினளாக அவருக்குத் துணை நின்றவளே சூலினி துர்கை.  திரிசூலம் என்பது மும்மூன்றாக உள்ள தத்துவங்களை எல்லாம் குறிப்பிடுவதாகும் (உதாரணம்: இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, சத்வ, ரஜோ, தமோ குணங்கள்).

சூலினி யந்த்ர பூஜை மிக மகிமை வாய்ந்தது. த்ரிபுர ஸ்ம்ஹாரம், அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான திருவதிகையில் நிகழ்ந்ததாக ஐதீகம். அங்கு உள்ள அம்மனின் திருநாமம் திரிபுரசுந்தரி. இவர் சூலினி துர்கையின் அம்சமாகவே வழிபடப்படுகிறார்.
ஜாதவேதோ  துர்கை:
அக்னிக்கு ஆதாரமாக உள்ள சக்தியே ஜாதவேதோ துர்கை. தேவர்களுடைய உக்ரமான சங்கல்பத்தில் அவர்களுடைய தேஜஸ்ஸூகளெல்லாம் ஒன்றிணைந்து சண்டி பரமேஸ்வரியாக, ஜாதவேதோ துர்கையாக  என‌ உருவெடுத்தது புராணங்கள் கூறுகின்றன.

திருமுருகன் அவதார நேரத்தில், சிவனாரின் ஆறு திருமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவற்றை, கங்கையில் சேர்க்குமாறு, பரமன் அக்னிபகவானுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவரோ, அந்த தீப்பொறிகளின் கனத்தையும் வெப்பத்தையும் தாங்க மாட்டாமல் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

அப்போது சிவனார், அந்தத் தீப்பொறிகளைத் தூக்க அக்னி பகவானுக்கு வலிமையை அருளினார். அக்னி பகவானும், இலகுவாக அவற்றைத் தூக்கிக் கொண்டு கங்கையிடம் சென்றார். உண்மையில் அக்னிபகவான் அவற்றைத் தூக்கும் முன்பாக, துர்கா தேவி அத்தீப்பொறிகளுள் பிரவேசித்தாள். ஜாதவேதோ துர்கையே அக்னி ஸ்வரூபமாய் இருந்து அத்தீப்பொறிகளைத் தூக்கிச் சென்றாள். அதனாலேயே துர்கா தேவிக்கு 'ஸ்கந்தமாதா' என்னும் திருநாமம் ஏற்பட்டது.

சாந்தி துர்கை:
இன்றைய அன்றாட வாழ்வின் அவசியத் தேவையான நிம்மதியை, மனச்சாந்தியை அருளுபவள் சாந்தி துர்கையே. துர்வாச முனிவர், சாந்தி துர்கையின் வழிபாட்டினாலேயே கோபத்தைக் கைவிட்டார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சாந்தி துர்கையை வழிபடுவதன் மூலம், கடன், நோய், செய்வினை தோஷங்கள் போன்ற பல ப்ரச்னைகள் நீங்கும். பட்டீஸ்வரத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ துர்கா தேவி சாந்தி துர்கையாகவே கருதப்படுகிறாள்.

சபரி துர்கை(சாபரீ துர்கை):
 அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறத் தவம் இருந்த போது, அவன் தவத்தை கலைக்க வேண்டி, துரியோதனன் முகன் என்ற அசுரனை அனுப்பினான். அவனை  அழிக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நான்கு நாய்கள் ரூபமாக ஆக்கிக்கொண்டு, சிவனார் வேட்டுவக்கோலத்துடனும், அம்பிகை வேட்டுவச்சியின் கோலத்துடனும் சென்று அந்த அசுரனை வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

மேலும், இறைவன், பாசுபதாஸ்திரம் பெற அர்ச்சுனனுக்குத் தகுதி இருக்கிறதா எனச் சோதனை செய்யும் எண்ணத்துடன் வந்ததால், அவனை, சிவனார் அதிகமாக சோதனை செய்யாவண்ணம் தடுப்பதற்காக, கருணை உள்ளம் கொண்டு அன்னையும் உடன் வந்தாள்

அப்படி, வேட்டுவச்சியின் திருக்கோலத்துடன் வந்த‌  அம்பிகை ஸ்ரீ சபரி துர்கையாகத் தியானிக்கப்படுகிறாள். மயிற்பீலியை தலையில் சூடிக்கொண்டு, திருக்கரங்களில் வில் அம்பு ஏந்தி, காதுகளில் பனை ஓலை(தாடங்கம்) அணிந்து,  மரவுரி அணிந்த திருக்கோலத்தில் அம்பிகையை தியானம் செய்வது தீராத வினை தீர்க்கும் என்பது ஐதீகம். சாபரீ துர்கை எனவும் இந்த துர்கை வழங்கப்படுகின்றாள்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்...

அம்பிகையின் அருளால்,

வெற்றி பெறுவோம்!!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
தகவல்கள் உதவி: சிவ மஹா புராணம், தேவி பாகவதம், ஸ்ரீ துர்கா பிரபாவம்.

4 கருத்துகள்:

  1. படங்களும், தகவல்களும் அருமை. இவ்வளவு தகவல்களும் சேகரிப்பதோடு மட்டுமின்றி, அவற்றைத் தெளிவாகவும், எளிமையாகவும் தருகிறீர்கள்! மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ////கவிநயா said...
    படங்களும், தகவல்களும் அருமை. இவ்வளவு தகவல்களும் சேகரிப்பதோடு மட்டுமின்றி, அவற்றைத் தெளிவாகவும், எளிமையாகவும் தருகிறீர்கள்! மிகவும் நன்றி./////

    தங்கள் வருகைக்கும் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  3. 'கொற்றவை' எனப் பழந்தமிழர்கள் வழிபாடு செய்த தேவதை வனதுர்கையே. ஸ்ரீ பாஸ்கரராயர் அருளிய 'ஸௌபாக்கிய பாஸ்கரம்' என்னும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்தில், மஹா ஸ்ரீ வித்யா, வனதுர்கையின் உபாசனையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    அருமையான தகவல்கள் ..
    துர்க்காஸ்துதி பயனுள்ளது .. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. ////இராஜராஜேஸ்வரி said...
    'கொற்றவை' எனப் பழந்தமிழர்கள் வழிபாடு செய்த தேவதை வனதுர்கையே. ஸ்ரீ பாஸ்கரராயர் அருளிய 'ஸௌபாக்கிய பாஸ்கரம்' என்னும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்தில், மஹா ஸ்ரீ வித்யா, வனதுர்கையின் உபாசனையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    அருமையான தகவல்கள் ..
    துர்க்காஸ்துதி பயனுள்ளது .. பாராட்டுக்கள்./////

    தங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா. வனதுர்கையின் மகிமை அளவற்றது. குலதெய்வம் தெரியாதவர்கள் கூட வனதுர்கையை வழிபட்டால் போதும் என்று ஸ்ரீ துர்கா பிரபாவம் கூறுகிறது. தாங்கள் தரும் ஊக்கங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..