பதிகம் # 6.
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
பொருள்:
ஆதரவில்லாத அடியேனுடைய மனதையே கோயிலாகக் கொண்டு, அளவில்லாத ஆனந்தமாகிய பேரானந்த நிலையை அருளி,
என் ஆன்மாவின் பிறப்பிறப்புச் செடியின் வேரைக் களைந்து, என் குடி முழுவதையும் ஆண்ட, தலைக்கோலமுடையவனே!..,பெரிய, பெருமையுடைய, எம் மெய்ப்பொருளே!..., திறந்த வெளியிலே அடியேன் கண்ட காட்சிப் பொருளே, அழிவற்ற செல்வமே!....., சிவபெருமானே!..., இறுதியாக, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளிச் செல்வது?/
என் ஆன்மாவின் பிறப்பிறப்புச் செடியின் வேரைக் களைந்து, என் குடி முழுவதையும் ஆண்ட, தலைக்கோலமுடையவனே!..,பெரிய, பெருமையுடைய, எம் மெய்ப்பொருளே!..., திறந்த வெளியிலே அடியேன் கண்ட காட்சிப் பொருளே, அழிவற்ற செல்வமே!....., சிவபெருமானே!..., இறுதியாக, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளிச் செல்வது?/
சற்று விரிவாக...
இறைவன் ஒருவனே உயிர்களின் நிரந்தரமான ஆதரவு... மற்ற உலகியல் உறவுகளின் ஆதரவு நிலையில்லாதது..ஆகவே, நிரந்தரமான ஆதரவைப் பெறும் பொருட்டு, தம்மை 'அறவையேன்' என்றார்..
மெய்யடியார் நெஞ்சகமே இறைவன் உறையும் திருக்கோயில்
உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் (திருமூலர்)
பேரானந்த நிலை எனப்படுவதே 'அளவிலா ஆனந்தம்' எனப்பட்டது...
ஒரு உயிர், தன் கர்மவினையால், மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுக்கின்றது.. ஒவ்வொரு பிறவியிலும், அதன் கர்ம வினைகள் சேர்ந்து கொண்டே போகின்றன.. இந்நிலை, கிளைகளும் தழைகளுமாகச் செழித்து ஓங்கி வளரும் ஒரு செடிக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது... இந்தச் செடியின் வேரற்றுப் போகுமானால், மீண்டும் பிறப்பு என்பது நிகழாது..மாயையால் பிணிக்கப்பட்டிருக்கும் செடியின் வேராகிய கர்மவினை, ஈசனருளால் அற்றுப் போகும்... ஆகவே, 'பிறவி வேர் அறுத்து' என்றார்.
'குடி என்பதை, இங்கு அடியார்களின் குழாம் என்பதாகக் கொள்ளலாம்.. இறையடியார்களுக்கு, அவர்களைப் போன்ற மெய்யன்பர்களே உண்மையான சுற்றம்..இறையடியார்களின் கூட்டுறவாகிய 'சத்சங்கம்' இறையருளைப் பெறும் வழிகளுள் ஒன்று..ஆகவே, தம் போன்ற அன்பர்கள் அனைவரையும் இறைவன் ஆட்கொண்டு அருளும் பான்மையைக் குறிக்க, 'குடி முழுதாண்ட' என்றார்.
'பிஞ்சம்' என்ற சொல்லுக்கு, மயிற்பீலி என்பது பொருள்.. மயிற்பீலி சூட்டி சிகையை அழகு செய்வது வழக்கம்...
அது போல், தன் சடைமுடியில், இளம்பிறை, குளிர்ந்த கங்கை நதி, பொன்னிறமான கொன்றை மாலை முதலியன அணிந்த தலைக்கோலமுடையவன் எம்பெருமான். ஆகவே, எம்பிரானைப் 'பிஞ்ஞகன்' (தலைக்கோலமுடையவன்) என்றார்.
அது போல், தன் சடைமுடியில், இளம்பிறை, குளிர்ந்த கங்கை நதி, பொன்னிறமான கொன்றை மாலை முதலியன அணிந்த தலைக்கோலமுடையவன் எம்பெருமான். ஆகவே, எம்பிரானைப் 'பிஞ்ஞகன்' (தலைக்கோலமுடையவன்) என்றார்.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க(சிவபுராணம்).
நிரந்தரமான கோலம் எம்பிரானுடையதே, மற்றவையெல்லாம் அழியக்கூடியதே என்பதை, இவ்வரி குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்..
'அரிய' என்பதை 'அருமையான' என்ற பொருளில் வழங்குதல் போல், இங்கு 'பெரிய' என்பது 'பெருமையான' என்ற பொருளில் கையாளப்படுகின்றது...பெருமைக்குரியவன் இறைவன் ஒருவனே என்பதாகவும், 'பெரிய' என்பதன் இயல்பான பொருள் தோன்றும் வகையில் 'இறைவனே மிகப் பெரியவன்' என்று சொல்லப்படுவதாகவும் பொருள் கொள்ளலாம்..
உண்மையான பரம்பொருள் இறைவனே!. இறைவன் அடியார்களுக்கே உரியவன் ஆதலினால் 'எம் பொருள்' என்றார்.
மாயையின் திரை விலகித் தோன்றும் அண்ட வெளிக்காட்சியின் கண் தோன்றியருளுபவன் இறைவன். ஆதலினால் 'திறவிலே கண்ட காட்சியே' என்றார்.
அடியார்களின் நிலையான செல்வம் சிவபெருமானே.
இறவு= அழிவு. அழிவு நேருங் காலத்தில், இறைவனை முழு நம்பிக்கையுடன் பற்றிப் பிடித்து, சரணடைந்தால், இறைவன், அவருக்கு முத்தி நிலை அருளுவான். இறுதியில் தம்மைப் பற்றிப் பிடித்தவர் எனினும் அவரையும் தம் பெருங்கருணையால் கடைத்தேற்ற வல்லவன் எம்பிரான் என்பது விளங்குதற் பொருட்டு, 'இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார்..அங்ஙனம் பற்றிப் பிடித்த அடியாரை விடுத்து, தனித்து வேறெங்கும் எழுந்தருளுவது இறைவனுக்கு இயலாததால், 'எங்கெழுந்தருளுவது இனியே...!!' என்றார்.
திருச்சிற்றம்பலம்.
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!..
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..