நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 4 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU... SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 7


பதிகம் # 7

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
பாசத்தின் வேரை அகற்றுகின்ற, பழமையான முதற்பொருளாகிய தன்னை (சிவனை) அடையும் வழியை அடியேனுக்குஅருளி, அடியேன் செய்த பூசனைகளை உகந்து ஏற்று, அதன் பலனாக, என் சிந்தையின் உள்ளே புகுந்து, தன் பூங்கழலிணைகளைக்  காட்டியருளிய பரம்பொருளே!, ஒளியுடைய விளக்கே!, விளக்கினுள் தோன்றும் செழுமையான சுடர் வடிவினனே!, அடியார்களது செல்வமே!, சிவபெருமானே!, ஈசனே!...உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளுவது?.

சற்றே விரிவாக..

'பாசத்தின் வேர்' என்பதை, பந்த பாசமாகிய பற்றுதல்களின் வேர் என்பதாகப் பொருள் கொள்ளலாம்.. சித்தாந்தக் கருத்துக்களின் வழியாக, சிந்திக்கும் போது, 'பாசம்' என்பதை,  முப்பொருள் உண்மைகளுள் ஒன்றாகிய பாசம் என்பதாகப் பொருள் கொண்டு, உயிர்களைப் பிணிக்கும் தளைகளாகிய ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். இவற்றின் வேரை அகற்ற வல்லவன் இறைவனே ஆகையால், 'பாச வேரறுக்கும்' என்றார். 

பரந்த, இந்தப் பிரபஞ்ச முழுமைக்கும் முற்பட்ட முதன்மையான‌ பரம்பொருளாக இறைவன் இருக்கிறான் என்பதை, 'பழம் பொருள்' என்றார்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே(திருவெம்பாவை)

தன்னை அடையும் வழியைக் காட்டியருள வல்லவன் இறைவனே. அவனே குருவடிவம் தாங்கி, தன்னை அடையும் வழியைக்  காட்டுகிறான். அவ்வாறு, இறைவனே அருள் சுரந்து, ஞான குருவாக உபதேசம் தந்து, தன்னை அடையும் வழியைக் காட்டியருளியமையை, 'பற்றும் ஆறு அடியேனுக்கு அருளி' என்றார்.

சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குரு பதம் உள்ளத்து வந்ததே.(திருமந்திரம், ஆறாம் தந்திரம், திருவடிப் பேறு)

இறைவனை அடையும் பொருட்டு, இறைவன் உகக்கும் முறையில், தாம் பூசனை முதலிய கிரியைகளைச் செய்து வழிபட்டதை, 'பூசனை உகந்து' என்றார். பூசனை முதலிய கிரியைகளை இறைவன் உகந்து அருளுதலும் இவ்வரியில் குறிக்கப்பட்டது..

பூசனைகளை ஏற்ற இறைவன், தம் சிந்தை உட்புகுந்து, பூங்கழலிணைகளைக் காட்டியருளியமையை 'சிந்தையுட்புகுந்து, பூங்கழல் காட்டிய பொருளே' என்றார்.

இறைவனது திருவடிகளின் மென்மை, 'பூங்கழல்' என்பதாகக் குறிக்கப்பட்டது..

புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க(சிவபுராணம்)

'தமது சிந்தையின் உள்ளே புகுந்தான் இறைவன்' என்று வாதவூரார் உரைத்தலால், இறைவன் அகக் காட்சி அருளிச் செய்தமை புலப்பட்டது..

'ஒளியுடைய விளக்கு' என்னும் பொருள் வருமாறு 'தேசுடை விளக்கே' என்று உரைத்தார். ஆயினும் இதற்கு வேறொரு பொருளும் கூறப்படுகின்றது..'தேசுடை விளக்கு' என்பது இங்கு இறைவனது சொரூப நிலையினைக் குறிக்கிறது..சொரூப நிலையாவது இறைவனின் இயற்கை நிலையாகும்.. தேசு என்றால் ஒளி என்பது பொருள். பேரொளிமயமான இறைவனது இயற்கைத் தன்மையை, சொரூப நிலையை விளக்குகிறார் வாதவூரார்.

இறைவன் பேரொளிமயமான தம் அருவுருவத் திருமேனியிலிருந்து உருவத் திருமேனி தாங்கி வருவது, உயிர்களுக்கு அருள் புரியும் பொருட்டு.. இறைவன் ஐந்தொழிற்படுவதன் மூலம் உயிர்களுக்கு அருள் புரிகின்றார்.. இவ்வாறு ஐந்தொழிற்படும் (படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல்)  நிலையே தடத்த நிலை..

 சொரூப நிலையிலிருந்து  இறங்கி வந்து, உயிர்களை உய்விக்கும் பொருட்டு, இறைவன் தடத்த நிலை ஏற்றல் 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்பதாகக் குறிக்கப்படுகின்றது.. 

'தேசு' என்ற சொல்லின் மூலம் இறைவனது பேரொளி மயமான சொரூப நிலையையும், 'மூர்த்தி' என்ற, இறைவனது உருவத் திருமேனியைக் குறிக்கும் சொல்லின் மூலம்   தடத்த நிலையையும் குறிக்கிறார் வாதவூரார்.

ஒவ்வொரு பதிகத்திலும், 'செல்வமே' என்று எம்பிரானைக் குறிக்கின்றார். உயிர்களின் நிலையான செல்வம் சிவபெருமானே!.. அதை அடைவதே மனித வாழ்வின் நோக்கம். இதைக் குறிக்கவே அவ்வாறு உரைக்கின்றார்.

'ஈசன்' என்ற சொல்லுக்கு 'ஆள்பவன்' என்று பொருள்.

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி (சிவபுராணம்).

ஈசன் எந்தை இணையடி நீழலே(அப்பர் பெருமான்)

இறைவனது திருவடியைப் பற்றிப் பிடிப்பதால் வீடு பேறு என்னும் பெரும் பேறு கிட்டும்..அங்ஙனம் தான் உறுதியாகப் பற்றிப் பிடித்ததன் காரணமாக, இறைவன் தம்மை ஆண்டருளியதைக் குறிக்கவே 'ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார்..

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..