மோஹினியின் உருவின் இருந்த பகவான், தன் பக்தர்களிடம் பேரன்பு பூண்டவராதலால், தேவர்களின் வரிசையிலேயே அமுதத்தை பரிமாறிக் கொண்டிருக்கும் போது, இதை உணர்ந்த ஸ்வர்ப்பானு என்ற அசுரன், தேவனைப் போல் உருவெடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்து, அமுதத்தைப் பெற்றான். அமுதத்தைப் பாதி குடித்திருந்த நிலையில், பகவான், தன் சுய உருவில் தோன்றி, அவன் சிரத்தை, தன் சக்கரத்தால் துண்டித்தார்.
தன்வந்திரி அவதாரத்தில், தன்னிடமிருந்த அமுத கலசத்தைப் பறித்ததற்கு தண்டனையாக, அவர்களுக்கு அமுதம் வழங்காது, அனைத்தையும் தேவர்களுக்கே வழங்கி விட்டு, பகவான் மறைந்தருளினார்.
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்
தன்னின் உடனே சுழல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை,….. (திருமங்கையாழ்வார்).
அசுரர்கள் உண்மை உணர்ந்து, தேவர்களிடம் சண்டையிட வந்தனர். மிகக் கடுமையான போர் துவங்கியது. பலியின் அசுர மாயையால், தேவர்கள் கூட்டம் மூர்ச்சையடைந்த போது, பகவான் மீண்டும் அங்கு ஆவிர்ப்பவித்தார்.
த்வத்த: ஸுதாஹரணயோக்யப²லம்ʼ பரேஷு த³த்த்வா
க³தே த்வயி ஸுரை: க²லு தே வ்யக்ருʼஹ்ணன் |
கோரே(அ)த² மூர்ச²திரணே ப³லிதை³த்ய மாயா
வ்யாமோஹிதே ஸுரக³ணே த்வமிஹாவிராஸீ: || ( ஸ்ரீமந் நாராயணீயம்).
பகவான், காலநேமி, மாலி ஆகிய அசுரர்களை முடிக்க, இந்திரன், பாகாஸூரன், பலி, ஜம்பன், வலன் ஆகியோர்களைக் கொன்றான். உலர்ந்த பொருளாலோ, ஈரமான பொருளாலோ கொல்ல முடியாத நமுசி என்னும் அசுரன், நுரையால் வெட்டிக் கொல்லப்பட்டான். அப்போது, அங்கே நாரதர் தோன்றி, பகவானிடம் போரை நிறுத்துமாறு கோரினார். அதை ஏற்று, பகவானும் போரை நிறுத்தினார்.
பகவான் இவ்விதம் மோஹினி அவதாரம் எடுத்ததை அறிந்த பரமேஸ்வரன், அதைக் காண ஆவல் கொண்டு, பூத கணங்களுடனும், பார்வதி தேவியுடனும் பகவானை நாடி வந்து, தம் விருப்பத்தைத் தெரிவிக்க, பகவானும் உடனே அவருக்கு மோஹினியாகக் காட்சி அளித்தார். அதைக் கண்டு, காம வைரியான பரமேஸ்வரனும் சற்று நிலை தடுமாறி, அதன் பின், பகவானால் உண்மை உணர்த்தப்பட்டவராக, பார்வதி தேவிக்கு, பகவானின் பெருமையை எடுத்துரைத்தார்.
அத்தகைய மகிமையுடைய ஸ்ரீகுருவாயூரப்பன், தம்மைக் காத்தருள வேண்டிப் பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!.
(தொடர்ந்து தியானிக்கலாம்!).\
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
(இந்தத் தொடர், அதீதம் மின்னிதழில் வெளிவருகிறது!).
மோஹினி போலவே மிகவும் அழகாகவும், அருமையாகவும்,
பதிலளிநீக்குஅமிர்தம் போலவே சுவையாகவும், சுருக்கமாகவும் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!.
நீக்கு