கோகுலத்தில் நந்த பாலன் ஆனந்தமாக தன் கரங்களையும் கால்களையும் உதைத்து விளையாடி, தன் அழகிய வதனத்தின் காந்தியால், பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்து வந்தான்!.. ஆனாலும் அனைவரது மனங்களிலும் ஏதோ இனம் புரியாத பயம் குடி கொண்டிருந்தது. நந்தகுமாரனோ எல்லாம் அறிந்திருந்தும் ஏதும் அறியாத குழந்தையாக விளையாடி மகிழ்ந்திருந்தான்.
ஒரு நாள், யசோதை நந்த பாலனை மடியில் வைத்துக் கொண்டிருந்தாள். திடீரென்று, மடியிலிருந்த குழந்தை கனக்க ஆரம்பித்தது.. மேலும் மேலும் எடை அதிகமாகி, தூக்கவே கனமாக ஆகி விட்ட குழந்தையை படுக்கையிலேயே படுக்க வைத்தாள் யசோதை. கவலையும் வருத்தமும் நிரம்பிய மனதுடையவளாக, குழந்தையின் நலம் வேண்டி, பகவானைத் தியானித்துக் கொண்டே, வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்!.
அப்போது பெரும் இரைச்சலுடன் கூடிய தூசிப் படலமொன்று கிளம்பியது. அது திக்குகளை எல்லாம் நிரப்பியவாறு, குழந்தையை நெருங்கியது.. அசுரன் த்ருணாவர்த்தனே சுழல் காற்று ரூபத்தில் குழந்தையை நெருங்கியவன்!.. குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்பியும் விட்டான் அவன்!..
புழுதியால் உண்டான இருட்டினால் யாரும் எதையும் பார்க்க இயலவில்லை. புழுதி சற்று அடங்கியதும், குழந்தையைப் பார்க்க வந்த யசோதை, விட்ட இடத்தில் குழந்தையைக் காணாததால் அலறி அழ ஆரம்பித்தாள்!!. யசோதையின் அழுகுரலால் கோகுலம் நிரம்பியது!.. நந்தகோபரும் மற்ற கோப கோபியரும் விரைந்து வந்து, அழுகையின் காரணம் அறிந்து பதறினர். அனைவரும் கதறி அழ ஆரம்பித்தனர்!!.
அந்த நேரம், பகவானின் பாரம் அதிகரித்ததால், உடல் சோர்ந்து, அசைவற்றவனான் த்ருணாவர்த்தன் !. .பலமிழந்த அசுரன், குழந்தையை விட விரும்பினான். ஆனால் பிறவிச்சுழலில் இருந்து, யாவருக்கும் முக்தியாகிய விடுதலையை அளிக்கும் பரமாத்மா, அசுரனை விட வில்லை!.. இதன் விளைவாக, பாரம் அதிகமான குழந்தையுடன் அசுரன் ஆகாயத்திலிருந்து கீழே விழுந்தான்!..
கோபர்களின் இல்லங்களுக்கு வெளியே இருந்த ஒரு பெரிய பாறையில் அசுரனின் உயிரற்ற உடல் விழுந்தது!.. சத்தம் கேட்டு வெளியே வந்த கோபர்கள், பாறையின் மீதிருந்த அசுரனின் உடலையும், அவன் மார்பில் நன்றாகச் சிரித்தபடி விளையாடி மகிழ்ந்திருந்த குழந்தையையும் கண்டு அதிசயித்தனர்!!. உடனே ஓடி வந்து, பெரிய மலையின் மீதிருக்கும் நீலமணியை எடுத்துக் கொள்வது போல் கோபர்கள் எடுத்துக் கொண்டனர். உடனே, கோபியர்களின் கமலக் கரங்களை நோக்கித் தாவிப் பாய்ந்தது குழந்தை!..
முற்பிறவியில் பாண்டிய மன்னன் சஹஸ்ராக்ஷனாகப் பிறந்து, நதியில் ஜலக்ரீடை செய்யும் சமயத்தில், நீரை அசுத்தம் செய்ததற்காக துர்வாச முனிவரிடம் சாபம் பெற்று, திருணாவர்த்தனாக மறுபிறப்பெடுத்திருந்த அசுரன், பகவானின் ஸ்பரிசம் பட்டதும் சாப விமோசனம் என்ற துர்வாச முனிவர் வாக்கின்படி, சாபம் தீர்ந்தது மட்டுமல்லாது, பிறவிச்சுழலும் தீர்ந்து நற்கதியை அடைந்தான்!.. பெரியோர்களின் சாபமும் ஆசியே அல்லவா?!!.
'கோவிந்தன் தான் நம் குழந்தையைக் காக்க வேண்டும்'...என்று தாய் தந்தையராலும் மற்றவர்களாலும், தன்னைக் காக்கா தானே பிரார்த்திக்கப்பட்டதை அறிந்தும் அறியாதது போல் சிரித்து மகிழ்ந்திருந்தான் நந்த பாலன்!!.
இவ்விதம் கூறி வரும் பட்டத்திரி, காற்று ரூபமெடுத்த அசுரனை வதம் செய்த எம்பெருமான், ஏன் தம்முடைய வாத நோயை நாசம் செய்யவில்லை?..என்று ஏங்கி, தம்முடைய எல்லா நோய்களையும் மீதி இராமல் போக்குமாறு பகவானைப் பிரார்த்திக்கிறார்!.
( வாதாத்மகம்ʼ த³னுஜமேவமயி ப்ரதூ⁴ன்வன்
வாதோத்³ப⁴வான்மம க³தா³ன்கிமு நோ து⁴னோஷி |
கிம்ʼ வா கரோமி புனரப்யநிலாலயேஸ²
நிஸ்²ஸே²ஷரோக³ஸ²மனம்ʼ முஹுரர்த்த²யே த்வாம் ||...(ஸ்ரீமந் நாராயணீயம்) ).
இங்கு நோயாகக் கூறப்படுவது உடற்பிணியை மட்டுமல்லாது, பிறவிச் சுழலுக்குக் காரணமான கொடும் வினைகளையும் குறிக்கும். அவற்றைத் தீர்த்து, தம்மை வாழ்வித்தருள வேண்டுகிறார் பட்டத்திரி!.
"கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் அதுநிற்கவந்து
மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்
திண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த்துய்மினோ
எண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே"
என்ற நம்மாழ்வார் திருவாக்கினை இங்கு பொருத்தி, நாம் தியானிக்கலாம்!..
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி..கூகுள் படங்கள்.
இது, 'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..