நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

PART 2.NAVARATHRI GOLU (16/10/2012 TO 24/10/2012).....கொலு வைக்கும் முறை

தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி-அன்னை
அவளே துணையென் றனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்.
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
(மஹாகவி பாரதியார், மஹாசக்தி வெண்பா)

சென்ற பதிவின் தொடர்ச்சி......

அன்னையின் அருளாற்றல் அபரிமிதமாகப் பரவியிருக்கும் தினங்களே நவராத்திரி. எப்படி, கதவுகள், ஜன்னல்களைத் திறந்து வைத்தால், சூரிய ஒளி வீட்டை நிறைக்குமோ, அது போல், உள்ளக் கதவுகளைத் திறந்து வைத்து, முறையாக வழிபாடுகள் செய்தால், அன்னையின் பேரருளாற்றல் நம் மீது நிறைவதை உணரலாம்.
முதல் முறையாக கொலுவைப்பவர்கள் கவனத்திற்கு:
நவராத்திரி தினங்களில், கொலு வைத்து வழிபடுவது நம் மரபு. ஓரறிவு உயிரினத்திலிருந்து, எல்லையில்லாப் பேராற்றல் உடைய தெய்வ உருவங்கள் வரை கொலுவிலிருத்தி பூஜிக்கிறோம். சில இல்லங்களில் கொலுவைத்து வழிபடும் வழக்கம் இல்லாதிருக்கலாம். 

முதன் முதலாக, கொலுவைத்து வழிபட நினைப்பவர்கள், இல்லத்துப் பெரியோர்களின் ஒப்புதலைப் பெறுவது முக்கியம். பிறகு, ஒரு செட் மரப்பாச்சி பொம்மை, விநாயகர், முப்பெருந்தேவியர் பொம்மைகள் முதலியவை வாங்கி, அவற்றை ஏதேனும் ஒரு கோவிலில், ஸ்வாமி பாதத்தில் வைத்துத் தரச் சொல்லி,   பின், எடுத்து வந்து வீட்டில் கொலுவாக வைக்கலாம். குறைந்தது மூன்று படிகள் வைப்பது வழக்கம்.  ஒன்பது படிகள் வைப்பது சிறப்பு.


இக்காலத்தில் இடவசதி என்பது குறைவு. ஆகவே, இருக்கும் இடத்தில், கொலுவைத்து வழிபடுவதே சிறப்பு. இடவசதி குறித்து கவலைப்படாமல், அன்னையை வழிபட வேண்டும் என்று நினைத்து பக்தியுடன் பூஜித்தலே சிறந்தது. 

முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்.  சுத்தமே தனி அழகு தான். ஹாலில், பத்திரிகைகள் இறையாமல், சாமன்களை அழகாக அடுக்கி வைத்தாலே பாதி அழகு வந்துவிடும். சுவர்கள், சுத்தமாக இல்லையென்றால், ஒரு பழைய பட்டுப் புடவையையோ, அல்லது அழகான போஸ்டரையோ பின்னணியில் வைத்து, படிகளை வைக்கலாம். பொம்மைகள் அதிகமில்லையென்றால் கூட, இருக்கும் பொம்மைகளை, அழகாக அடுக்கி, சீரியல் பல்புகள், தோரணங்கள் மூலம் அலங்கரித்தால் ஒரு 'கிராண்ட் லுக்' கிடைத்துவிடும். அழகான கோலங்கள், கொலுவை அற்புதமாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் அன்பான வரவேற்பும், இன்முகத்தோடு கூடிய உபசரிப்பும் தரும் அழகுக்கு ஈடு இணையே இல்லை. 
கொலு கிழக்கு, மேற்காக அமைந்திருப்பின் சிறப்பு. வடக்குப் பார்த்தும் வைக்கலாம். ஹாலில் படிக்கட்டி வைக்க சௌகர்யப்படாவிட்டால், ஒரு அலமாரியைச் சுத்தப்படுத்தி, பொம்மைகளை வைக்கலாம். கொலுவின் முன் கோலமிடும் அளவுக்கு இடவசதி அவசியம்.

மஹாளய அமாவாசையன்றே, கொலு வைப்பது வழக்கம்.

கொலு வைக்கும் முன், படிகளில்  ஒரு சின்னக் கோலம் போட்டு பின், அதன் மேல் விரிப்புகளை விரித்து  கொலு வைக்க வேண்டும்.  இருபக்கமும் பார்டர்கள் இருக்கும் புடவைகளை  விரித்தால், பார்டர் கரை கட்டினாற் போல் வந்து பார்வைக்கு அழகாக இருக்கும்.
கலச அலங்காரம்
முதலில், மரப்பாச்சி பொம்மைகளைத் தான் வைக்க வேண்டும். கலசம் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள், முதலில், கலசத்தைத் தயார் செய்து, பூஜை அறையில் வைத்து, பின் கொலுப்படியில், தனியாக இடம் செய்து வைக்கலாம். தினம் பூ மாலை சாற்ற வேண்டும், பூஜிக்க வேண்டும் என்பதால், கொலுவின் கீழ் படியில்,  தனியாக பீடம் மாதிரி அமைத்து அதன் மீது கலசத்தை வைத்து, இரு புறமும் விளக்கேற்றி வைப்பது சிறப்பு. நீர்க் கலசம் என்றால் மிக ஆசாரமுடன் பூஜிக்க வேண்டியது அவசியம். அரிசி கலசம் வைப்பது இன்றைய சூழலில் சிறந்தது.கலசத்திற்கு அம்மன் முகம் மாட்டி, பாவாடை கட்டி அலங்கரிப்பது அழகாக இருக்கும். பூஜை செய்யும் போது மிக சாந்நித்யம் நிலவுவதை உணர முடியும்.

சில வீடுகளில், முதல் நாள், மரப்பாச்சி பொம்மைகளுக்கு எண்ணெய் நீராட்டி, அதன் பின் அலங்காரம் செய்து, மஞ்சள் நூலால் காப்புக் கட்டுவார்கள். தசமியன்று, மாவிளக்கு ஏற்றி, ஆரத்தி எடுத்துவிட்டு, அதன் பின், காப்பைக் கழட்டி விட்டு, பொம்மைகளைப் படுக்க வைப்பார்கள். 

பொம்மைகளை வைக்கும் போது, மங்கலமாகப் பாடல்களைப் பாடியவாறு அல்லது ஸ்லோகங்கள் சொல்லியவாறு வைக்கலாம். மிகப் பிரபலமான, 'கௌரி கல்யாணம்' பாடி வைக்கலாம்.
படிகளில் பொம்மைகளை வைக்கும் முறை: (கீழிருந்து மேலாக)
1.முதல் படியில், ஓரறிவு உயிரினங்களான, புல், தாவரங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும். இக்காலத்தில் பார்க் வைக்கிறோம். முந்நாளில், பாலிகைக் கிண்ணங்களில், முளைப்பாரிகள் போட்டு வைப்பார்கள். கொலு மங்கலமாக நிறைவேற, அம்பிகையின் அருளை வேண்டி இவ்வாறு செய்வது வழக்கம். விஜயதசமியன்று மாலை, குளக்கரைகளில் பாலிகைகளைக் கரைப்பார்கள்.

2. இரண்டாவது படியில், ஈரறிவு உயிரினங்களான, சங்கு, நத்தை பொம்மைகள் வைக்க வேண்டும். பல்லாங்குழியில் சோழிகளை நிரப்பி வைக்கலாம். பொதுவாக, கட்டாயம் வைக்க வேண்டிய பொம்மைகளில் பல்லாங்குழியும் ஒன்று.

3.மூன்றாம் படியில், மூன்றறிவு உயிரினங்களான, எறும்பு போன்ற பொம்மைகள்.

4. நான்காம் படியில், நான்கறிவு படைத்த வண்டு போன்ற பொம்மைகள்.

5. ஐந்தாம் படியில், ஐந்தறிவு படைத்த பறவைகள், விலங்குகள் போன்ற பொம்மைகள்,

6. ஆறாம் படியில், ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்(கல்யாண செட் போன்றவை).

7. ஏழாம் படியில்,மனிதனாகப் பிறந்து தெய்வீக நிலையை அடைந்த ரிஷிகள், மகான்கள் முதலியோரது பொம்மைகள்.

8.எட்டாம் படியில், நவக்கிரகங்கள், அஷ்டதிக்பாலகர்கள், இந்திராதி தேவர்கள் முதலியோரது பொம்மைகள்.

9. ஒன்பதாம் படியில் நடுநாயகமாக, ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியை வைத்து, சுற்றிலும், மும்மூர்த்திகள் அவரவர் தேவியருடன் இருப்பதாக வைப்பது சிறப்பு.

ஒரு ஆத்மாவின் பல்வேறு பிறப்புகளின் ரகசியத்தையும், அது படிப்படியே உயர்ந்து இறைநிலையை அடைய வேண்டும் என்பதையும் இந்தப்படிகள் மறைமுகமாக நமக்கு உணர்த்துகின்றன. முறையாக கொலுவைக்க வேண்டிய வரிசையே இது.  அவரவர் சௌகர்யப்படி செய்து கொள்ளலாம்.
கட்டாயம் வைக்க வேண்டிய பொம்மைகள்:
  • மரப்பாச்சி பொம்மைகள், 
  • பல்லாங்குழி, சோழிகளுடன்.
  • கோலாட்டம், 
  • நலுங்குத் தேங்காய் (பித்தளையில் அல்லது பாசிமணி தைத்துக் கிடைக்கும்), 
  • வெற்றிலைப்பெட்டி (வெற்றிலை பாக்கை தினமும் மாற்ற வேண்டும்.தினம் இரண்டு வெற்றிலைகள், பாக்கை வைத்து, மாலையில் தாம்பூலமாகத் தந்து விடலாம். அல்லது தாம்பூலம் போடும் வழக்கமிருந்தால் உபயோகிக்கலாம்.).
  •  (குழந்தைகள் விளையாடும்)மரச்செப்புகள் அல்லது இக்காலத்திற்கேற்ற பிளாஸ்டிக் செப்புகள், 
  • மளிகைக்கடை செட்டியார் பொம்மைகள், அவற்றின் முன், அரிசி பருப்பு போன்றவை. சின்ன துணிப்பைகளைச் சாக்கு மாதிரி தைத்து வைத்துக் கொண்டு, அதில் அரிசி,து.பருப்பு, உப்பு,மிளகு, உ.பருப்பு அல்லது தனியா வைக்கலாம். உப்பும் மிளகும் திருஷ்டிக்காக வைக்கிறோம்.
  • அம்மானை. 'இது என்ன?' என்று கேட்பவர்களுக்காக..... அம்மானை என்பது உருண்டையாக, சின்னதாக இருக்கும். சிறு வயதுப் பெண்கள், அக்காலத்தில் விளையாட உதவும் பொருள் இது. கிராமப்புறங்களில் ஆடும் அஞ்சாங்கல் விளையாட்டைப் போல் விளையாடுவார்கள். அம்பிகை, நம் இல்லத்தில் கொலுவிருக்கும் போது,  பல்லாங்குழி, அம்மானை போன்ற‌ பொருள்களை வைத்து விளையாடுவதாகவும், தினம் தாம்பூலம் தரிப்பதாகவும் ஐதீகம். ஆகவே, இவற்றை வைக்கிறோம். அகில உலகமும் அம்பிகையின் திருவிளையாடல் என்பதை சூட்சுமமாக உணர்த்தும் பொருட்டும் இவற்றை வைக்கிறோம். 

தசாவதார பொம்மைகளை வைக்க வேண்டிய வரிசை:
மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம,ஸ்ரீராம, பலராம, ஸ்ரீகிருஷ்ண, கல்கி அவதாரங்கள் என்ற வரிசையில் தசாவதார பொம்மைகளை வைக்க வேண்டும்.

அஷ்டலக்ஷ்மி பொம்மைகளை வைக்க வேண்டிய வரிசை:
ஆதி லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, தனலக்ஷ்மி என்ற வரிசையில் வைக்க வேண்டும்.

ஒன்பது நாளும் கட்டாயம் செய்ய வேண்டியவை:
  • வாசலில், மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். இது வீட்டில் பண்டிகை நடை பெறுவதைக் குறிக்கும். 
  • தினமும் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும். செம்மண் சக்தியைக் குறிப்பதால் இவ்வாறு செய்ய வேண்டும். மணைக்கோலங்கள் அல்லது புள்ளி வைத்து அதைச் சுற்றிலும் கோடுகளால் இணைக்கப்படும் கோலங்கள் போடுவது சிறப்பு. புள்ளிக் கோலங்கள் சிவ சக்தி ஸ்வரூபம் ஆகவே இவ்வாறு செய்ய வேண்டும்.
  • தலைவாசற்படியில் மஞ்சள் குங்குமம் வைத்துப் பூ வைக்க வேண்டும்.
  • தினம் காலை, மாலை இரு வேளையும் குறித்த வேளைகளில் விளக்கேற்றி, நிவேதனங்கள் செய்ய வேண்டும். தினமும் ஒரு பாயசம், கலந்த சாதம், சுண்டல் இவை செய்ய வேண்டும். இயலாதவர்கள், காலையில் மஹா நைவேத்யம்(பச்சரிசி சாதம், பருப்பு நெய்), மாலையில் ஏதாவது சுண்டல் நிவேதனம் செய்யலாம். தினமும் ஒரு இனிப்பு நிவேதனம் அவசியம். நேரமில்லாதவர்கள், காய்ச்சிய பாலில், தேன், திராட்சை(உலர்ந்தது அல்லது பச்சைத் திராட்சைப் பழங்கள்) சேர்த்து நிவேதனம் செய்யலாம். அம்பிகைக்கு மிக உகந்த நிவேதனமாகும் இது.
  • தினமும் பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். 
  • ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய குறிப்பிட்ட கோலங்கள் போட்டு வைக்கலாம். நவக்கிரகக் கோலங்களை தினம் ஒன்றாகப் போடலாம்.
  • ஒவ்வொரு நாளும் மாலையில் ஆரத்தி எடுக்க வேண்டும். நீரில் மஞ்சள், குங்குமம் சேர்த்து நடுவில் தீபங்கள் ஏற்றி ஆரத்தி எடுக்கலாம். மஞ்சள் நீர் கரைத்த தட்டில், ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு நிற  மலர்கள் வைத்து அதன் நடுவில் தீபங்கள் ஏற்றி ஆரத்தி எடுப்பது சிறப்பு. ஆரத்தி நீரை வாசலில் ஊற்றக் கூடாது. ஏதாவது செடியில் ஊற்றலாம்.
  • தினமும் கொலுவின் முன் ஒரு சின்னக் கோலமாவது போட வேண்டும். கலசத்திற்கும், மரப்பாச்சி பொம்மைகளுக்கும் மட்டுமாவது பூ சாற்ற வேண்டும். 
  • தினமும் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி, தெரிந்த ஸ்லோகங்கள் சொல்லி, நிவேதனம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். இரு வேளையும் ஊதுபத்தி ஏற்றுதல் அவசியம்.  பூஜையின் முடிவிலோ, அல்லது பூஜை செய்ய நேரம் குறைவாக இருப்பவர்கள், நவமங்களி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து நமஸ்கரிக்க முப்பெருந்தேவியரின் அருள் நிச்சயம் கிடைக்கும். நவமங்களி ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.
  • வீட்டிற்கு யார் வந்தாலும் ஏதாவது உண்ணக் கொடுக்க வேண்டும். பழமாவது கொடுத்தல் அவசியம்.
  • தினமும் ஒருவருக்காவது தாம்பூலம் தர வேண்டும்.
  • தினம் முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு நாளில், ஒரு தம்பதி/சுமங்கலிக்காவது உணவளிக்க வேண்டும்.
  • அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு, தகுந்த முறையில் பரிசுப்பொருட்கள் வாங்கி அளிக்கலாம். பெண்குழந்தைகள் ஒருவருக்கேனும், உடை,மருதாணி, வளையல் வாங்கி அளிக்கலாம்.
  • தாம்பூலத்தில் மருதாணி வைத்துக் கொடுப்பது, ஆரோக்கியம் நிறைந்த வாழ்வை அளிக்கும். தங்கம் தந்த பலன் என்றும் சொல்கிறார்கள்.
  • எல்லோரும் அம்பிகையின் சொரூபம். எனவே ஏற்றத்தாழ்வு பாராது, அனைவருக்கும் தாம்பூலம் தர வேண்டும். யார் அழைத்தாலும் தாம்பூலம் வாங்கச் செல்ல வேண்டும். தாம்பூலம் தருவதும் பெறுவதும் இறையருளாலேயே நடக்கும். இதை மனதில் கொள்வது அவசியம்.
  • ஒன்பது நாளும், அம்பிகை வீட்டில் இருப்பதை மனதில் கொண்டு, ம்னதை அமைதியாக வைக்க முயற்சி செய்து, பூஜிப்பது நல்லது. நேரமிருப்பவர்கள், தினமும், கலசம், அல்லது ஐந்து முகக் குத்துவிளக்குக்கு பூஜை செய்யலாம். இயலாதவர்கள், வெள்ளியன்று மட்டுமாவது, ஐந்து முகக் குத்துவிளக்கை ஏற்றி அஷ்டோத்திரம்/சஹஸ்ரநாமம் சொல்லி பூஜை செய்யலாம்.
  • வெள்ளியன்று, புட்டு/உக்காரை நிவேதனம் செய்வது வழக்கம்.
  • சனிக்கிழமை, எள் சேர்த்த அன்னம்(எள்ளோதரை அல்லது எள்ளுருண்டை நிவேதனம் செய்ய வேண்டும்.
  • கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள், அழைக்க வருபவர்களுக்குத் தாம்பூலம் தருவது மிக நல்லது. தினசரி விளக்குப் பூஜையும் செய்யலாம். தினம் பூஜை முடிந்த பிறகு 'ஓம்கார பூர்விகே தேவி' என்று துவங்கும் தீர்க்க சௌமாங்கல்யத்தை அளிக்கும் ஸ்லோகத்தைச் சொல்லிப் பிரார்த்திப்பது சகல நலன்களையும் தரும். ஸ்லோகத்துக்கு இங்கு சொடுக்கவும்.
முப்பெருந்தேவியர் ரங்கோலி என் கைவண்ணத்தில்
ஒன்பது நாளும் தவிர்க்கப்பட வேண்டியவை:
  • வீட்டில், குழம்புப் பொடி, மிளகாய்ப்பொடி போன்றவற்றை அரைக்கக் கூடாது. அம்பிகை ஊசி முனையில் தவமிருப்பதாக ஐதீகம். ஆகவே,ஊசியால் தைக்கக் கூடாது.
  • உரத்துப் பேசி, கத்தி சண்டையிடக் கூடாது.
  • 'இல்லை', 'காலியாகி விட்டது' போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. எப்போதும் இவ்வாறு செய்தல் மிக்க நலம்.
  • பூஜைக்கு எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகிக்காமல் இருப்பது சிறப்பு. தாமிர, பித்தளை பாத்திரங்களை உபயோகிக்கலாம்.
  • பால், தயிர், உப்பு முதலிய பொருட்களை கடனாகக் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
  • வீட்டில் எப்போதும் யாராவது இருக்க வேண்டும். குறிப்பாக சாயங்கால வேளைகளில்.
  • டி.விக்கு, பொன்னாடை போர்த்தி, பூட்டி வைத்தால், மனநிம்மதி காரன்டியாகக் கிடைக்கும்.
  • நவராத்திரி தினங்களில் மட்டுமாவது, பெண்கள், சபதம் செய்த திரௌபதிக் கோலத்தைத் தவிர்த்து, தலைமுடிக்கு ஒரு ரப்பர் பேண்டாவது மாட்டலாம்.
  • தாம்பூலம் வாங்க வருபவர்கள், தேவையற்ற வம்புப் பேச்சுக்களைத் தவிர்த்து  கொலுவில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பாராட்டலாம்..
  • ஒப்பிடுதலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தாம்பூலம் தரும் போது, குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் போன்ற பிரிவினைகளைத் தவிர, மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 
  • கொடுக்கும் பரிசுப் பொருட்கள் உபயோகமாக இருப்பது நல்லது. தரமானவற்றைத் தவிர மற்றவற்றைத் தவிர்க்கவும். 
  • மஞ்சள் குங்குமம் டப்பாக்கள், 'ரொடேஷனில்' வருவதால், திறந்து பார்த்து விட்டுத் தரவும். பெரும்பாலான டப்பாக்களில் வண்டுகளும் குடியிருக்கின்றன. தரமான குங்குமம், பூசு மஞ்சள் பாக்கெட்டுகள், சிறிய அளவில் கிடைக்கின்றன. அவற்றைத் தருவது உத்தமம்.
  • கண்ணாடிகளும் ஒரு முறை சோதித்து விட்டுத் தருவது. நல்லது. ஓரத்தில் வெட்டுப்பட்டு, ரசம் போய் இருக்கும் கண்ணாடிகள் தவிர்க்கவும். திறந்து மூடும் டைப் கண்ணாடிகள், வேலைக்குப் போகிறவர்களுக்கு உபயோகமாக இருக்கும். 
  • நகர்ப்புறங்களில் மட்டைத் தேங்காய் உரிக்கும் உபகரணம் பெரும்பாலான வீடுகளில் கிடையாது. ஆகவே உரித்த தேங்காய் தருவது சிறந்தது.
  • முறையாக ஒன்பது நாட்களும் கொலுவைத்து வழிபடுதலே சிறந்தது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே, 'இரண்டு பொம்மைகளை எடுத்து ஸ்வாமி அலமாரியில் வைத்தால் போதும்', 'கடைசி மூன்று நாள் கூட கொலு வைக்கலாம்' போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும். வருடம் தோறும் அல்ல.
தினசரி வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் டென்ஷனை அகற்றவும், கோலம், கைவினைப் பொருட்கள் போன்றவற்றில் வல்லவர்கள், அவற்றைக் காட்சிப்படுத்தவும், உறவு, நட்பு வட்டங்களைப் புதுப்பிக்கவும், இந்தப் பண்டிகை பயன்படுவது கண்கூடு. இதை உணர்ந்து முறையாகச் செயல்படுவது நிறைந்த பலனை அளிக்கும்.

அடுத்த பதிவில், ஒன்பது நாளும் செய்ய வேண்டிய நிவேதனங்கள்,கோலங்கள் முதலியவற்றைப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

5 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..