நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 13 ஜூலை, 2013

AANI THIRUMANJANAM (14/7/2013)...ஆனி திருமஞ்சனம்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன், நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன், இவ்வானும் குவலயமும் எல்லோமும்,
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய, அணி குழல் மேல் வண்டு ஆர்ப்பப்,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொற்பாதம்
ஏத்தி, இருஞ்சுனை நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவை)
'திருமஞ்சனம்' என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.  இதை, திரு+மஞ்சனம்(புனித நீராட்டுதல்) எனப் பிரிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் இறை மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும், சில குறிப்பிட்ட நாட்களில், அபிஷேகம் என்னும் உபசாரம் விரிவுபடுத்தப்பட்டு, மஹாஅபிஷேகமாக, திருமஞ்சனமாக நடத்தப்படுகிறது.  கலச ஸ்தாபனம் செய்து, மந்திர உச்சாடனங்களால், கலச நீருக்கு தெய்வீக அதிர்வலைகள் ஊட்டப்படுகின்றன. அதன் பின்னாக, இறைமூர்த்தங்களுக்கு, பலத்த வேதகோஷத்துடன், சகல அபிஷேக திரவியங்களாலும், நிறைவாக, கும்ப நீர் கொண்டும் நன்னீராட்டு நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தன்று, இப்பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் முகமாக திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானுக்கு, பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் திருத்தலமாக விளங்கும், தில்லை(சிதம்பரம்)யில் நடைபெறும் திருமஞ்சனம், அவசியம் தரிசித்து ஆனந்திக்க வேண்டிய ஒன்று. ஆடல் வல்லானுக்கு அன்றைய தினம் அனைத்து விதமான அபிஷேகப் பொருட்களைக் கொண்டும் அற்புதமாகத் திருமஞ்சன வைபவம் நடைபெறுகிறது.

இறை மூர்த்தங்களுக்கு திருமஞ்சன வைபவங்கள் நிகழ்த்துவதன் காரணம்:
பொதுவாகவே, அன்றாட வாழ்வில் நமக்கு நாம் செய்து கொள்ளும் செயல்களை (குளிப்பது, ஆடை உடுப்பது, உண்பது போன்றவை), இறைவனுக்கு உபசாரங்களாக செய்து சமர்ப்பிக்கின்றோம். ஆயினும், நீராட்டுதல் என்பது, பக்தனுக்கு, இறைவனோடு பரிபூரண மன ஒருமைப்பாடு விளைவிக்கும் செயலாகவே அமைந்திருக்கிறது.

இறைவனுக்கு பல்வேறு விதமான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வதில் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் மறைந்துள்ளன. அவற்றை, ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இப்போது பார்க்கலாம்.

ஆன்மீக ரீதியாகப் பார்க்கப் போனால், இறைவனுக்கு ஒவ்வொரு வித அபிஷேகப் பொருட்களைச் சமர்ப்பிப்பதனால், ஒவ்வொரு விதப் பலன் கிட்டுகிறது. அநேகமாக, இதை அனைத்து ஆலயங்களிலும் எழுதியே வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், சற்று யோசித்தோமானால், இதில் மறைந்துள்ள மறைபொருட்களை உணர முடியும்.

உதாரணமாக, பால் அபிஷேகம் செய்தால் சுகம் கிட்டும் என்பது பலன். பால் என்பது மன அமைதியைக் கொடுக்கக் கூடியது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் சமயங்களிலும், சிறிது பால் அருந்தினால், அது உடனடியாக, மனதுக்கு ஒரு வித அமைதியைத் தருவதை உணர முடியும். அபிஷேகம் செய்த பாலை பிரசாதமாக அருந்தும் போது, அது, இறைவனின் தெய்வீக அலைகளையும் தாங்கி வருவதால், மனம் அபரிமிதமான சாந்தியை அடைகிறது. உள்ளத்தின் அமைதியைக் காட்டிலும், உண்மையான சுகம் வேறெது?.

விபூதி அபிஷேகம் ஞானத்தைக் கொடுக்கும், நல்லறிவைப் பெருக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு விபூதியை அபிஷேகிக்கும் போது, 'முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்' எனும் நிலையாமைத் தத்துவம் நினைவுக்கு வருகிறது. சிறு பொறியெனத் தோன்றும் அந்த நினைவு, முடிவில் தெளிந்த ஞானத்தீயை வளர்க்கிறது.

உண்மையில், ஆலய மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் நடத்துவது, நம் உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டுவதைக் குறிப்பால் உணர்த்துவதே. உள்ளத் தூய்மையை நாம் அடைய வேண்டியே அபிஷேக ஆராதனைகள் நடத்துகிறோம்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தோமானால், நம் ஆலயங்களில் அமைந்திருக்கும் சிலா மூர்த்தங்கள், பஞ்சலோகத்தாலோ, சிலை அமைப்பதற்கேற்ற தகுதிகள், லட்சணங்களுடன் அமைந்திருக்கும் கற்களாலோ, நவபாஷாணத்தாலோ அமைக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, திருவேங்கடமுடையான் திருமேனி, 'சிலாதாரணம்' என்னும் 250 கோடி வருடங்கள் பழமையான கற்பாறைகளால் உருவாக்கப்பட்டது. இத்தகைய கற்பாறைகளை, திருப்பதிக்கருகில் இன்றும் காணலாம். பழனி திருமுருகன் திருமேனி, நவபாஷாணாத்தால் உருவாக்கப்பட்டது.  இத்தகைய திருமேனிகளுக்கு அபிஷேகங்கள் நிகழும் போது, முதலில், அவை, எண்ணை,   பஞ்சகவ்யம் முதலியவற்றால் முதலில் சுத்திகரிக்கப்பட்டு பின், பால் முதலானவற்றால் அபிஷேகிக்கப்படுகின்றன. அந்த அபிஷேக தீர்த்தத்தை பிரசாதமாக உட்கொள்ளும் போது, அந்த சிலைகளில் மறைந்திருக்கும் மருத்துவத் தன்மையும் கிடைக்கிறது. பிரசாத தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்தாக மாறுவதன் மகத்துவம் இதுவே.

மேலும் அபிஷேகங்கள் செய்வதால், அந்தத் திருமேனிகள், கால மாறுபாட்டால் ஏதேனும் மாறுதலுக்கு உள்ளாகாமல் இருக்கின்றன. கற்பாறைகள், மற்றும் உலோகங்களின் அணுக்கள், காலமாறுபாட்டாலும், உஷ்ணத்தாலும் விரிவடையும் தன்மை பொருந்தியவை. அத்தகைய   திருமேனிகளுக்கு அபிஷேகங்கள் செய்யும் போது, அவை குளிர்ச்சியடைவதால், அந்த மாறுபாடு தவிர்க்கப்படுகிறது.

ஆனந்த நடனத்தின் சிறப்பு:

தில்லையில் நடராஜப் பெருமான் நிகழ்த்தும் ஆனந்தத் திருநடனத்தின் சிறப்புகள் குறித்து, அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம் பதிவில் விளக்கியிருக்கிறேன். தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு, அவர்கள் வேள்வி செய்து ஏவிய பூதத்தை அழித்து, அகில உலகுக்கும் நலமளிக்க வேண்டி நடந்த இந்த ஆனந்த தாண்டவம், பின்னர், ஆதிசேஷனின் அவதாரமாகிய பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவர் ஆகியோரது பிரார்த்தனைக்கு இணங்கி, தில்லையில் மார்கழி திருவாதிரை நன்னாளில் மீண்டுமொரு முறை நிகழ்த்தப்பட்டது.

நடராஜப் பெருமானின் ஒவ்வொரு திருநடனமும் தனிச்சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல. நுணுக்கமான ஆன்மீக ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவரது தாண்டவங்கள் அனைத்தும்(ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாரத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம்) யோக முறையில் குண்டலினியானது, நம் உடலில் சூக்ஷ்மமாக அமைந்துள்ள ஆதாரச் சக்கரங்கள் ஒவ்வொன்றிற்கும் செலும் போது நம் மூச்சுக் காற்று அசையும் நிலைகளைக் குறிப்பனவாக அமைந்துள்ளன (இது சப்தவிடங்கத் திருத்தலங்களில் நடத்திய திருநடனங்களின் மறைபொருளெனவும் கூறுவார்கள்).

ஆனந்த தாண்டவம், சஹஸ்ராரத்தை குண்டலினி அடையும் போது நாம் காணும் பேரானந்தத்தைக் குறிப்பது. ஆகவே, அது பிரபஞ்சத்தின் இயக்கத்தைத் தெரிவிப்பதாகக் கருதப்படுகின்றது.

சிவனாரின் எட்டு விதமான வீரச்செயல்களின்    அம்சமும் ஆனந்தத் திருநடனத்தில் ஒருமை அடைகிறது. இந்த எட்டு வித வீரச்செயல்களும், யோக முறையில், குண்டலினி ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்தை அடையும் போதும், சாதகனுக்கு ஏற்படும் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம் (எமது ஆறாதாரமும் மூலாத‌ரமும்....பாகம் 3, மணிபூரகம் பதிவில் இது குறித்துக் காணலாம்).

ஆகையால் எம்பெருமானின் ஆனந்தத் திருநடனம், சொல்லில் அடங்கா சிறப்புகள் உள்ளது. ஆகவே, ஆனந்த நடனம் நிகழ்த்தப்பட்ட தில்லையில் ஆனி திருமஞ்சனம் மற்ற எல்லா திருத்தலங்களையும் விட சிறப்புப் பெற்று திகழ்கிறது.

ஆனி திருமஞ்சனத்தின் சிறப்பு:
சிவனார் உஷ்ணமான திருமேனியை உடையவர் என்று அறியப்படுகின்றார். ஆகவே, குளிர்ச்சி பொருந்திய திருக்கயிலை அவரது வாசஸ்தலமாக அறியப்படுகின்றது. 'அபிஷேகப் பிரியர்' என்றே போற்றப்படும் சிவனார், தன்னைத் துதித்துச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளால் உளங்கனிந்து, வேண்டுவன அருளும் அற்புதன். கோடையின் கடும் வெப்பம் மறைந்து, இதமான தட்பவெப்பம் துவங்கும் காலம் ஆனி மாதமே. ஆகவே, அகில உலகுக்கும் நாயகனான சிவனாரின் திருமேனியை குளிரச் செய்யும் பொருட்டு, வெம்மையின் நாயகனான, சூரிய பகவான் ஆதிபத்தியம் பொருந்திய நட்சத்திரங்களுள் ஒன்றான  உத்திர நட்சத்திரத்தில், திருமஞ்சனம் செய்விக்கப்படுகின்றது. பேரொளி மயமான இறைவனது திருமேனி குளிர்ந்தால், அண்ட சராசரங்களும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது ஐதீகம்.

பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் ஆனந்த திருநடனம் புரியும் தில்லை நடராஜப் பெருமான், ஆனி மாதமான தக்ஷிணாயன புண்யகாலத்தில் திருமஞ்சன வைபவம் கண்டருளுகிறார். தில்லையில் மட்டுமின்றி, திருவாரூர், உத்தரகோச மங்கை, ஆகிய திருத்தலங்களிலும், இந்த வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. 'திருத்தவத்துறை' என்ற இலால்குடித் தலத்திலும் ஆனந்த நடராஜரின் திருமஞ்சன வைபவம் சிறப்புற நடத்தப் பெறுகிறது.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும். இந்த ஆறு தினங்களில் மட்டுமே, நடராஜப் பெருமானை சிற்றம்பலத்தை விட்டு வெளியே தரிசிக்க இயலும்.

ஆனி திருமஞ்சன  தினத்தன்று, தில்லை நடராஜப் பெருமானின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும்.  அதன் பின், இறை மூர்த்தங்களை, திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். நூறு தீக்ஷிதர் பெருமக்களால் ஏக கால லக்ஷார்ச்சனை நடைபெற்று, அதன் பின், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு, பெருமளவிலான அபிஷேகத் திரவியங்களால், மஹா அபிஷேகம் நடைபெறும். நிறைவாக, பல்வேறு விதமான மலர்களால், புஷ்பாபிஷேகமும் நிகழ்த்தப் பெறும்.  அதன் பின், அலங்காரம் முடிந்து, மஹா தீபாராதனை ஆன பின், அம்மையும் அப்பனும் ஆனந்த திருநடனம் புரிந்தவாறே சிற்சபைக்குச் செல்லும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். இது பெரும் புண்ணியங்களை அளிக்க வல்லது.

இதைத் தரிசிப்போர் வேண்டும் வரங்களையும் பிறவிப் பயன்களையும் பெற்று இன்புறுவர் என்று புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை தில்லையில் சென்று தரிசிக்க இயலாதோர், தம் சித்தத்தையே சிவமாக்கி, மனம் உருகித் துதித்து வணங்கினாலும், சிவனார் அருட்பேராறு நம்மை வந்தடையும் என்பது நிச்சயம்.

ஆனி திருமஞ்சன தரிசனம் கண்டு, இறையனார் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

9 கருத்துகள்:

  1. அறிவியல் ரீதியான விளக்கம் அருமை அம்மா... ஆனந்தத் திருநடனம், சிறப்புகள், தகவல்கள் அனைத்திற்கும் நன்றி... பாராட்டுக்கள்...

    இறையனார் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி டிடிசார்.

      நீக்கு
  2. சித்தத்தை சிவமாக்கிக் களிக்கும்
    ஆனந்த நடனப்பதிவுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வார்த்தைகள் மேன்மேலும் எழுத எனக்கு ஊக்கமளிக்கின்றன. மனமாந்த நன்றி அம்மா!

      நீக்கு
  3. ஓர் ஆய்வுக்கட்டுரை தரத்தில் உள்ளது இவ்வாக்கம். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..