அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!...
பாடல் # 2..
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
சிற்றிடையி லேநடையிலே
சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
சிறுபிறை நுதற்கீற்றிலே
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த
பொடியிலே அடியிலேமேல்
பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
புந்திதனை நுழைய விட்டு
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே
நின்னடியர் கூட்டத்திலே
நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்தி லேயுன்இருதாள்
மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ
வளமருவு தேவை அரசே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே.
இந்தப் பாடலில், எல்லா வளங்களும் பொருந்திய தேவை நகருக்கு அரசியாக, உமையன்னை குறிக்கப்படுகின்றாள். தேவை நகர் என்பது இராமேஸ்வரத்தைக் குறிக்கும்.. இராமேஸ்வரத்தில் அம்பிகையின் திருநாமம் பர்வதவர்த்தினி அம்மை.. இந்தத் திருநாமத்தையே தமிழில் மலைவளர் காதலி என்றார் தாயுமானவடிகள்..
இந்தப் பாடலில், சிற்றின்பத்தின் பால், தம் மதி செல்லாமல், அம்பிகையின் திருவடிப் பேறாகிய பேரின்ப நிலையை எய்துவதிலேயே தம் மனம் செல்லும் வரம் வேண்டுகிறார் அடிகள்.
பொருள்:
வளமருவு தேவை அரசே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே......எல்லா வளங்களும் பொருந்திய தேவை நகருக்கு அரசியே!.. இமயமலையின் அரசனாகிய இமவானின் இரு கண்மணியாகத் திருத்தோற்றம் காட்டியருளிய மலைவளர்காதலிப் பெண் உமையே,
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
சிற்றிடையி லேநடையிலே
சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
சிறுபிறை நுதற்கீற்றிலே
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த
பொடியிலே அடியிலேமேல்
பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
புந்திதனை நுழைய விட்டு...............வஞ்சகத்தில் தேர்ந்த (தெட்டு... வஞ்சகம்) பெண்களின் வாயிலிருந்து வரும் வெட்டு மொழியிலும், சிற்றிடையிலும், ஒயிலான நடையழகிலும், மீன்களை ஒத்த விழியழகிலும், பால் போன்ற இனிமையான பேச்சிலும் மூன்றாம் பிறையை ஒத்த நெற்றியழகிலும், அங்கு அழகுற இடப்பட்டிருக்கும் பொட்டழகிலும், உடுத்தியிருக்கும் பட்டின் பளபளப்பிலும், பூசும் வெண்பொடியிலும், அவர்களது காலடியிலும், தனங்களிலும், பிறரை மயக்கும் விதமாக நிற்கின்ற நிலையிலும், அடியேனுடைய அறிவு சென்று,
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே
நின்னடியர் கூட்டத்திலே
நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்தி லேயுன்இருதாள்
மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ....மனம் போகும் போக்கில் போகாவண்ணம், எதை அறிய வேண்டுமோ அதை அறிய விழையும் நல்லறிவிலும், பொறுமையிலும், உன்னை எப்போதும் தொழும் நல்லடியவர் திருக்கூட்டத்திலும், உன் மேல் நிலையான அன்பிலும், மாசற்ற மெய்ஞானத்திலும், உன் திருவடியிணைகளிலும், மனது செல்ல நின் திருவருளை அருள்வாயோ?!....
இந்த வரிகளில், பேரின்பமடைய விழையும் உயிர்கள் பேண வேண்டிய நெறிகளை விளக்குகின்றார் தாயுமானவடிகள்.. முதலில், பேரின்ப நிலை அடைய வேண்டும் என்கின்ற நல்லறிவு வேண்டும்.. அதன் பின், பொறுமையாக, ஆன்மீக சாதனைகளை பயிலுதல் வேண்டும். இதில் வெற்றி கிட்டும் வரை அளவிறந்த பொறுமையோடு முயலுதல் அவசியம்..ஆகவே 'பொறையிலே' என்றார்.
அம்பிகையின் பால் மாறாத அன்பு பூணுதல் வேண்டும். இவையனைத்தும் இருந்தால், மாசற்ற மெய்ஞானம் கிட்டும். அதன் மூலம் அம்பிகையின் திருவடிப் பேறும் கிட்டும். ஆனால் மேற்கூறியவை அனைத்தும் நடைபெற, அன்னையின் திருவருள் அவசியம். அன்னை மனங்கனிந்து, இரங்கி, அருள் செய்தால் மட்டுமே நல்லறிவு, பொறுமை, நல்லாரோடு சேர்க்கை, அம்பிகையின் பால் மாறாத அன்பு இவையனைத்தும் கிட்டும். அவ்விதம் தனக்கு திருவருள் புரிய வேண்டுகிறார் தாயுமானவடிகள்.
இப்பாடலை ஆழ்ந்து சிந்திக்கும் போது, அடிகள், மாதர் பால் மனது செல்லாமை வேண்டும் என்பதாக வரம் வேண்டினாலும், அவர் உண்மையில் பெண்ணாக உருவகப்படுத்துவது, இவ்வுலகில் மாயையால் நிகழும் லீலைகளையே என்பது புலப்படும். ஒரு பெண்ணின் வெளித்தோற்றத்திலும், இனிமையான பேச்சிலும், அழகிலும், உடையிலும், அலங்காரத்திலும் மனதைச் சிதற விட்டு, அவற்றை உண்மை என்று நம்பி, அந்தப் பெண்ணைச் சேர்ந்தால் பேரின்ப நிலையை அடையும் லட்சியமானது கைகூடாது என்று சொல்வதன் மூலம், இவ்வுலகில் புறத்தோற்றம் முதலானவை நிலையானவை அல்ல.. காலப்போக்கில் மாறுதலுக்குட்பட்டவை..( "மா குரு தனஜன யௌவனகர்வம். ஹரதி நிமேஷாத் கால:ஸர்வம்... ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர்)... இவ்வுலகில் இன்பம் போல் தோன்றுபவை அனைத்தும் மாயையின் விளையாடல்களே!.. அதையே மெய்யென்று எண்ணினால், பிறப்பு, இறப்புச் சுழல் தம்மை விட்டு விலகாது.. அதன் பொய்மை உணர்ந்து, விலகி, மெய்ப்பொருளை அடைவதில் சிந்தை செல்ல அருளுதல் வேண்டும் என்பதையே உமையவளிடம் தம் வரமாகக் கோருகின்றார் அடிகள்..
அடுத்த பாடல்..(தொடரும்)
வெற்றி பெறுவோம்!!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இராமேஸ்வரத்தை
பதிலளிநீக்குஇங்கு கண் முன் கொணர்ந்தமைக்கு நன்றி
தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா!..
நீக்கு