
எம்பெருமானை நினைத்து, அவனையே புகழ்ந்து போற்றுவது அவனிடத்தில் மாறாத பக்தி கொண்ட அடியார்களுக்கு மட்டில்லா ஆனந்தத்தைத் தரும் போது, அந்த பகவானுடனேயே இருக்கும் பெரும் பேறு தரும் ஆனந்தத்தை எவ்விதம் சொல்வது?.. பேரானந்தம் அதுவே அல்லவா!!!... அத்தகையதொரு பேரானந்தத்தை, தம் தவப் பயனால் எய்திய கோப கோபியரின் பாக்கியத்தை எப்படித் துதிப்பது?!..
முற்பிறவியில் ரிஷிகளாகவும், இப்பிறவியில் கோப கோபியராகவும் அவதரித்து, பகவானுடன் சதா சர்வ காலமும் இருக்கும் பாக்கியத்தையும் அடைந்த அவர்களது வாசஸ்தலமாகிய கோகுலம், எல்லாவிதத்திலும் நிறைவுற்றும் நிகரற்றும், வி ளங்கியது!. எம்பெருமானின் திருமார்பில் அகலாது வாசம் செய்யும் ஸ்ரீலக்ஷ்மி தேவியின் திவ்ய கடாக்ஷம், ஒவ்வொரு நாளும் பெருகுவதால், குறைவில்லா த மங்களங்களைப் பெற்று, ஆனந்தம் நிரம்பியதாக விளங்கியது!.
( தி³னே தி³னே(அ)த² ப்ரதிவ்ருʼத்³த⁴லக்ஷ்மீ-
ரக்ஷீணமங்க³ல்யஸ²தோ வ்ரஜோ(அ)யம் |
ப⁴வந்நிவாஸாத³யி வாஸுதே³வ
ப்ரமோத³ஸாந்த்³ர: பரிதோ விரேஜே || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
(இந்த ஸ்லோகத்தைத் தினம் பாராயணம் செய்ய, ஸ்ரீலக்ஷ்மி தேவியின் திருவருளால், குறைவில்லாது, மங்கலங்கள் பெருகும் என்பது ஐதீகம்).
கோப கோபியர்கள், எந்தச் செயலைச் செய்தாலும், அவர்கள் மனம் பகவானிடமே இருந்தது. தங்கள் வீடுகளில், நந்தபாலனின் அழகான திருவுருவையும், புன்சிரிப்பையும் பற்றி, ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இன்புற்றார்கள். தம் தினப்படி வேலைகள் முடிந்த பின்னர், குழந்தையைப் பார்க்க, நந்தகோபரின் வீட்டுக்கு வந்து குழந்தையுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.
" மச்-சித்தா மத்-கத-ப்ராணா
போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஷ் ச மாம் நித்யம்
துஷ்யந்தி ச ரமந்தி ச " என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் அருளியதை, இங்கு நாம் தியானிக்கலாம்!.
'குழந்தை என்னைப் பார்த்துத் தான் சிரித்தான், என்னை உற்றுப் பார்க்கிறான்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, கோபியர்கள், 'என்னிடம் வா, என்னிடம் வா' என்று கரங்களை நீட்டி அழைக்க, குழந்தையும் தாவித் தாவிச் சென்றது!.. கோபியர்கள் என்ன விதமாகத் தான் குழந்தையுடன் விளையாடவில்லை?!..
( எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே. (பெரியாழ்வார்) ).
கோபியர்களின் சிவந்த கரங்கள், தாமரை மலர்களைப் போல் விளங்க, அவற்றில் மொய்க்கும் கருவண்டென, நந்தபாலன் கரத்திற்குக் கரம் மாற்றப்பட்டு விளங்கினான்!
கோபியர்களின் நிலையே இவ்விதம் இருக்கும் போது, யசோதா தேவியின் ஆனந்தத்தைச் சொல்லவும் வேண்டுமோ?!..'குழந்தைக்குப் பாலூட்டியவாறு, அதன் திருமுக மண்டலத்தைப் பார்த்து மகிழ்ந்த யசோதை அடைந்ததை விடவும், உத்தம நிலை வேறு உண்டோ?!' என்று போற்றுகிறார் பட்டத்திரி!.
(வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்நீ பிறந்தபின்னை
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே. (பெரியாழ்வார்) ).
இவ்விதம் அனைவரும் ஆனந்தக் கடலில் மூழ்கியிருந்த போது, மானிட லீலையை உத்தேசித்து, முதன் முதலாக, தானே திரும்பிக் கவிழ்ந்து கொண்டான் கோகுலானந்தன்!!.. அன்றைய தினம், குழந்தை பிறந்த திருநக்ஷத்திரமும் கூடியிருந்ததால், யசோதை, வேதியர்களையும், உற்றார் உறவினர்களையும், மற்ற கோப கோபியர்களையும் அழைத்து மரியாதை செய்து, உபசரித்துக் கொண்டாடினாள்!.. அந்த சமயத்தில், வீட்டிலிருந்த உயர்ந்த பண்டங்களை ஒரு பார வண்டியில் ஏற்றி வீட்டின் வெளியில் நிறுத்தியிருந்தாள். அதன் அருகில், கீழே குழந்தையைப் படுக்க வைத்து விட்டு, சமையல்கட்டில் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்!!..நந்தபாலன் அடுத்த லீலைக்குத் தயாரானான்!!.
(தொடர்ந்து தியானிக்கலாம்!).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது, அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..