நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 20 மே, 2012

ஆஜ்ஞா (ஆறாதாரமும் மூலாதாரமும்.....பாகம் 6)




தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸஸி-கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித-பார்ஸ்வம் பரசிதா
யமாராத்த்யந் பக்த்யா ரவி-ஸஸி-ஸுசீநா-மவிஷயே
நிராலோகேசலோகே நிவஸதி ஹி பாலோக-புவநே

"ஹே, தேவி!! உன்னுடைய இரு புருவங்க‌ளின் மத்தியில் இருக்கிற ஆஜ்ஞா சக்கரத்தில் ஒளிர்பவனும், கோடி சூரிய சந்திரர்களின் ஒளியை உடையவனும்,ஸகுண, நிர்க்குண சக்திகளை, இடப்பாகத்தில் தாங்குபவனுமான, காமேசுவரனை வணங்குகிறேன். அவரைப் பக்தியோடு தியானிப்பவர்கள், சூரியன், சந்திரன், அக்னி இவர்களுடைய ஒளிகள் பரவாததான, பரஞ்சோதி மயமான, உன்னுடைய சாயுஜ்ய பதவியில் வசிப்பான். " (சௌந்தர்ய லஹரி).

இந்தப் பதிவில் நாம் ஆஜ்ஞா சக்கரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்தச் சக்கரம் 'ஞானத்தின் சக்கரம்' என்று புகழப்படுகிறது. இது நம் நெற்றியில், இரு புருவங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இதைத் 'திரிகூடம்' என்றும் கூறுவர். இது விசுத்திக்கு மேல் பதினான்கு அங்குலத்தில் இருக்கிறது. குண்டலினி ஆஜ்ஞா சக்கரத்தை அடைதலையே, மூன்றாவது (நெற்றிக்) கண் திறப்பதாகச் சொல்லப்படுகிறது.  


இது கருநீல நிறமுடைய, வட்ட வடிவமானது. இதன் இரு பக்கங்களிலும் இரண்டு தாமரை இதழ்கள் வடிவில் இரு யோக நாடிகள் கிளம்புகிறது. இவை சந்திர சூரியர்களாக உருவகப்படுத்தப்படுகிறது. இந்தத் தாமரை இதழ்கள் வெண்ணிறமுடையன. இடப்பக்கம் உள்ள தாமரை இதழ், 'ஹம்' (ham),என்ற சப்த பரிணாமமும் , வ்லப்பக்கம் 'க்ஷம்' (ksham) என்ற எழுத்தின் சப்த பரிணாமமும் விளங்குகிறது. இவை முறையே சிவ, சக்தியைக் குறிக்கிறது. இந்தச் சக்கரத்தோடு தொடர்புடைய உடல் உறுப்புகள், கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி, இடதுமூளை, முதுகுத்தண்டு, மூக்கு, காது , பிட்யூட்டரி சுரப்பி முதலியன.

'வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்?'

என்று பத்திரகிரியார், தமது மெய்ஞ்ஞானப் புலம்பலில், வட்ட வடிவமான ஆஜ்ஞா சக்கரத்தில் சிவனாரின் காட்சியை காணும் பேறு எக்காலத்தில் கிட்டுமென்று வருந்தி ஏங்குகிறார்.

இந்தச் சக்கரத்தின் அதிதேவதை பரமசிவன். பெண்தெய்வம், ஹாகினி. சில நூல்களில், சிவ‍‍‍‍ சக்தி இணைந்த வடிவமான அர்த்த நாரீஸ்வரர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

'கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியினைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை உள்ளில் வைத்துசாரூபஞ் சாருவனே. '

என்று இடைக்காட்டுச் சித்தர், 'பெண்ணுருவப் பாதி' என்று அர்த்த நாரீஸ்வரரை, கண்ணுள் கருமணி என உருவகப்படுத்தப்படும், ஆஜ்ஞா சக்கரத்தில் குண்டலினி யோகத்தின் மூலம் தரிசிப்பதைக் கூறுகிறார். 'விண்ணின் அமுதை, விளக்கொளியை, வெங்கதிரை' என்றது, சூரிய சந்திரர்களாக உருவகப்படுத்தப்படும் இரண்டு யோகநாடிகளையுமாம்.

இந்தச் சக்கரம், குருவையும் சிஷ்யர்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. இரு மனிதர்கள், மனவழித் தொடர்பு கொள்ள உதவும் சாதனமாக இருக்கிறது. ஆகவே, தீய சக்திகள் ஊடுருவாமல் காக்க வேண்டி, நெற்றியில், அவரவர் வழக்கப்படி, பொட்டு, திருமண், விபூதி இடுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்தியில் நமசிவாய மந்திரத்தில், 'ய' எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது.இதன் பீஜ மந்திரம் ஓங்காரம். முறையான பயிற்சியின்மூலம் ஓம் எனும் மந்திரத்தை உருவேற்றினால், குண்டலினி இந்தச் சக்கரத்தை அடைந்து, இந்தச் சக்கரம் மலரும். 

ஆஜ்ஞா சக்கரம் மலரும் போது, விழிப்புணர்வு, வருங்காலம் உணர்தல் ,முழுமுதற் பிரம்மத்தின் ஸகுண, நிர்க்குண நிலைகளை அறிதல், நினைவாற்றல், மனதை விரைவாக ஒருமுகப்படுத்தும் தன்மை முதலியன கிட்டும். 'நான், எனது' எனும் தன்மை அழிந்து, இறைத் தன்மையை அறிய முடியும்.

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 

என்ற வரிகளில் குதம்பைச் சித்தர், 'திரிகூடம்' எனப் போற்றப்படும் ஆஜ்ஞா சக்கரம் தூண்டப்பெற்றால் மெய்ஞ்ஞானம் கிட்டும் என உணர்த்துகிறார்.

ஸ்ரீ தெய்வயானை அம்பிகை

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், ஆஜ்ஞா சக்கரத்தை பற்றிய ஸ்லோகங்களைப் பார்ப்போம்.
"ஆஜ்ஞா -சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி- விபேதினி |
ஸ்ஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி -வர்ஷிணீ." ||

இதன் பொருள், "குண்டலினி ரூபமாக ,ஆஜ்ஞா சக்கரத்தின் மையத்தில், இருக்கும் தேவி, அதில் இருந்து, ருத்ரக் கிரந்தி (முடிச்சை) அறுத்துக் கொண்டு, (சஹஸ்ராரத்திற்கு) மேலேறுகிறாள் " என்பதாகும்.

ஆஜ்ஞா -சக்ராப்ஜ -நிலயா சு'க்லவர்ணா ஷடாநநா ||

மஜ்ஜா -ஸம்ஸ்தா ஹம்ஸவதீ -முக்ய-ச'க்தி -ஸமன்விதா |
ஹரித்ரான்னைக -ரஸிகா ஹாகிநீ -ரூபதாரிணீ. ||

இந்த ஸ்லோகங்களின் பொருள், "வெண்ணிறமுடைய, ஆறு முகத்தினளாக, ஆஜ்ஞா சக்கரத்தில் இருக்கும் தேவி, உயிரினங்களின் உடலில் மஜ்ஜைப் பகுதியில் உறைகிறாள். ஹம்ஸ்வதீ முதாலன சக்திகளைத் தன் பரிவாரமாகக் கொண்ட ஹாகினி என்னும் திருநாமமுடைய இந்த அம்பிகை, குங்குமப்பூ கலந்த சாதத்தை விரும்பி ஏற்கிறாள்" என்பதாகும்.


சிவயோக நெறியில், காசி எனப்படும் 'வாரணாசி', ஆஜ்ஞா சக்கரத்துக்கான தலமாகத் திகழ்கிறது.

"மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்
கயிலாய நாதனையே காண லாமே."

என்று அப்பர் பெருமான், பாடிப் போற்றுகிறார்.

'காசியில் இறக்க முக்தி' என்பது நம்பிக்கை. இத்தலத்தில் இறப்போருக்கு, காசி விஸ்வநாதரே, தாரக மந்திரமாம் 'இராம' நாமத்தை இறக்கும் தருவாயில் உபதேசித்து முக்தியளிக்கிறார் என்பது ஐதீகம். கால பைரவரின் காவலில் விளங்கும் இத்தலத்தில், சுடலையை யமதர்மராஜரும், ஹரிச்சந்திரரும் காவல் காத்ததால், இத்தலத்துக்கு வருவோருக்கு மரணபயம் இல்லை. 

வருணா, அசி ஆகிய இரு நதிகளின் சங்கமம் இது. ஆகவே 'வாரணாசி' ஆயிற்று. இது ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இந்துக்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் காசி செல்ல வேண்டும். முறையான காசி யாத்திரை என்பது, இராமேசுவரத்தில், அக்னிதீர்த்தக் கரையில், காசியாத்திரைக்கு சங்கல்பம் செய்து, சேதுமாதவன், வேணிமாதவன், பிந்துமாதவன் என மூன்று லிங்கங்கள் மண்ணால் செய்து பூஜித்து, சேதுமாதவ லிங்கத்தை அக்னிதீர்த்தத்திலும், வேணி, பிந்துமாதவ லிங்கங்களை, முறையே திரிவேணி சங்கமம், கங்கையிலும் கரைத்து விட்டு, பின் , கங்கைத் தீர்த்தத்தை எடுத்து வந்து, இராமேசுவரத்தில், இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அதற்குப் பின், வீட்டில், காசியில் வாங்கிய கங்கைச் செம்புகளுக்கு கங்காபூஜை செய்து, உறவினர்களுக்கு வழங்குதலேயாகும். இராமேசுவரம், அலகாபாத் (திரிவேணி சங்கமம்), காசி, கயா, பின் மீண்டும் இராமேசுவரம் என்று யாத்திரை செய்தலே காசியாத்திரை.

சிவலிங்கத்தின் பெருமைகள் போற்றும் ஸ்ரீ லிங்காஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்.

இங்கு இரவில் நடைபெறும் சப்தரிஷி பூஜை அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. விடிகாலையில் சில மணித்துளிகளே திறந்திருக்கும் வாராஹி கோவில் தரிசனம் சிறப்புமிக்க ஒன்று. காசியின் சிறப்புகளுள் ஒன்றான, தங்க அன்னபூரணியை, தீபாவளியன்று மட்டுமே, முழுமையாக லட்டுத் தேரில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் 'பிட்சத்துவாரம்', 'தர்மத்துவாரம்' எனப்படும் இரண்டு துவாரங்களின் வழியாகத்தான் அன்னபூரணியைத் தரிசிக்க முடியம் . 


திருமுருகனின் திருவடிகளைப் போற்றும் கௌமாரத்தில், சர்வ வியாபகத்தலம் என்று போற்றப்படும் 'பழமுதிர்ச்சோலை' ஆஜ்ஞா சக்கரத்தலமாகத் திகழ்கிறது.

'மானென்ற ஆக்கினைஇல் சச்சிதானந்தி
மணிமேவும் சதாசிவன் தன் ஒளியை நோக்கே'

என்று முருகனருள் பெற்ற போகமஹரிஷி, ஆஜ்ஞா சக்கரத்தில், சிவனாரின் ஒளியைப் போற்றுகிறார்.

'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே'என்று நக்கீரர், திருமுருகாற்றுப் படையில், பழமுதிர்ச்சோலைவாழ் முருகனை, தனக்குக் கிழவனாகக் காட்சி தந்தருளிய கந்தனைப் பாடிப் போற்றுகிறார்.

தமிழ் மூதாட்டி ஔவையை முருகன் 'சுட்ட பழம் வேண்டுமா?, சுடாத பழம் வேண்டுமா?' எனக் கேட்டு ஆட்கொண்ட திருத்தலம் இது. இறைவனின் திருச்சிலம்பிலிருந்து வெளிப்பட்ட 'நூபுரகங்கை' என்னும் வ்ற்றாத புனித தீர்த்தம் இந்தத் தலச் சிறப்புகளுள் ஒன்று.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், முருகன், வள்ளியம்மையை மணம் புரிய, விநாயகரை உதவ அழைத்த தலம் இது என்று தெரிவிக்கிறார்.  அதனால், இங்கு வெள்ளியன்று, வள்ளியம்மை, முருகனுக்கு உணவாக அளித்த தேனும் தினைமாவும் நிவேதனம் செய்யப்படுகிறது.

'மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே 
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே 

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே 
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.'

என அருணகிரிநாதர், திருப்புகழில், சோலைமலை மேவு முருகப்பெருமானைப் போற்றுகிறார்.

இறையருளால் அடுத்த பதிவில், சஹஸ்ராரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..