நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 9 ஜனவரி, 2013

KOODARAVALLI (11/1/2013).....கூடாரவல்லி


ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!! 
ஸ்ரீ விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வாரின் குலத்தில் உதித்த, கேட்டதை எல்லாம் தரும் கற்பகக் கொடி போன்றவள் கோதை.  அடியவருக்கு வேண்டுவனதரும் சந்தனமரமான ஸ்ரீ ரங்கராஜரைச் சுற்றிப் படர்ந்திருக்கும் கற்பகக் கொடியே கோதை நாச்சியார். பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், பூமிப்பிராட்டியின் திருஅவதாரமாகவே போற்றப்படுகிறார். கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் திருமகளாக, திருத்துழாய்(துளசி) செடியருகில் அவதரித்தார் கோதை நாச்சியார். திருப்பாவை, வேத வேதாந்த உபநிஷதங்களின் சாரமே. மார்கழி மாதம் முதல் நாள் தொடங்கி, தினம் ஒரு பாசுரமாக முப்பது நாளும் பாராயணம் செய்வது வழக்கம். மார்கழி 27ம் நாள், 27வது பாசுரமான, 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்று தொடங்கும் பாசுரம் பாராயணம் செய்யும் நன்னாளே 'கூடாரவல்லி' என்று சிறப்பிக்கப்படுகிறது.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பாட்டின் முதலடியே திருநாளின் பெயராக அமைந்து விட்டது. அதுவே மருவி கூடாரவல்லி ஆகிவிட்டது.

திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு, அதன் அதன் விதிகள், தோழியரை பாவை நோன்பு  நோற்க எழுப்புதல் என்று தொடர்கிறது. கோதை நாச்சியார், தாம் வாழும் வில்லிப்புத்தூரையே கோகுலமாகவும், வடபத்ரசாயிப்பெருமானின் திருக்கோவிலையே கண்ணன் வாழும் திருமாளிகையாகவும் உருவகிக்கிறார். தன்னையும் தன் தோழியரையும் கோபிகைகளாகப் பாவிக்கிறாள்.

வெளிப்படையான பொருளின்படி பார்த்தால் தோழிகள், பின், கண்ணனது திருமாளிகையின் வாயிற்காப்போன், யசோதை, நந்தகோபர், பலராமன் கண்ணன் என அனைவரையும் துயிலெழுப்பி, கண்ணபிரானைத் தன் சிங்காதனத்தில் அமர்ந்து தம் கோரிக்கையை ஆராய்ந்து நிறைவேற்றித் தரப் பிரார்த்திக்கிறாள். ஸ்ரீ கிருஷ்ணர் எழுந்தருளிவிட்டார். பின் என்ன?, அவரைப் பூஜிக்க வேண்டியது தானே!!. 'அன்று இவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி' என்று  போற்றிகளை தொடுத்து பாமாலையாக்கித் தன் உள்ளம் கவர்ந்த கண்ணனுக்கு அணிவிக்கிறாள்.

தூபம், தீபம் என்று உத்தராங்க பூஜை தொடர்கிறது. கண்ணனது பாஞ்சஜன்யம் என்ற திருச்சங்கு முழங்க, பல்லாண்டு பாடி, விளக்கு(தீபம்) கொடி, முதலியவை காட்டி வழிபடுகிறாள்.

(மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.)

நிவேதனமாக,  'பாற்சோறு மூடநெய் பெய்து'  படைக்கிறாள்.  பூஜையில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறாள் (சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே). கண்ணனையன்றி வேறெதுவும் வேண்டாத நிலை வேண்டுகிறாள்(மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்), இந்தப் பாசுரத்தை, பூஜையின் பலனை கண்ணன் திருவடிகளுக்கு அர்ப்பணம் செய்வதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

(சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்)

நிறைவுப்பாசுரம், கண்ணனை வழிபடுவதன் பலனை விளக்கும் முகமாக அமைந்திருக்கிறது. 'எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்' என்பது இம்மை, மறுமை இரண்டிலும் கண்ணபிரானது திருவருள் பெறுவதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

என்று இரண்டாவது பாசுரத்தில், பாவை நோன்பு விதிகளைச் சொல்லும் கோதை நாச்சியார், 27வது பாசுரத்தில்,  பாவை நோன்பை நல்லவிதமாக நிறைவு செய்து விட்டால் அதன் பலனாக‌, நல்ல ஆடை, அணிமணிகள் அணிவோம், நெய் நிரம்பிய பாற்சோறு உண்ணுவோம் என்று கூறுகிறாள். அதாவது எவற்றை எல்லாம் நோன்புக்காகத் தவிர்த்தோமோ அவற்றை மீண்டும் கைக்கொள்வோம் என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார். இதில் மிக நுட்பமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது.

நோன்பு விதிகளில், நல்ல அலங்காரங்கள், ருசியான உணவு வகைகளைத் தவிர்ப்பதோடு, 'செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்' அதாவது, செய்யக்கூடாதவற்றைச் செய்ய மாட்டோம், தீமையானவற்றை, பொய் சொல்லுதல், புறங்கூறுதல் முதலியவற்றைச் செய்யாது நல்லனவற்றையே பேசுவோம் என்று வருகிறது.

ஐம்புலன்கள் என்பவை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. இவற்றை அடக்குவதே தவத்தின் முதல் படி. எல்லா நோன்புகளின் முக்கிய நோக்கம் இதுவே. உடலுக்கு அழகு தரும், நல்ல ஆடை அணிமணிகளைத் தவிர்த்தல், கண்ணுக்கு அழகு தரும் மையிடாதிருத்தல், பால், நெய் சேர்த்த சுவையான உணவை உண்ணாதிருத்தல், மணம் தரும் நல்ல மலர்களை சூடாதிருத்தல்,  நல்ல வார்த்தைகளையே பேசுதல், இறைவன் புகழைக் கேட்டல்  இவற்றை நோன்பு காலத்தில் செய்வதன் மூலம், புலன்களின் பால் கவனம் செல்வது குறைந்து இறைவனிடம் மனம் ஒன்றுகிறது. நல்ல பசு நெய், பால் ஆகியவை சேர்த்த உணவு சுவை நிறைந்ததாகவே இருக்கும். ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துவதற்கு இவை சேர்ந்த உணவு வகைகளை நிறுத்துவது அவசியம். அதே சமயத்தில், இவை இரண்டும் சாத்வீக உணவு வகைகளைச் சேர்ந்தவை. அமைதி, வாய்மை, தவம், பக்தி, கருணை, மன்னிக்கும் மாண்பு, திருப்தி, புறங்கூறாதிருத்தல், நிலைத்த ஆனந்தம் ஆகியவை, தொடர்ந்து சாத்வீக உணவு வகைகளையே உண்போருக்கு இயல்பாகவே வாய்க்கும்(http://www.siththarkal.com/2012/03/blog-post_07.html). அதனாலேயே, நெய் நிறைந்த பால் சோறு உண்போம் என்கிறாள் ஆண்டாள். 
ஆகவே, சாத்வீக உணவு உண்பதன் மூலம் எப்போதுமே செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

திருப்பாவையின் உட்பொருள் யோக ரகசியங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக ஒன்று.  நம் உடலில் ஆறு ஆதாரச் சக்கரங்கள் இருப்பது நமக்குத் தெரியும். முதல் சக்கரமான மூலாதாரத்தில், குண்டலினி சக்தி, நாக உருவில் இருக்கிறது. (http://aalosanai.blogspot.in/2012/04/blog-post_06.html) முறையான யோகப் பயிற்சியின் மூலம் இதை எழுப்பி, நம் தலை உச்சியில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தை அடையச் செய்ய வேண்டும்.  திருப்பாவையின் 6வது பாசுரத்தில் வரும்,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

என்று வரும் வரிகள், சக்கரங்களையும்(சகடம்), நாக உருவில் துயிலும் குண்டலினி சக்தியையும்(வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை) சூட்சுமமாகக் குறிப்பிடுகின்றன. கோதை நாச்சியார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாவை ஒவ்வொன்றையும் விரிவாக ஆராயப் புகுவோமானால் இந்த ஒரு பிறவி போதாது.

கூடாரவல்லி தினத்தன்று, பாலில் அரிசியை வேக வைத்து, நெய், வெல்லம் சேர்த்து, சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம் செய்து வழிபடுவது வழக்கம்.. முக்கியமாக, நிறைய தீபங்கள் ஏற்றி பூஜையறையில் வைக்க வேண்டும்.

பரம்பொருளாகிய அகண்ட ஜோதியில், நம் ஆத்ம ஜோதி ஐக்கியமடைய (கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்)வேண்டுவதே மனிதப் பிறவியின் நோக்கம். ஆகவே, அதை குறிக்கும் விதமாக தீபங்கள் ஏற்ற வேண்டும். 
முக்கியமாக‌ திருப்பாவை தந்த கோதை நாச்சியார் காட்டிய வழியிலே, கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றிருக்கும் நாம் அதைக் கடைத்தேற்ற முயற்சிக்க வேண்டும்.

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்!!!

வெற்றி பெறுவோம்!!!

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..