நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 7 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 10...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.. பதிகம் # 10.


பதிகம் # 10.

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 


பொருள்:

"புன்மையான, நிலையற்ற, மாமிசத்தால் ஆன இந்த உடல், புளகாங்கிதம் எய்தி, பொன்னாலாகிய கோயிலே இது என்று  கொள்ளும்படியாக, அதனுட் புகுந்து,  (ஆனந்தத்தால்) எலும்புகளெல்லாம் உருகுமாறு செய்து, எளியேனாகிய என்னை ஆட்கொண்டருளிய ஈசனே!, குற்றமில்லாத மணியே, துன்பம், பிறப்பு, இறப்போடு, மயக்கமும் ஆகிய பற்றுதல்களை எல்லாம் அறுத்த சோதி வடிவானவனே!..நிலையான இன்பமே, உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது?..."

சற்றே விரிவாக..

மாமிசத்தால் ஆன இவ்வுடல் நிலையற்றதாகையால் 'புன்மையானது' என்னும் பொருள் வருமாறு 'புன்புலால் யாக்கை' என்றார்.

'புரைபுரை கனிய' என்று, இறைவன் நினைவால், உடல் புளகாங்கிதம் அடைவதைக் குறித்தாரெனினும், இங்கு 'புரை' என்பது, 'உள்ளறை' என்னும் பொருளும் கொண்டு,  ஏழு வகைத் தாதுக்களால் ஆன தூல தேகத்தையும், சூக்கும, காரண  தேகங்களையும் ஒரு சேரக் குறித்தது..

(ஏழு வகைத் தாதுக்கள்....

    இவனும் யான் துவக்கு உதிரம் இறைச்சி மேதை
    என்பு மச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
    அவம்அகல எனை அறியேன் எனும்ஐயம் அகல
    அடி காட்டி ஆன்மாவைக் காட்டலானும்.(சிவஞான சித்தியார்).

தூல,சூக்கும, காரண தேகங்கள் கனிந்தது, பதி ஞானமாகிய, இறைவனைக் குறித்த ஞானத்தினாலாம். ஆகவே, 'புரைபுரை கனிய' என்றார். இதே பொருள் வருமாறு அருளப்பட்ட கோயில் திருப்பதிகப் பாடல்..

அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.(கோயில் திருப்பதிகம்).

கனிந்து நின்ற இவ்வுடலை, பொன்னாலான கோயில் என்று எண்ணுமாறு, இறைவன், அதனுள் எழுந்தருளியமையை, 'பொன்னெடுங் கோயிலாப் புகுந்து' என்றார். ஆயினும் 'பொன்னெடுங் கோயில்' என்பதற்கு வேறொரு பொருளும் கொள்ளலாம்.. இங்கு 'பொன்னாலான' என்று பொருள் கொள்ளாது, 'பொன் போலும் ஒளி பொருந்திய' என்று கொண்டோமானால், 'பிரணவ தேகம்'  என்னும் ஒளியுடல் பெறுதலையே இது குறிப்பதாகக் கொள்ளலாம்.. 'பிடித்த பத்து' பதிகங்கள், முத்திக் கலப்புரைத்தலைச் சொல்பவை ஆதலினால், நிறைவுப் பதிகமான இந்தப் பதிகத்தில், இறைவன், ஒளியுடல் அருளி, தம்மை ஆட்கொண்டமையைச் சொல்வதாகக் கொள்ளலாம்.

துன்பம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என் தனக்கே
அன்பகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் – இன்புருவம்
தாங்கினேன் சாகாத் தனிவடிவாம் பொற்றொளியால்
ஓங்கினேன் உண்மை வரை.(திருவருட்பா).

பொன்னுடம் பெனக்கு பொரிந்திடும் பொருட்டா 
என்னுளம் கனிந்த என்றனி அன்பே.
(திருவருட்பா).

'என்பெலாம் உருக்கி' என்றது, எலும்புகளும் உருகுமாறு, பேரானந்த நிலையை அருளிச் செய்தமையைக் குறித்தாம்.

துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத் 
          துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை 
     என்பொலா மணியை என்சிகா மணியை 
          என்னிரு கண்ணுள்மா மணியை 
     அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை 
          அருட்பெருஞ் ஜோதியை அடியேன் 
     என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த 
          எந்தையைக் கண்டு கொண் டேனே. (திருவருட்பா)

எளியேனாகிய தம்மை, உலகனைத்தையும் ஆள்பவனாகிய ஈசன், தம் நிலைக்கு(சிவசாயுச்சிய நிலைக்கு) உயர்த்தியமையை, 'எளியையாய் ஆண்ட ஈசனே' என்றார்.

உலகில், குற்றங்குறையுடைய மணிகள் பலப்பல இருக்க, செந்நிறமுடைய மணியாகிய சிவபிரானுக்கு அத்தகைய தன்மைகள் ஏதும் இல்லை.. ஆகவே, 'மாசிலா மணியே' என்றார். சிவப்பரம்பொருளின், குற்றமற்ற, பூரணமான நிலையை விளக்கும் பொருட்டும் 'மாசிலா மணியே' என்று கூறியதாகக் கொள்ளலாம்.

மென்னிழற் றருவை யடைபவர் தம்மை 
விடாநிழல் விட்டிடு மாபோ 
னின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து 
நீங்கலா வினையுநீங் குறுமே 
கன்னலிற் கனியிற் சுவைதரு மமுதே 
கண்மணி யேயருட் கடலே 
யென்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு 
மீசனே மாசிலா மணியே. (குறுங்கழி நெடில்)

தேன்என இனிக்கும் திருவருட் கடலே 
          தெள்ளிய அமுதமே சிவமே 
     வான்என நிற்கும் தெய்வமே முல்லை 
          வாயில்வாழ் மாசிலா மணியே 
     ஊன்என நின்ற உணர்விலேன் எனினும் 
          உன்திருக் கோயில்வந் தடைந்தால் 
     ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா 
          ஈதுநின் திருவருட் கியல்போ. (திருவருட்பா)

 துன்பம் நிறைந்த இவ்வுலக வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என்னும் பெருஞ்சுழல், இவை எல்லாம் மாயை என்று எண்ணாது நிஜமே என்று எண்ணும் மயக்கம் ஆகிய பற்றுதல்களை எல்லாம் நீக்க வல்லவன் எம்பிரான்...இந்தப் பற்றுதல்களை எல்லாம் இறைவன் நீக்குவித்து, தம் சோதி வடிவைக் காட்டியருளியமையை, 

'துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ'
என்றார்.

திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.(அப்பர் சுவாமிகள்)

இறைவன், நிலையான இன்ப வடிவினன்... ஆகையினால் இறைவனை 'இன்பமே' என்றார். அத்தகைய தன்மை கொண்ட‌ இறைவனை, 'உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்' என்னும் பொருள் தோன்ற 'உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார். 

'சோதி' என்றும் 'இன்பம்' என்றும் இறைவனைச் சொல்லி, அதன் பின், இறைவனை உறுதியாகப் பற்றியமை சொல்லப்படுவதால், இறைவனது திருக்காட்சியும் அதன் காரணமாக, இறைத்தன்மையை உணரும் அறிவும் அருளப் பெற்று, இறைவனோடு இரண்டறக் கலந்த முத்தி நிலை கிட்டப் பெற்றதால், 'இறைவனோடு தாம் என்றும் இணைந்திருக்கும் நிலை எய்தியமையைக்'  குறிப்பால் உணர்த்துவதாக, 'எங்கெழுந்தருளுவது இனியே!!' என்றார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!.

'பிடித்த பத்து' பதிகங்கள் நிறைவடைந்தன.

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..