தன்வந்திரியாகத் தோன்றிய பகவானிடமிருந்த அம்ருத கலசத்தை, அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இதைக் கண்டு கலங்கிய தேவர்களை பகவான் சமாதானம் செய்தார். உடனே அங்கிருந்து மறைந்தார்!!..
அங்கே திடீரென்று சியாமள வர்ணமுடைய, இளமையான, அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய பெண்ணொருத்தி தோன்றினாள்!..பேரழகு வாய்ந்த அவளைக் கண்ட அசுரர்கள், மோகத்தால் மதியிழந்து, அவளை நோக்கி வந்தார்கள்!..
புலன்களை, நல்லறிவின் துணை கொண்டு, உத்தமமான பாதையில் மட்டுமே செலுத்த வேண்டும். அவ்விதம் செய்து, தன்னைத் தவிர வேறெதையும் நாடாத உத்தமமான பக்தர்களுக்கு எளிதில் தன்னையே தருவான் புருஷோத்தமன்!!!.
அவ்வாறல்லாமல், புலன்கள் இழுக்கும் வழியே சென்று, காமம், க்ரோதம் முதலானவற்றுக்கு அடிமைகளாகவே செயல்படும் அசுரர்களுக்கு, பகவானே இவ்விதம், மனதை மயக்கும் மோகினியாக உருவெடுத்து வந்திருக்கிறார் என்பதை அறியும் திறன் இல்லாமல் போனதில் வியப்பென்ன?!. அசுரர்களின் கண்களில், அழகு வாய்ந்த ஒரு பெண்ணாக மட்டுமே தோன்றினான் பகவான்!..
அசுரர்கள், மோகினியை நெருங்கி, 'மான் விழியாளே!, நீ யார்??!. எங்களுக்கு இந்த அமுதத்தை பங்கிட்டுத் தருவாயா?' என்றெல்லாம் வினவ, அவர்களிடம், மோகினி, 'என்னை எப்படி நம்புகிறீர்கள்?' என்றெல்லாம் வியப்புடன் வினவி, இன்னும் பல விதமாகப் பேசி, தன்னை அவர்கள் நன்றாக நம்பும்படி செய்து விட்டாள்!!!..
அசுரர்கள் மகிழ்ந்து அமுத கலசத்தை அளிக்க, அதைப் பெற்றுக் கொண்டு, 'நான் தவறாக ஏதேனும் செய்தேனென்றாலும் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்!' என்று அசுரர்களிடம் சொல்லி விட்டு, தேவர்களையும் அசுரர்களையும் தனித்தனி வரிசைகளில் உட்கார வைத்து, அமுதத்தைப் பரிமாறத் தொடங்கினாள் மோகினி!!.
( மோதா³ ஸுதாகலஸ² - மேஷு த³த³த்ஸு ஸா த்வம்ʼ
து³ஸ்சேஷ்டிதம்ʼ மம ஸஹத்வமிதி ப்ருவாணா |
பங்க்திப்ரபேத³ -விநிவேஸி²த- தே³வ தை³த்யா
லீலா விலாஸக³திபி: ஸமதா³: ஸுதாம்ʼ தாம் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
என்ற திருமங்கையாழ்வார் திருமொழியினை, இங்கு பொருத்தி, தியானிக்கலாம்!..
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..
( இந்தத் தொடர், அதீதம் மின்னிதழில் வெளி வந்து கொண்டிருக்கிறது).
தகுந்த படத்துடன் மோஹினி அவதார ஆரம்பமே மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுகள். தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குதங்கள் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி ஐயா!.. விரைவில் அடுத்தடுத்த பகுதிகளை வெளியிட நினைத்திருக்கிறேன்.. இறையருள் துணை புரிய வேண்டுகிறேன்!.
நீக்கு