நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 21 ஜூன், 2017

KANNANAI NINAI MANAME.. IRADAM BAGAM.. PART 14..கண்ணனை நினை மனமே.. பகுதி 14. வாமனாவதாரம்!!!.



Image result for vamanavataram images

பகவான், புண்ணியம் மிகுந்த அந்த ஆசிரமத்தில் அவதரித்ததும், தேவர்கள், ஆனந்தத்துடன் வாத்தியங்களை முழக்கினார்கள்!.. பூமாரி பொழிந்தார்கள்!.. காசியபரும், அதிதி தேவியும், ஜய கோஷம் செய்தார்கள்!.. இவ்விதம் இருக்க, பகவான், நொடியில், பிரம்மச்சாரியின் உருவத்தை எடுத்துக் கொண்டார்!!!!!..

காசியபர், தமது  மைந்தனுக்கு, உடன் பிரம்மோபதேசம் செய்வித்தார்!!... மேகலை, தண்டம், கிருஷ்ணாஜினம் (மான் தோல்), அக்ஷ மாலை முதலானவைகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவராய், அக்னியை வளர்த்துச் செய்யப்படும் சடங்குகளை செய்து முடித்து விட்டு, பலிச் சக்கரவர்த்தி அச்வமேத யாகம் செய்த இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார் பகவான்.

அசுரர்களை தண்டிப்பதற்காக தண்டத்தையும், அவர்கள் தேவர்கள் மீது கொண்ட பகைமையின் வெப்பத்தை மறைப்பது பொல் குடையையும் எடுத்துக் கொண்டு, பகவான் நடந்து சென்றார்.  பின்னால் அவர் விஸ்வரூபம் எடுக்கப் போவதை முன்கூட்டியே அறிவிப்பது போல், அவரது நடையினால், பூமி அசைந்தது!!!..இவ்விதம் நடந்து சென்று, நர்மதா நதியின் வடகரையிலிருந்த அச்வமேத யாக சாலையை அடைந்தார் பகவான்.

பகவானின் திருமேனிப் பிரகாசத்தால் ,   யாகசாலையில் இருந்த சுக்ராச்சாரியார் முதலானவர்களுக்கு  கண்கள் கூசின!!.. அவர்கள் பகவானின் ரூபத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, 'இந்தப்  பிரம்மச்சாரி, அக்னி பகவானா?, சூரியனா?, அல்லது சனத்குமார யோகீச்வரனா?...யார் இவர்?' என்று சந்தேகித்தனர்!!!!..

சுக்ராச்சார்யார், பகவானை எதிர் கொண்டு வரவேற்று அழைத்து வந்தார்!!.. மனதைக் கவரும் ரூபத்தை உடைய பகவானைக் கண்டு பலிச் சக்கரவர்த்தியின் மனம் பக்தியால் நிரம்பியது!.. உடல் மெய் சிலிர்த்தது.. மஹா பக்தனான பிரகலாதனின் பேரனல்லவா பலி!!.. பிரகலாதனின் மகன் விரோசனனின் புதல்வனே பலி!!..

பலிச் சக்கரவர்த்தி, பகவானை அணுகி, அவரை ஆசனத்தில் அமர்த்தி, அவரது திருவடிகளை நீரினால் அலம்பி, அந்தத் தீர்த்தத்தை எடுத்து, பக்தியுடன் தலையில் தெளித்துக் கொண்டான்!!..

( ஆநீத மாஸு² ப்ருʼகு³பிர் -மஹஸாபி பூதைஸ்
த்வாம்ʼ ரம்ய ரூப-மஸுர​: புளகாவ்ருʼதாங்க³​: |
க்த்யா ஸமேத்ய ஸுக்ருʼதீ பரிநிஜ்ய பாதௌ³
தத்தோய -மன்வத்ருʼத மூர்த்தனி  தீர்த்த² தீர்த்த²ம் |(ஸ்ரீமந் நாராயணீயம்) ).

பிரகலாதனின் வம்சத்தில் தோன்றியதாலோ, அல்லது யாகங்கள் பலவற்றைச் செய்த புண்ணியத்தாலோ, வேதம் ஓதியவர்களிடத்திலிருந்த பக்தியாலோ, பலிச் சக்கரவர்த்தி, பகவானின் பாத தீர்த்தத்தை அடைந்தான்!!!.. அத்தகைய மகிமையுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன், தம்மை நோயிலிருந்து மீட்டு, காத்தருளப் பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!!..

அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. ( நம்மாழ்வார்)

(தொடர்ந்து தியானிப்போம்!!!...).

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, தொடராக, அதீதம் மின்னிதழில் வெளி வருகிறது!!..

2 கருத்துகள்:

  1. பிரும்மஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன் அவர்கள் சொல்லும் பாகவத ஸப்தாகக் கதைகள் அடிக்கடி நான் கேட்பதுண்டு. அதில் இந்த வாமன மூர்த்தியின் அழகினை தங்களைப்போலவே மிகவும் அருமையாக வர்ணிப்பார். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு என் பணிவான நன்றி!..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..