நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI....அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே


திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
(வள்ளலார் பெருமான்.)
இன்றைய தினம் தைப்பூசம். உலகெங்கிலுமுள்ள முருகபக்தர்களால் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படும் விழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரியன் சிவாம்சம் உடையவரென்றும், அவரது ஒளி சக்தி அம்சமுடையது என்றும், சூரியனது வெப்பமே முருகன் என்றும் கூறுவதுண்டு. சூரியனது தேர் அச்சு வடக்கு நோக்கித் திரும்பும் உத்தராயணப் புண்யகாலத்தில், வரும் தைப்பூச தினம் முருகப் பெருமானுக்கு உகந்ததாகச் சிறப்பிக்கப்படுகிறது.உமையம்மையிடமிருந்து, முருகனார், சக்தி வேல் வாங்கிய திருநாளே தைப்பூசம். ஆகவே, முருக பக்தர்கள், காவடி சுமந்தும், பால்குடங்கள் தாங்கியும், முருகப்பெருமான் அருளாட்சி புரியும் தலங்கள் தோறும் வந்து தரிசிக்கின்றனர்.

பெரும்பாலான முருகன் ஆலயங்களில் தெப்பத் திருவிழாக்களும், தேர்த்திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

முருகபக்தர்கள், தைப்பூச தினத்தில், உபவாசமிருந்து,  கந்தபுராணம் என்னும் கடலையே தன்னுள் அடக்கிய மஹாமந்திரமாக பாம்பன் சுவாமிகள் சிறப்பிக்கும் 'வேலுமயிலும்' என்ற மந்திரத்தை, அன்றைய தினம் முழுவதும் ஒருமைப்பட்ட மனத்துடன் உச்சரித்து, ஆலய தரிசனத்துடன் விரதத்தை நிறைவு செய்வது முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும்.


வடலூரில் சத்திய ஞான சபையில், ஜோதி தரிசன விழாவாக, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. திருவருட்பா அருளிய மகான் இராமலிங்க அடிகளார், வடலூரில் சத்திய ஞான சபையை 1872ம் ஆண்டு நிறுவினார். இது எண்கோண அமைப்பை உடையது. ஆண்டு தோறும், தைப்பூச தினத்த்தில், ஏழு திரைகளை விலக்கி, ஜோதி தரிசனம் செய்யும் விழா வடலூரில் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு திரையும் வெவ்வேறு வர்ணமுடையது.

தை மாதம் பூச நட்சத்திர தினத்தன்று, பௌர்ணமி திதி வருவதால், அன்றைய தினம் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. ஆகவே, அன்றைய தினம் அவ்விருவருக்கும் ஆதாரமான, அக்னி ரூபமான ஜோதி தரிசனம் செய்யும் முறையை வள்ளலார் பெருமான் ஏற்படுத்தினார். ஏழு வித வர்ணத் திரைகளும், நம் ஆன்மாவை மூடியுள்ள கர்ம வினைகளைக் குறிக்கும்.

வள்ளலார் பெருமான், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை ஜோதி வடிவமாக வழிபட்ட பெருமகனார். பரம்பொருளை 'அருட்பெருஞ்சோதி ஆண்டவர்' என்றே குறிக்கிறார். அளவிட முடியாத பேரொளி மயமான கருணைப் பெருங்கடலே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
அருட்பெரும் தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெருஞ் சித்தி என் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !

என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் போற்றுகிறார் வள்ளலார் பெருமான்.

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்

என்றும்,
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி

என்றும் எங்கும் நிறைந்து அளவிலாக்கருணை புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, ஒன்றாய் இருந்து பலவாய் விரிந்து அருள்மழை பொழியும் பரம்பொருளைப் பாடுகிறார் வள்ளலார் பெருமான்.

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்
ஏதும் இலார் தத்துவங்கள் ஏதும் இலார் மற்றோர்
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும்
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புறு வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

என்று ஒரே ஒரு ஒளியாய் விளங்கும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, நிர்க்குண  நிராகார பரம்பொருளை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

சாதி சமய பேதமில்லா சுத்த சன்மார்க்க நெறியை உலகுக்குத் தந்த மகான் வள்ளலார் பெருமான்.

தைப்பூசத்தன்று வடலூரில், சத்தியஞானசபையில், அதிகாலை ஆறு மணியளவில், சூரிய சந்திரர்கள் இருவரும் நேர்க்கோட்டில் அமைவதைத் தரிசிக்கின்ற வேளையில், ஜோதி தரிசன விழா  நடைபெறுகிறது.ஜோதி தரிசனம், புறத்தில் மட்டுமல்லாது,  நம் அகத்தின் கண் அமைந்துள்ள ஆன்ம ஜோதியைத் தரிசனம் செய்வதையும் குறிக்கும். “சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் உரைக்கிறார். இதன் பொருள், அனைவரும், தங்களுள் உறைந்திருக்கும் ஆன்ம ஜோதியைத் தரிசிக்க வேண்டும் என்பதே. 
நடராஜப்பெருமானின் திருநடனம், இவ்வுலக இயக்கத்தையே குறிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது குறித்து, அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். வள்ளலார் பெருமான், ஆடல் அரசனின் திருநடனத்தைக் குறித்து அருளியிருப்பதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையை
உன்ன முடியா அவற்றின்
ஓராயிரம் கோடி மாலண்டம் அரன்அண்டம்
உற்ற கோடா கோடியே
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதா
சிவன் அண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ்
சீரண்டம் என் புகலுவேன்
உருவுறு இவ் அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உறு சிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா
வரம் தந்த மெய்த் தந்தையே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜ பதியே !

என்று நடராஜப்பெருமானின் திருநடனத்தைப் போற்றுகிறார் வள்ளலார் பெருமான்.

உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி


பரமநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே


என்றும்  வள்ளலார் பெருமான் அருளியிருக்கிறார். இவ்விதம் நடராஜப்பெருமான், தில்லையில் தம் திருநடனத்தை அருளிய தினம் தைப்பூசம்.

தைப்பூசத்தன்று, தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களைப் பக்தியுடன் பாராயணம் செய்து, மூன்று வேளைகளிலும் பால், பழம் மட்டும் உண்டு, வீட்டில் சிவபூஜை செய்து, மாலையில் கோவிலில் சிவதரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்வது,  பிறவாப்பெருநிலையை அளிக்கும்.

மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் உதவி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

 1. ஒளி நிறைந்த அற்புத நாளான
  தைப்பூசம் பற்றி அருமையான
  ஜொலி ஜொலிக்கும் பகிர்வுகள்..
  மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. ///இராஜராஜேஸ்வரி said...
  ஒளி நிறைந்த அற்புத நாளான
  தைப்பூசம் பற்றி அருமையான
  ஜொலி ஜொலிக்கும் பகிர்வுகள்..
  மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..வாழ்த்துகள்.//////

  தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு

 3. ஒளியுடல் ஆக்கும் இரகசியம் - 3
  அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு
  http://saramadikal.blogspot.in/2013/06/3.html
  அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
  இவண் ,

  சாரம் அடிகள்
  94430 87944

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள இயன்றது.
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.
  http://paavaivilakku.blogspot.in/

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..