மனதில் தோன்றும் எண்ணங்கள், விருப்பங்கள் குறித்துக் கவனமுடன் இருக்க வேண்டுமெனக் கூறாத பெரியோர்களோ, அறநூல்களோ இல்லை!!.. ஆயினும் மனிதன் அவ்விதம் நடக்கிறானா??!!.. அதுவும், மண்ணில் பிறவிகள் தொடரும் போது, ஒரு பிறவியில் மனதில் தோன்றும் விருப்பங்கள், அவற்றின் வலிமையால், தொடரும் பிறவிகளில் இறையருளால் நிறைவேறுகின்றன. அவை நல்லவையாக இருந்தால் எல்லோருக்கும் நலம்!!..இல்லாமல் போனாலோ....
ஆனால் இறைவனைக் குறித்த விருப்பங்கள், அவை எவ்விதமாயினும், இறைவனினடமே கொண்டு சேர்க்கின்றன!!.. பக்தியால் மட்டுமின்றி, விரோதத்தினால் கூட தன்னை அடையலாம் என்று அனுக்கிரஹித்திருக்கிறானே அந்தக் கருணைக் கடல்!!...இதன் அடிப்படையில், பூதனையின் முற்பிறவியைப் பற்றி, இப்போது பார்க்கலாம்!.. வாருங்கள் வாமனாவதார காலத்திற்குச் செல்லலாம் !!..
மஹாபலிக்கு, 'ரத்னமாலா' என்று ஒரு மகள் இருந்தாள். மஹாபலி, வேள்வி நடத்திய போது, அவளும் அங்கிருந்தாள்!.. யாக சாலையில், பகவான், வாமனராக, தேஜோமயமாக நுழைந்த போது, ரத்னமாலா, அந்த தெய்வக் குழந்தையின் அழகால் கவரப்பட்டாள்!..'ஆஹா!.. இந்தப் பாலகன் என் மகனாக இருந்தால்...' என்று ஒரு எண்ண ஓட்டம் அவள் மனதுள் ஓடியது.. ஆனால், அந்தோ!!. பகலுக்கும் இரவுக்கும் எத்தனை தூரம்?!!.. சிறிது பொழுதில், வாமனன், திரிவிக்ரமனானான்!!... மஹாபலி பாதாளம் சென்றான் !.. பகவான், தன் தந்தையை வேடமிட்டு வஞ்சித்ததாக எண்ணிக் கோபம் கொண்டாள் ரத்னமாலா !!... அவளது கோபம், சீற்றமாக உருவெடுத்தது!!.. தந்தையை வஞ்சித்தவனைக் கொல்ல வேண்டுமென்பதாக அவள் எண்ணம்!!.
.அந்தப் பிறவி முடிந்தது!!.. தொடர்ந்த பிறவியிலும் அசுரத் தன்மையுடனேயே பிறந்தாள்!!..'பவித்ரமற்றவள்' என்னும் பொருள் கொண்ட, 'பூதனா' என்ற பெயர் கொண்டாள்!..கம்சனின் சேவர்களுள் முதன்மையானவளானாள்!!..
யோகமாயை கூறியதை, தன் அரசனான கம்சன் வாயிலாக அறிந்த அவள், பகன், பிரலம்பன் முதலான அசுரர்களோடு, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொல்லும் கொடிய நோக்கத்துடன் பல திசைகளிலும் பல ஊர்களிலும் அலைந்து, தன் நோக்கத்தை நிறைவேற்றி வந்தாள்!!.
நந்தகோபர், கம்சனுக்குக் கப்பம் கட்டுவதற்காக, மதுராவிற்குச் சென்றார்!.. அப்போது, சிறையிலிருக்கும் தன் நண்பரான வசுதேவரைச் சந்தித்தார்!!..வசுதேவருக்கு, கம்சனின் ஆட்கள், சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்குச் செய்யும் தீங்கு தெரிந்தே இருந்தது!. அதை நந்தகோபருக்கு மறைமுகமாக அறிவிக்க விழைந்த அவர், நந்தகோபருக்கு மகன் பிறந்ததற்கான தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு, அபசகுனங்கள் பெருகி வருவதாகவும் அதனால் நந்தகோபர், தாம் வந்த காரியம் முடிந்ததும் தாமதிக்காமல் திரும்பிப் போக வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்!. வசுதேவர் கூற வந்ததை உணர்ந்து கொண்ட நந்தகோபர், தம் குழந்தைக்குத் தீங்கு நேரிடக் கூடும் என்று அஞ்சி, விரைவில் கோகுலம் திரும்பினார்.
அவர் கோகுலம் நோக்கி வந்து கொண்டிருந்த சமயத்தில், (தேன் நிரம்பிய பூக்களைச் சூடியதால்) வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய, மிக அழகிய வடிவுடைய ஒரு இளம் பெண், கோகுலத்தில், நந்த பாலனின் அருகில் வந்தாள்!!...'இத்தனை அழகுடைய இந்தப் பெண் யார்?' என்று கோகுலத்துப் பெண்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொது, அழகிய பெண் வடிவில் வந்திருக்கும் அரக்கியான பூதனை, நந்த பாலனை கையில் எடுத்துக் கொண்டு விட்டாள்!.அவளது தோற்றத்தையும் நடத்தையையும் கண்டு,மயங்கிய பெண்கள் அவளைத் தடுக்கவில்லை.. அவள் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு, குழந்தைக்கு பாலூட்டத் துவங்கினாள்.
அவள் தூக்கியதும், கொஞ்சமும் அச்சமின்றி அவள் மடிக்குச் சென்றது குழந்தை.. ஏதுமறியா சிறு குழந்தைகளை அவள் கொன்று வருவதால் ,அவள் மேல் கோபம் மிகக் கொண்ட அந்த சிசு, அவள் விஷம் பூசிய முலைகளின் வழியே, அவளது உயிரையும் சேர்த்து அருந்தலானது!!.
ஸமதிருஹ்ய தத³ங்கமஸ²ங்கிதஸ்த்வ
மத² பா³லகலோபனரோஷித: |
மஹதி³வாம்ரப²லம்ʼ குசமண்ட³லம்ʼ
ப்ரதிசுசூஷித² து³ர்விஷதூ³ஷிதம் ||(ஸ்ரீமந் நாராயணீயம்).
உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்,
கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன்,
குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே. (நம்மாழ்வார்).
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது, 'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
நலம் தானே..
பதிலளிநீக்குநாங்கள் ஆவலுடன்
எதிர்பார்த்து
ஏங்கும்
தங்கள் பதிவுகளின் எண்ணிக்கை
தற் சமயம் குறைந்து வருகிறதே..
ஏன் சகோதரி...
எங்கள் மீது கோபம் இல்லையே..
உங்கள் கருத்துரை பார்த்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உடல் நலப் பிரச்னை தான்.வேறொன்றுமில்லை. விரைவில், தொகுப்பு வலைப்பூவில், கந்தரலங்காரம் தொடங்கலாமென விருப்பம். இறையருளையும் தங்கள் ஆசியையும் எதிர்பார்க்கிறேன்!.
நீக்கு