நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

JIVIT PUTRIKA VRAT....ஜீவித்புத்ரிகா விரதம் (16/9/2014)

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

நம் பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் விரதங்களையும் அவற்றுக்கான சம்பிரதாயங்களையும் சில பதிவுகளில் நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம்..அந்த வரிசையில் இன்று 'ஜீவித் புத்ரிகா' விரதம் குறித்துப் பார்க்கலாம்.

இந்த விரதம் ஒவ்வொரு வருடமும், ஆவணி கிருஷ்ண பக்ஷ அஷ்டமி தினத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. வட இந்திய நாட்காட்டிகளின்படி ஆஸ்வீன மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.. அஷ்டமி திதி என்று சொல்லப்பட்டாலும், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்களிலும் இந்த விரத சம்பிரதாயங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. நடைமுறையில் பார்த்தோமானால், மஹாளய பக்ஷம், மத்யாஷ்டமி தினமே இந்த விரதம் வருகின்றது.. இந்த வருடம், செப்டம்பர் 16ம் தேதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த விரதம், இந்தியாவில், பீஹார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

விரத முறைகள்:

பெற்ற தாய்க்கு ஈடாக இவ்வுலகில் யாரைச் சொல்ல இயலும்?!.. தான் பெற்ற குழந்தைகளின் நலனுக்காக, ஒரு தாய் எந்தத் துன்பத்தையும் தாங்குவாள்.. நம் நாட்டில், தான் பெற்ற குழந்தைகளின் நலனுக்காக, தாய்மார்கள் பல்வேறு விதமான, மகிமை வாய்ந்த விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்... அவற்றுள் ஒன்று இது..

மற்ற விரதங்களைப் போல், இது ஒரு குறிப்பிட்ட கடவுளுக்காகச் செய்யப்படும் விரதமல்ல..குழந்தைகளின் நலனுக்காக, எங்கும் நிறைந்த‌ இறைவனை வேண்டி தாய்மார்கள்  செய்யும்  விரதம் இது... தத்தம் இஷ்ட , குல தெய்வங்களை இந்த தினத்தில் வழிபடுகின்றார்கள்.

விரதத்தின் முதல் நாள், விரதமிருக்கும் பெண்கள், மங்கள ஸ்நானம் செய்து விட்டு, உணவை ஏற்கின்றனர். இந்த சம்பிரதாயம்,  'நஹாய் கய்' என்று வழங்கப்படுகின்றது.

விரத தினத்தன்று காலையிலிருந்து நீர் கூட அருந்தாமல் உபவாசமிருக்கின்றனர். இது 'ஜிதியா உபவாசம்' என்றும் வழங்கப்படுகின்றது.. இவ்வாறு உபவாசம் இருப்பதால், தம் குழந்தைகளுக்கு தீங்கு ஒன்றும் வாராது, அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள் என்று திடமாக நம்புகின்றார்கள். இவ்வாறு நீர் கூட அருந்தாமல் உபவாசமிருப்பதால், இந்த விரதம் 'நிர்ஜலா விரதம்' என்றும் அழைக்கப்படுகின்றது.

விரத தினத்தன்று காலையில் நீராடி, இறைவழிபாடு முடித்து, விரதம் ஏற்பதற்கான சங்கல்பம் ( இன்று விரதமிருப்பதாகவும், அதை நல்ல முறையில் நிறைவேற்றித் தருமாறும் பிரார்த்தித்தல்) செய்கின்றனர்.   விரதத்துக்கான சங்கல்பம் முடிந்ததும், சிவப்பும் மஞ்சளும் கலந்த நோன்புச் சரடுகளை அணிகின்றனர்.அதன் பின்னர், விரதமிருக்கும் பெண்கள், குழுக்களாக சேர்ந்து கொண்டு, அன்று முழுவதும் பூஜை, பஜனை முதலியவற்றை செய்கின்றனர். விரதக் கதைகளை பாடுகின்றனர்.

மறு நாள் நவமியன்று அதிகாலை, பாரணையோடு விரதம் நிறைவுறுகின்றது. அன்றைய தினம், விசேஷ உணவு வகைகள் செய்து, இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு உண்கின்றனர்.

விரத தினத்தன்று அணியும்  நோன்புச் சரடு, தானாக அவிழ்ந்து கொள்ளும் வரையில் அதை அகற்றுவதில்லை.

விரதக் கதை:

ஒவ்வொரு விரதத்தின் போதும், அந்த விரதம் தோன்றியதற்கான கதையை பாராயணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.. ஒவ்வொரு விரதத்திற்கும் ஒரு பிரத்தியேக கதை உண்டு.. அதன்படி, இந்த விரதத்துக்கான கதை வருமாறு..

ஒரு கானகத்தில், ஒரு நரியும் கழுகும் நண்பர்களாக வசித்து வந்தன. ஒரு நாள் அந்தக் காட்டில், சில பெண்கள், இந்த விரதத்தை அனுஷ்டிப்பதைக் கண்ட  நரியும் கழுகும், அந்தப் பெண்களை அணுகி விபரம் கேட்க, அவர்களும் விரத விதி முறைகளை, நரிக்கும் கழுகுக்கும் விளக்கி சொன்னதோடு, நரியையும் கழுகையும் இந்த விரதம் இருக்குமாறு வேண்டினர். முதலில் சம்மதித்த நரி, பின்னர் பசி தாங்காமல் உணவு உண்டது.. ஆனால் கழுகோ முறைப்படி விரதமிருந்தது. இதனால், கழுகின் குஞ்சுகள் நீண்ட ஆயுளோடு சுகமாக வாழ்ந்தன. நரியின் குட்டிகள், குறைந்த ஆயுளையே பெற்றன.

இது சம்பந்தமாக, மற்றொரு விரதக் கதையும் சொல்லப்படுகின்றது. கந்தர்வர்களின் அரசனான ஜீமூதவாஹனன், மிகவும் இரக்க குணம் படைத்தவன். அரச பதவியை தன் சகோதரர்களிடம் ஒப்படைத்து விட்டு, வானப்பிரஸ்தம் சென்றிருந்த தன் பெற்றோர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கானகத்திலேயே தங்கி இருந்த அவன், ஒருநாள் ஒரு பெண் அழும் குரலைக் கேட்டான். அந்தப் பெண்ணை அடைந்து காரணம் வினவியபோது, அந்தப் பெண், தான் நாகலோகத்தை  சேர்ந்தவள் என்றும், தம் உலகத்தைச் சேர்ந்தவர், தினம் ஒரு நாகத்தை பக்ஷி ராஜனான கருடனுக்கு உணவாக அளிக்க வேண்டுமென்றும், அதன்படி, இன்று தன் ஒரே மகன் கருடனுக்கு உணவாகப் போகிறான் என்றும் கூறி அழுதாள். இதைக் கேட்ட ஜீமூதவாஹனன், அவள் மகனை தான் காப்பதாகக் கூறி, தன் கால்களில் சிவப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, வழக்கமாக கருடனுக்கு உணவாக வைக்கப்படும் பாம்புகள் படுக்கும் பாறையில் படுத்தான்.

கருடன் குறித்த நேரத்தில் பறந்து வந்து இரையை எடுக்கும் போது, படுத்திருப்பது மனிதன் என்று அறிந்து, துணுக்குற்று, காரணம் வினவிய போது, ஜீமூதவாஹனன் நடந்தவற்றைக் கூறினான். அவனது இரக்க குணத்தைப் போற்றி, அவனை விடுவித்ததோடு, தான் இனி தினம் ஒரு நாகத்தை உணவாகக் கொள்ளும் வழக்கத்தையும் விட்டு விடுவதாக வாக்களித்தான் பக்ஷிராஜன்.  ஜீமூதவாஹனன் இவ்வாறு தியாகம் செய்ய முன்வந்த தினத்தில், இறைவனை வேண்டி விரதமிருந்தால், குழந்தைகள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்றும் வரமளித்தான். இந்தக் காரணத்தால் தாய்மார்கள் இந்த விரதம் அனுஷ்டித்து, பலன் பெறுகின்றார்கள்.

சில பகுதிகளில் இந்த விரதத்தை, அஷ்டமி திதி துவங்கும் நேரம் துவங்கி அனுஷ்டித்து, நவமி திதி துவங்கும் நேரத்தில் பாரணை செய்து நிறைவு செய்கிறார்கள்.

மகிமை வாய்ந்த இந்த தினத்தில் நாமும் இறைவழிபாடுகள் செய்து,

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

  1. இனிய வணக்கம் சகோதரி....
    ஜீவித்புத்ரிகா விரதம் பற்றிய விளக்கமும்
    அதன் மூலக் கதையும் நெஞ்சில் நிறைந்தது.
    அறியாத விரதம் பற்றி அறிந்துகொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரரே!.

      நீக்கு
  2. சிறப்பான விரதம் பற்றி அருமையான விளக்கங்கள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி அம்மா!.

      நீக்கு
  3. நல்ல விரதங்களைத் தேடி, கதையையும் சொல்லி,அனுஷ்டிப்பது குறித்து தகவல்களும் சிறப்பாக இருக்கிறது.
    நல்ல விஷயம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  4. உனக்கு ஒரு பரிசைப் பகிர்ந்துள்ளேன். ஏற்றுக்கொள். சொல்லுகிறேன் தளத்தைப் பார்க்கவும்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  5. நவராத்திரி பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..