நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 17 ஏப்ரல், 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM ..PART 10.கண்ணனை நினை மனமே!..இரண்டாம் பாகம்.. பகுதி 10.

Image result for God dhanvantari


இன்னின்ன செயல்களைச் செய்தால், திருமகள் நிலைத்திருப்பாள் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. சோம்பலகற்றி சுறுசுறுப்புடன் செயல்படுபவர்கள், நல்லதையே நினைத்து, நன்மையையே செய்பவர்கள் தூய்மையான, அழகு நிரம்பிய பொருட்கள்,   , இன்னும்..இன்னும்.. சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும். 

சுருக்கமாகச் சொன்னால், உயர்ந்தது அனைத்திலும், சிறந்தது அனைத்திலும், தூய்மையான  மற்றும் சுகந்தம் நிரம்பிய பொருட்கள் அனைத்திலும் திருவானவள் நித்திய வாசம் செய்கிறாள்.

தெளிந்த நல்லறிவும், தீர்க்கமான செயல்திறனும் பெற்றிருப்பவர்கள், திருமகளின் அருள் மழையில் நனைபவர்கள்!..

ஆனால், மதி மயங்கி, அதன் காரணமாக, செயல் திறன் பாதிக்கப்பட்டு, குளறுபடியான செயல்பாடுகளால், வாழ்வை சரியான முறையில் கொண்டு செல்ல இயலாதவர்களும் இருக்கிறார்கள். முக்குணங்களுள், தமோ குணம் அதிகமாக அமைவதினால் இவ்விதம் உண்டாகிறது. மேலும் மதியை மயக்குவதில், மது முதலிடம் வகிக்கிறது!!..

மதுவுக்கு அதி தேவதையும், தமோ குணத்திற்கு இருப்பிடமும் ஆன வாருணீ தேவியே பாற்கடலில் இருந்து அடுத்ததாகத் தோன்றியவள்.

மூவுலகையும் மோகிக்கச் செய்யும் அழகுடன் இவள் வெளியே வர, அவளை அசுரர்கள், தங்களுக்குரிய வெகுமதியாகப் பெற்றுக்  கொண்டார்கள்.

அதன் பின்னர், அழகிய உருவத்துடன், தன் இரு திருக்கரங்களிலும் அமுத கலசத்தை ஏந்தியவாறு, தன்வந்தரியாக  பாற்கடலில் இருந்து உதித்தார் பகவான்!!... 

இத்தகைய மகிமை பொருந்திய குருவாயூரப்பன், தன் நோய்களனைத்தையும் போக்கியருள வேண்டுமென்று வேண்டுகிறார் பட்டத்திரி!..

தருணாம்பு³த³ஸுந்த³ரஸ்ததா³ த்வம்ʼ 
நனு தன்வந்தரிருத்தி²தோ(அ)ம்பு³ராஸே²​: | 
அம்ருʼதம்ʼ கலஸே² வஹன்கராப்யா
மகி²லார்திம்ʼ ஹர மாருதாலயேஸ² ||  (ஸ்ரீமந் நாராயணீயம்).

இந்த ஸ்லோகத்தை நித்தமும் பாராயணம் செய்ய, தன்வந்தரி பகவானின் அருளால், தீராத நோய்களனைத்தும் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை!..

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே(நம்மாழ்வார்).

(தொடர்ந்து தியானிப்போம்!)..

(அடுத்த பகுதியில், மோஹினி அவதாரம்)!.

வெற்றி பெறுவோம்!!.

அன்புடன்.
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..