நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 4 மே, 2012

அநாஹதம் (ஆறாதாரமும் மூலாதாரமும்......பாகம் 4)


ஸ்ரீ மானஸா தேவி
ஸமுந்மீலத்-ஸம்வித்-கமல-மகரந்தைக-ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபா-தஷ்டாதஸ-குணித வித்யாபரிணதி;
யதாதத்தே தோஷாத் குணமகில-மத்ப்ய: பய இவ

"அம்பிகையே, நான் இரு ஹம்ஸங்களை(அன்னப் பறவைகளை) வணங்குகிறேன். அவை மலர்ந்த ஞானமாகிய தாமரை மலரில் ஆனந்தமென்னும் தேனைப் பருகுபவை. அவை, மஹான்களின் மனமாகிய தடாகத்தில் சஞ்சரிப்பவை. அவைகள் எழுப்பும் ஒலியிலிருந்து பதினெண் கலைகளும் தோன்றுகின்றன. இந்த அன்னப்பறவைகள் பாலையும் தண்ணீரையும் பிரிப்பது போல, குணத்தையும் குற்றங்களையும் பிரித்தெடுத்து விடுகின்றன." (சௌந்தர்ய லஹரி)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், இந்த ஸ்லோகத்தில் அன்னப்பறவைகளாகக் குறிப்பது சிவனையும் சக்தியையுமே. அநாஹதச் சக்கர மகிமை, இந்த ஸ்லோகத்தில் சூட்சுமமாக விளக்கப்படுகிறது. சக்கரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழும் அநாஹதச் சக்கரத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அநாஹதச் சக்கரம் இருக்கும் இடமும் அதன் வடிவமும்

அநாஹதச் சக்கரம் நம் உடலில் நெஞ்சுப் பகுதியில், இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இது மணிபூரகத்திற்கு பத்து விரற்கடை அளவு மேலே உள்ளது.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் நம் உடல் உறுப்புகளுக்கும் குறிப்பாக இதயத்திற்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அளவுக்கு மீறிக் கோபப்பட்டால், படபடப்பு அதிகரித்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் அளவுக்கு மீறினால் அது இதயத்திற்கு பாதிப்பு என்பதை நாம் அறிவோம்.

ஆகவே, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு உடலைக் கட்டுப்படுத்தும் சக்தி இருக்கிறது. பிரபஞ்ச வெளியில் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் கலந்துள்ளன. நேர்மறையான எண்ணங்கள் நம் உடல் மற்றும் மன வலிமைக்கு வழிவகுத்து, நம் வாழ்வையே, வெற்றிகரமாக்கும் சக்தி கொண்டவை.நேர்மறை எண்ணங்களே வலிமையைத் தருபவை. நேர்மறை எண்ணங்களை மனதிற்குள் அனுமதிப்பது நமக்கு நாமே செய்யும் மிகப் பெரிய உதவி. எதிர்மறை எண்ணங்களான பொறாமை, கோபம் போன்றவற்றை, நல்வாழ்வு வேண்டுவோர் மனதிற்குள் அனுமதிக்கலாகாது.

"மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம். பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். நேர்மறை, எண்ணங்களே வலிமையாகவும், எதிர்மறை எண்ணங்களே பலவீனமாகவும் உருவெடுக்கின்றன.

அநாஹத மையம், அன்பு, இரக்கம், படைப்பாற்றல்,சேவை மனப்பான்மை போன்ற நேர்மறை எண்ணங்களின் ஆதாரச்சக்கரமாகும். இந்தச் சக்கரம் தூண்டப்படும் போது, நம் எண்ணங்கள் நம் கைக்குள் வந்து, அன்பு, இரக்கம் போன்ற நேர்மறை உணர்வுகள் வலுப்பெறும். புலனடக்கம் சித்தியாகும். ஆன்மீக வளர்ச்சிக்கு இந்தச் சக்கரமே அடிப்படை.

இந்தச் சக்கரத்தில் எந்நேரமும் கடல‌லைகளின் பெருமுழக்கம் போன்ற ஒலி கேட்பதாகவும் " ஓம் " எனும் ஓங்காரமே அவ்வாறு ஒலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. சித்தர் பெருமக்கள் அந்த ஓசைக்கு, அநாஹதம் என்று பெயர் சூட்டியதால் இச்சக்கரத்திற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இச்சக்கரத்தை சாதகன் அடையும் போது, கீழிருக்கும் சக்கரங்களை அடைந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை ஆராயும் தன்மையை அடைகிறான்.

இறைவன் ஆத்ம ஸ்வரூபமாக, உயிர்களின் நெஞ்சுப் பகுதியில்(அநாஹதப் பகுதியில்), கட்டைவிரல் அளவில், ஜோதியாக இருக்கிறார்.

சக்கரங்களில், இது நடுப்புள்ளியாகும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் ஆகிய மூன்றிற்கு மேல், விசுத்தி, ஆஜ்ஞா, ஸஹஸ்ராரம் ஆகிய மூன்றிற்கும் கீழாக, நடுவில் அமைந்துள்ளது இது.

அநாஹதத்திற்கு, குண்டலினி வரும் போது அது அக்னி குண்டலினி எனப் பெயர் பெறுகிறது. அநாஹதத்திற்கு கீழ் உள்ள சக்கரங்களில் குண்டலினி ஏறும் போது, சாதகனின் முறையான பயிற்சியின்மை காரணமாக அது கீழிறங்கக்கூடும். ஆனால், அநாஹதத்திற்கு குண்டலினி வந்து விட்டால், அதற்கு மேல் கீழிறக்கமில்லை. மேல் நோக்கியே எழும்பும். ஆகவே, இதை அடைவது கடினம். சிலர் பலவருடங்கள் முயற்சி செய்தே, இச்சக்கரத்தில் குண்டலினியை அடைவித்திருக்கின்றனர். மிகுந்த பொறுமையுடன் கூடிய முயற்சி அவசியம். அநாஹதத்திற்கு கீழிருக்கும் சக்கரங்களில், சாதகனின் செயல்கள் அவனது விதிக்கும் கர்மத்திற்கும் கட்டுப்பட்டதாக இருக்கும். அநாஹதத்தை, முறையான பயிற்சியின் மூலம் அடைந்துவிட்டால், சாதகனின் செயல்கள், விதி கர்மம் இவற்றின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நிலையை அடையும்.


இது பன்னிரண்டு இதழ் கொண்ட பிரகாசமான பச்சைநிறத் தாமரை வடிவானது. அறுங்கோண வடிவத்தை உள்ளடக்கியது. இந்த அறுங்கோணத்தில் உள்ள இரண்டு முக்கோணங்களும் சிவ, சக்தியைக் குறிப்பதாகும். அதனாலேயே, ஸ்ரீ ஆதிசங்கரர் தமது ஸ்லோகத்தில் இரண்டு ஹம்ஸங்களைக் (சிவ சக்தியைக்) குறிக்கிறார். இந்தச் சக்கரத்தின் மூலக்கூறு வாயு. இந்தச் சக்கரத்தின் மையத்தில் உள்ள புகை (சாம்பல்) நிறப் படலம் வாயுவைக் குறிப்பதாகும்.

இதன் பன்னிரண்டு இதழ்களும் பன்னிரண்டு யோகநாடிகளைக் குறிக்கும். அவற்றின் சப்த பரிமாணம், ச(cham), ங(ngam), க(kam), க(kham), க(gam), க(gham), ட(tam), ட (tham), ஞ(nyam), ஜ(jham), ஜ (jam) ,ச(chham) என்னும் எழுத்துக்களால் (சம்ஸ்கிருத ஒலி வடிவம் ஆங்கிலத்தில் உள்ளது) குறிக்கப் படுகிறது.

இதன் மையத்தில் 'நமசிவாய' மந்திரத்தில் உள்ள "சி" என்னும் எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது.

இதன் பீஜ மந்திரம் "யங்" ஆகும். முறையான பயிற்சியின் மூலம் இதை உருவேற்றிவர, குண்டலினி இந்தச்சக்கரத்தை வந்தடையும்.

இதன் அதிதேவதை, நீல நிற மேனியுடன், புலித்தோல் ஆடை அணிந்த  தோற்றமுடைய‌ ஈசான ருத்ரனும், ராகினி தேவியும் ஆவார்கள்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் அநாஹதச் சக்கரத்தின் தேவதை ருத்ரன் என்பதை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

நாலி ரண்டித ழாலே கோலிய
ஞால முண்டக மேலே தானிள
ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
யோக மந்திர மூலா தாரனு
நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக

இதில் யோகமந்திர மூலாதாரனும் என்ற வரியின் பொருள், யோகத்திற்கும் மந்திரத்திற்கும் மூலமான, ஹ்ருதயக் கமலத்தில் (அநாஹதத்தில்) உள்ள ருத்திரனும் என்பது பொருளாகும்.

இந்தச் சக்கரம் சம்பந்தப்பட்ட உடலுறுப்பு, இதயம் ஆகும்.
ஸ்ரீ வைஷ்ணோ தேவி
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், அம்பிகை, அநாஹதச் சக்கரத்தில் அருளாட்சி புரியும் விதம் கீழ்க்கண்ட ஸ்லோகங்களால் தெரிவிக்கப்படுகிறது.

அநாஹாதாப்ஜ -நிலயா ச்'யாமாபா வதனத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்வலா sக்ஷமாலாதி -தரா ருதிரஸ்ம்ஸ்திதா.||

காலராத்ர்யாதி- ச'க்த்யொளக -வ்ருதா ஸ்நிக்தொளதனப்ரியா |
மஹா வீரேந்த்ர- வரதா ராகிண்யம்பா -ஸ்வரூபிணீ ||

இதன் பொருள், அநாஹதத்தில், ஒளிரும் கறுப்பு வண்ணத்தில், இரண்டு முகங்களுடன் கூடிய தோற்றத்துடன் தேவி வாசம் செய்கிறாள். ஒளிரும் முகங்களுடன் கூடிய அம்பிகை, அக்ஷமாலை முதலானவைகளை தரித்து, உயிர்களிடத்தில், உதிரமாக இருந்து அருளாட்சி செய்கிறாள்.

காலராத்ரி முதலான, பதினோரு சக்திகளைத் தன் பரிவார தேவதைகளாகக் கொண்ட தேவி, நெய் கலந்த அன்னத்தில் ப்ரியமுள்ளவளாக, மஹா வீரர்களுக்கு வேண்டும் வரமளிக்கும் தெய்வமாக, ராகினி என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.


உதிரத்தைச் சுத்திகரிக்கும் இதயமே, அநாஹதத்தோடு தொடர்புடைய உடல் உறுப்பு என்பது, இங்கு நாம் நினைவில் கொள்ளத் தக்கது.

பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.

"ஒப்பற்ற தவ முனிவரான, வியாக்ரபாதரால் வழிபடப்பட்டதும், பெரும்பற்றப் புலியூரைன்று அழைக்கப்படுவதுமான தில்லையம்பதி, ஒருமைப்பட்ட மன உணர்வோடு, சிவனாரை வணங்குவோர்க்கு சேமவைப்பாக இருப்பதாம்." (பாயிரம், திருமலைச் சருக்கம், திருத்தொண்டர் புராணம்).

பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை இகழவேண்டா
முத்தனே முதல்வாதில்லை அம்பலத்தா டுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே (அப்பர் பெருமான்)

இவ்வாறு புகழப்படும் தில்லையம்பதி என்ற சிதம்பரமே, சிவயோக நெறியில், அநாஹதத் தலமாக விளங்குகிறது.

பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்கும் இது, ஞானாகாசம் என்றும் சித்தாகாசம் என்றும் போற்றப்ப்டுகிறது. சித்+ அம்பரம் (அறிவு, பரவெளி) என்பதே சிதம்பரம்.

சிதம்பரம் ஆகாயத் தலமாதலால், இது சித்தாகாசத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அநாஹதத் தலமாகவும் விளங்குகிறது.

ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவ தறிமினே. (திருமந்திரம்)
என்பது திருமூலர் வாக்கு.

ஆதியில் ஊரின் பெயர் தில்லை. கோயிலின் பெயரே சிதம்பரம். நாளடைவில் கோவிலின் பெயரே ஊர்ப் பெயர் ஆயிற்று. இவ்வூரின் பெருமையை எழுத்தில் வடிப்பது என்பது மிக மிகக் கடினம்.


நடராசப் பெருமான் திருநடனம் புரிந்த இந்தத் தலத்தில், சிற்றம்பலம் , பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை , இராஜ சபை முதலிய ஐந்து பெருமன்றங்கள் உள்ளன. இதில் சிற்றம்பலத்திற்கு பொன்வேய்ந்த திருப்பணியைச் செய்தவர், சோழசாம்ராஜயத்தின் விஸ்தரிப்புக்கும் மகோன்னதத்திற்கும் அடிகோலியவரான முதற்பராந்தக சோழர் ஆவார். இவரது மகன் அரிஞ்சய சோழர், தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய புகழ்வாய்ந்த சோழமன்னரான ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவரின் பாட்டனார்.

இத்தலத்தில் நடந்த ஆன்மீக அற்புதங்கள் பலவாகும். அவற்றுள் சில.

1. நம்பியாண்டார் நம்பி, ஸ்ரீ ராஜ ராஜரின் உதவியோடு திருமுறைப் பதிகங்களை மீட்டெடுத்தது.

2. திருத்தொண்டர் புராணம் பாட, சேக்கிழார் பெருமானுக்கு இறைவன், "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தது.

3.உமாபதி சிவாச்சாரியார் கொடிக்கவி பாடிக் கொடியேற வைத்தது முதலான பல அற்புதங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன.

ஆகாசத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அநாஹதத்தைப் பற்றித் திருமூலர் இவ்வாறு கூறுகிறார்.

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே. (திருமந்திரம் ,மூன்றாம்தந்திரம்)

மணிபூரகத்திற்கு நான்கு விரல் மேலேயும் தொண்டைச் சக்கரத்துக்கு (விசுத்தி) இரண்டு விரற்கடை கீழேயுமுள்ள அநாகதச் சக்கரத்தில் கடல்முழக்கம் போன்று பொங்கி எழுகின்ற சப்தபரிமாணத்தைத் தியானிக்க வல்லவர்கள் நம் உடம்புக்கு உரியவனாகிய ஆன்மாவை (ஆன்ம ஸ்வரூபமாக விளங்கும் சிவனாரை) அறிந்தவராவார்.

தொண்டர்தம் புகழ்பாடும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகைக்கு இங்குசொடுக்கவும்.
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி
சிவகுமாரனாம் முருகப்பெருமானின் பெருமையைப் பாடிப்பரவும் கௌமாரத்தில், அநாஹதச் சக்கரத்திற்கானத் திருத்தலம்,திருவேரகம் என்று பெயர்பெற்ற சுவாமிமலை.
முருகப்பெருமானின் அருட்கடாட்சம் பெற்ற ஸ்ரீ போகர்,

கானென்ற அனாகதமும் கடைக்கண் பாரு
கதிரான ருத்திரன் தன் ஒளியைப்பாரு (சிவயோக ஞானம்)

என்று 54 சூரியக் கலைகளின் பிரகாசத்தைத் தன்னகத்தே கொண்டு ஒளிவடிவாய்த் திகழும் அநாஹதத்தில், சிவனாரின் காட்சியைப் புகழ்கிறார்.

"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்" என்று சிலப்பதிகாரம் போற்றும் சுவாமிமலை, ஸ்ரீ அருணகிரிநாதருக்கு, முருகன் பாத தரிசனம் தந்த திருத்தலம். இதை அவர்,

முதுமறைக்கு ளரு மா பொருட்டுள்
மொழியே யுரைத்த
தகையா தெனக்குனடி காணவைத்த
தனியேரகத்தின் முருகோனே! என்று புகழ்கிறார்.

தந்தைக்குக் குருவாக, தகப்பன் சுவாமியாக, முருகன் பிரணவப் பொருளை ஞானோபதேசம் செய்த திருத்தலம் இது. ஆகவெ, இங்கு மூலவரைப் பூஜிக்கும் போது முதலில் "நமோ குமாராய நம:" என்ற மந்திரம் உச்சாடனம் செய்யப் படுகிறது. சிவனார் முதல் முதலில் இந்த மந்திரத்தை ஓதியே முருகனைக் குருவாக ஏற்றுக் கொண்டார். சிவனாருக்கே ஓங்காரத் தத்துவத்தை உணர்த்திய‌தாலேயே, இது சதா ஓங்காரம் ஒலிக்கும் அநாஹதத் தலமாயிற்று.

குழந்தைப் பேறு அருளும் திருத்தலம் இது என்பதை

"எந்தனையாளும் ஏரகச் செல்வ,
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்."

என்ற கந்தர் ஷஷ்டி கவச வரிகளால அறியலாம். ஆகவே, இங்கு திருமணம் 
செய்வது சிறப்பு. ஸ்வாமிநாத ஸ்வாமியைத் தரிசனம் செய்யும்போது உற்று
நோக்கினால், முருகன் நின்றருளும் பீடம் ஆவுடையார் வடிவிலும் முருகப் பெருமானின் தோற்றம் பாண வடிவிலும் புலப்படும். முருகனும் ஈசனும் ஒன்றே என்ற தத்துவம் இங்கு விளங்குகிறது. இங்கு கருவறைக்கு முன் மயில் வாகனத்திற்க்குப் பதிலாக, ஐராவதம் இருப்பது மற்றொரு சிறப்பு.

முருகன், அபிஷேக வேளையில், சந்தன அபிஷேகத்தின் போது, பாலனாகவும், விபூதி அபிஷேகத்தின் போது விருத்தனாக (முதியவராக)வும், அலங்காரத்தோடு கூடிய வேளையில் இளைய பருவத்தினனாகவும் அருள் புரிகிறார் என்பது ஐதீகம்.

இங்குள்ள வஜ்ரதீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபட, பிரம்மஹத்தி தோஷம், வெண்குஷ்டம் முதலியவை நீங்கும். அழகுத்தமிழில் இவ்விறைவனைப் பலர் பாடிப் போற்றியுள்ளனர். அவற்றுள், சொக்கநாதப் புலவர், முருகனை, வாணிபச் செட்டியாராகப் பாவித்து, சிலேடையாக (இரு பொருளில்) பாடியுள்ள பாடலைப் பார்க்கலாம்.

வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே!

காயம் என்பது, உடல் எனவும் பொருள்படும், அதுபோல், சீர்+ அகம்(உள்ளம்)
எனவும் பொருள் கொள்ளலாம். ஜீரணக்கோளாறைப் போக்க உதவும் ரசம் போல, உடல் நலிவுறும் முதுமையில், உள்ள (ஆன்ம) வலிமையைத் தந்து முக்தியளிப்பது சுவாமிநாதனின் பேரருளே என்பதை இக்கவிதையில் அவர் அழகாக விளக்குகிறார்.

இறையருளால் அடுத்த பதிவில் விசுத்திச் சக்கரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..