நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 6 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 9... மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 9.


பதிகம் # 9

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
குழந்தையின் பசி வேளை அறிந்து, காலம் தவறாது பாலூட்டும் தாயை விடவும்

மேலான அன்புடன், பாவியேனாகிய என், உடலை உருக்கி, உள்ளொளியாகிய ஞானத்தைப் பெருக்கி, அழியாத ஆனந்தமாகிய பேரானந்தத் தேனைச் சொரிந்து, என்னைப் புறத்தேயும் காத்தருளிய அருட்செல்வமே, சிவபெருமானே, நான் உனைத் தொடர்ந்து உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.  நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?!!

சற்றே விரிவாக..

குழந்தை பசியில் அழும் வரை காத்திராது, காலம் அறிந்து பாலூட்டும் தாயே, தாய்மார்களில் சிறந்தவள்..அத்தகைய தாயினும் மேலான அன்புடையவன் இறைவன். உயிர்களின் பால் அவன் கொண்டுள்ள அன்புக்கு ஈடேது?.. ஆகவே, 'தாயினும் சாலப் பரிந்து' என்றார்.

ஓய்வி லாதன உவமனில் இறந்தன
    ஓண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்
    என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன்
    தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
    செழுங்கடல் புகுவேனே. (திருச்சதகம்).

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே(திருமந்திரம்).

மண்ணுலகத்தில், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்  தாயால், இவ்வுடலை மட்டுமே பாலூட்டி வளர்க்க இயலும். உள்ளத்தில் மறைந்தொளிரும் ஞான ஒளியை வளர்க்க வல்லவன் இறைவன் ஒருவனே!!... இதன் காரணமாகவும், இறைவனைத் தாயினும் மேலானவன் என்றார்.

கர்மவினைகளால் பிணிக்கபட்டுள்ளமையால், 'பாவியேன்' என்றார். வினைகளை, இறைவன் தம் கருணையால் நீக்கி,தம்மை ஆட்கொண்டு அருள் செய்த விதத்தினை அடுத்து வரும் வரிகளில் உரைக்கிறார்.

இறைவனால் ஆட்கொள்ளப்படும் நிலையில், முதலில் அன்பு மேலீட்டால் உடல் உருகும்.. அதாவது, உடல் புளகாங்கிதம் அடைவது முதலான மாற்றங்கள் தோன்றும். அதன் பின், உள்ளம் இறைஞானத்தைப் பெறும். ஞான ஒளி பெற்ற உள்ளத்தில், மாயத் திரை விலகப் பெற்று, பரந்த இப்பிரபஞ்சமெங்கும் சிவமே நிற்கும் அண்டவெளிக் காட்சி அருளப் பெறும். இதனையே 'ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி' என்றார்.. இதே பொருள் தோன்றும் வகையில் அமைந்துள்ள மற்றொரு திருச்சதகப் பாடல்...

வான நாடரும் அறியொ ணாதநீ
மறையி லீறும்முன் தொடரோ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே.

பேரானந்தம் ஒன்றே அழிவில்லாதது.. நிரந்தரமானது.. ஆகவே 'உலப்பிலா ஆனந்தமாய' என்றார்.

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி 
மானோர் நோக்கி மணாளா போற்றி(போற்றித் திரு அகவல்)

பேரானந்த நிலையை, தேனாக உருவகம் செய்தார். பேரானந்தத் தேனைச் சொரிந்து, தம் அகத்தை மட்டுமல்லாது, புறத்தையும் காத்தருளினான் எம்பிரான் என்னும் பொருள் வருமாறு, 'தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த' என்றாராயினும், உள்ளுறையாக, அகவழிபாட்டின் சிறப்பைத் தெரிவிக்கிறார்.

 உயிர்கள், மும்மலங்கள் நீங்கித் தூய்மை பெற வேண்டுமெனில், அதற்கு அகவழிபாடே சிறந்தது..முறையான பயிற்சியின் மூலம், தியான நிலையில், இறைவனை, அகத்தே எழுந்தருளச் செய்து வழிபடும் போது, இறைவன் அகத்தே எழுந்தருளி,  உயிருக்கு, தனது பேரானந்த நிலையை அருளிச் செய்வான். அதாவது, முத்தி அருளுவான். பேரானந்த நிலையின் பிரவாகத்தைக் குறிக்கும் விதமாக, 'ஆனந்தமாய தேனினைச் சொரிந்து' என்றார்..

இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம்
எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன்
வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும்
மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால்
சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி
தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப் 
பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப் 
பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே (சிவஞான சித்தியார்).

அகத்தே மட்டுமல்லாது புறத்தேயும் காப்பவன் இறைவன் என்னும்  பொருள் வருமாறு 'புறம் புறம் திரிந்து' என்று உரைத்தார் வாதவூரார். இறைவன் அகவழிபாடு செய்வோருக்கு மட்டுமல்லாமல், புற வழிபாடு செய்வோருக்கும் அருள்பவன் என்பது இதன் உள்ளுறை.

எம்பெருமானே சிவஞானத்தால் பெறப்படும் பெருநிதி. ஆகவே, 'செல்வமே சிவபெருமானே!!..' என்றார்.

இறைவனை, விடாது தொடர்ந்து உறுதியாகப் பற்றிப் பிடித்தமையை, 'தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்' என்றார். எனினும், இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் 'தொடர்ந்து' என்னும் சொல், மிகுந்த பொருளாழமுடையது..இறைவனை அடைய வேண்டுமெனத் தொடர்ந்து முயற்சி செய்து,  இறைவனை, உள்ளத்தில் தொடர்ந்து சிந்தித்து, அதன் பலனாக, இறையருளையும் முத்தி நிலையையும் அடைந்தமையை,  வாதவூரார் இங்கு குறிப்பாக  உரைத்ததாகவும் கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..