நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

SONG # 3....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 3... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'..


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!
பாடல் # 3..
பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
    பொய்யென் றெனைக்காட்டிஎன்
  போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத
    போகபூ ரணவெளிக்குள்
ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
    எல்லாஞ்செய் வல்லசித்தாம்
  இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே
    எளியேன் மறந்துய்வனோ
வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண் உமையே.
பொருள்:

வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே....."நான்மறைகள் மற்றும், திருமுறைகளாகிய ஆகமங்களின் தன்மையை,  விளக்கும் உள்முகக் கண் அதாவது அறிவுக் கண் இல்லாதவர்க்கும், உன் புகழைக் கேட்கும் பேறில்லாத‌ செவிடர்க்கும்,  வீண் வாதம் செய்வதில் மிக்க விருப்புடைய‌வர்க்கும் கிட்டாத, மூன்று திருவிழிகளை உடைய, மாமருந்தாகிய அமிர்தத்துக்கும் அமிர்தம் போன்றவளே!.."

(வேதம் என்பது நான்மறைகளையும், ஆகமங்கள் என்பது திருமுறைகளையும் குறிக்கும்.. ' மூவர் தமிழும், முனிமொழியுங் கோவை திருவாசகமும், திருமூலர் சொல்லும் 'செந்தமிழ் ஆகமம் என்பது பெரியோர் கூற்று. இவற்றின் தன்மையை அறிதல் என்பது இவை கூறும் உட்பொருளை அறிதல்.. இவற்றின் உட்பொருளாவது அம்பிகையே!....அம்மையை இவற்றின் உட்பொருள் என்று கண்டு கொண்டு, அவளை அடைதலில் கருத்தை செலுத்துதலே நான்மறைகள் மற்றும் ஆகமங்கள் அறிதலின் நோக்கம்.

தக்கதொரு குருவின் துணை கொண்டு, அவர் வழிகாட்டுதலின்படி ஆன்மீக சாதனைகள் செய்து, மூன்றாவது கண் எனப்படும் ஞானக்கண் திறந்தால், அம்பிகையை உள்ளது உள்ளப்டி அறியும் பேறு கிட்டும்..ஞானத்தின் மூலமாகவே அம்பிகையை அறிதல் இயலும்...அத்தகைய ஞானக் கண் இல்லாதவர்க்கு அம்பிகையை காண்பது அரிது..

செவிகள் பெற்றதன் பேறாவது அம்மையின் புகழைக் கேட்டலே!.. அவ்விதம் அம்பிகையின் மகிமையைக் கேளாத செவிகள் கேட்கும் திறன் பெற்றனவாயினும் அத்திறன் இல்லாதவையாகவே மதிக்கப் பெறும்.. விருப்புடன், அம்மையின் புகழைக் கேட்கும் பக்தி மிக்கவர்களின் செவிகளே கேட்கும் திறன் பெற்றவை..

அம்மையின் புகழை ஓதுதலே பேசும் திறன் பெற்ற நாம் செய்ய வேண்டுவது. அதை விடுத்து, வீண் வாதங்கள் செய்து, நேரத்தை வீணடிப்பது தகாது.. எனவே அவ்விதம் செய்பவர்களை 'வாத நோயாளர்' என்றார் அடிகள். அம்மை, சூரிய, சந்திர, அக்னி ஆகிய முக்கண்களை உடையவள்.. மாமருந்தாகிய அமிர்தத்துக்கும் அமிர்தமாக, பிறவா நிலையருளி பேரின்பமளிப்பவளாக விளங்குபவள் அம்பிகை.. கண்ணிலும் கருத்திலும் அம்மையை நினையாதவர்களுக்கு அம்மையை அடையும் பேறு கிட்டாது.)

வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண் உமையே...."மலையரசனாகிய இமவானுக்கு, அவன் தன் கண்ணின் மணி போன்று, பேரன்பு கொண்ட‌ திருமகளாக உதித்த காதலிப் பெண் உமையே!.."

பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
    பொய்யென் றெனைக்காட்டிஎன்
  போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத
    போகபூ ரணவெளிக்குள்
ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
    எல்லாஞ்செய் வல்லசித்தாம்
  இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே
    எளியேன் மறந்துய்வனோ......(இவ்வரிகளில், சித்தர்களும் ஞானிகளும் அறியத் தகுந்த யோகமார்க்கம் புலப்படுத்தப்படுகின்றது.. இதை உண்மையென அறிந்தவர்களே இவ்வரிகளின் பொருளை அனுபவத்தால் உணர இயலும்...).

 "நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் முதலான ஐம்பூதங்களும், நாதத் தத்துவமும் பொய் அதாவது நிலையில்லாதன, தோற்ற ஒடுக்கங்களுக்கு உட்பட்டன என்றும் காட்டியருளி, என் சிற்றறிவாகிய ஆன்மபோதத்தின் உள்நின்று, முதலும் முடிவும் இல்லாத, பேரறிவு நிலையாகிய பூரணமாகிய திருவருள் நிலையில் என்னை செலுத்தி,  வேறு எந்நினைவாலும் விலகாதவாறு அந்நிலையிலேயே இருப்பதற்கு உபாயமாக (உபாயம்..உத்தி)   உன்னை, உன் திருவருளால் நீயே வைத்து (அதாவது, அம்மையையே உபாயமாகக் கொள்ளுமாறு அம்மையின் திருவருளால் அறிவுறுத்தபட்டு)எல்லாம் செய்ய வல்ல சித்தர்களது பேரின்பத் திருவுருவினை நான் பெறுமாறு செய்த அம்பிகையே!.. உன்னை எளியவனாகிய நான் மறந்து உய்யமாட்டேன்!!!!.....".

ஆன்ம போத நிலையை சிற்றறிவு என்றார். பேரறிவாவது அம்பிகையின் திருவருள் நிலையே..அம்மையின் கருணையாலேயே மாயத்திரை விலகி, பேரருள் நிலையினுட் புகும் மார்க்கம் கிட்டும்.. 

அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே ..(திருமூலர், திருமந்திரம்)
(சிற்றறிவாகிய ஆன்மபோத நிலை, பேரறிவாகிய திருவருள் நிலையை எட்டும் போது அழிதல் போல)

 அந்த மார்க்கத்தின் வாயிலாக, பேரருள் நிலையில் புகுவதற்கு, குருவின் வழிகாட்டுதல் மிக அவசியம்  எனினும், இங்கு குரு உருவில் வந்தருள்வது அம்பிகையே.. இருவரும் வேறு வேறு அல்ல...போக பூரண வெளி என்பது அழியாத, குறைவற்ற‌ போகமாகிய பேரின்ப நிலையைக் குறிப்பது.. அந்த நிலையை அடைந்த பின்னும், அங்கிருந்து விலகாமல் அந்நிலையிலேயே நிலைபெறுவதற்கு உபாயமாக இருப்பவள் அன்னையே!.. 

அதாவது, அன்னையின் திருவடியிலேயே நிலைபெற்று இருத்தலே பேரின்பம்.. அன்னையின் நினைவோடு ஒன்றுதலே பேரின்ப நிலையிலிருந்து விலகாது இருப்பதற்கான மார்க்கம்..

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் 
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக் 
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், 
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.(அபிராமி அந்தாதி).

பேரின்ப நிலையை அடைந்தவர், அம்பிகையின் நினைவினின்றும் விலகாது இருப்பர் என்பதும்  பொருள்..இவ்விதம் பேரின்ப நிலையில் நிலைபெறுதற்கு கையாள வேண்டிய உபாயமாக அன்னையே நின்றருள் செய்கிறாள்.

இந்தப் பேரின்ப நிலையை அடைந்தவர்களுக்கு எல்லாம் வல்ல சித்தர்களின் திருவுருவைத் தருவதும் அம்மையே.. அதாவது பேரின்ப நிலையை அடைந்தவர்கள் சித்தர்களாகிறார்கள். பேரின்ப நிலையை அடைந்தவர்களின் திருவுருவாதலின் 'இன்புரு' என்றார். சித்தர்களால் முடியாதது எதுவும் இல்லை என்னும் உண்மையும் ' எல்லாஞ்செய் வல்லசித்தாம்' என்னும் வரியிலிருந்து அறியலாம். இப்படி, பெறற்கரிய பேறு தந்த அம்மையை மறந்து உய்வது எப்படி?..அது இயலாது.. ஆகவே 'எளியேன் மறந்துய்வனோ......' என்றார் அடிகள்..அடிகளின் மிக உயர்ந்த ஆன்மீக நிலையையும் இப்பாடலிலிருந்து நாம் அறியலாம்..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..