நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 6 ஜூலை, 2013

AASHADA NAVARATHRI (9TH JULY 2013 TO 18th JULY 2013).....ஆஷாட நவராத்திரி


'சக்தி வழிபாடு' தொன்று தொட்டு நம் நாட்டில் நிலவி வருவது. நம் உடலில் சக்தி இல்லையேல் செயல்பாடு ஏது?. இவ்வுலக இயக்கமும் ஏது?. எங்கும் நிறைந்த சக்தியின் ஸ்வரூபத்தை, நம்மைப் பெற்றெடுத்த அன்னையாக, இவ்வுலகனைத்திற்கும் தாயாகக் கருதி வழிபடுகின்றோம்.

ஒவ்வொரு வருடமும், சக்தி வழிபாட்டுக்கென சில குறிப்பிட்ட தினங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அந்த சிறப்பு வாய்ந்த தினங்களில், பூவுலகில் அதிக அளவில் அம்பிகையின் அருட்பேரலைகள் பிரகாசிக்கின்றன. அந்த தினங்களில் செய்யப்படும் வழிபாடு அதிக பலனளிக்கும் என்பதாலேயே அந்த குறிப்பிட்ட தினங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அம்பிகையைப் போற்றுவதெற்கென அமைந்த தினங்களில் மிக முக்கியமானவை நவராத்திரி தினங்கள். ஒரு வருடத்தில், நான்கு நவராத்திரிகள், பருவ கால மாறுதலை ஒட்டி, கொண்டாடப்படுகின்றன. வசந்த காலமான சித்திரை மாதத்தில், ஸ்ரீராம நவமியை ஒட்டி வசந்த நவராத்திரியும், தக்ஷிணாயனப் புண்யகாலம் துவங்கும் ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும், கார்காலத் துவக்கமான புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,  வேனிற்காலத் துவக்கமான, உத்தராயணப் புண்யகாலம் துவங்கும் தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும் கொண்டாடப்படுகின்றன.

இந்த வருடம் ஆஷாட நவராத்திரி, வரும் செவ்வாய் கிழமை(ஜூலை 9, 2013) துவங்கிக் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீலலிதாம்பிகையின் சேனைத் தலைவியாகிய வாராஹி தேவியைப் போற்றும் விதமாகவே இந்த ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வட இந்திய நாட்காட்டிகளின்படி, ஆஷாட மாதம் ஆனி மாத அமாவாசைக்கு மறு நாளே வருவதால், அன்று துவங்கி இது அனுசரிக்கப்படுகின்றது.

நாம் முன்பே வசந்த நவராத்திரியைப் பற்றியும், சியாமளா(அ)மாதங்கி நவராத்திரியைப் பற்றியும் பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் வாராஹி தேவியின் மகிமைகளையும், இந்த நவராத்திரியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் காணலாம்.

வாராஹி தேவியின் மகிமைகள்:
வராஹ(பன்றி)யின் முகம் தாங்கியவளாதலால் வாராஹி எனும் திருநாமம் கொண்ட இந்த அன்னை, தாந்த்ரீக முறைப்படி வழிபாடு செய்ய‌ப்படும் தெய்வங்களில் மிக முக்கியமானதொரு சக்தி ஆவாள்.இந்த அம்பிகை வராக மூர்த்தியின் சக்தியின் அம்சமாகவும் போற்றப்படுகின்றாள். தாந்த்ரீக உபாசகர்களால் மிகவும் போற்றிக் கொண்டாடப்படும் சக்தி வாராஹி. 'வாக்குக்கு வாராஹி' என்பது மிகப் பிரபலமானதொரு வாக்கியம். வாராஹியை உபாசிக்க, வாக்பலிதம் ஏற்படும் என்பதும், அவ்வாறு உபாசிக்கிறவர்களிடம் வெற்றி பெறுவது என்பது இயலவே இயலாது என்பதும் உண்மை. மேலும் வாராஹி வழிபாட்டில் நேரம் தவறாமை என்பது மிக முக்கியமானதொரு அம்சமாகும்.

ஏராளமாய்ச் செல்வம் தன்மடியில் ஏற்றவளாம்
வாராஹி வாராஹி வாராஹி என்றே உன்னை
சீரான அன்புடன் மனமுருகி நான் அழைத்தால்
வாராது இருப்பாளோ வாராஹி எனும் என் தாய்(நன்றி:பழனி திரு.பால இரவிச்சந்திரன்)

என்று கோடானு கோடி பக்தர்கள் போற்றித் தொழுதிடும் வாராஹி தேவி, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் தாந்த்ரீக ரூபமாவாள். ஸ்ரீலலிதாம்பிகையின் பஞ்ச பாணத்தினின்றும் தோன்றியவள். தேவியின் கிரியா சக்தியின் ஸ்வரூபம்.

ஸ்ரீலலிதாம்பிகையின் சக்தி சைன்யத்தின்(போர்ப்படைகளுக்கு தண்டம் என்றும் பெயர், தண்டநாயகர் என்பது சேனாதிபதியைக் குறிக்கும்) தலைவியானதால் தண்டினீ தேவி என்றும், தண்டநாதா என்றும் தந்த்ரிணீ என்றும் போற்றப்படும் வாராஹி தேவி, பண்டாசுர வதத்தின் போது, கிரிசக்ரத் தேரில் (ஐந்து தட்டுக்களாலான தேர்)ஏறி அம்பிகையைப் பணிந்து,  சேனைகளை வழிநடத்தினாள். இதை,

 'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா'  என்று, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்  போற்றுகிறது.

விசுக்ர ப்ராணஹரண வாராஹீவீர்ய நந்தி தாயை நம: என்னும் திருநாமம், தண்டினீ தேவி செய்த விசுக்ர வதத்தால் அம்பிகை மகிழ்ந்தாள் என்று உரைக்கின்றது. விசுக்ரன், பண்டாசுரனின் சகோதரன்.

சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், ஜீவனின் அஞ்ஞான வடிவே விசுக்ரன். ஜீவனின் அறிவை இழக்கச் செய்பவன். அவனை வீழ்த்துகிறாள் அன்னை. இது போல் சாதகர்களுக்கு, அவர்களின் யோக சாதனைகளில் நேரும் பேரிடர்களை மாய்க்க வல்லவள் வாராஹி. பெரும் ஆபத்துகளில் இருந்து பக்தர்களைக் காப்பவள்.

அம்பிகையின் திருக்கோலம், சங்கு, சக்ரம், கதை, பத்மம், உலக்கை, கலப்பை(ஏர்) ஆகியவற்றுடன் கூடிய ஆறு திருக்கரங்களுடன் கூடியதாக, வீராசனத்தில் அமர்ந்த நிலையில் இருப்பதாகவே பெரும்பாலான புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாராஹி தேவிக்கு 'வார்த்தாளி' என்ற திருநாமமும் உண்டு. இது தமிழ் வார்த்தையான 'ஒறுத்து அழி' என்பதிலிருந்து வந்ததாகக் கருதுகிறார்கள்.   புலன்களினால் ஏற்படும் தூண்டுதலில் இருந்தும் தீமைகளில் இருந்தும் சாதகனைக் காப்பவள் வாராஹி அன்னையே. இந்து தர்மத்தில் மட்டுமல்லாது, பௌத்தத்திலும் இதன் காரணமாகவே அன்னை போற்றப்படுகின்றாள். புத்த மதத்தில், வஜ்ரவாராஹி, ஹீருகா, மற்றும் மரீசி ஆகிய மூன்று விதமான திருவடிவங்களில் அன்னை ஆராதிக்கப்படுகின்றாள்.

வாராஹி தேவி, பூமி சம்பந்தமான பிரச்னைகள் எதுவாயினும் அதை அறவே நீக்கும் சக்தி உடையவள். வீடு, நிலம் ஆகியவை வாங்குவது, விற்பது ஆகியவற்றில் ஏதேனும் பிரச்னைகள், வாழும் வீட்டில் நிம்மதியில்லாமல் ஏதேனும் தொந்தரவுகள் முதலியவை இருப்பின் , வாராஹியை முறையாகத் தொழுது வர கட்டாயம் அகலும். மேலும் விரலி மஞ்சளை, 21,51,108 ஆகிய எண்ணிக்கையில் வாங்கி, மஞ்சள் கயிறில் (தடிமனான நூலை, மஞ்சளில் நனைத்தும் கட்டலாம்) மாலையாகக் கட்டி, செவ்வாய் கிழமைகளில் வாராஹிக்கு அணிவிக்க, அற்புத நற்பலன்கள் நிகழ்வதைக் காணலாம். இது என் சொந்த அனுபவம்.

பஞ்சுத் திரியை, குங்குமத்தில் தோய்த்து, அதை உபயோகித்து தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றி வர, குடும்பத்தில் மனக்கசப்புகள் மறைந்து அமைதி நிலவும். இது வாராஹி அன்னைக்கு மிக உகந்த பரிகாரமாகும்.

அம்பிகைக்கு உகந்த மலர் செவ்வரளி. அம்பிகை, காய் கனிகளை விட, பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் கிழங்கு வகைகள். குறிப்பாக, மாகாளிக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, பனங்கிழங்கு முதலியவற்றையே விருப்பமுடன் ஏற்கிறாள். கறுப்பு உளுந்தால் செய்யப்படும் வடை, பானகம் முதலியவை பிரதான நிவேதனம்.

தென்னாட்டில், தனிச் சிறப்போடு கூடிய அன்னையின் வழிபாடு தற்போதே பிரபலமடைந்து வருகிறது. இதற்கு முன்பாக, வெகு காலத்திற்கு முன்பே, சப்தமாதர்களுள் ஒரு சக்தியாக அன்னை சிறப்பிக்கப்பட்டு வழிபடப்படுகின்றாள்.

பிராமி, மாகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்த மாதர்கள். அநேகமாக, எல்லா சிவாலயங்களிலும் தேவியின் ஆலயங்களிலும் சப்தமாதர்களின் திருவடிவங்களைக் காணலாம். அமர்ந்த திருக்கோலத்தில், ஆயுதங்கள் தாங்கிய திருவடிவங்களாக, ஒரே கல்லிலோ அல்லது, தனித்தனியாகவோ சப்தமாதர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.

மதுரை மீனாட்சி, சியாமளா தேவியின் திருவடிவாக அறியப்படுவதைப் போல், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன், வாராஹியின் அம்சமாகவே அறியப்படுகின்றாள். அங்கு சந்தன அபிஷேகத்தின் போது அம்பிகையின் தண்டினி அம்சம் மிக அற்புதமாக வெளிப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரியின் முக்கியத்துவம்:
பெரும்பாலும், சாக்த உபாசகர்களாலும், 'வாமாசாரம்' எனப்படும் தாந்த்ரீக முறைகளைப் பின்பற்றுவோராலுமே ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது எனினும் வடநாட்டில் இது முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றாகும். வாராஹி நவராத்திரி, காயத்ரி நவராத்திரி, குப்த நவராத்திரி என்றும் வழங்கப்படும் இது, ஹிமாசலப் பிரதேசத்தில், குஹ்ய நவராத்திரி என்றும் அழைக்கப்படுகின்றது. அங்கு அசைவ உணவுகளை முழுவதும் விலக்கி, குழுக்களாகச் சேர்ந்து அம்பிகையை இந்த தினங்களில் வழிபடுகின்றனர்.

ஆஷாட நவராத்திரி தினங்களில், அம்பிகையின் திருவுருவப் படத்துக்கோ, விக்ரகம் இருப்பின் விக்ரகத்துக்கோ சிவப்பு வண்ண வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர்களை அணிவித்து, வாராஹி துதிகளைக் கூறி, தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். இயன்றவர்கள் கலச ஸ்தாபனம் செய்தும் பூஜை செய்யலாம்.

வாராஹி வழிபாடு முறைப்படி செய்ய வேண்டிய ஒன்றாகும். ஆகவே முறையாகப் பூஜிக்க எண்ணுபவர்கள், குருவின் வழிகாட்டுதலோடு செய்ய வேண்டும்.

துர்கா சப்த சதீ பாராயணம், ஹோமம், சண்டி ஹோமம், தேவி பாகவத   பாராயணம்  முதலியவை அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும்.

ஸ்ரீலலிதோபாக்கியானம் கூறும் ஸ்ரீநகர வர்ணனையில், வாராஹி தேவியின் இருப்பிடம் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது.

'மரகத கற்களால் இழைக்கப்பட்ட தூண்களுடைய மணி மண்டபத்தின் நடுவிலுள்ள‌, தங்கமயமான பீடத்தின் மேல் மலர்ந்த தாமரை மலர் ஒன்று இருக்கிறது. அதன் மத்தியில், மந்த்ர ராஜம் என்ற இடத்தில் ஸ்ரீமஹாவாராஹி தேவி கொலுவிருக்கிறாள்.

வராஹ முகத்துடனும், தாமரை இதழ்களையொத்த திருவிழிகளுடனும், தங்கமயமான மேனியுடன், சந்திரனை சிரத்தில் தரித்து, வெளிர் சிவப்பு வஸ்திரம்  அணிந்து, மிகுந்த அழகுடன், செந்நிற மலர்களாலான மாலைகள் அணிந்து,கலப்பை, உலக்கை, சங்கம், சக்கரம், பாசம், அங்குசம், அபயம், வரதம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் தாங்கி அருளும் வாராஹி தேவி, கெட்டவர்களுக்கு பயத்தைத் தரக் கூடியவளாகவும், நல்லவர்களுக்கு ஆனந்தம் அளிப்பவளாகவும் விளங்குகிறாள்.'

வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் தடைகளையும் நீக்கி, நிம்மதியையும் ஆனந்தத்தையும் பெற, ஆஷாட நவராத்திரி தினங்களில் அன்னையை வழிபட்டு அவள் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

  1. அருமையான தகவல். தஞ்சைப்பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஒரு சன்னிதி உண்டு. அதில் இப்போது சிறப்பான வழிபாடுகள் நடக்கும். ஆஷ்ட நவராத்ரி சிறப்பாக நடைபெறும். அந்த விக்ரகம் வளர்வதாக நம்பிக்கை. தஞ்சையில் வாழும் செள‌ராஷ்ட்ர சமூக மக்கள் வராஹி அம்மனை மிகவும் கொண்டாடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தஞ்சையில் அம்பிகையை தரிசித்திருக்கிறேன். அங்கு வசிக்கும் என் உறவினர், நவராத்திரியின் போது, வாராஹி அம்மனை தரிசித்து விட்டு, அங்கு வரும் பெண்களுக்கு, தங்களால் இயன்றதை தாம்பூலமாகக் கொடுத்தால் திருமணத் தடை நீங்குகிறது என்று குறிப்பிட்டார். ஆனால் விக்ரகம் வளர்வதான செய்தி தங்கள் மூலமே கேள்விப்படுகின்றேன். மிக்க நன்றி.

    இது போல், சோளிங்கநல்லூர் மஹாபிரத்யங்கிரா தேவி ஆலயத்திலும் வாராஹி அம்பிகைக்கு தனியாக சன்னதி இருக்கின்றது. தாந்த்ரீக முறையிலான வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போல எளிய, தெளிந்த நீரோடை போன்ற நடையில், முக்கியமான செய்திகளைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். ஆஷாட நவராத்திரி பற்றி இப்போதுதான் விரிவாகத் தெரிந்து கொண்டேன். படங்கள், குறிப்பாக முதல் படம் அப்படியொரு அழகு! பிரத்யங்கிரா கோவிலில் வாராஹியைத் தரிசித்திருக்கிறேன். அன்னை வாராஹி தேவியின் திருவடிகள் சரணம். பதிவிற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி!. தங்கள் வார்த்தைகள், எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பவையாகவும் மேன்மேலும் எழுதத் தூண்டுகோலாகவும் இருக்கின்றன. மிக்க நன்றி கவிநயா!.

    பதிலளிநீக்கு
  5. வாராஹி தேவியின் மகிமைகள் மிகவும் அருமை அம்மா...

    திருநாமம் முதற்கொண்டு அனைத்து விளக்கங்களும் சிறப்பு... நன்றிகள் பல...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி டிடி சார். உங்கள் மின்னஞ்சல் முகவரியும் குறித்துக் கொண்டேன். மிக்க நன்றி.

      நீக்கு
  6. நான் அறியாத பல தகவல்களை கூறியுள்ளீர்கள், பார்வதி. நிறைய தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..