நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 10 அக்டோபர், 2013

VIJAYA DASAMI POOJA(14/10/2013).. SHAMI POOJA.. செல்வ வளம் பெருக்கும் விஜயதசமி பூஜை.( ஷமி பூஜை).


அன்பர்களுக்கு பணிவான‌ வணக்கம்.

எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றி அருளும் விஜய தசமி நன்னாளில், பொதுவாக, சரஸ்வதிக்கு புனர் பூஜை செய்வது வழக்கம். பிறகு பூஜையில் வைத்த புத்தகங்களை எடுத்து, படிப்பார்கள். புதிய முயற்சிகளில் அன்றைய தினம் ஈடுபட்டால், கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக, தென்மாநிலங்களில் அன்றைய தினம் விஸ்தாரமான பூஜை செய்வது வழக்கத்தில் இல்லை. ஆனால் வடஇந்தியர்கள், அன்றைய தினம் செல்வ வளம் தரும் மிக விசேஷமான பூஜையைச் செய்கிறார்கள். 'ஷமி பூஜா' என்றழைக்கப்படும் அந்தப் பூஜை முறையை சற்று விரிவாக, இந்தப் பதிவில் காணலாம். ஷமி என்பது தமிழில் வன்னி மரத்தைக் குறிக்கும். வன்னி மரத்தைப் பூஜிப்பதே ஷமி பூஜை. சில பகுதிகளில், வன்னியோடு சேர்த்து, ஆத்தி(ஆப்டா) மரத்தையும் பூஜிக்கின்றார்கள். விஜயதசமியன்று, இந்த மரத்தின் இலைகள் பொன்னுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன.

வன்னி மரத்தின் மருத்துவ குணங்கள்:

பாலைவனங்களிலும் வளரக் கூடிய மரம் இது. அனைத்து விதமான தட்ப வெப்ப சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து வளரும் மரம் வன்னி. பூ, இலை, காய், பட்டை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. பூக்களைக் காய வைத்து, பொடி செய்து உட்கொண்டால், பித்தம் கட்டுப்படும். சொறி, சிரங்கு முதலியவை குணமாகும். கருவுற்ற பெண்கள் உட்கொள்ள, கரு தங்கும்.

இலையை அரைத்துப் பற்றுப் போட, காயங்கள் விரைவில் ஆறும். வன்னி இலையையோ காயையோ நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்த  பல்வலி குறையும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். பட்டையை அரைத்துப் பூசினால், விஷஜந்துக்கள் தீண்டிய பின் ஏற்படும் வலி குறையும். தொழுநோயை நீக்கும் மருந்துகளில் இது உபயோகிக்கப்படுகின்றது. வன்னி மரப் பிசினை தண்ணீரில் இட்டு அருந்த சுகப்பிரசவம் ஏற்படும். மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படுவதால் இது 'கற்பக மரம்' என்றும், 'பாலை வனங்களின் தங்க மரம்' என்றும் அழைக்கப்படுகின்றது. எல்லா மரத்தையும் கரையான் அரிக்கும். ஆனால் இந்த மரத்தை கரையான் அரிக்க இயலாது. வன்னி மரக் காற்றை சுவாசித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்கும். யுனானி மருத்துவத்திலும், வன்னி மரம் பெருமளவில் பயன்படுகிறது.

வன்னி மரத்தின் ஆன்மீக சக்தி:

வன்னி மரம் சனிபகவானின் நல்ல கதிர்வீச்சுக்களை  உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உடையது. ஆகவே, மூட்டு வலி, வாதம் முதலிய நோய்களை நீக்கும் அற்புதத் தன்மை வன்னி மரத்திற்கு இருப்பதாக நம்பப்படுகின்றது. வன்னி மரத்தை அணைத்தவாறு தினம் அரை மணி நேரம் இருந்தால் இந்த நோய்கள் குறையும்.

பல சிவாலயங்களில் வன்னி மரம் தலவிருட்சமாக இருக்கிறது. விநாயக சதுர்த்தி பூஜைக்கு வன்னி இலைகள் பயன்படுத்துவது சிறந்தது என விநாயக புராணம் கூறுகிறது. வேலன் வள்ளியை மணப்பதற்காக, வன்னி மர வடிவிலேயே தோன்றினான்.

விருத்தாசல தல புராணம், வன்னி மரத்தின் சிறப்புக்களை புகழ்ந்துரைக்கிறது. அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மிகப் பழமையான வன்னி மரம் உள்ளது. இங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு கோயில் கட்ட உத்தேசித்து, வேலையாட்களை திருப்பணியில் ஈடுபடுத்தினார். வேலையாட்களுக்கு கூலியாக, வன்னி மரத்தின் இலைகளை உருவி கொடுப்பார். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அதற்குத் தகுந்த பொன்னாக அந்த இலைகள் மாறும். இது கல்வெட்டுச் சான்றுகளிலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய பெருமை வாய்ந்த வன்னி மரத்தை, விஜய தசமி நன்னாளில் பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஷமி பூஜையின் புராண காரணங்கள்:

ஸ்ரீராமர், ராவணனை எதிர்த்துப் போருக்குக் கிளம்புவதற்கு முன், ஒரு வன்னி மரத்தை மும்முறை சுற்றி வணங்கிப் பின் கிளம்பியதாக ஐதீகம். மேலும் அவர், ஒரு வன்னி மரத்திலேயே தன் ஆயுதங்களை வைத்து, போருக்கு உபயோகித்தாராம்.

பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின் போது, அர்ஜூனன்  பாண்டவர்களின் ஆயுதங்களை, வன்னி மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருந்தான். 'பிருஹன்னளை' என்ற பெயரில் இருந்த அவனும் பாண்டவர்களும், விராட தேசத்தில் மறைந்து வாழ்ந்தனர். துரியோதனன், இதை அறிந்து, விராட நகரைத் தாக்கிய போது,  அர்ஜூனன், வன்னி மரத்தை வணங்கி, அங்கிருந்த ஆயுதங்களை எடுத்து, கௌரவ சேனையை  வென்றான்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வன்னி மரத்தை விஜயதசமி நன்னாளில் வணங்குவது  குறித்த ஒரு புராணம் இதோ..

முன்னொரு காலத்தில் கௌத்ச்யன் என்பவன், வரதந்து முனிவரிடம் குருகுல வாசம் செய்து, நன்முறையில் கல்வி கற்றுத் தேர்ந்தான். குரு தக்ஷணை தர வேண்டிய வேளை வந்தது. ஆனால் குருவோ பிரதிபலன் எதிர்பாராதவர்.  அவர் கௌத்ச்யனிடம், 'என் ப்ரியமான சிஷ்யனே,  கற்ற வழியில் நிற்பதே நான் எதிர்பார்க்கும் குரு தக்ஷிணை. வேறு ஏதும் இல்லை' என்று கூறினார். ஆனால் கௌத்ச்யனோ, அவரை விடாது வற்புறுத்தினான்.

வரதந்து முனிவர், கௌத்ச்யனால் ஆகாத ஒன்றைக் கேட்டால் தான் அவன் விடுவான் என்று எண்ணி, 'கௌத்ச்யா, நீ கட்டாயம் எனக்கு குருதக்ஷிணை தந்து தான் ஆக வேண்டுமானால், நீ கற்ற பதினான்கு சாஸ்திரங்களுக்கு இணையாக, பதினான்கு கோடி பொற்காசுகளைக் கொடு' என்று கூறினார்.

கௌத்ச்யன், ஏழை அந்தணன். அவனால் இது எப்படி முடியும்?. சற்று சிந்தித்தவன், பிறகு, அயோத்தியை அப்போது ஆண்டு வந்தவரான ரகு மஹாராஜாவிடன் சென்று கேட்க முடிவு செய்தான்.

ஆனால், கௌத்ச்யனுக்கு சோதனை அங்கும் நேர்ந்தது. ரகு மஹாராஜா, அப்போதுதான் ஒரு பெரும் யாகத்தை நடத்தி முடித்து அனைவருக்கும் தான தருமங்கள் செய்திருந்தார். ஆகவே அவர் கௌத்ச்யன் கேட்ட அளவு செல்வம் தர இயலவில்லை. ஆனால், அவர் கௌத்ச்யனுக்கு மறுப்புத் தெரிவிக்காமல், 'நீ சென்று, இன்னும் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வருவாயானால், நீ கேட்ட செல்வம் தருகிறேன்' என்று கூறி வழி அனுப்பினார். பின்னர், தேவலோகம் சென்று, இந்திரனிடம், தனக்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகோள் விடுத்தார்.   ரகு மஹாராஜாவின்  செய்கையால்  மகிழ்ந்த இந்திரன், குபேரனை அழைத்து, அயோத்தி நகரைச் சுற்றியுள்ள வன்னி, ஆத்தி மரங்களிலிருந்து பொன்மழை பொழிய வைக்க உத்தரவிட, குபேரனும் அதன்படியே செய்தார். பின், சகல மரியாதைகளுடனும், ரகு மஹாராஜாவை வழி அனுப்பி வைத்தார் இந்திரன்.

அயோத்தி வந்த ரகு மஹாராஜா, கௌத்ச்யனை அழைத்து, பொற்காசுகள் அனைத்தையும் கொடுத்தான். குருவுக்கு தக்ஷிணை கொடுத்தது போக, மீதிப் பொற்காசுகளை, கௌத்ச்யன், அரசனுக்கே திருப்பித் தர முடிவு செய்தான். ஆனால் ரகு மஹாராஜாவோ, 'கௌத்ச்யனே, நான் தானம் தந்த பொருளை திரும்பப் பெறுவது சரியல்ல' என்று கூறிவிட்டார். உடனே, கௌத்ச்யன், அனைத்துப் பொற்காசுகளையும், அயோத்தி நகர மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.

இவ்வாறு, ரகு மஹாராஜாவின் தயாள குணத்தாலும், கௌத்ச்யனின் நேர்மையாலும், அயோத்தி நகர மக்கள் அனைவர் இல்லத்திலும் தங்க மழை பொழிந்தது.  இந்த சம்பவம் நடந்த தினம் ஒரு விஜய தசமி.

ஆகவே, விஜய தசமி தினத்தில், வன்னி, ஆத்தி மரத்தின் இலைகள் தங்கத்துக்கு சமமாகப் போற்றப்படுகின்றன.

பூஜை செய்யும் முறை:

முன்பு, வன்னி, ஆத்தி மரத்தின் கிளைகளை ஒடித்து வந்து வீட்டில் வைத்துப் பூஜிக்கும் வழக்கம் இருந்ததாம். ஆனால் இது, கிட்டத்தட்ட, மரங்களை அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டதால், இப்போது குறைந்து விட்டது. உண்மையில், மரங்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று பூஜிப்பதே சிறப்பாகச் சொல்லப்படுகின்றது.

வன்னி மரத்தை ஆராதித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

வன்னி மரத்திற்கு சந்தனம்,மஞ்சள், குங்குமத்தால் அலங்காரம் செய்து, பூக்கள் சமர்ப்பித்து, கீழ்வரும் ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

ஷமி ஷம்யதே பாபம் ஷமி சத்ரு விநாசினி
அர்ஜூனஸ்ய தனுர்தாரி ராமஸ்ய பிரியதர்ஷினி
கரிஷ்யமான யாத்ராயா யதாகாலம் சுகம் மயா
தத்ர நிர்விக்ன க்ருத்ருத்வம் பவ ஸ்ரீராம பூஜிதா

(பாவத்தை நீக்கி அருளும் மரம் வன்னி. ஸ்ரீராமருக்கு மிகப் பிடித்தமான மரமான வன்னியிலேயே, பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். ஓ வன்னியே!, உன்னை ஸ்ரீராமர் பூஜித்திருக்கிறார். நான் வெற்றியை நோக்கி நம்பிக்கை வைத்துப் பயணத்தை தொடங்கி இருக்கிறேன். அந்தப் பயணத்தை, இடையூறுகள் அற்றதாகவும் நலமானதாகவும் ஆக்கி அருள்வாயாக.)

ஆத்தி மரத்தை துதிக்கும் ஸ்லோகம்:

அஷ்மாந்தக்  மஹாவிருக்ஷா மஹா தோஷ நிவாரண
இஷ்டான தர்ஷனம் தேஹி குரு சத்ரு விநாசனம்

(ஓ ஆத்தி(அஷ்மாந்தக்) மரமே, நீ எல்லாவித குறைபாடுகளையும் நீக்கி அருள்வாய். என்னை என் நலம் விரும்பும் நண்பர்களோடு எப்போதும் ஒன்றாக வைத்திருப்பதோடு, எனக்கு எதிரிகளும் இல்லாமல் செய்வாய்)

அதன் பின், அரிசி, வெற்றிலை, பாக்கு முதலியவற்றை மரத்தின் வேரில் சமர்ப்பித்து விட்டு, மரத்தை வலம் வர வேண்டும்.  அதன் பின், வேரடி மண்ணில் கொஞ்சமும், இலைகளில் கொஞ்சமும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, பூஜையறையில் வைக்கப்படுகிறது. இலைகளை, 'தங்கம்' என்று சொல்லி, உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். இளையோர்கள், மூத்தோர்களுக்கு தங்கம் பரிசளிப்பதும் உண்டு!.

மஹாராஷ்டிராவில், தசராவுக்கு குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்கு தங்கம் பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. முற்காலத்தில், போருக்குச் செல்லும் ஆண்கள், வெற்றியோடும், பெரும் பொருட்செல்வத்துடனும்  நகர் திரும்பும் பொழுது, நகர எல்லையில், அவர்களின் மனைவியரும் சகோதரியரும் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். அவர்களுக்கு வீரர்கள் தங்கம் பரிசளிப்பர். பின் விட்டுக்கு வந்து, தாங்கள் கொண்டு வந்த செல்வ மூட்டைகளை, குலதெய்வக் கோயிலில் வைத்து வழிபட்டு, மூத்தோர்களின் ஆசிகளைப் பெறுவர். இப்போது இந்த வழக்கமே, வன்னி, ஆத்தி  இலைகளை விநியோகிக்கும் வழக்கமாக மாறி விட்டது.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் விஜயதசமியன்று 'பாரிவேட்டை' திருவிழா நடப்பதையும்,,  ஸ்வாமி அல்லது அம்பாள்,  கோயிலிலிருந்து புறப்பாடு ஆகி, சிறிது தூரம் சென்று,  அம்பு போடும் வழக்கம் உள்ளதையும் இதோடு நாம் இணைத்துப் பார்க்கலாம்.

குஜராத்,மஹாராஷ்டிரா போன்ற சில வட இந்திய மாநிலங்களில், வன்னி பூஜையின் போது, அபராஜிதா அம்பிகையும் பூஜிக்கப்படுகின்றாள். வன்னி மரத்தின் கீழ் எட்டுத் தளங்களுள்ள தாமரை மலரை வரைந்து, அதன் நடுவில், அபராஜிதா தேவியின் திருவுருவச் சிலையை வைத்து, பூஜிக்கின்றனர்.

'ஹே அபராஜிதா, அழகிய, பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணியை அணிந்தவளே!, பூஜிப்பவர்களுக்கு அளவில்லாமல் அருள் செய்யும் தாயே!, எமக்கு வெற்றி அருள்வாய்!' என்று பிரார்த்திக்கின்றனர்.

வட இந்தியாவில் சில பகுதிகளில், 'ஸீமோல்லங்கன்(ஸீமா + உல்லங்கன்) என்னும் சடங்கு தசராவின் போது செய்யப்படுகிறது.   முற்காலத்தில், விஜயதசமியன்று ஆயுதங்களுக்குப் பூஜை செய்து, அதன் பின்,  நகர் எல்லையைத் தாண்டி, போருக்குச் செல்லும் வழக்கம் இருந்ததாம்.  நகர் எல்லையைக் கடந்து வெற்றி கண்ட வீரர்களின் செயலை நினைவுபடுத்தும்  வகையில், ஊர் எல்லையை கடக்கும் இந்த சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. அபராஜிதா தேவியின் பூஜை, இந்த சடங்கு நடக்கும் முன் நிகழ்த்தப்படுகின்றது.

இது போல், ஆயுத பூஜையின் முன்பும், இந்த பூஜை நடத்துவது சில பகுதிகளில் வழக்கத்தில் இருக்கிறது.

இந்த பூஜை செய்வதால், தான்ய விருத்தி ஏற்படும். செல்வம் பெருகும். குறிப்பாக, தங்கம் நிறையச் சேரும் என்பது நம்பிக்கை. ஆகவே, விஜய தசமி தினத்தன்று, இதை பெரும்பாலோர் நம்பிக்கையுடன் செய்கின்றனர்.

விஜயதசமியன்று, இந்தப் பூஜையைச் செய்வதால், பொருட்செல்வத்தோடு, அம்பிகையின் அருட்செல்வமும் வற்றாது பெருகும் என்பது நிச்சயம். வளமோடு வாழ்ந்து நலமோடு சிறக்க, வன்னியை, விஜயதசமி தினத்தன்று பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

14 கருத்துகள்:

  1. நல்ல தகவல் தொகுப்பு.ரசித்து வாசித்தேன்.

    பாரிவேட்டையா? பரிவேட்டையா? எது சரி? அன்று மூர்த்தங்கள் எல்லாம் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வதால் பரி வேட்டை என்பது தான் சரியோ?

    'பாரி' வேட்டைக்கு விளக்கம் தெரிந்தால் சொல்லுங்கள்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்து வாசித்து கருத்துரையிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா!. எனக்குத் தெரிந்த தகவல்கள்;

    முற்காலத்தில், விலங்குகளிடமிருந்து ஊர் மக்களையும், பயிர்களையும் காப்பதற்காக மேற்கொள்ளும் ஊர்க்காவலே பாரி வேட்டையாக மாறியது. அம்மாதிரி சந்தர்ப்பங்களில் வேட்டை இயல்பு என்பதால், பின்னாளில் இது சடங்காக மாறிப்போனபோதும் வேட்டையாடுவதை ஒரு சம்பிரதாயமாகக் கருதினர். அய்யனார், கருப்பணசாமி ஆகிய உக்ர தெய்வங்கள் பாரி வேட்டைக்குப் போனால் முயல் வேட்டை ஆடுவது உண்டு. இப்போது இது இல்லை என்று கூறுகிறார்கள். மற்ற தெய்வங்கள் வேட்டைக்குப் போகும் போது, கோயில் ஊழியர்கள், வேட்டை நடப்பது போல் நடித்துக் காட்டுகிறார்கள். அத்தோடு சரி!.

    நீங்கள் சொல்வது போல், பரியில் ஏறி வேட்டைக்குப் போனதே பாரிவேட்டை என்று மருவியிருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. இன்று விடுமுறை எடுத்துக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. பாரி (p. 687) [ pāri ] night-watch, பாரிக்காவல்.

    பாரிபோக, to patrol.
    பாரி சமுசாரம், a large family.
    பாரியோட, to run swiftly.
    பாரிவேட்டை, the chase, hunting.

    பாரி pāri : (page 2623)

    pāri-
    , 11 v. tr. < pāl. To guard, protect; காத்தல். இரவிகுலம் பாரிக்கத்தகு வன் (கலிங். 224).

    பாரி¹3; pāri
    , n. < பாரா². 1. Night-watch with the beat of drum; கொட்டு முழக்குடன் புரியும் இராக்காவல். விளம்பும் பாரியு மடங்கினது

    த‌மிழ் அக‌ராதி த‌ந்திருக்கும் இந்த‌த் த‌க‌வ‌ல்க‌ளைக் கொண்டு பார்க்கும்போது, ஊர் ம‌க்க‌ளைக் காப்ப‌த‌ற்கென‌ த‌லைவ‌ன் இர‌வுக் கால‌த்தில் ந‌ட‌த்தும் வேட்டையே பாரி வேட்டை, பாரிக் காவ‌ல் என‌ அறிய‌லாம். சிவ‌ புராண‌த்தில், வாத‌வூராரும் 'பாரிக்கும் ஆரிய‌னே' - காக்கின்ற‌ க‌ட‌வுளே என‌ப் போற்றியிருப்ப‌தும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌த் த‌க்க‌து. வ‌ண‌க்க‌ம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா!!. ஊர்மக்களையும் பயிர்களையும் இரவுக்காலத்தில் விலங்குகளிடமிருந்து காப்பற்றச் செய்வதே பாரி வேட்டை என்ற அளவிலேலே அறிந்திருந்தேன். மிகத் தெளிவான தகவல்கள் தெரிந்து கொண்டேன். மீண்டும் என் மனமார்ந்த நன்றி!.

      நீக்கு
  5. த‌ன‌து சொந்த‌ கேளிக்கைக்காக‌ அன்றி, ஊர் ம‌க்க‌ளைக் காப்ப‌த‌ற்கென‌ச் செய்ய‌ப்ப‌டும் வேட்டை என்ப‌தால், பாரி வேட்டை [காப்ப‌த‌ற்கென‌ச் செய்யும் வேட்டை] என்ப‌தே ச‌ரியான‌ சொல் ; ப‌ரி என்ப‌திலிருந்து ம‌ருவி வ‌ந்த‌த‌ல்ல‌ என்ப‌தே நான் சொல்ல‌ விழைந்த‌தும்!:)

    பதிலளிநீக்கு
  6. "இந்த முறை இது என்னுடைய ஸீமோல்லங்கன்" எனக்கூறி ஷீர்டி பாபா 1918-ல் ஸமாதியடைந்த நாளும் இந்த விஜயதஸமியே ! ஓம் ஸாயிராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீ சாயிநாதன் திருவடிகளே சரணம். அருகில் இருக்கும் தத்தாத்ரேயர், ஸாயி திருக்கோயில்களில் ஒரு வாரமாக உற்சவம் நடைபெறுகிறது. நேற்று(விஜயதசமி) ஷீரடி பாபாவுக்கு விசேஷ ஆராதனைகள், அகண்ட நாம ஜபம்,அன்னதானம் எல்லாம் நடந்தது. ரொம்ப விசேஷமாகச் செய்கிறார்கள் இங்கு. மிக்க நன்றி அண்ணா!!

      நீக்கு
  7. தகவல் களஞ்சியமே அன்புத்தங்கை பார்வதியே எங்கம்மா இவ்ளோ விஷயம் பிடிக்கறீங்க பிடிச்சி எங்களையும் வளைச்சிப்பிடிக்கறீங்க?:) அடிக்கடி உங்க வலைப்பூ வந்தாதான் எனக்கும் பல விஷயம் தெரியவ்ரும் போல இருக்கு பாராட்டுக்கள் பாரு உங்கள் உழைப்புக்கும் ஆர்வத்துக்கும்..விஜயதசமி அன்றைக்கு நானும் ஷீரடிநாதன் கோயில் சென்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா!!.. ஷீரடி நாதன் கருணையாலேயே எழுதுகிறேன். மிக்க நன்றி!!

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..