நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

PONGAL SPECIAL PART 2 (14/1/2013)....தமிழர் திருநாள்

ஸ்ரீமத் பாகவதத்தில், ஸ்ரீகிருஷ்ணரே, சூரிய பகவானின் பெருமைகளை, தன் புத்திரர்களுள் ஒருவனாகிய சாம்பனுக்கு உபதேசிக்கிறார். சூரியனை முழுமுதல் கடவுளாகப் போற்றும் பவிஷ்ய புராணத்திலும் இந்த நிகழ்வு காட்டப்படுகிறது.

பவிஷ்யபுராணத்தின்படி, துர்வாசமுனிவரால் சபிக்கப்பட்டு நோயால் பீடிக்கப்பட்ட சாம்பன், ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, யாரை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கேட்ட பொழுது, சூரியனை வழிபடுமாறு கூறும் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கூறுகிறார்........

'சூரியனே அனைத்துத் தேவர்களுள்ளும் உயர்ந்தவர். அவரே உயிரினங்களின் எல்லா செயல்களுக்கும் சாட்சியாவார். எல்லா தேவதைகளுக்கும் அதிபதி அவரே. இவ்வுலகின் ஆதாரம் அவரே. சூரிய தேவனே, பிரம்மாவாக சிருஷ்டியையும், விஷ்ணுவாக உலகைக் காத்தலையும், பரமசிவனாக பிரளய காலத்தில் ஒடுக்குதலையும் செய்கிறார். அனைத்து தேவர்களும், சித்தகணங்களும், யோகிகளும் அவரையே தியானிக்கிறார்கள். சூரியபகவானின், வலக்கண்ணாக விஷ்ணுவும் இடப்பக்கம் பிரம்மாவும், நெற்றியில் சிவனாரும் வாசம் செய்கிறார்கள். நான்கு வேதங்களும்  சுயரூபமெடுத்து அவரையே  துதிக்கின்றன.

சூரியனாலேயே மழை பொழிகிறது. அவராலேயே, காலச்சக்கரம், பகல், இரவு, நாள், மாதம், வருடம் எனச் சுழல்கிறது. அவராலேயே பருவகாலங்கள் ஏற்படுகின்றன. வாயுவை எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது போல், சூரிய பகவானும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளார்.

இவ்வாறு சூரிய பகவானின் பெருமைகளை சாம்பனுக்கு விரித்துரைக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

நிர்க்குணப் பரப்பிரம்மமான சூரிய பகவானே, 'த்வாதச (பன்னிரெண்டு) ஆதித்யர்க'ளாக, பன்னிரெண்டு வடிவங்களை எடுத்துக் கொண்டு, பன்னிரெண்டு வகையான செயல்களைப் புரிகிறார். த்வாதச ஆதித்யர்கள் பின்வருமாறு.

1. தேவர்களைக் காக்கும் இந்திரன். மேகத்தைக் கட்டுப்படுத்துபவர் சூரியபகவான். சிம்ம மாதமாகிய ஆவணி மாதச் சூரியனின் திருநாமமே இந்திரன்.
2. படைக்கும் தொழிலைச் செய்யும் தாதா. இந்த திருநாமம் கொண்ட சூரியன், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான வெம்மையைத் தருபவர். மாதங்களில், இவர் சித்திரை மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
3. உலகத்தில் மழையைப் பொழிவிக்கும் பர்ஜன்யன். நீர் நிலைகளில் இருக்கும் நீரை அமுதமென அள்ளி மேகமாக்கித் தருபவர் இவரே!. இவர் பங்குனி மாதத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
4. உணவுப்பொருள்களை விளைவித்து அருளும் பூஷா.விதைத்த விதைகள், பூமியில் முளைக்கத் தேவையான அளவு வெப்பத்தை அளிப்பவர் பூஷா. மாசிமாதச் சூரியனே பூஷா.
5. மூலிகைகளின் சக்தியாக இருந்து நோய்களைப் போக்கும் துவஷ்டா. இவர் ஐப்பசி மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார். அடைமழை மாதமான ஐப்பசியில், நோய் நொடிகள் அண்டாதிருக்க அருளுபவர் இவரே.
6. மூச்சுக்காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்யும் அர்யமான். 'வைகாசி வாய் திறக்கும்' என்று தொடங்கி, வீசும் காற்றின் அளவைக் குறித்துச் சொல்லப்படும் பழமொழிகளை நாம் அறிவோம். மிதமான காற்றுக்குத் தலைவன் அர்யமான். வைகாசி மாதச் சூரியனின் திருநாமம் இதுவே.
7. உயிர்களுக்கு நலம் வழங்கும் பகன். உயிரினங்களின் உடலில் உயிர் தங்கியிருக்க வெம்மை தேவைப்படுகிறது. இந்த வெம்மை இல்லாவிட்டால் உடல் குளிர்ந்துவிடும். அத்தகைய வெம்மையைத் தரும் பகலவனின் திருநாமமே இது. மாதங்களில் இவர் தைமாதச் சூரியனாக அறியப்படுகிறார்.
8. உயிர்களிடத்தில் ஜடராக்னி ரூபத்தில் இருந்து, உண்ணும் உணவின் ஜீரண சக்திக்கும், உடல் வெப்பம் சீராக இருக்கவும் உதவும் விவஸ்வான். எல்லா வகையான அக்னிக்கும் ஆதாரம் இவரே. மாதங்களில் இவர் புரட்டாசி மாதத்துக்குரியவராகக் கருதப்படுகிறார். 
9. தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் அழிக்கும் விஷ்ணு. பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையே விஷ்ணு. பகலவனின் பிரகாசம் போல் தீப ஒளி நிறையும் கார்த்திகை மாதத்திற்கான‌ சூரியனே விஷ்ணு என்று அறியப்படுகிறார்.
10. வாயுக்களின் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் அம்சுமான். இதமான வெப்பம் தருபவரே அம்சுமான். பனி நிறைந்த மார்கழி மாதத்திற்கான சூரியனே அம்சுமான்.
11. நீர் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் வருணன். ஆடியில் வீசும் பெருங்காற்றுக்கு அதிபதி இவரே. ஆகவே ஆடி மாதச் சூரியனே வருணன் என்று அறியப்படுகிறார்.
12. உயிர்களின் நலனுக்காக, சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றும் மித்திரன். கடலரசனின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி உயிர்களுக்கு உற்ற தோழனாக விளங்குபவர். சந்திரபகவான் இவராலேயே ஒளி பெறுகிறார். மாதங்களில், ஆனி மாதச் சூரியனே மித்ரன் என்று புகழப்படுகிறார்.

பாரசீகத்தைச் சேர்ந்த பார்சி வகுப்பினர் சௌரமதத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். காலப்போக்கில், இம்மதம், சைவ, வைணவத்தில் கலந்து விட்டது. எனினும், சூரிய வழிபாடு இன்றளவும் உள்ளது. ஸ்ரீ சூரிய பகவான், தம்மை விடிய‌ற் காலையில் வணங்கி  வழிபடுவோருக்கு, ஆரோக்கியம், நினைவாற்றல், வெற்றி, புகழ் யாவும் வழங்கி வாழ்வாங்கு வாழவைக்கிறார் என்பது கண்கூடான உண்மை.

இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானைத் தொழும் நாளே தைத்திங்கள் முதல் நாள். தமிழர் திருநாள். 'பொங்கலோ பொங்கல்' என்று வானதிரக் கூவி, உணவும் வாழ்வும் வழங்கிடும் பகலவனுக்கு நன்றி சொல்லும் பொன்னாள் இன்னாள்.  உழவர் பெருமக்களுக்கு நன்னாள்.

தை மாதப் பிறப்புக்கு முதல் நாள் போகிப்பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டைச் சுத்தம் செய்து, பழையன கழிக்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதக் கடைசி நாளான  அன்று, வெண்பொங்கல் செய்து நிவேதித்தல் வழக்கம்.
தை மாதம் முதல் நாளே பொங்கல் திருநாள். அதிகாலை, வீட்டுக்கு வெளியே வண்ண வண்ணக் கோலமிட்டு, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பால் காய்ச்சி,  பால் பொங்கி வரும்போது, வாழ்வில் மங்கலம் நிறைந்து பால் போல் பொங்கி வழிய பகலவனை பிரார்த்தித்தல் நம் வழக்கம்.பின், புது அரிசியால் சர்க்கரைப் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு நிவேதனம் செய்து வழிபடுவார்கள். சில ஊர்களில், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் இரண்டும் செய்து நிவேதனம் செய்வார்கள். எல்லா வகையான காய்கறிகள், பழங்கள் அனைத்தும் சூரியபகவானுக்கு படைக்கப்படும்.

கரும்பு, மஞ்சள் கொத்து முதலியவை கட்டாயம் பூஜையில் இடம் பெறும். முதலில் பால் பொங்கிய  பின்னரே அரிசி சேர்ப்பது கட்டாயம். மார்கழி மாதம் முழுவதும், வாசல் கோலத்தின் நடுவில், பூசணிப் பூவை செருகி வைக்கப் பயன்படுத்திய சாண உருண்டையை வரட்டியாகத் தட்டிக் காய வைத்து, அதையே  பொங்கலிட பயன்படுத்துவது வழக்கம். சில ஊர்களில் இந்த வரட்டிகளைப் பயன்படுத்தி, காணும் பொங்கலன்றோ அல்லது தை மாதம் வளர்பிறை தொடங்கும் தினத்தன்றோ கன்னிப் பெண்களும் குழந்தைகளும் கூடி, ஊர் நலனுக்காக வேண்டி 'சிறு வீட்டுப் பொங்கல்' செய்வார்கள்.

ஆடி தொடங்கி ஆறு மாத காலம் தக்ஷிணாயனம் எனவும், தை முதல் நாள் தொடங்கி ஆறு மாத காலம் உத்தராயணம் எனவும் வழங்கப்படுகிறது. தேவர்களின் பகல் பொழுதான இந்த ஆறு மாத காலத்திலேயே திருமணம் முதலான மங்கல நிகழ்வுகள் நடத்துவது பழங்கால மரபு. அறுவடை முடிந்து, நெல் விற்பனையின் மூலம் உழவர்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும் காலமாதலால், மங்கல நிகழ்வுகள் நடத்த வழி பிறக்கும்.அதனால் தான், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.

பொங்கல் திருநாளன்று உத்தராயணப் புண்யகாலம் துவங்குவதை ஒட்டி ஏக(ஒரு) சக்கரத் தேர்க்கோலம் போட்டு அதன் மேல், பொங்கல் பானையை வைத்து நிவேதனம் செய்வார்கள்.

பொங்கலுக்கு மறுநாள், கால்நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப்பொங்கல் திருநாள். உழவுக்கு உதவும் மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரிப்பார்கள். அன்றைய தினமும் பொங்கல் வைத்து மாடுகளை சாப்பிடவைப்பார்கள். ஜல்லிக்கட்டு தமிழரகளின் வீர விளையாட்டுக்களில் ஒன்று.

அன்றைய தினம் கனுப்பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று மிகுதியான சாதத்தில், குங்குமம், மஞ்சள், தயிர்  ஆகியன சேர்த்து பல நிற சாதமாகப் பிசைந்து, சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் இலையில் சின்ன சின்ன உருண்டைகளாக, கனுப்பிடி வைத்து, காகங்களை கூவி அழைத்து உண்ண வேண்டி, பின் 'காக்காக்கூட்டம் கலைஞ்சாலும் என் கூட்டம் கலையாமலிருக்க வேண்டும்' என்று  பிறந்த வீட்டு நலனை வேண்டுவார்கள் பெண்கள். இதற்காக, பிறந்த வீட்டிலிருந்து, பெண்களுக்கு கனுச்சீர் தருவது வழக்கம்.

அடுத்த நாள் காணும் பொங்கல் திருநாள். உற்றார் உறவினர்களைச் சந்தித்தல், வெளியிடங்களுக்கு சுற்றுலாவாகச் செல்லுதல் என்று விழாக்கோலம் பூணுகிறது தமிழகம்.

திருமணமான முதல் வருடம், இரண்டு பொங்கல் பானைகள், அரிசி, வெல்லம், மஞ்சள் கொத்து, புத்தாடைகள்,கரும்புக்கட்டு என பெண்களுக்கு சீர்வரிசைகள் தருவார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும், பணமாகவோ, பொங்கல் பொருட்களாகவோ சீர்வரிசைகள் தொடருவது நம் கலாசாரத்தில் அழகு மிகுந்த வழக்கம். தம் வீட்டில் பிறந்த பெண்கள், நல்ல விதமாகப் புகுந்த இடத்திலும் பண்டிகை கொண்டாடவேண்டும் என்ற அக்கறையும் இந்த நல்ல வழக்கத்தின் பின்னால் இருக்கிறது. பெற்றோர்கள், அதன் பின் உடன்பிறந்தோர் என்று வீட்டில் பிறந்த பெண்ணிற்கு சீர் வரிசை தரும் ந்ல்ல வழக்கம் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் நம்முடையது.

தை மாதம் முதல் நாள் தைப்பொங்கல் நாளாக தமிழ்நாட்டிலும், மகர சங்கராந்தி என்று பிற மாநிலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளாதலால் 'மகரசங்கராந்தி' என்று சிறப்பிக்கப்படுகிறது.கர்நாடகாவில் வெல்லம், கொப்பரைத் துண்டுகள், கடலை, வெள்ளை எள் மற்றும் இனிப்பு மிட்டாய்கள் கலந்த கலவையை, பெரியோர்களுக்கு அளித்து ஆசி பெறுதல் முக்கிய நிகழ்வு.

சபரிமலை வாசன் சுவாமி ஐயப்பன் மகர சங்கராந்தித் திருநாளன்றே தன் பக்தர்களுக்கு காந்தமலை மேல் ஜோதி ஸ்வரூபனாக அருட்காட்சி அருளுகிறார்.


தமிழர் திருநாளான தைத்திங்கள் முதல் நாளில், நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும், பால் பொங்குவதைப் போல் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் என் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இறையருளால்

வெற்றி பெறுவோம்!!!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. /////அய்யர் said...
    பொங்கல் வாழ்த்துக்கள்.../////

    தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..