நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 25 செப்டம்பர், 2014

THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KATHALI'...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி!'.


அன்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்!.

அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!.. நம் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அம்பிகையின் அருளாட்சி நிறைய வேண்டுகிறேன்!..

முந்தைய வருடங்களின் நவராத்திரி பதிவுகளுக்கான சுட்டிகள்...

இந்த வருடம், நவராத்திரி பண்டிகையை ஒட்டி, தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி' எட்டுப் பாடல்களுக்கும் நானறிந்த வரையில் பொருள் எழுதலாம் என்று திருவருளால் எண்ணம் கொண்டேன். இது 'அவள் அருளால் அவள் தாள் வணங்கி' எழுதுவதே.. எனக்கு முன்பாக எத்தனையோ மஹான்கள் இதற்கு பொருள் எழுதியிருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஒரு துளியேனும் நான் ஈடாக மாட்டேன் எனினும், 'நானும் அம்பிகையின் ஒரு குழந்தையே' என்னும் எண்ணமே இதனை நிறைவேற்றத் தூண்டியது..  ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு பொருள் எழுத எண்ணம்..இறையருள் இதனை நடத்துவிக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் இன்று முதல் பாடல்...

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்
    பக்கமுண் டெக்காலமும்
  பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
    படரெனுந் திமிர மணுகாக்
கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
    காயசித் திகளுமுண்டு
  கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்
    கருத்தொன்றும் உண்டாகுமேல்
நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
    ஞானஆ னந்தஒளியே
  நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
    நானெனும் அகந்தைதீர்த்தென்
மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
    மதுசூ தனன்தங்கையே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

முதலில், சில சொற்களுக்கு மட்டும் பொருள் பார்க்கலாம்..

பவிசு -  மதிப்பு. தவிசு - படுக்கை. திட்டாந்தம் - எடுத்துக்காட்டு. யமபடர் - நமன்றூதர். திமிரம் - இருள். சதிர் - திறமை, பெருமை, பேறு, அழகு.

அம்பிகையின் திருவடிகளிலேயே சிந்தை குவியும் போது, கருத்தினில் அவளே நிறையும் போது.. அவளருளால் உண்டாகும் நன்மைகளை விவரிக்கிறது இப்பாடல்..

இப்பாடலில், யோகமார்க்கமும் அடங்கியிருக்கிறதென்று பெரியோர் கூறுவர். அது அனுபவத்தாலேயே அறிய வேண்டுமென்பது பெரியோர் கட்டளையாதலால், ஓரளவே சொல்லப்பட்டிருக்கிறது.

பொருள்:

நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
    ஞானஆ னந்தஒளியே .......கடலானது நதிகளை உள்ளடக்கியது போல், சமயங்களை எல்லாம் தன்னுடள் அடக்கிய பரஞான ஆனந்த ஒளி வடிவானவளே!... என்று அம்பிகையைப் போற்றுகின்றார் அடிகள். பரஞான ஆனந்தம் என்பது என்றும் மாறாத பேரின்ப நிலையைக் குறிக்கும். அந்நிலையே உருவான, ஒளி போன்ற பிரகாசமுடையவள் அம்பிகை என்பது பொருள்.

'நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே'==  நாதாந்தம் என்பது யோக மார்க்கம் அறிந்தவர்களே புரிந்து கொள்ளக் கூடியது. சுருங்கக் கூறின், சுத்த தத்துவங்களாகிய விந்துநாத முதலியவையும் நீங்கிய சாயுஜ்ஜிய நிலையைக் குறிப்பது இது. இதை திருமூலர் திருமந்திரத்தில்,

விதற படாவண்ணம் வேறிருந் தாய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்து அக்கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே என்று உரைக்கிறார்.

இவ்விதம் நாத தத்துவத்துக்கும் அப்பாற்பட்ட சொல்லில் அடக்கவொண்ணா வடிவானவள் அம்பிகை.. மறைமுடிவான மோனத்திருவடிவே அவள்.

நானெனும் அகந்தைதீர்த்தென்
மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
    மதுசூ தனன்தங்கையே..... அடியேனது, 'நான், எனது என்னும் அகந்தையை நீக்கியருளி,.    மானிடனாகிய அடியேனது  சிற்றறிவை, திருவருளால் தன் பேரறிவுக்குள் அடக்கிய, முழு மதி போன்ற திருமுகமுடைய கொடி போன்றவளே!... மது என்னும் அரக்கனை வென்றதால் 'மதுசூதனன்' என்னும் திருநாமம் கொண்ட‌ திருமாலின் தங்கையே!..

வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே......மலையரசனுக்கு இரு கண்ணின் மணி போன்ற (மிக்க அன்புடைய ) மகளாக உதித்தருளிய மலைமகளாகிய (மலையை இருப்பிடமாகக் கொண்ட) காதலிப் பெண் உமையே!....

கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்
    கருத்தொன்றும் உண்டாகுமேல்......விடமுண்டதால் நீல நிறமான கழுத்தை உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தருளும், உலகுக்கெல்லாம் தாயான அம்பிகையே!.. நின் திருவருளால், நின் திருவடிகளிலேயே என் மனம் முழுவதும் ஈடுபடுமானால், (எனக்கு நல்வாழ்வு வாழ்வதற்கு தேவையான அனைத்தும் நின் திருவருளால் கிட்டும். அவை என்னென்ன?).

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்
    பக்கமுண் டெக்காலமும்
  பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
    படரெனுந் திமிர மணுகாக்
கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
    காயசித் திகளுமுண்டு.........பதி என்பது இங்கு ஊர் என்ற பொருளில் கொள்ளப்படுகின்றது. நல்வாழ்வு வாழ்வதற்குரிய வளம் பொருந்திய ஊர் அமையும். பிறர் மதிக்கத் தகுந்த வாழ்வோடு, குறைவற்ற செல்வமும், நன்மக்கட் பேறும், நல்ல நண்பர்களும் வாய்க்கும்.  இவை, எப்போதும் நீங்காது, பக்கமிருக்கும்.   சுகமான பஞ்சணையில் நல்ல  உறக்கம் முதலான பல நன்மைகள் உண்டு. எடுத்துக்காட்டாக, யம தூதர்கள் அணுக இயலாத நல்ல கதி (திருவடிப் பேறு) உண்டாகும்.(இங்கு திமிரம் என்பது இருள் என்னும் பொருளில் கூறப்படுகின்றது.. யம தூதர்கள் வந்து உயிரைக் கவர்ந்து செல்லும் நிலை, உயிருக்கு மறு பிறப்புண்டு என்பதை விளக்குகிறது.. பிறப்பிறப்பு சுழலையே இருளாகக் குறிப்பிடுகின்றார் எனவும் கொள்ளலாம்).

இவையனைத்துக்கும் மேலாகவும் மூலமாகவும் விளங்கும் சிவஞானமாகிய  பேரொளி சித்திக்கும்.. (அறிவினை விளக்குக்கு ஒப்பிடுதல் வழக்கமாதலின், ஞானத்தை பேரொளி என்றார்). நல்ல பல திறமைகளும், சிறு முயற்சியால் பெரும்பயன் விளையும் நிலையும், உண்டாகும். திருவடிப் பேறு பெற்ற இவ்வுடல் நெடுநாள் நிலைத்திருக்கத் தேவையான காய சித்திகளும் கிடைக்கும்.

சுருங்கக் கூறின், அம்பிகையின் திருவடிகளில் கருத்தொன்றினால், மதிப்பான வாழ்வு, குறைவற்ற செல்வம், நன் மக்கட் செல்வம், நல்ல நண்பர்கள் முதலான பல நன்மைகள் உண்டாகும். எம தூதர்கள் அணுக இயலாது.  அதாவது பிறப்பிறப்பு சுழலில் இருந்து விடுபட்டு, திருவடிப் பேறு பெறும் நிலை வாய்க்கும். சிவஞான பேரொளி சித்தித்து, இவ்வுடல், நரை , திரை, மூப்பு இவற்றால் பாதிக்கப்படாது நெடுநாள் வாழ்வதற்குரிய காய சித்திகளுமுண்டாகும் என்பது பாடலின் கருத்து..

 தாயுமானவடிகள், அன்னையின் திருவடிகளில் கருத்தொன்றுதல் என்பது என்ன என்பதையும் தெளிவாக விளக்கியருளுகிறார். 'நான், எனது' என்னும் எண்ணம் நீங்கி, அவள் சரணே சரண் என்னும் துணிவோடு சரணாகதி அடைதலே கருத்தொன்றுதல். அந்நிலை வருதலும் அவளருளாலேயே இயலும் என்பதையும், "நானெனும் அகந்தைதீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதன வல்லியே"  என்று சுட்டுகின்றார்.

பேரறிவின் சக்தியை உணர்ந்து, நம் சிற்றறிவே பெரிதென எண்ணாது, அதனிடம் சரணடைய, நம் அகந்தை நீங்கும். அவளருளால் அனைத்து நன்மைகளும் அடைந்து, முடிவில் பேரொளி மயமான ஞானநிலையினையும் அடையலாம் என்கிறார் அடிகள்..

காய சித்திகள் பெற்றவர்கள் சித்தர்களே!.. யோக மார்க்கம் சித்தர்களாலும் யோகிகளாலுமே அறிந்துணரப்படுகின்றது.. ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், அம்பிகையை 'சித்த மாதா' என்று போற்றுகின்றது. சூக்கும் சரீரத்தில் நெடுநாள்,காலம், இடம் முதலியவற்றைக் கடந்து, மானிடர்க்கு நன்மை செய்யும் பொருட்டு வாழ்ந்திருக்கின்றனர் சித்தர்கள் என்று நம்புகிறோம்.. இவ்வரியும், இந்தப் பாடலில் யோகமார்க்கம் மறை முகமாகச் சொல்லப்படுவதை உறுதி செய்கிறது..

அடுத்த பாடல்...(தொடரும்).

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

 1. அருமையான பாடல் ஒன்றுக்கு...
  நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அழகு..
  நெஞ்சம் நிறைத்தது அன்னையின் பராக்கிரமம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பொன்னான பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே!..

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களுக்கே நான் நன்றி சொல்ல வேண்டும். நவராத்திரியை ஒட்டி பதிவுகள் இடும் மனநிலை இல்லை.. எனினும், தங்கள் வார்த்தைகளே எனக்குத் தூண்டுகோலாகின.. தொடர்ந்து என் எழுத்துக்களை ஊக்குவித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி..

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..