நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 31 டிசம்பர், 2012

HAPPY NEW YEAR 2013.......வரம் தருவாய் புத்தாண்டே!!!



இன்ப ஒளி பரவட்டும்
எண்ணமெல்லாம் நிறையட்டும்
கண்களிலே எதிர்காலம்
வண்ணமயமாய்த் தெரியட்டும்
எங்கும்  மகிழ்ச்சி பொங்கட்டும்
இனியவாழ்வு மலரட்டும்
சிந்தையிலே நல்லதெல்லாம்
பெருக வைப்பாய் புத்தாண்டே!!!
வந்தனைகள் செய்கின்றோம்
வாழ்விப்பாய் புத்தாண்டே!!!!
நல்லதெல்லாம் எம்  வாழ்வில்
நடத்திவைப்பாய் புத்தாண்டே
நாள் தோறும்  முன்னேற்றம்
காண வைப்பாய் புத்தாண்டே!!

நிறைபொருளும் திருவருளும்
குறைவில்லாத குருவருளும்
மறைகளுறை திருவடியில்
மகிழ்ந்திருக்கும் மனநிலையும்
கொடுத்திடுவாய் புத்தாண்டே!!!
குதித்து வரும் புத்தாண்டே!!!
அன்பு நிறை மனம் வேண்டும்
அழகு நிறை எண்ணம் வேண்டும்
நோயில்லாத உடல் வேண்டும்
நோக வைக்கா வாக்கு வேண்டும்
நெஞ்சினிலே அமைதி வேண்டும்
நினைவெல்லாம் நல்லதாக வேண்டும்.

இனிய இவ்வுலகெலாம் 
இன்பமழை பொழிய வேண்டும்
வேற்றுமைகள்  போக  வேண்டும்
வெற்றியெல்லாம் சேர வேண்டும்
குற்றங்கள், குறைகள் நீங்கி
குதூகலம் நிறைய வேண்டும்
பெண்ணினத்தின் நிம்மதியை
பரிசாய் நீ தரவேண்டும்.
அன்னைத் தமிழ் மடியினிலே
அனுதினமும் ஆட வேண்டும்
அவள் பொழியும் அருளாலே
அவள் புகழைப் பாடவேண்டும்
வையத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
வளம் பெருக நலம் நிறைய‌
வரம் தருவாய் புத்தாண்டே!!!!

.................பார்வதி இராமச்சந்திரன்.
வாசகப்பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களது ஆசியாலும், தொடர்ந்து நீங்கள் தரும் நல் ஆதரவாலும் மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து வரும் ஆண்டிலும், 'ஆலோசனை'க்கும் 'ஆலோசனைத் தொகுப்பு'க்கும் உங்கள் மேலான அன்பையும் ஆதரவையும் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். 

மிக்க நன்றியுடனும் அன்புடனும்

பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.

    நல்லதொரு கவிதையோடு வந்திருக்கிறது புத்தாண்டு.
    அருமை. அழகு அற்புதம்
    கவிதை நன்று கருத்தும் நன்று.
    கண்கவர் காட்சிகளும் நன்று.

    நிறைவான இக்கவிதையின் வரிகள் அத்தனையும் சிறப்பு!
    இருந்தும்...
    ''மறையறியாத் திருவடியில்'' என்பதில் தங்களின் கருத்து மறைவு என்பதை அறியாத என்று நினைக்கிறேன்!

    இருந்தும் ''மறைகளுறை திருவடியில்'' என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

    ''எம் இனியத் தாய் நாட்டில் இன்பமழை பெய்ய வேண்டும்'' தாய் நாட்டின் பற்று என்றாலும்.
    வரையறைகள் வகுத்தது மானிடர்களே. கவிஞன் மானுடத்தை ஒரே பார்வையில் உலகளாவியப் பார்வையில் பார்க்க கடமைப் பட்டவன் அதனாலே இனிய இவ்வுலகெலாம் இன்பமலைப் பெய்ய வேண்டும் என்று இருந்தால் இன்னும் சிறப்பு!

    வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. //// ஜி ஆலாசியம் said...
    புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி/////

    தங்கள் வருகைக்கும் கவிதையைப் பற்றிய தங்கள் விமர்சனத்துக்கும் என் மனமார்ந்த நன்றி அண்ணா. தாங்கள் கூறிய திருத்தங்கள் செய்து விட்டேன். 'மறையறியா' என்ற வார்த்தை, வேதங்கள் அறியா என்ற பொருளில் பயன்படுத்தினேன். ஆனால் 'மறைகளுறை' என்று தாங்கள் தந்த வார்த்தை இன்னும் இன்னும் சிறப்பாக இருக்கிறது. நான்மறைகளும் தொழும் பொருள் அந்தப் பரம்பொருள் அல்லவா?!!. மிக மிக நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..