நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 8 ஆகஸ்ட், 2012

தேவகி பரமானந்தம்...கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்... (கோகுலாஷ்டமி, JENMASHTAMI, 9-8-2012)




DODDAMALLUR SRI KRISHNA
ப்ராப்தே ஸப்தம கர்ப்பதாம் அஹிபதௌ
த்வத் ப்ரேரணாந்மாயயா
நீதே மாதவ ரோஹிணீம் த்வம் அபி போ:
ஸச்சித்ஸூகைகாத்மக:
நேவக்யா ஜடரம் விவிசித விபோ
ஸம்ஸ்தூயமாந:ஸூரை:
ஸ த்வம் க்ருஷ்ண விதூய ரோகபடலீம்
பக்திம் பராம் தேஹி மே (ஸ்ரீமந் நாரயணீயம்).

"ஹே க்ருஷ்ணா!!!, தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில், ஸ்ரீ ஆதிசேஷன் உதித்தருள, மாதவனாகிய உன் திருவுள்ளப்படி, யோகமாயை, அந்தக் கர்ப்பத்தை, ரோஹிணியின் திருவயிற்றில் சேர்ப்பித்தாள். உடனே, பேரானந்த மயமான வடிவமாகவே விளங்கும் நீ, தேவகியின் கர்ப்பத்தில், தேவர்களெல்லாம் புகழ்ந்து துதித்திட, பிரவேசம் செய்தருளினாய். இப்படியான லீலைகள் புரிந்த நீ, எனது பிணிகளை நீக்கி, எனக்கு உன்னிடத்தில் நிலையான பக்தியை அருள வேண்டும்."

கோகுலாஷ்டமி (9:8:2012)

'பூர்ணாவதாரம்' எனப் போற்றப்படுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம். 'க்ருஷ்ண' என்றால் 'கறுப்பு' என்பது பொருள். பரமாத்மா அவதரித்தருளிய நேரமும் இருள் சூழ்ந்த நேரம். அஞ்ஞான இருளை அகற்றும் ஞான தீபமாக, உலகத்து உயிர்களெல்லாம் கண்ணெனப் போற்றித் தொழுதேத்தும் 'கண்ணனாக', ஆவினங்களையும், 'பசு' என்றும் சொல்லப்படும் மனித ஆன்மாக்களையும், நல்வழியில் மேய்த்துக் கடைத்தேற்றும் 'கோபாலனாக', வஸூதேவரின் அரும்பெரும் தவத்தின் பலனாக வந்து தோன்றிய 'வாசுதேவனாக', பக்தர் இதயமெல்லாம் தன் அழகால் கொள்ளை கொண்ட 'மன மோகனனாக', 'ஸ்ரீ' யாகிய திருமகளைத் தன் இதயக்கமலத்தில் தரித்திருக்கும் 'ஸ்ரீதரனாக' உலகெல்லாம் நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருள் வந்துதித்த தினமே, இந்த ஜென்மம் எடுத்ததின் பயனாகக் கொண்டாடப்படும் 'ஜென்மாஷ்டமி'. கோகுலத்தில், நந்த கோபரின் இல்லத்தில், கோப கோபிகைகள் உளம் மகிழும் வண்ணம் அவரது அவதார உற்சவம் நடந்தேறியதால் 'கோகுலாஷ்டமி'.
'ஸ்ரீ' என்ற சொல்லுக்கு, செல்வம், இன்பம், அழகு, மங்களம், காந்தி, காம்பீர்யம் எனப் பலப்பல பொருளுண்டு. மன்னுயிர்க்கெல்லாம், நித்யமான செல்வமாக, நிலையான இன்பமாக, அழகுக்கெல்லாம் பேரழகு வடிவமாக, பரம மங்களங்களை அருளுபவனானக, கோடிக்கோடி சூரியப்பிரகாச ரூபவதனாக, தன் சிங்கக் குரலில் கீதையை முழங்கிய ஜகத்குருவாக விளங்கும் பரமாத்மா அவதரித்தருளிய தினம் 'ஸ்ரீ ஜெயந்தி'.

ஆவணி மாதம், சந்திரபகவானுக்குகந்த ரோகிணி நட்சத்திரம்,  க்ருஷ்ண பட்ச அஷ்டமி திதியில், எம்பெருமான் இப்பூவுலகினில், நல்லோரை வாழ்விக்கும் பொருட்டு திருஅவதாரம் செய்தருளினார்.

பரமாத்மா, ஒவ்வொரு அவதாரத்தையும், ஒவ்வொரு நவக்கிரகங்களின் அம்சமாக எடுத்தருள் செய்தார். ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம், சந்திர பகவானின் அம்சமாகச் செய்ததாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீக்ருஷ்ணருக்கு மட்டுமல்லாது, யோகமாயா தேவியான, அன்னை ஸ்ரீதுர்க்கா தேவிக்கும் அன்றே திருஅவதார தினம்.பரமாத்மாவின் கட்டளைப்படி, 'யசோதா கர்ப்ப ஸம்பூதா' வாக, நந்த கோபரின் இல்லத்தில் தேவி திருஅவதாரம் செய்தாள். பின் வஸூதேவரால், கம்ஸனின் சிறைக்கூடத்திற்கு எடுத்து வரப்பட்டு, கம்ஸன் தன் திருவடிகளைப் பற்றியே தூக்கியடிக்க முயற்சித்ததன் காரணமாக, அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்த திருநாளும் இதே. ஆகவே, சாக்தர்களும் இந்தத் தினத்தை பெருமகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் முழுவதையும், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், தம் திருப்பாவையில் அழகாக ஒரே ஒரு பாசுரத்தில் விவரித்திருக்கிறார்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

தேவகியின் மைந்தனாக அவதரித்து, அதே இரவில், யசோதாபிராட்டியின் புதல்வனாக, கோகுலம் அடைந்து, பின், தனக்குத் தீங்கு நினைத்த கம்ஸனை முடித்து, தன் பெற்றோரையும் உற்றோரையும் காத்து மகிழ்வித்த பரமாத்மாவின் கருணை, இந்தப் பாசுரத்தில் அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில் பகவான் செய்த லீலைகள் நாம் அனைவரும் அறிந்ததேயாதலால்,  நாம் சற்றுத் தத்துவார்த்தமாக இந்நிகழ்வை நோக்கலாம். ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் குறித்துக் கூறியவற்றை, அப்படியே தருகிறேன்.

"கஞ்சனும், ஊதாரியும், மூடனும், கல்விமானும், யோகியும், ஞானியுமாகப் பலவிதமான மனநிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை,முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால், ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு, இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரசமாயிருக்கும். ஸ்ரீ க்ருஷ்ணன், நல்லவர்களை மட்டுமின்றி, மற்றோரையும் கவர வேண்டுமென்றே, ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக, எல்லாமும் வேஷம் போட்டான். பற்பல போக்குக் கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும்,அதன் மூலம் ஞானத்துக்கும், பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ க்ருஷ்ணாவதாரமே பரிபூர்ணாவதாரம்".

பொதுவாகவே, ஒரு சிறு குழந்தை, தானிருக்கும் இடத்தை, நித்தமும் ஒரு திருவிழாப்போல் கலகலப்பாக இருக்கச் செய்யும் திறன் வாய்ந்தது. அதன் எல்லா செய்கைகளும் ஒரு வியப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதாக, அதன் மழலை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக, அதன் சிரிப்பும் பேச்சும் எப்பேர்ப்பட்ட கவலையையும் மறக்கடிப்பதாக இருக்கும். அதிலும் பரமாத்மா, எப்பேர்ப்பட்ட குழந்தை. துன்பசாகரத்தை மட்டுமல்லாது பவசாகரத்தையும் கடக்க உதவும் கருணைப் பேரொளி, நம் வீட்டுத் தொட்டிலில் முழுநிலவு போல் முறுவலித்தால், மனம் பிறவிப் பயனை எய்தாதா?
பண்டிகைகள் கொண்டாடுவதன் தாத்பர்யமே, ஒரே மாதிரியான, வாழ்வுச் சூழலில் இருந்து நம்மை சற்றே வேறுபடுத்தி, உற்சாகம் தரும் செயல்களில் ஈடுபடச் செய்து, அந்த உற்சாகம் பண்டிகை தினத்தில் மட்டுமல்லாது, அடுத்து வரும் தினங்களிலும் தொடர வழிவகுப்பதேயாகும்.

அதிலும் கோகுலாஷ்டமி தினத்தில், ஒரு சின்னக் குழந்தையின் ஜென்ம தின உற்சவம் போல், பட்சணங்கள் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி,  இல்லத்தை அழகுபடுத்தி, தெய்வக் குழந்தையான ஸ்ரீ க்ருஷ்ணர், தன் பட்டுத் திருவடிகளை  அழகுடன் எடுத்து வைத்து அசைந்தாடி வருவதைக் குறிக்கும் விதமாக, சின்னஞ் சிறு பாதங்களை, மாக்கோலத்தில், வீட்டு வாசலில் இருந்து, பூஜை செய்யும் இடம் வரை வரைந்து, தூப தீப ஆராதனைகளுடன், ஷோடசோபசார பூஜைகள் செய்து, வணங்கி, பின் மறுநாள் புனர்பூஜை செய்து, எங்கும் நிறைப் பரம்பொருள் வளமெல்லாம் தர வேண்டிப் பிரார்த்தித்து வணங்கும் இந்தப் பூஜை, மனவளக் கலையை கற்காமலே அறிந்த நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து என்றால் மிகையில்லை.

'ஒரு குழந்தைக்குச் செய்கிறோம்' என்ற உணர்வோடு செய்தால் உற்சாகம் தானே வந்து விடாதா!!. மேலும், ஸ்ரீலக்ஷ்மி காந்தனாகிய பரமாத்மா, வரலக்ஷ்மி விரதம் கொண்டாடி, தன் திருவுளத்திருப்பாளைப் பூஜித்த பின்பே, நம் இல்லத்தில் எழுந்தருளிப் பூஜை ஏற்கிறார். கணவன், மனைவியிடையே இருக்க வேண்டிய அன்புப் பிணைப்பை, அந்தத் திவ்யத் தம்பதிகள், ஒவ்வொரு அவதாரத்திலும் நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
நிவேதனம் செய்யும் பொருட்களிலும் தான் எத்தனை எத்தனை தத்துவார்த்தங்கள்!!

நம் மனது எந்த நிறத்தில் இருக்க வேண்டுமென்பதைக் குறிக்கிற பால், பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் உணர்த்துகிற தயிர்,  உலக அனுபவங்களால் கடையப்படும் போது ஜீவனுக்கு வருகிற ஞானத்தைப் போல், தயிரைக்  கடைந்து எடுக்கப்படும் வெண்ணை. இவையே பிரியமான நிவேதனங்கள். அதிலும் வெண்ணையை அப்படியே வைக்காது கல்கண்டு சேர்த்து வைக்க வேண்டும். பக்தியின் இனிமையால் ஞானம்  கிடைக்கும் என்பதை உணர்த்துவது இது.

முழுமுதல் பரம்பொருள் ஸ்ரீ க்ருஷ்ணர் என்பதை உணர்த்தும் விதமாக, உருண்டை வடிவமான சீடை முக்கியத்துவம் வாய்ந்த நிவேதனம். குசேலருக்கு அருள் கிடைக்க வழி செய்த  அவலை வெல்லம் சேர்த்தோ அவல் பாயசமாகவோ நிவேதனம் செய்யலாம்.

வாழ்வியல் உண்மைகளை ஒவ்வொரு விஷயத்திலும் பொதித்து வைத்து, அதன் மூலம் நுட்பமாக, அமைதியான நடைமுறை வாழ்வுக்கு வழிகோலிய நம் முன்னோர்கள், ஒவ்வொரு பண்டிகையிலும்,திருமணம் முதலான வைபவங்களிலும்  கட்டாயம் இருக்க வேண்டியதாக சில நிவேதனங்களைச் செய்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது முறுக்கு. கரடு முரடான மனிதர்களையும், இறைவன்   தன் முழுமைக்குள் (வளையத்திற்குள்) ஏற்கிறார் என்பதை உணர்த்தும் இது, நடைமுறையில், கடின சுபாவ மனிதர்களும் உறவுகளாக அமைந்தால், அவர்களது பிணைப்பை (முறுக்கை) விட்டு விடாது வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவது. பொதுவாக, உறவுகளின் பிணைப்பு முறுகி இறுக்கமாக இருக்க‌ வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது.

 மேற்புறம் கறுப்பாகவும் உட்புறம் இனிமை நிறைந்த மாவும் நிறைந்திருக்கும் 'அதிரசம்', 'அப்பம்', மனிதர்களின் ரசமான உள்மனதுக்குத் தர வேண்டிய மதிப்பை உணர்த்துகிறது.

லட்டு, சிறிதும் பெரிதுமான பூந்திகளை பாகில் இட்டு பிடிக்கும் பண்டம். மனிதர்களில் எத்தனை விதங்கள், எத்தனை சுபாவங்கள்!!. அவர்கள் அனைவரையும் அன்பு என்ற பாகால் இணைத்தால் அருமையான லட்டு என்கிற முழுமையான வாழ்வு நம் கைவசம்!!. பாலைக் குறுகக் காய்ச்சிச் செய்யப்படும் திரட்டுப்பால், உலகாயத விஷயங்களில் இருந்து மனம் ஒடுங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

பல நெளிவு சுளிவுகளுள்ள 'தேன்குழல்' வாழ்வின் ஏற்ற இறக்கங்களை உணர்ந்தால் வாழ்வு 'தேன்' என்பதன் உருவகம். பூரணமான பரம்பொருள் இவ்வுலகமெங்கும் நிறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் மோதகம், சுகியன் என்று எத்தனை....எத்தனை... பண்டங்கள். இவை வெறும் தின்பண்டங்களல்ல. ஒவ்வொரு செயலிலும், ஞானம் பெறவே இந்தப் பிறவி எடுத்தோம் என உணர்த்தும் உன்னதச் சின்னங்கள்.

இத்தனை பட்சணங்களும் செய்து நிவேதித்தால், சின்னக் குழந்தைக்கு ஜீரணம் ஆக வேண்டாமா!! ஆகவெ, சுக்குப்பொடியை வெல்லத்துடன் நிவேதிக்க வேண்டும். மேலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவிக்குப் பிரியமான பானகத்தையும் நிவேதனத்துக்கு வைக்க வேண்டும்.

பண்டிகை தினத்தன்று செய்ய வேண்டியவை. 
இந்தப் பண்டிகைக்கு, பண்டிகை தினத்தன்றே பட்சணங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. நேரமிருந்தால் பண்டிகை தினத்தன்றே, மாவு தயாரித்துப் பட்சணங்கள் செய்யலாம். இல்லையென்றால், முதல் நாள், நீராடி, சுத்தமாக, மாவு தயாரித்து, வெல்லச்சீடை, அதிரசத்துக்குப் பாகுசெலுத்தி வைக்கலாம். மறுநாள் பட்சணங்கள் செய்யலாம். வீடு மெழுகி, இழைக் கோலம் போடுவது, பூஜையறையைத் துடைத்து சுத்தம் செய்து, பூஜைப் பாத்திரங்களைத் தயார் செய்வது ஆகியவற்றைச் செய்து கொள்ளவும்.

எல்லாப் பட்சணங்களையும் செய்ய வேண்டுவதில்லை. முடிந்ததை, மனமாரச் செய்வதே முக்கியம். வேலைப் பளுவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இயன்றதை, மனத்ருப்தியுடன் செய்து, ஆத்மார்த்த பக்தியுடன் நிவேதிப்பது முக்கியம். இது, முக்கியமாக, பண்டிகை தினத்தன்று மன நிம்மதியை அளிப்பதோடு, தேவையற்ற அலுப்பு, சலிப்புகளைத் தவிர்த்து, பண்டிகையின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொண்டாட வழிவகுக்கும்.

பூஜை:

ஸ்ரீ க்ருஷ்ணரின் படம் அல்லது விக்கிரகத்துக்கு பூஜை செய்வது வழக்கம். நிவேதனங்களுடன், தேங்காய், வெற்றிலை, பாக்கு , பழங்கள் ( வாழ்வில் பற்றின்றி இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விளாம்பழம், ஸ்ரீ க்ருஷ்ணரின் நிறத்தையும் அழகிய திருவிழிமலர்களையும் உணர்த்தும் நாவல்பழம் ஆகியவை விசேஷம்) முதலியவை வைக்க வேண்டும்.


அட்சதை, உபவீதம், கஜவஸ்திரம் முதலிய பூஜைக்குத் தேவையானவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். அர்க்யத்துக்குப் பால், பஞ்சாமிர்த ஸ்நான உபசாரத்துக்குத் தேவையானவற்றை தயார் செய்து கொள்ளவும். வீட்டு வாசலிலிருந்து, பூஜை செய்யும் இடம் வரை, மாக்கோலத்தால் சின்ன, சின்னப் பாதங்களை, வலது, இடது பாதங்களாக, பரமாத்மா அடியெடுத்து வருவதை உத்தேசித்து வரைந்து கொள்ளவும். பூஜை செய்யும் இடத்தில் இரு திருவடிகளையும் சேர்த்து, நம்மைப் பார்த்து நிற்பது போல் போடவும். ஸ்ரீதேவியாகிய மஹாலக்ஷ்மி, இவ்வாறு போடப்படும் திருவடிகளில் வாசம் செய்கிறாள். ஆகவே இந்தத் திருவடிகளை, 'ஸ்ரீ பாதங்கள்' என்று சிறப்பிக்கிறார்கள். 

 மாலை, விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜையை துவக்கவும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜித்து, பூஜையைத் துவக்கவும். ஷோடசோபசார பூஜை செய்வது விசேஷம். துளசி தளத்தால் பூஜிக்கவும். ஸ்ரீ மஹா விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சித்தல் ஆகாது. விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹ்ருதயம் ஆகியவற்றை பாராயணம் செய்தல் சிறந்தது.

 ஸ்ரீமந் நாராயணீயம், பாராயணம் செய்வது சிறந்தது. இது, ஸ்ரீமத் பாகவத சாரமாகவே போற்றப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதம், வேத வேதாந்தங்களின் சாரமாக, புராணங்களில் தலைசிறந்ததாக விளங்குகிறது.ஸ்ரீமந் நாராயணீயத்தில், ஸ்ரீ க்ருஷ்ணாவதார வைபவத்தைப் பாராயணம் செய்ய இங்கு சொடுக்கவும். பூஜை செய்ய இயலாவிட்டாலும், ஸ்ரீ க்ருஷ்ணரின் படத்துக்கு சந்தனம், குங்குமம், பூக்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, நிவேதனம் செய்து கற்பூரம் காண்பிக்கலாம். அந்தரங்க சுத்தியோடு தம்மை வணங்கும் பக்தர்களுக்கு ஓடோடியும் வந்தருள்வான் அந்தப் பரந்தாமன். 

கம்சனைக் முடித்துத் தன் தாய் தந்தையருக்கு விடுதலையருளிய திருக்கரங்கள், ஸ்ரீ ருக்மிணி தேவியின் வேண்டுகோளுக்கிணங்கி, அவரைத் தன் தேரில் ஏற்றிச் சென்று மணந்தருளிய திருக்கரங்கள்,திரௌபதிக்கு புடவை சுரந்த திருக்கரங்கள், பார்த்தனுக்குச் சாரதியாய் தேரோட்டிய திருக்கரங்கள், தன் அவதாரத்தை முடித்து வைத்த வேடனுக்கும் முக்தியருளிய திருக்கரங்கள், பக்தர்கள் வேண்டும் வரமெலாம் கொடுக்க எப்போதும் காத்திருக்கின்றன என்பது உறுதி. 

மறு நாள், காலை புனர் பூஜை செய்ய வேண்டும். பகவானை ஏற்கெனவே ஆவாஹனம் செய்திருப்பதால், அர்க்யம், பாத்யம் முதலான உபசாரங்களைச் செய்து, அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கலாம். மஹா நைவேத்தியம், வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்து கற்பூரம் காண்பித்து, கை நிறைய மலர்களைத் தூவி, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். பிறகு, பூஜையில் ஏற்பட்டிருக்கக்கூடிய தவறுகளுக்கு மன்னிப்புக் கோரி, அந்தப் பரந்தாமனை 'யதாஸ்தானம்' செய்ய வேண்டும். பிறகு, சிறிது நேரம் கழித்து, படம் அல்லது விக்கிரகத்தை எடுத்து விடலாம். ஸ்ரீ வைணவர்கள், இந்தப் பண்டிகையை ரோஹிணி நட்சத்திரம் வரும் நாளன்று கொண்டாடுவார்கள். அன்று குழந்தை பிறந்து புண்யாகவாசனம் போல என்பதால், வடை பாயசத்துடன் விருந்தாகச் சமைப்பது வழக்கம். சின்னப் பருப்புத் தேங்காய், காப்பரிசி எல்லாம் செய்து நிவேதனமாக வைப்பதும் பெரும்பாலான வீடுகளில் வழக்கத்திலிருக்கிறது. 

பரமாத்மாவின் திருவடிவங்களில் ஆலிலை க்ருஷ்ண வடிவத்துக்குப் பெரும் சிறப்புண்டு. எத்தனை வாடினாலும், மற்ற இலைகள் போல் நொறுங்கும் தன்மை ஆலிலைக்கு இல்லை. வாடினாலும் மென்மையாகவே இருக்கும் தன்மையுடையது. ஆகவே, ஆலிலைக் க்ருஷ்ண வடிவம், எத்தனை துன்பங்கள் வந்தாலும் நாம் நொறுங்கிப்போய் விடாமல், பரமாத்மாவை அழுத்தமான பற்றுக் கோடாகக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. பிரளய காலத்தில், அனைத்துயிர்களும் லயமாகும் போது பரமாத்மாவின் வடிவம் இதுவே என்பது தத்துவம். இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் சொல்லிக் கொண்டே  போகலாம்.


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (திருப்பாவை)

ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவின் திருவடித்தாமரைகளை எந்நாளும் சிந்தையில் நிறுத்தி,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. தாங்கள் வைத்த
    முறுக்கு சீடை தேன்குழல் காப்பரிசி பருப்பு தேங்காய்
    என பட்ஷணங்களை ரசித்தோம்..

    "உண்டனன் என கொள் "
    என குகனை பார்த்து ராமன் சொன்னது போல்

    சாப்பிட்டதாக கொள்க..
    எமது சுவை வேறுவிதமானது
    (நாம் உப்பும் இனிப்பு புளி காரம் சேர்த்துக் கொள்வதில்லை)

    வாழ்க.. நலமுடன்..

    பதிலளிநீக்கு
  2. //அய்யர் said...

    வாழ்க.. நலமுடன்..//

    தங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி. தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. Excellent. very very informative.

    Thanks.

    Sukumar - Chennai

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..