பண்டை நான்மறையும் கேள்வியும் கேள்விப் பதங்களும்
பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரைகடல் ஏழும்
ஏழுமாமலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான்
அரங்கமாநகர் அமர்ந்தானே!
விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ஒரு மாதத்திற்கு, வளர்பிறையில் ஒன்றும் தேய்பிறையில் ஒன்றுமாக, இரண்டு ஏகாதசி திதி வரும். ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளில், மிகவும் மகிமை வாய்ந்தது, முக்கோடி ஏகாதசி என்று சிறப்பிக்கப்படும் வைகுண்ட ஏகாதசி.
இது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும். இது மோட்ச ஏகாதசி என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம்:
முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் என்பதாலும், கோடிக்கணக்கான நற்பலன்களைத் தரவல்ல விரதம் என்பதாலும், மூன்று கோடி ஏகாதசிகள் விரதம் இருந்த பலனைத் தரவல்லது என்பதாலும், 'முக்கோடி ஏகாதசி' என்று வைகுண்ட ஏகாதசி சிறப்பிக்கப்படுகிறது.சிலர் நினைப்பதைப்போல், ஏகாதசியன்று அன்னம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே விரதமில்லை. முழு உபவாசம் இருப்பதே சிறந்தது. துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். பொதுவாக, உடலில் சீரண உறுப்புகளுக்கு ஓய்வு அளிப்பதற்காகவே விரதங்கள் ஏற்பட்டன. அதற்காக அடிக்கடி விரதம் இருப்பதும் தவறு. விரதம் இருப்பது, மனக்கட்டுப்பாட்டை அதிகரிக்க வல்லது. இயல்பாகவே புலனடக்கம் நிகழ உதவுவது விரதங்களே.
வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாள் வரும் தசமி திதியில் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம். மறு நாள், உபவாசம் இருந்து, கோபப்படாமல், இறைநாமங்களை ஜபித்து இறைச்சிந்தனையில் கழிக்க வேண்டும். இரவு முழுவதும், தூங்காமல் விழித்திருக்க வேண்டும். அடுத்த நாள் துவாதசியன்று, சூரிய உதயத்துக்குள் பாரணை (அதாவது, விரதம் நிறைவு செய்தல்) செய்ய வேண்டும். முதலில் துளசி தீர்த்தம் அருந்திப் பின் உணவு உட்கொள்ள வேண்டும்.பொதுவாக, சுண்டைக்காய் வற்றல், அகத்திக்கீரை, நெல்லிப்பச்சடி முதலியவை செய்து உண்ணுவார்கள். முதல் நாள் முழுவதும் விரதம் இருந்ததால் வயிற்றுக்கு குளுமை தர வேண்டி இவற்றைச் செய்வது வழக்கம். அன்றும் பகல் வேளையில் தூங்கக் கூடாது. இரவில் அன்னம் சாப்பிடக் கூடாது.
ஏகாதச்யாம் து கர்த்தவ்யம் ஸர்வேஷாம் போஜ நத்வயம்மி
சுத்தோபவாஸ:ப்ரதம: ஸத்கதாச்ரவணம் தத:மிமி
ஏகாதசி திதியில், பகல், இரவு ஆகிய இருவேளைகளிலும், உபவாசம் இருத்தல், ஸத்கதாச்ரவணம் என்று சொல்லப்படுகின்ற இறைநாமங்கள், ஸ்லோகங்கள் மற்றும் புராணங்களைப் பாராயணம் செய்தல் ஆகிய இரண்டை மட்டுமே செய்தல் வேண்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருளாகும்.
ஏகாதசி அன்று பாராயணம் செய்ய, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சிக்கு இங்கு சொடுக்கவும்.
ஏகாதசியன்று அன்னதானம் செய்யக் கூடாது. முன்னோர்களின் சிரார்த்தம் வந்தால், துவாதசியன்று தான் செய்ய வேண்டும். வைகுண்ட ஏகாதசியன்று, மிக மிகப் புண்ணியசாலிகளுக்கே இறைவன் திருவடி நிழலை அடையும் பாக்கியம் கிடைக்கும். அதனால் அன்று இறைவன் திருவடி சேர்பவர்கள், பிறப்பில்லா நிலையை அடைவதாக ஐதீகம்.
ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்காந்தத்தில், அம்பரீஷச் சக்கரவர்த்தியினுடைய சரிதம் ஏகாதசி விரதத்தின் மகிமையை விளக்குவதாக அமைந்திருக்கிறது.
ஒரு சமயம், துர்வாச மஹரிஷி, தவறாது ஏகாதசி விரதம் இருந்து வந்த அம்பரீஷனை, சந்தித்து, துவாதசி பாரணையின் போது தானும் வருவதாகச் சொன்னார். அம்பரீஷனும் ஏற்றுக் கொண்டார். ஏகாதசி விரதம் இருந்த பலன், மறுநாள், குறித்த காலத்தில் பாரணை செய்வதாலேயே கிட்டும். துர்வாச மஹரிஷி குறித்த நேரத்திற்குள் வராததால், அம்பரீஷன், துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்திப் பாரணை செய்தார். இதை அறிந்த துர்வாச மஹரிஷி, கோபம் கொண்டு, ஒரு பிசாசை ஏவ, ஸ்ரீமந் நாராயணின் ஸூதர்சன சக்கரம், தன் பக்தனைக் காக்க வேண்டி, பிசாசைத் துரத்தியது. ஒரு நிலையில், பிசாசு, சோர்வடைந்து, துர்வாச மஹரிஷியையே விரட்டத் துவங்க, அவர், அனைத்துத் தேவர்களையும், முடிவில்,ஸ்ரீவிஷ்ணுவையும் சரணடைந்தார். அவரோ, அம்பரீஷனையே சரணடையுமாறு சொல்ல, அதன் படி, அவர் அம்பரீஷனைச் சரணடைந்தார். அம்பரீஷனும், தன் பக்தியின் மகிமையால், பிசாசை அடக்கி, ஸூதர்சன சக்கரத்தையும் ஸ்தோத்திரம் செய்து சாந்தி அடையும்படி செய்து, மஹரிஷியைக் காப்பாற்றினார். ஏகாதசி விரதம், இறைவனை அடையும் வழியை மிகச் சுலபமாக்கித் தரும் கருவியாகும்.
திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி.
பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் பெருமானுக்கு பரமபதம் அருளுவதற்காக, திருவைகுண்டத்தின் பரமபத வாசல் திறக்கப்பட்ட தினமே வைகுண்ட ஏகாதசி. அன்று திருவரங்கத்தில், கோடானுகோடி பக்தகோடிகள் 'ரங்கா, ரங்கா' என்று பக்தியுடன் கோஷிக்க, நம்பெருமாள், கிளிமாலை, ரத்தின அங்கி, பாண்டியன் அளித்த கொண்டையுடன் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து, புறப்பாடாகி சிம்ம கதியில், சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
பரமபத வாசலின் அடியில் விரஜா நதி (வைகுண்டம் அடையும் வழியில் உள்ள திவ்ய தீர்த்தமே விரஜாநதி. மோட்சம் பெறும் ஆன்மாக்கள், இந்நதியில் நீராடிய பின்னரே, வைகுண்டம் சேர்வதாக ஐதீகம்)சூட்சுமமாக ஓடுவதால், அந்தப் புண்ணிய தினத்தில், பரமபத வாசல் வழியாக வரும் பக்தர்கள், இந்நதியில் நீராடி, பின், வைகுண்டம் சேர்வதாக நம்பிக்கை. ஆகவே, அன்றைய தினம், கோடானுகோடி பக்தர்கள், பரமபத வாசலைக் கடக்கிறார்கள்.
பரமபத வாசலின் அடியில் விரஜா நதி (வைகுண்டம் அடையும் வழியில் உள்ள திவ்ய தீர்த்தமே விரஜாநதி. மோட்சம் பெறும் ஆன்மாக்கள், இந்நதியில் நீராடிய பின்னரே, வைகுண்டம் சேர்வதாக ஐதீகம்)சூட்சுமமாக ஓடுவதால், அந்தப் புண்ணிய தினத்தில், பரமபத வாசல் வழியாக வரும் பக்தர்கள், இந்நதியில் நீராடி, பின், வைகுண்டம் சேர்வதாக நம்பிக்கை. ஆகவே, அன்றைய தினம், கோடானுகோடி பக்தர்கள், பரமபத வாசலைக் கடக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில், பகல்பத்து உற்சவம் நிறைவுற்று, இராப்பத்து உற்சவம் துவங்கும் நாளில் ஏகாதசி வருகிறது. அன்று தொடங்கி, பத்து நாட்கள், திருவாய்மொழி பாசுரங்கள் இசைக்கப்பட்டு, நிறைவு நாளில், நம்மாழ்வார் பெருமான் பரமபதம் அடையும் நிகழ்வு நடத்திக் காட்டப்படுகிறது.
திருவரங்கத்தில் மட்டுமல்லாது, பெரும்பாலான வைணவத்திருத்தலங்களில், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு சிறப்புற நடைபெறுகிறது.
சிவனாருக்கும் உரிய ஏகாதசி:
பாற்கடல் கடைந்த போது, வெளிப்பட்ட ஆலாகல விஷத்தை உலக நன்மையின் பொருட்டு அருந்தி, சிவனார் அருள் புரிந்த நாள் ஏகாதசி. அதனால், ஏகாதசி சைவர்களுக்கும் உரியதென்று கூறுகிறார்கள். சைவத்தில், இது 'நஞ்சுண்ட ஏகாதசி' என்று சிறப்பிக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பதால், நம் விருப்பங்கள் நிறைவேறும். மானிடப்பிறவி எடுத்ததன் நோக்கமான, மோட்சப் பிராப்தி, வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதன் பலன்களில் தலையாயது.
வெற்றி பெறுவோம் !!!!
Nice article about vaikunda ekadeshi!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குhttp://jaghamani.blogspot.com/2012/12/blog-post_22.html
வளம் வர்ஷிக்கும் வைகுண்ட ஏகாதசி ..
///// Jaya Ramachandran said...
பதிலளிநீக்குNice article about vaikunda ekadeshi/////
Thank you so much jaya.
////இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்./////
தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது எழுத்துக்களைப் படித்தே, நிறையக் கற்றுக் கொண்டு வருகிறேன். தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.